02 ஏப்ரல் 2012

நனியுயர் நன்னியம்மா..! - (பாகம் -2)

இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு




பாகம் -2



மகனாய் பேரன்
அம்மா வளர்த்த பேரன் நான். என் சின்னஞ்சிறு வயதிலிருந்தே என் நன்னியம்மாவுடன் தான் வளர்ந்தேன். என் புவ்வா(தாயார்)வுடன் எங்கள் சாலைத்தெருவீட்டில் மிக அதிகமாக இருந்ததில்லை என்றே கூட சொல்லலாம். அதிலும் இங்குள்ள வழக்கப்படி என் புவ்வாவும் தங்களின் வீட்டிற்கும், சாலையின் எங்களின் வீட்டிற்கும் என இங்கும் அங்குமாகத்தான் இருக்கும் அப்போதும் கூட மிக சொற்ப நாட்கள் தான் சாலையில் இருந்திருப்பேன் பிறகு ஆரம்பப்பள்ளி முடிந்தவுடன் முழுவதுமாக கீழத்தெரு வீட்டிற்கே வந்துவிட்டேன். ஆண்பிள்ளை இல்லாததால் என்னை தங்கள் பிள்ளை எனவே என் அம்மாவும், அத்தாவும் செல்லாமாய் வளர்த்தார்கள். ஆண்பிள்ளை இல்லாதது அவர்களுக்கு மிகத்தீராகுறை தான். அப்படி ஓர் பிள்ளை இருந்திருந்தால் பொருளாதாரத்தில் மிகவும் தங்களுக்கு தோழ் கொடுத்திருக்கவும், வாரிசாகவும் இருந்திருக்குமே என்ற அங்கலாய்ப்பு எப்போதும் இல்லாமல் இருக்காது அதை என்னிடம் சொல்லிக்காட்டுவார்கள். ஏதாவது பணம் பற்றிய பேச்சு வந்தால் "கமால் பாட்சாவிடமிருந்து பணம் வரட்டும்" என்பார்கள் "யாரும்மா கமால் பாட்சா" என்றால் "அவன் அரபுநாட்டில் இருக்கிறான், எனது மகனவன் அனுப்பித்தரட்டும்" என்று சொல்லும் போது அவர்கள் ஆண்மகவுக்காக ஏங்கிய ஏக்கம் தெரியும்.

காலை நேரத்தில் எனக்காக முரட்டு தடிமனான பாலாடையை மட்டும் தனியே ஒதுக்கி எடுத்துவைத்து டீயோடு கலந்து கொடுப்பார்கள் மிக ரசனையோடு ரசித்து சாப்பிடுவேன், அத்தனை அருமையாக இருக்கும். காலை பசியாற மெல்லிய மொறுகளான தோசை மட்டுமல்ல அதில் ஒன்று கண்டிப்பாக முட்டை தோசை என சுட்டுக்கொடுப்பதிலிருந்து வாய்மணக்கும் வண்ண வண்ண பதார்த்தங்களை பல செய்து கொடுப்பது வரை எதில் தான் குறைவைத்தார்கள். குளிர்காலங்களில் இருமல் வந்தால் சித்தரத்தை இடித்து பாலில் காய்ச்சி கொடுப்பார்கள். ரமலான் தராவீஹ் வீட்டு இரவில் வரும்போதெல்லாம் பாலில் மஞ்சள், மிளகும் சித்தரத்தையும் இட்டு காய்ச்சி கொடுத்த காலங்கலெல்லாம் மறக்க முடியாது. எங்கள் வீட்டில் வேலை செய்த பெண் ரஜியா "ஆம்பளபிள்ளைக்கு இப்டில்லாம் குடுக்கக்கூடாது" என சொன்னாலும் என் அம்மா என்னை அத்தனை கனிவோடு தான் கவனிப்பார்.

நான் பழைய சைக்கிள்களாய் ஓட்டிய நாட்களில் "நீ புதிய சைக்கிள் வாங்கி ஓட்டவேண்டும் நான் அதை பார்க்க வேண்டும்" என சொல்லிக் கொண்டிருந்த அன்பு உள்ளம். எனக்காக நான் வயலூரில் படித்த பொழுதுகளில் காலையில் எனக்கு சாப்பாடு கட்டிக்கொடுத்து அதில் ஊருகாயோ அல்லது உப்புக்கண்டமோ வைத்து நடுக்கூடத்தில் உள்ள அலமாரியில் அவர்கள் காசு போட்டுவைக்கும் சிறிய லக்டோஜன் டப்பியிலும் அரை சைசுக்கு இருக்கும் ஒரு டப்பாவில் இருக்கும் காசுகளாக ஐந்து ரூபாய்.. மூன்று ரூபாயென அந்த தொன்னூறுகளில் நாளும் பஸ்ஸுக்கு எடுத்துக்கொடுத்து என்னை வாழ்த்தி வழி அனுப்பிடும் தினங்களை எப்படி நெஞ்சம் மறக்கும்.

இரவு நேரங்களில் நான் விழித்திருந்து படிக்கும் காலங்களில் தேனிர் போட்டு ஃபிளாஸ்கில் வைத்தததும், பிறகு படிப்பு முடிந்தவுடன் புத்தகம் படித்துக்கொண்டோ அல்லது விடிய விடிய கவிதை எழுதிக்கொண்டோ இருந்த பொழுதுகளில் 'லைட்ட அமத்தீட்டு தூங்குமா.. உடம்பு கெட்டு போயுடும்' என்று சொல்லிக்கொண்டே இருந்தததையும் மறக்கத்தான் முடியுமா.. ஏன் இப்போது ஊர் போன போதும் "காலகாலத்துல ராத்திரல சீக்கிரமா படுத்திடு" அப்பத்தான் உடம்பு நல்லா இருக்கும்-ன்னு நீ சொல்லத்தவறவில்லை அம்மா.

என்னை வாழ்த்துவதில் உங்களைப்போல் யார் இருக்க முடியும்.. நினைத்து நினைத்து.. மட்டில்லாமல் வாழ்த்திய நெஞ்சம் தான் நீ. ராஜா.. கண்ணு.. அப்படி இப்படி என்றெல்லாம் தாயுள்ளத்தோடு சொல்லி கட்டியணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டு முகத்தை வருடி சீமாட்டி கட்டி பேரனான என்னை பேரன்பில் குளிப்பாட்டுவாயே அந்த மனங்குளிர் வாழ்த்து மழை எங்கேயம்மா இனி கிடைக்கும்.

மற்ற பேரப்பிள்ளைகள்
என்னிடம் மட்டுமல்ல எல்லா பேரப்பிள்ளைகளிடமும் எல்லா மகள்களின் பிள்ளைகளிடமும் நிறைவான அன்பினை ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட பாசப்பிணைப்பினை கொண்டிருந்தவர்கள் என் நன்னி அம்மா. நாங்கள் ஒவ்வொருவரும் அம்மா என்னிடம் தான் மிகையன்பு கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும் அளவுக்கும் யாருக்கும் எள்முனை அளவு கூட விகிதாச்சார வேறுபாடு காண முடியாதவாறு அவர்களின் அன்பு சூழ்ந்திருக்கும். அண்ணன்மார்கள் ஹாஜா மைதீன், முஜீபாக இருந்தாலும் சரி நஸ்ரினாக இருந்தாலும் அவர்கள் காட்டிய தனிப்பட்ட அன்பு மிகையானது. தங்கை நஸ்ரின் மிகச்சிறிய வயதில் வாழவேண்டியவள் சென்றாளே என அம்மாஜானோடு அம்மாவும் பேத்தியின் பிரிவை தாங்காது உருகி.. உருகியே உடல்நிலையிலும், மனநிலையிலும் பலமிழந்தார்கள். தங்கை முர்சிதாவை கரிசனத்தோடு பேணிப்பையும் கலந்து அறிவுரைகளாய் கொடுத்த அவர்கள் வளர்த்தததெல்லாம் சிறப்புத்தான். காலித்திற்கான செல்லத்திலும், சிறுவனாய் அவனிருந்த போது அவனுக்கென எடுத்து வைக்கும் பண்டங்களிலும், ஏன் இப்போதும் கூட கணநேரமும் மறக்காது காலித்தின் வெளிநாட்டு பயணத்திற்கான சிந்தனைகளிலும், மனதார வாழ்த்திக்கொண்டிருத்தலிலும் குறையே வைக்காதவரவர். தன் சின்ன மகளின் ஒரே மகளென்பதால் தங்கை சஃபிக்காவிடம் பேரன்பு பூண்டது மட்டுமல்லாது எல்லா விசயத்தில் தனி அக்கரை எடுத்துக்கொள்வார்கள். தங்கை சஃபிக்காவின் திருமண நிகழ்வில் அவர்கள் காட்டிய முனைப்பும், எண்ண ஒருமையும் கண்ட சான்று.






-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: