02 ஏப்ரல் 2012

நனியுயர் நன்னியம்மா..!

இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு


பாகம் -1

மனமொளிர்ந்த‌ விடியல்கள்
திறந்த வாசலும் பெரிய முற்றமும் உள்ள எங்களது நன்னி வீட்டின் பெரிய கூடத்தில் படுத்துறங்கிய எனது சிறுவயதின் காலைப்பொழுதுகள் புலர்ந்தது போலெல்லாம் இனிய பொழுதுகளை இனி எதிர்பார்த்திட முடியாது! காலை விடிந்தும் விடியாதுமாக இருக்கின்ற அந்த 'கருக்கா முருக்கா'வெனும் பொழுதில் குருவிகளும்.. காக்கைகளும்.. கூட வெளியே கிளம்பாது மரத்திலிருந்தபடியே ஒலி எழுப்ப யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே சுஃபுஹு வேளைக்கு ஒளூ செய்ய எழுதிருத்திருப்பார் எனது நன்னியம்மா! அந்த இருள் வேளையில் கிழக்கு வெளுப்பதற்கு முன்னே தொழுகையை ஆரம்பித்து பிறகு சுஃப்ஹை நிறைவேற்றிவிட்டு.. அப்படியே அமைதியாக நிஷ்டையில் திக்ரிலேயே சில தியாலங்களை கழித்துவிட்டு பிறகு எழுந்து பள்ளியில் சுஃப்ஹு தொழுகையை தொழுது விட்டு வீடு வந்திருக்கும் என் அத்தா(பாட்டனார்)வுக்கும், எல்லோருக்குமாய் தேனீர் தாயார் செய்து பீங்கான் ஃஃபீர்ஸில் நிறைய கொண்டு வந்த தேனீரை வறுக்கிரொட்டியுடன் அருந்திவிட்டு அத்தாவும், அவர்களும் குர் ஆனையும், ஒளராதுகளையும், விர்துகளையும், ஸலவாத்துக்களையும் ஓத ஆரம்பிப்பார்கள். அந்த காலை பொழுதின் வேதநாத ஒலி தான் காதுகளில் மென்மையாக எதிரொலிக்க எழும்ப அழுப்பு பட்டு தூங்கும் என்னை அதுதான் தினம் எழுப்பிவிடுபவையாக இருந்திருக்கின்றன.

தாம்பத்தியம்
அத்தாவுக்கும் அம்மாவிற்குமான தாம்பத்தியம் ஆழமானது மிக புரிதலுக்குரித்தானது. அத்தாவிற்கு காலையிலேயே தோசையுடன் நல்ல ஆணம் ஒன்றை ஆக்கிவைப்பது அம்மாவின் வழக்கம் அதிலும் முள்ளங்கி, காய்கறி, மீன் என நளொன்றாக சுடச்சுட அருமையாக இருக்கும். அதிகாலை ஒரு டீ அடுத்து 8.30க்கு ஒரு டீ என இரண்டு டீ குடித்து விடுவதால் அத்தாவிற்கான காலை உணவு பத்துமணிவாகில் தான் பெரும்பாலும். சிறிய மீன் வாங்கினால் நண்பகல் 12 மணியளவில் தலையை வறுத்து தருவார்கள் நானும் சேர்ந்து சாப்பிடுவேன். உள்ளூர் தேங்காய் வியாபாரம், விவசாயம் என அன்றிருந்த எல்லா சூழலிலும், வாழ்க்கைப்பயண மேடுபள்ளத்திலும், சுகதுக்கங்களிலுமான அம்மாவின் அத்தாவிற்கான ஒத்துழைப்பு மிக சக்தி வாய்ந்தது.

வாழ வந்த வீடு
ஐந்து நாத்துனார்மார்கள் இருந்த வீட்டிற்கு என் அம்மா அவர்கள் வாழ வந்தும் அத்தனைப் பேருடனும் அவர்களின் அத்தனை பிள்ளைகளுடனும் மிக அன்பாகவும் மிக மகிழ்ச்சியாகவும் அரவணைத்து எல்லாவிதமான சூழல்களிலும் இன்றெல்லாம் எதிர்பார்க்க முடியாத நல்லுறவு பேணி நிகரில்லாத குணத்துடன் ஓர் உயர்ந்த வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்ததை மலைத்துத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. அன்றைய தினங்களில் வீடு மிக கலகலவென்று நாத்துனார்கள் பிள்ளைகளால் நிரம்பி இருந்த சூழலில் எல்லா பிள்ளைகளுக்கும் சிறப்பாக உணவு சமைத்து அழகுற கவனித்து அன்பை பொழிந்து மிக தங்கமாக தாங்கியவர் இவரன்றோ! மட்டுமல்ல தஙகளது அண்ணன் தங்கை பிள்ளைகளின் மீதும் கொண்ட ஈர்ப்போ, இதமோ இதயப்பூர்வமானது. 


மகள்கள்
மூன்று மகள்களையும் மூன்று முத்தாகத்தான் வளர்த்தார்கள் மிகுந்த அன்புடன் இணக்கமும் பிணைப்புமாக! மகள்களான போதும் தோழியிடமான நெருக்கமே காட்டினார்கள். "அம்மாஜான் ஒரு பைத்தியார பிள்ளை அவ நல்லது கெட்டது ஏதும் தெரியாத வெகுளி" என தன் மூத்த மகளான என் பெரிய புவ்வா குறித்து சொல்லி தாயுள்ள ஆதங்கங்கத்தை வெளிப்படுத்துவார்கள். அடிக்கடி என் தாயாருக்காக.. என்னை பார்த்து "ஒம்மா வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டவ.. பொறுமசாலி அவளுக்கு நீங்க நல்லா சம்பாரிச்சு கொடுக்கனும் தெரிஞ்சுக்கோ.. அவ கையாள ஏழ எளிதுக்கு கொடுக்கவச்சு பாக்கனும்.." ன்னு சொல்லிக்கொண்டே இருந்த சொற்களெல்லாம் நீ நெஞ்சத்தில் செதுக்கியது தானே அம்மா!. ஹாலாஜானை (கடைசிமகள்) பற்றியோ சொல்லவே வேண்டாம் அத்தனை பாசமும் பிரியமுமாக கொட்டித்தான் வைத்தார்கள்.


மருமகப்பிள்ளைகள்
தங்களின் மூன்று மருமகப்பிள்ளைகளை கவனிப்பதிலும் அவர்களுக்கு பசியாறவும், ருசியாறவுமாக வகைவகையாய் செய்துவைத்து உபசரிப்பதிலும் அவர்கள் சளைக்காதவர். மேலும் அவர்கள் தங்களுக்கு மிக நெருங்கிய பிள்ளைகளை மருமகராகப்பெற்றாலும் அவர்களுக்கு அம்மா நீங்கள் காட்டிய மரியாதையும், கண்ணியமும் மிகப் போற்றுதலுக்குரியவை.

- மேலும் பாகம் - 2-ல் 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


பாகம் -2

கருத்துகள் இல்லை: