28 ஏப்ரல் 2012

அறிஞர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது அவர்களுடன் சந்திப்பு


இன்றைய தினம் யோகம் என்று தான் சொல்லவேண்டும் எனென்றால் ஒரு சிறப்பான மனிதரின் சந்திப்பு நிகழ்ந்தது அதுவும் சமூக உணர்வுள்ள சன்மார்க்க பிடிப்புள்ள பண்பட்டவரோடு, மேற்சொன்னவைக்கு சொந்தக்காரர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது என்ற நல்ல மனம் கொண்டவர். இணைய முகநூல் தான் நாங்கள் இருவரும் இணைய முழுமுதல் காரணம், பிறகு இருவரின் அலைவரிசையும் பொருந்திப்போனதால் எங்களுக்கிடையே ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது அதில் முனைப்போடும் நானே உங்களை வந்து சந்திக்க வேண்டும் என்றும் விருப்பப்பட்டு சந்தித்தார்.

பதினைந்து நூற்கள் எழுதிய பழுத்த இலக்கியவாதி, வரலாற்று ரீதியாக ஆராய்வதில் உள்ள ஆர்வம் அவரது சந்திப்பில் வெளிப்பட்டது. இன்று சனிக்கிழமையாதலால் அதிக அலுவலக சுமையின்றி அவரோடு அரை நாள் செலவழிக்கும் பேறுபெற்றேன். மனிதர் எதார்த்தமாக இருந்தார் துபை வந்த உடனே உங்கள் ஒவ்வொருவரையும் நானே இன்ஷா அல்லாஹ் தனிப்பட்ட முறையில் சந்திப்பேன் என முகநூல் நிலைக்குறிப்பு தந்தவரின் உணர்வு மெய்ப்பட்டது இன்று. சந்தித்த நேரத்தில் நாம் முகநூலில் ‘’நபிகள் நாயகம் நேசர்கள் வட்டம்’’ நடத்தி வருவதையும், நமது இஸ்லாமிய மற்றும் சமூக சிந்தனைப்போக்கையும் பாராட்டினார்.

இன்றைய சமூகத்தில் எங்கும் மனவிரோத போக்கு நிலவுவதை சொல்லிக்காட்டி தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் லேனா அவர்கள்.. ‘’கருத்துவேறுபாடு எங்கும் தோன்றும் அது இருக்கலாம் ஆனால் அது மனவிரோதத்தை ஏற்படுத்தாததாக மனவேறுபாடாக மாறாததாக இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார் அது எனக்கு மிகவும் பிடித்திருந்த உண்மையான சொல் என பகிர்ந்து கொண்டார்.

பிறகு, ஃபுஜைராவில் மலைகளை வெகுவாக அகற்றிக்கொண்டிருக்கும் நிலையை கண்டு பூமியை ஓரளவுக்கு மீறி துன்புறுத்தக்கூடாது இவைகள் நல்லதல்லவே, இயற்கைக்கு எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற தன் கருத்தை எங்களிடம் கூறிக்கொண்டு வரும்போது இயற்கையின் ஒவ்வொன்றிலுமாக இறைவனின் தன்மை எப்படியெல்லாம் வெளிப்பட்டிருக்கிறது அவனின் வல்லமையே வல்லமை என இறைவனை துதித்தவரின் உள்ளம் இங்கே உள்ள புஜைராவின் மீயூசியமாக உள்ள கோட்டை, மற்றும் சுமார் கி.பி 1446ல் கட்டப்பட்ட சற்றேறக்குறைய 600 வருடங்களுக்கு மிகாமல் இருக்கும் பழங்கால பிதியா பள்ளிவாசல் இவைகளை பார்க்கும் போதெல்லாம் நபிகளார் எப்படியெல்லம் இது போன்ற சூழலில் வாழ்ந்திருப்பார்கள்.. எப்படியெல்லாம் கஷ்டப்- பட்டிருப்பார்கள் இன்று இந்த மண் சோலைவனமாக, பணங்கொழிக்கும் பூமியாக இருக்கிறது இதெற்கெல்லாம் காரணகர்த்தா அவர்களன்றோ என்று எங்களிடம் அவர் பேசிக்கொண்டு வந்தார்.

கொர்பகானின் பகுதியில் அரபிக்கடலைப்பார்த்து இங்கு அலை இருக்காதோ..எனக் கேட்க ஆதற்கு நான் அரபிக்கடலில் அலை இருக்காது என்றேன்.. அதற்கு அறிஞரின் நண்பர் எஸ்.அப்துல் லத்தீப் நான் மு.மேத்தாவின் நாயகம் ஒரு காவியத்தில் படித்திருக்கிறேன், அதில் அவர் சொல்லுவார் ‘’நாயகமே உங்களின் குணத்தின் சாந்தத்தை போலவே அரபிக்கடலிலும் அலைகள் இல்லை’’ என்று எனக்கூற ஏம்பலார் அவர்களும் இது இறைவன் நபிகளாருக்கு கொடுத்த கண்ணியமாகவும் கூட இருக்கலாம். அவனின் பிரியப்பட்ட ஹபீப் அல்லவா என்றார்.

பிறகு பிரிய மனமில்லாமல் மாலை 5.15 வாகில் விடைபெற்றோம் அப்போது எங்களிடம் அவர் சொன்னது மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள் அவை ’’இன்றைய காலத்தில் உள்நோக்கம் ஏதும் இல்லாமல் மனத்தூய்மையுடன் (இக்லாசுடன்) ஒருவர் மற்றொருவரிடம் பழகுவது என்பது மிகவும் அரிதாகிவிட்டது அதுவும் இறைவனுக்காக, இறைத்தூதரின் அன்பினுக்காக, மக்களின் உடல் ஆன்ம நலத்திற்காக ஒருவர் மற்றொருவரை நேசிக்கிறார் என்றால் அவரின் தொடர்பை விடாது நாம் பிடித்துக்கொள்ள வேண்டும்’’ என்று அவர் சொன்னதை அறிவுரையாக ஏற்றேன். பின் சமூக ஆர்வலர் அண்ணன் வழுத்தூர். அப்துர் ரஹீம் (சாப்ஜி) அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். சிறப்பான சந்திப்பு சித்தித்ததற்கு இறைவனின்டம் நன்றிகள் சொன்னோம். அவர்களின் தூய்மையான சமூக தொண்டு மற்றும் அறிவுப்பயணத்தில் அல்லாஹ் சிறப்பான வெற்றியை கொண்டுப்பானாக! மீண்டும் இது போன்ற நல்லவர்களை அடிக்கடி சந்திக்க அவனே நாடுவானாக! ஆமீன்.



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: