31 டிசம்பர் 2022

2022ம் யானும்


இனிதாய் கடந்து செல்கிறது 2022, நிறைவுகள் பல தந்து இவ்வாண்டு செல்கிறது. துபாயில் பழைய திட்டப்பணி சிறப்பாய் முடிய விடுப்பில் ஊர் சென்று ஒன்னரை மாதத்திற்கு மேல் இருந்து, புதிய வீடு முன்பே குடிபுகும் விழா நடந்திருந்தாலும் இருந்த மீதப்பணிகள் எல்லாம் இராப்பகலாய் நின்று செய்து முறையாய் குடியேறியது மகிழ்ச்சி. அத்தோடு பிள்ளைகளோடு சென்னை சென்று இரண்டு நாட்கள் கழித்தது பசுமை நினைவுகள் தந்தது.

 பிறகு துபாய் வந்து புதிய திட்டப்பணியில் சேரந்து நல்லவிதமாக செல்வதும் இறைக் கருணை. பிறகும் வீட்டில் காம்பவுண்ட் வேலைகள் பாக்கி இருந்தது, அவையும் கூட ஆரம்பித்து கிட்டத்தட்ட முடிவடைய இருக்கிறது. 

தங்கை முர்ஷிதாவின் வீடு நிறைவு செய்து புடிகுந்தனர் அதுவும் பெருமகிழ்வு, மகளுக்கு பள்ளி மாற்றி பாபநாசம் ஆர்.டி.பி.யில் சேர்த்து இறைவனருளால் சென்று வருகிறாள்.

இவ்வருடம் புதிதாக மூன்று பாடல்கள் தான் எழுதினேன் என்றாலும் அபுல் பரக்காத்திற்கு எழுதிய வீடு தவறாமல் ஏழைக்குமருகள் என்ற பாடலும், முகவை சீனிமுகம்மதற்கு எழுத வேண்டும் என்ற ஆசையை தீர்த்த "பாட்டெடுத்துப் பாடவந்தேன்" என்ற நாகூர் ஹனிபா அவர்களைப் பற்றிய பாடல் சகோதரர் ஹாஜித் இப்றாஹிமின் முயற்சியில் தம்பி அப்துல் ரஹ்மானின் இசையில் செய்ததும், அன்பு நாகூர் சதாம் அவர்களுக்கு ஆண்டின் ஆரம்பத்தில் எழுதிய பதுரு சஹாபாக்கள் பாடலும் எனது பங்கை சிறப்பாக ஆற்றிய நிறைவைத் தந்தது.

இந்த வருடம் கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு விடிந்து பல நிகழ்வுகள் துபாயில் வழக்கம் போல நிகழ அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் குழுமத்தின் நிறைய கூட்டங்கள், சார்ஜா புத்தகக் கண்காட்சி நிகழ்வுகள், பொன்மாலைப்பொழுது, மேடைநாடகப் போட்டி, எங்க எம்.எல். ஜவாஹிருல்லாஹ் நிகழ்வு, பாரதி நூல் தமிழாக்க நிகழ்வு, பாலைவன பரமபதம் வெளியீட்டு விழா, நாகூர் சதாம் இசை நிகழ்ச்சி என நிறைய நிறைய நிகழ்வுகளின் இவ்வருடம் கலந்து கொண்டதும் புத்துணர்வு தந்தது.

மனுஷ் எழுதிய மெளனப்பனி, இஸ்மாயில் லோடி எழுதிய புலம்பெயர் மணல் துகள்கள், சிவா எழுதிய நாவல் ருபினி, சசிகுமார் அண்ணன் எழுதிய மெல்லச்சிறகசைத்து பயணக்குறிப்புப் புத்தகம், சாந்தி சண்முகம் எழுதிய "துபாய் மண்ணும் தமிழ் பொண்ணும்" கட்டூரை புத்தகம், சிவசங்கரி வசந்த் எழுதிய "பாலைவன பரமபதம்" நாவல், நசீமா ரசாக் எழுதிய "மராம்பு", கு.ஜமால் எழுதிய "திப்பு சுல்தான்" குறுநூல், அரபி எழுத்தாளர் ஷிஹாப் கானம் எழுதி முனைவர் ஜாஹிர் ஹுஸைன் மொழிபெயர்த்த உப்பு கவிதை நூல், ஜெயாபுதீன் அவர்களின் பிள்ளைத் தானியம் கவிதை நூல், திருச்சி நத்ஹர் வலி நாயகத்தின் மற்றும் சோழ மன்னர்களின் சரிதம் கூறும் நாவல் நந்தவனத்து ரோஜாக்கள் நூல் மற்றும் இன்னும் சில நூற்களும் படித்து முடித்திருக்கிறேன்.

மேலும், காப்பியக்கோவின் மைவண்ணன், அத்தாவுல்லா அண்ணனின் புகழப்பட்டவர் மற்றுமோர் அருமையான நூல் ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே பூமி, மேலும் சில ஆங்கில புத்தங்கள் என இவைகள் ஆரம்பித்து முடிக்காமல் இருக்கிறது. இப்படி சில நூற்கள் படித்திருந்தாலும் இது சத்தியமாய் போதாது இன்னும் அதிகப்படுத்த வேண்டும் படித்த உடன் அதைப்பற்றி ஏதாவது எழுதி பகிர்ந்திட வேண்டும் அது மட்டும் முடியாமல் பலரின் மனவருத்தத்திற்கு ஆளாக வேண்டி இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக எனது சிறுபிராயத்திலிருந்தே இருந்த கனவு புத்தகம் வெளியிட வேண்டும் என்பது. அது இவ்வருடம் பாலாஜி அண்ணனின் கெலக்ஸி பதிப்பகத்தின் மூலம் நனவாகியது. எனது முதல் கவிதை நூல் அறியாதபுரம் தயாராகி வரும் நாட்களில் சென்னை புத்தகக் கண்காட்சியிலும் இன்னும் சில இடங்களிலும் வெளியீடு காண இருக்கிறது. இது பெரும் மனநிறைவு என்றாலும் வரும் காலத்தில் இன்னும் இன்னும் சிரத்தையோடு சிறந்த படைப்பாக்கம் செய்ய இறையருளை வேண்டுகிறேன். அறியாதபுரம் நிறைய அனுபவங்களைத் தந்திருக்கிறது அது கட்டாயம் வரும் படைப்புகளுக்கு உதவும். எது எப்படியாயினும் அறியாதபுரம் என்னை ஆனந்தபுரத்திற்கு இட்டுச்சென்றது என்பது அத்தனை அகமகிழ்வு.

இத்தோடு இன்னொரு கவிதை நூலும், மற்றுமொரு மொழியாக்க நூலின் பணிகளும் ஆரம்பித்து வளர்ந்து வருகிறது, 2023ல் வெளிவர இறைவன் அருள்வானாக.

இந்த ஆண்டு இனிமைகள் பல தந்து செல்கிறது. வசந்தங்கள் நிறைய தர புத்தாண்டே வா. 2023லும் இதயங்கள் ஒளிர இனிமைகளால் மகிழ இறைவா அருட்செய்.

வாழ்வில் இனிமை கூட்டிய எல்லோருக்கும் நன்றிகள்.

இறைவா நன்றி.

மகிழ்ந்து வாழ்வோம் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

வாழ்த்துடன்,


-ஜா.மு.
31-12-2022