27 நவம்பர் 2015

துபாயில் இன்று (27-11-2015) பாடகர் அபுல் பரக்காத் இசை நிகழ்ச்சி





இன்று வெள்ளி (27-11-2015) மாலை துபை நாசர் சதுக்கத்தில் அருளிசை முரசு அபுல் பரக்காத் அவர்களின் தீனிசை நிகழ்ச்சி அனைவரும் வாரீர்.
*********************************************************************
இன்று வெள்ளி (27-11-2015) மாலை சுமார் ஏழு மணிக்கு நாசர் ஸ்கொயரில் இருக்கும் லேண்ட் மார்க் ஹோட்டலில் அருளிசை அரசு அபுல் பரக்காத் அவர்களின் தீனிசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது, நிகழ்வுக்கு அன்பின் பெருமக்கள், ஆத்மீக உள்ளங்கள் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு பாடகரின் சார்பில் அழைக்கிறோம்.
அருளிசை பருக! அனைவரும் வருக!
பாடகர் அபுல் பரக்காத் அவர்களை நம் எல்லோருக்கும் அவரது இஸ்லாமிய பாடல்கள் மூலம் அறிவோம்.ஆனாலும் அவரைக்குறித்த மேலும் தகவல்கள் நீங்கள் அறிய தந்தால் அவரைப் பற்றிய விடயங்களை நீங்கள் அறிய ஏதுவாக இருக்கும் என்றே சில தகவல்கள் இதோ…
  • பாடகர் அபுல் பரக்காத் அவர்கள் இதுவரை 6500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மற்றும் சூஃபிப் பாடல்களைப்பாடியவர், அவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட இசைக்கோர்வைகளை அதாவது ஆல்பங்களை வெளியிட்டிருக்கக்கூடியவர்
  • தமிழக இஸ்லாமிய இசை வரலாற்றில் ஈடில்லாத சரித்திரமாக விளங்கிய மறைந்த இசைமுரசு நாகூர் ஹனிபாவிற்கு பிறகு தமிழகத்தில் தரமான இஸ்லாமியப் பாடகராக விளங்கிவருபவர்

பாடகர் அபுல் பரக்காத்துடன் குழந்தை அஹமது நளீர்
  • பாடகர் அபுல் பரக்காத்தின் மிகச்சிறப்பு முறையாக கர்நாடக இசையைப் பயின்றவர். இவரது இசைக்கு ஹுசைன் பாகவதர் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் குருவாக இருந்தவர்கள், மற்ற இஸ்லாமிய தமிழ் இசைப்பாடகர்கள் யாரும் கர்நாடக இசையை முறையாக அறிந்தவர்கள் என அறுதியிட்டு கூறிட இயலவில்லை.
  • பாடகர் அபுல்பரக்காதின் பிரபலமான ஆல்பங்களான வேந்தர் நபிகளின் பல பாடல்களை இன்னும் பல பிரபல இஸ்லாமிய பாடகர்கள் பல மேடைகளில் முழங்கி வருகிறார்கள், அந்தப்பாடல்களின் மூலப்பாடகர் இவர் தான் என்பது இவரது சிறப்பு.
  • பாடகர் அபுல் பரக்காத்திற்கு நாகூர் சலீம் உட்பட இசைமுரசு ஹனீபாவிற்கு பாடல் எழுதிய பலர் பாடல் எழுதித்தர பாடி இருந்தாலும் சமீபத்தில் திண்டுக்கல் ஆலிம்புலவர் ஹுசைன் முஹம்மது மன்பஈ அவர்களின் பாடல்களில் உருவான வேந்தர் நபிகள், கண்ணே ரஹ்மானே, திக்ரு, மாநபி போன்ற இசைக்கோர்வைகள் பெருமளவு மக்களின் வரவேற்ப்பை பெற்றவை.

  • “எம்மை போன்ற மனிதரென்று எப்படி சொன்னாய் எங்கள் நபி நாயகத்தை ஏகன் திரு தூதர் தன்னை” என்பன போன்ற வஹ்ஹாபிய எதிர்ப்புப்பாடல்கள் பலவற்றை இவர்தான் பாடியவர் என்பதும் மேலதிக சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைப்பிடிப்பும், சூஃபியிச வழிமுறைப்பேணல்களும் உள்ளவர் என்பது மிக குறிப்பிடத்தக்கது.
  • நபிகள் நாயகத்தின் மேன்மையை விளக்கியும், நபிக்காதலைப் பிரதானமாகக் கொண்டும் மிக அதிகமான பாடல்களைப் பாடியபாடகர் இவர் தான்.
  • டி.ராஜேந்தர் இசையில் இவரது பல இசைக்கோர்வைகள் பல வெளிவந்திருக்கிறது மேலும் இவர் பல இசை மேதைகளின் இசையில் இசைக்கோர்வைகளை வெளியிட்டிருக்கிறார்.
  • நெல்லையைச் சார்ந்த இவர் ஸையது மரபில் வந்த மேன்மைக்குரியவர் என்பது மிக சிறப்பானது, குடும்பத்தில் பலப்பிள்ளைகளில் கடைப்பிள்ளையாக பரக்காத் பிறந்தார். இவரது தந்தை செய்யது செய்கு லெப்பை  அவர்கள் இலங்கையில் இமாமத் செய்தவர்கள். இன்றும் பரக்காத் அவர்களும்  அடிக்கடி இலங்கை சென்று இசை நிகழ்ச்சி செய்து வருபவர் என்பதும் அறியத்தக்கது.
  • லண்டன் லைவ் காண்சர்ட் எனும் நிகழ்வில் பிரபலமான ஸ்டுடியோவில் இரண்டு முறைப் பாடிய முதல் இஸ்லாமிய இசைமேதை இவர் தான். மேலும் அமீரகம் போன்ற அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், மற்றும் பல நாடுகளுக்கு அடிக்கடி சென்று பல தீனிசை நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருப்பவர்.

  • இவர் பல ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி இருந்தாலும், இவரது பாடல்களில் எதைக்குறிப்பிட்டாலும் அல்லது இசைமுரசு அல்லது காயல் ஷேக்தாவுத் போன்ற பிரபலபாடகர்களின் பாடல்களைக் குறிப்பிட்டாலும் அதை இன்றளவும் மனனமாக மனதில் வைத்திருந்து அப்படியே எல்லோரும் அதிசயிக்கத்தக்க வகையில் பாடுவார் என்பது இவருக்கே உரிய தனிச்சிறப்பு.
  • நம் அமிழ்தான தமிழ் மொழியைக் குறித்தும், சமூக நல்லிணக்கங்கள் குறித்தும் இவர் நிறையப் பாடல்கள் பாடியுள்ளார். இவைகளை இன்றளவும் -இணையத்தின் யூ-டியூபில் பார்க்கலாம்.
இவ்வாறான சிறப்புக்களைப்பெற்று கடந்த 45 அண்டுகளாக இஸ்லாமியத்திற்கு இசைச்சேவை வழங்கிவரும் பாடகர் அபுல் பரக்காத் அவர்கள் நம்முன் இன்று மாலை தீனிசை நிகழ்வு நிகழ்த்த இருக்கிறார். அவரது நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள் கூறுவோம், நாம் அனைவரும் கலந்து சிறப்பிப்போம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

09 நவம்பர் 2015

பிகாரில் நிதிஷ்-லாலு வெற்றி குறித்து - 09-11-2015

புகார் சொல்லி பயனில்லை
இனி யார்மீதும்,
பிகார் தீர்பெழுதிவிட்டது
பகார்* செல்லுங்களென!
கோபாலும் பைசலும்
அன்னை தேசத்தின் பிள்ளைகள்.
பரம பதம் அழைக்கிறது
புறப்படுங்கள்
இராம பக்தர்களே???
இனி இந்தியர்களை
ஏய்க்கமுடியாது!
****
பிடித்திருக்கும் மதமே
ஒருநாள் வதம் செய்யும்
இவர்களை!
பிடித்திருக்கும் பீடையே
ஓருநாள் பதம் பார்க்கும்
இவர்களை!
அடுத்துவரும் தோல்விகளில்
நடித்திருக்கும் விதம் ஜீவசமாதி
இவர்களுக்கே!
தொடுத்துவரும் மாலைகளை
படுத்த விதம் சூடும்பிணங்கள்
இவர்களே!
****
மதத்தால் மனங்களை கூறுபோட்டார்கள் -இன்று
மாட்டால் நாட்டையும் கூறுபோட துணிந்தார்கள்
தூங்கும் பூனைகள் விழிக்கட்டும்..
உலகம் இருட்டவில்லை விழி'காட்டும்'.
பிகாரின் 'தீ' இந்தியா முழுமைக்கும் பரவட்டும்
தகா(த) பார"தீய" வன்மங்கள் வேரறுந்து சாயட்டும்
லா..லா..லா..லு... லா....லு...!!!
****
மதவாதமும், மாபாதகமும் அடிசறுக்கியதில்
தேசபக்தர்கள் எல்லோருக்கும் எவ்வளவு மகிழ்ச்சி.
அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம்
இந்த தேசமுழுக்கவும் இதன் நீட்சி!
பாரத் மாதா கி..... ஜே!
****
சமயம் பார்த்து 
கழுத்தறுக்கும் இவர்களது
சமயச் சார்பு!
****


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

01 நவம்பர் 2015

அபுஹாஸிமா





பெயர் அபுஹாஸிமா..குமரி மாவட்டம் கோட்டாறு
சமூக சிந்தனையில் இவர் காட்டாறு அதன் உந்துதலினாலேயே 
நமது முற்றம் மாத இதழினை போராட்ட குணத்தோடு பல சவால்களுக்கு மத்தியிலும் நடத்தி வந்தவர். 

சிறப்பான கவிஞராகவும், பன்னூல் ஆசிரியராகவும் வலம் வருபவர்.
உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள், அண்ணலே யா ரசூலல்லாஹ், "பெட்டகம்" குமரி மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம் உள்ளிட்ட நூல்களை எழுதி உள்ளார்.

இன்னும் பல நூட்களை வெளியிட இருக்கிறார். இவரது நூற்களில் நல்ல தமிழ் நம்மை மயக்கும்..சமூக உணர்வு நம்மை செதுக்கும்.. அரிய தகவல்கள் பல நமக்கு கிடைக்கும்.

மட்டுமல்லாது சமூக நல ஆர்வலர்.. நிலத்தில் நிம்மதியும் அமைதியும் தழைக்க வேண்டும்.. எல்லா தரப்பு மக்களுடனும் சிறப்பான உறவு தழைத்தோங்கி பேதங்கள் பொய்த்து போக வேண்டும் என பல வகையில் எழுத்தாலும், பேச்சாலும் முயன்று வருபவர்


தற்போது முகநூலில் நியாயத்தின் குரலை எந்த ஒரு சமரசமும் இன்றி தொடர்ந்து ஒலித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்,

நல்லவர் வாழ்க!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மார்ச் 7-2012 அன்று முகநூலில் எழுதியது.