27 மே 2012

சத்தியத்தின் கர்ஜனைஹஜ்ரத் இப்ராஹிம் ரப்பானி அவர்கள் மீலாது மேடையில்..!

சூரியன் எங்கே உதிக்கும் என கேட்டால் நீங்களும் நானும் சட்டென சன நேரங்கூட எடுத்துக்கொள்ளாது கிழக்கென்று தான் சொல்லுவோம்ஆனால் இதே கேள்விக்கு பதிலை அவரிடம் கேட்டால் ‘’சூரியன் உதிக்கும் திசைக்கு நாம் கிழக்கென்று பெயர் வைத்து அழைக்கிறோம்’’ (ஏனென்றால் உதிக்கும் சூரியனுக்கு கிழக்கு மேற்கு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது) என்று பதில் வரும். அவர் தான் இந்த கட்டுரை பேசும் நாயகர், எல்லோராலும் ரப்பானி ஹஜ்ரத் என பேரன்போடு அழைக்கப்பட்ட மறைந்த ஆலிமே நபீல், பாஜிலே ஜலீல், முபஸ்ஸிரே குர்ஆன் ஹஜ்ரத் அல்லாமா மெளலானா ஹாபிழ் வ காரி F.M. இப்ராஹிம் ரப்பானி சாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆவார்கள். மேற்சொன்ன எடுத்துக்காட்டு தான் அன்னார் அவர்கள் எதையும் உள்ளார்த்தமாகவும், அறிவுப்பூர்வமாகவும் அணுகுபவர் என்பதற்கும், கேட்பவரின் அறிவையும் தூண்டக்கூடியவர் என்பதற்கும் சான்று.
உத்திர பிரதேசம் மாநிலம், 'பாந்தா'வில் உள்ள ஜாமிஆ ரப்பானியா அரபிக்கல்லூரியில் ஓதி ரப்பானி என்ற ஆலிம் பட்டமும், திருக்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ் பட்டமும் வென்றவர்கள். இறைவனை அறிந்து கொள்ளும் தேடல் மிக அதிகமாக இருந்ததினால் தான் கல்வி பயின்ற மத்ரஸாவை நிறுவியவரும், நபிகளாரின் திருக்குடும்பத்தில் உதித்தவருமான ஷையாஹே ஏஷியா, கதீபுல் ஹிந்த், பீரே தரீகத், ரஹ்பரே ஷரீஅத், அஷ்ஷைகு ஷாஹ் சையத் மஜ்ஹர் ரப்பானி சாஹிப் மத்தழில்லஹுல் ஆலி அவர்களை ஷைகாக (குருவாக) ஏற்று ஆன்மீக பயணத்தில் பல படித்தரங்களை கண்டுணர்ந்தவர்கள். தனது நடை, உடை, பாவனை அனைத்திலும் தனது ஷைகை படம்பிடித்துக் காட்டியதினால், ஷைகு அவர்களின் முரீதீன்களில் முதன்மையாக திகழ்ந்தவர்கள். பஸ்மே ரப்பானியா என்ற முரீதீன்களின் கமிட்டியின் செயலாளராக தன்னுடைய மறைவு வரை பணியாற்றியவர்கள். தன்னை ரஸுலின் நேசர் மற்றும் ரஸுலின் அடிமை என அழைப்பதில் கர்வம் கொண்டவர்கள்.

தமிழ் அல்லாது அரபி, உருது, பார்சி, ஆங்கிலம் என்ற பல மொழிகளில் தேர்ந்தவர்கள். அன்னாரின் இஸ்லாமிய ஆய்வுப்பணிக்கு அவர்களின் மொழியறிவு மிக முக்கிய ஆதார பலமாக அமைந்திருந்தது. அதனாலேயே இஸ்லாமிய கருத்துக்கள் அதிகம் நிறைந்த அரபி, உருது, பார்சி மொழிகளில் உள்ள கிரந்தங்களை ஆய்ந்து அதிலுள்ள கருத்து முத்துக்களை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு யாத்தளித்தார்கள். அவர்களின் வீட்டு அயல்வாசிகளிடம் இவர்கள் குறித்து நான் விசாரிக்கையில்... இவர்கள் தங்களின் இளமை காலத்தில் இரவு பகல் எனப்பாராது அதிதீவிர இஸ்லாமிய ஆராய்ச்சி செய்பவராகவும் இரவு இரண்டுமணி, மூன்றுமணி எனவெல்லாம் விழித்து படித்து, குறிப்பெடுத்து கொண்டு பிறகு தேனீர் குடிப்பதற்காக அந்த பகுதி தேனீர்கடைகளுக்கு வரும் வழக்கமுடையவர்கள் என்றும் அவ்வாறு வரும்போது பல விசயங்களை சொல்ல்லிக்கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்தான்புல்லிருந்து  தென்னிந்தியாவிற்கு ஏகத்துவத்தின் ஜோதியை ஏந்தி வந்து திருச்சியில் பூத உடல் மறைத்த பெருமானாரின் திருப்பேரர் ஞானமகான் ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்ஹாவிற்கு போகும் தெருவிலுள்ள ஒரு சிறுவீட்டின் பக்கவாட்டு மாடிப்படிகளில் ஏறினால் வரும் மேல் தளத்தில் ஒரு சிறு கூடமும், அறையும் அதற்குள்ளேயே ஒரு சமயலறையும் அத்தோடு தெரு நோக்கி இருக்கும் சிறுமொட்டை மாடியும் கொண்ட குடிலில் தான் ரப்பானி ஹஜ்ரத் அவர்கள் பலகாலம் வாழ்ந்து வந்தார்கள். அந்த மிகச்சிறிய குடிலில் தான் ஹஜ்ரத் அவர்கள் தங்களுடைய துணைவியார் மற்றும் ஏழு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளையுடன் இல்லறம் நடத்தினார்கள்.

நானும் என்னுடைய நண்பர்களும் இவர்களின் தொடர்பு கிடைத்த பின்னாட்களில் இவர்களை சந்திக்க நேர்கையில் இங்கு தான் சென்று சந்திப்போம் தங்கி இருக்கும் வீடு மிகச்சிறிதாக இருந்தாலும் மிக தாராள மனதுடன் செல்பவர்களை வரவேற்று அன்புடனும் அழகுடனும் பரிவுடனும் பேசி ‘’இந்த ஏழையின் வீட்டில் அல்லாஹுடைய ரசூலின் பிரியத்தை யாசிக்கிறவனுடைய வீட்டில் ஏது இருக்கிறதோ அதை என்னுடன் நீங்களும் பகிர்ந்து சாப்பிட்டு விட்டு தான் செல்லவேண்டும் என்று வற்புறுத்தி உணவருந்தி செல்ல சொல்லும் ஒப்பற்ற விருந்தோம்பலுக்கு சொந்தக்காரர்.

தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரில் அன்று எல்லா தெருக்களிலும் மீலாது மாதத்தை முன்னிட்டோ, முஹையத்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாதத்தை முன்னிட்டோ, கர்பலா வீர தியாகத்தை குறித்து அந்த உயரிய தியாகத்தை நினைவுபடுத்தும் வகையிலோ அல்லது தொருவின் விழாக்களாகவோ என பல வகைகளில் தெருபயான் நிகழ்வுகளும், தொடர்பயான் நிகழ்வுகளும் பெரும் பெரும் மார்க்க மேதைகள், அறிவுஜீவிகளை வரவழைத்து நடக்கும். எங்கள் ஊருக்கு வராத தமிழகம் சார்ந்த பெரும் மார்க்க மேதைகளோ, தாய்ச்சபை பேச்சாளர்களோ, அறிவுஜீவிகளோ இல்லை என்பார்கள் என் மூத்த பெருந்தகைகள். நான் அறிய கீழத்தெரு, மேலத்தெரு, சின்னத்தெரு, உமர்த்தெரு என பல இடங்களுக்கு சென்று கேட்ட அனுபவங்கள் உண்டு.

அவ்வாறான நிகழ்வாக என் பள்ளிப்பருவத்தில் கீழத்தெருவில் நடந்த ஒரு பயான் நிகழ்வுஎங்கள் வீட்டிலிருந்து ஐந்தாறு வீடுகள் தள்ளி இருக்கும் சலீம் அண்ணன்/காத்தடி வீட்டு வாசலில் நீண்ட கட்டில்களை பல வீடுகளிலிருந்து எடுத்து வந்து மேடையாக்கியும், மேலும் மேடைக்கு இருமருங்கும் கட்டில்கள் இட்டு ஆண்களை அமர செய்தும், அதுவும் நிரம்ப பக்கத்து திண்ணைகளிலும் சிறுவர்களும் பெரியவர்களும் அமர்திருந்த சூழலில், பெண்களோ அவரவர் வீட்டு முகப்பில் துணியால் திரையிட்டு பயபக்தியுடன் கேட்ட அந்த ஹஜ்ரத் அவர்களின் பயான் நிகழ்வு தான் அவர்கள் எங்கள் உள்ளத்தில் மிக ஆழமாக ஊடுருவ ஏதுவான நிகழ்வாக அமைந்தது. (என் கணிப்பு சரியாக இருந்தால் அது 1991 அல்லது 1992 ஆக இருக்கும்)

ஆம், அது தியாகத்தின் விளைநிலம் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குடும்பத்தாரின் தியாகத்தையும் சொல்லும் கர்பலா போரின் வீர வரலாற்று விளக்கமேடை. அதில் உள்ளூர் பாணியில் உள்ள மெளலவிகளையே கண்ட எங்கள் கண்களுக்கு நல்ல உயரத்தில் ஆஜானுபவான தோற்றத்தில் வடநாட்டில் அதிக காலத்தை கழித்தவர்கள் என்பதால் வடநாட்டு ஜிப்பாவும், ஜாக்கெட்டும் போட்டு மேலும் தலைப்பாகையுடன் ஹஜ்ரத் அவர்கள் கம்பீரமாக வந்தபோது வியந்து தான் பார்த்தோம். அப்படி வந்தவர்கள் மேடையில் அமர்ந்தது தான் எங்களுக்கு தெரியும்.. அவர்கள் கர்பலாவை பற்றி ஆரம்பிக்க.. பிறகு எங்களுக்கு கண் முன்னே விரிந்த ஆகாயத்திரையில்கண்டதெல்லாம் வறுத்தெடுக்கும் பாலை, வாடிய நபிகளாரின் திருக்குடும்பம், எஜீதின் சூழ்ச்சி, குழம்புகளால் அழுத்தி ஊன்றி..மணல் புழுதி பறக்க.. சீற்றமெடுத்து விசும்பிக்கத்தி முன்னங்கால்களை தூக்கி ஓடிய குதிரைகள், மின்னிய இரத்தக் கரைபடிந்த வாட்கள் இன்னும் சொல்லொனா சோகம்..சோகம் என கொடிய நிகழ்வின் கொடுமைக்களத்தில் எங்கள் ஒவ்வொருவரையுமே கொண்டுபோய் சேர்த்திருந்தார்கள், பிறகு தான் அறிந்தோம் எங்கள் கன்னங்களின் கண்ணீர் தாரைகளை கூட. அவர்கள் உரையை முடித்தாலும் வரலாற்று சம்பவங்களும், அவர்கள் தந்த விளக்கங்களும் எங்களை ஆட்கொண்ட விதமாகவே அமைந்தது. கர்பலாவை குறித்து அன்று மூன்று நாட்களாக ஹஜ்ரத் அவர்கள் நிகழ்த்திய உரையே இன்றும் நான் மட்டுமல்லாது என் சக தோழர்களும் அஹ்லெ பைத்தினரை உயிருக்கு மேல் வைக்கவும், சங்கை செய்யவும் முதல் காரணமாக அமைந்தது என்பது மிகையில்லை.

தமிழகத்து உலமாக்களில் இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். யாரைக்கண்டும், எதைக்கண்டும் அஞ்சாமல் உண்மையை உரைக்க தயங்காதவர்கள். யாருக்காகவும், எதற்காகவும் தனது கொள்கையையும், தனித்தன்மையையும் மாற்றிக் கொள்ளாதவர்கள். யாரைக் கண்டும், எதைக் கண்டும் பயப்படாமல் உண்மையை உண்மையாக உரைப்பதில் நெஞ்சுறுதி கொண்டவர்கள். அதற்கு எடுத்துக்காட்டாக நான் பார்த்த ஓர் சம்பவம். ஒரு முறை மேடையில் பேசும் போது லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரிக்கு ஒரு பத்வா கேட்டு வந்த சம்பவத்தை குறிப்பிட்டார்கள். ‘’இங்கே இருக்கும் மன்பயீக்கள் யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம் அப்படி எண்ணினாலும் பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்கள். (அங்கு பல மன்பயீக்கள் இருந்தனர்) பத்வா கேட்டவரின் கேள்வி ‘’ மவ்லிது ஓதலாமா.. கூடாதா? என்பதாகும்.. இது எளிமையானதும், நேரடியானதுமான கேள்வி. இதற்கு மத்ரஸாவிலிருந்து அன்றைக்கு பொறுப்பில் இருந்த ஆலிம் கொடுத்த பதில் ‘’குன்ஆன் ஓதுவது சிறந்தது’’ என்பதாகும். மவ்லிது ஓதலாமா கூடாதா? என்ற கோள்விக்கு பதில் ஒன்று கூடும் எனச் சொல்லலாம் அல்லது கூடாது எனச்சொல்லலாம் ஆனால் இவ்விரண்டையும் விட்டுவிட்டு குறுக்கு புத்தித்தனமாக யாருமே இரண்டு கருத்துக்கள் கொண்டிருக்காத செயலான குர்ஆன் ஓதுவதை அது நல்லது என்று கூறியும், கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாது வேறுவகையில் திசை திருப்பியும் தப்பிப்பதன் மூலம் எதிர்மறையான தனது பதிலை நிலைநாட்ட முயற்சிப்பது நல்லதல்ல, மன்பவுல் அன்வார் இப்போது மன்பவுல் நாராக செயல்படுகிறதோ என அச்சம் கொள்கிறேன். இவ்வாறான ஆலிம்களின் கோணல் புத்தியால் தான் சமூகம் சீரழிக்கப்படுகிறது என்று கவலை தெரிவித்தார்கள்.

ஒரு பயானுக்கு இவ்வளவு பணம் தரவேண்டும் என்றும், வருவதற்கு கார் அனுப்ப வேண்டும் என இருக்கும் நம்மூர் ஆலிம்கள் பேச்சாளர்கள் மத்தியில் அல்லாஹ் ரசூலை குறித்து பேச அழைத்தால் அதுவும் ஒரு அஞ்சல் அட்டை அல்லது ஒரு போன் அழைப்பு இவற்றின் மூலம் தெரிவித்தால் போதும் அவர்களே சொற்பொழிவாற்ற வந்துவிடுவார்கள். மேடையில் பேச ஏறிவிட்டால் மேடையே அதிர்ந்து முழங்கும்மற்ற பேச்சாளருக்கும் இவருக்கும் உள்ள பெரிய வேறுபாடு ஒன்று உண்டு, அது தான்  மேடையில் பேசும் போது கூட்டத்திற்கு வந்திருப்பவர்களிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டு பதில் பெற்று பிறகு விளக்கம் கொடுப்பது. இதன் மூலம் கூட்டத்தில் இருப்பவர்களின் கவனம் சிதையாது ஆர்வத்துடன் கேட்பர். பொதுவாக பலர் இவர்களின் பயானில் முன்வரிசையில் அமர பயப்படுவர்கள். ஆனால் அறிவுத்தேடல் கொண்டு வருபவர்களுக்கு இவர்களின் பேச்சு அரும்பெரும் அறிவுக்கு விருந்தாக இருக்கும். ஹஜ்ரத் அவர்களின் அனல் பறக்கும் உர்து பயானும் பிரசித்தி பெற்றவை தமிழகமல்லாது ஆந்திரா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கும் சென்று உர்தூ பயான் செய்யும் வழக்கம் உடையவரக்ள் என்பது குறிப்பிடதக்கது.

ஹஜ்ரத் அவர்கள் ஆதாரம் இல்லாமல் என்றுமே பேசமாட்டார்கள். ஒரு கூற்றுக்கு அவர்கள் விளக்கம் கொடுக்க முற்படும் போது குர்ஆனின் வசனங்கள் மற்றும் பல ஹதீது கிரந்தங்களிலிருந்தும் அதன் அறிவிப்பாளர், ஹதீது எண், பக்கம் என எல்லாமும் சொல்லிவிடுவார்கள். குறிப்பாக, அதிகமான ஆதாரங்களை குர்ஆனிலிருந்தே எடுக்கும் அளவிற்கு குர்ஆனை கற்று அறிந்தவர்கள். ஒன்று தானா என இருக்கும் போது இரண்டு மூன்று நான்கு என சொல்லிக்கொண்டே, இது போதுமா இல்லை இந்த சம்பவத்திற்கு மேலும் அதாரம் வேண்டுமா என்பார்கள். அப்படி ஹதீதுகலையிலும் மிக தேர்ச்சி பெற்றவர்கள். அன்றொரு நாள் பேச்சில் ஒரு நபரின் மைய்யித்தின் அடக்கம் நிகழ்ந்த உடன் வரும் வானவர்கள் மன் ரப்புக்க (உன் இறைவன் யார்) என்ற கேள்விக்கு பிறகு, மான குன்த தகூலு பிஹக்கி ஹாஜர் ரஜுல் என்று கேட்பார்கள். அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உருவத்தை காண்பித்து இதோ இவர்கள் யார் என்றும் நீ வாழக்கூடிய காலத்தில் இவர்கள் குறித்த உன் எண்ணம் எப்படி இருந்தது என்றும் கேட்பார்கள் என சொல்ல, அதற்கு அங்கிருந்த சிலர் (அந்த காலம் தான் ஒரு சிலர் வஹ்ஹாபிகளாய் தங்களை புரிந்தும் புரியாமலும் தனியாக காட்டிக்கொள்ள வேண்டும் என விதண்டாவாதம் பேச ஆரம்பித்த காலம்) அங்கு எழுந்து, இது ஏற்கமுடியாத ஒரு கூற்று என வாதிட அங்கிருந்தபடியே இது இன்னென்ன பக்கங்களில் சிஹாவுஸ் ஸித்தாக்களான கிரந்தங்களில் இந்தெந்த ராவி (அறிவிப்பாளர்)களால் அறிவிக்கபட்டிருக்கிறது இப்போதே அதை காட்ட வேண்டுமானால் குறிப்பாக உங்கள் ஊரின் புராதான பள்ளியாய் விளங்கும் தர்ஹா பள்ளியில் வைத்திருக்கும் பழைய மிஸ்காத்தை எடுத்து வாருங்கள் அதில் பாபுல் ஈமான் என்ற தலைப்பில் இருக்கும் இந்த ஹதீஸை காட்டுகிறேன் நீங்கள் மறுத்தால் இந்த இடத்திலேயே ரூபாய் பத்தாயிரம் தருகிறேன் என்றார்கள். கூட்டத்தில் சலசலப்பு அடங்கியது. வேண்டுமென்றே கலகம் வளர்க்க வந்தவர்கள் வாயடைத்து ஓடிவிட்டனர்.

இவர் ஓர் தலைசிறந்த திருக்குர்ஆனின் முஃபஸ்ஸிரீனும் கூட. தன்னுடைய நேசர்களால் சுல்தானுல் முபஸ்ஸிரீன் என்றும் அடைமொழி கொண்டு அழைக்கப்பட்டவர்கள். இன்றைய வஹ்ஹாபிகளுக்கான சாட்டையடிப்பிரச்சாரத்தை அன்றிலிருந்தே ஆரம்பித்தவர்கள். தப்லீக் ஜமாத்தினரின் முகத்திரையை அச்சமின்றி தோலுறித்து காட்டியவர்கள். ஆதலால் இவர்களுக்கு பலவாறாக கடிதம் மற்றும் தொலைபேசிகளில் மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கும். ஏனெனில் இவர்களது பேச்சை எந்த வஹ்ஹாபிய சிந்தனை உள்ளவர் கேட்டாலும் அவருக்கு அவரது கொள்கையில் மேல் தப்பெண்ணமும், தான் பின்பற்றுவது தவறு என்ற எண்ணமும் தொற்றிக்கொள்ளும். உதராணமாக வஹ்ஹாபிகள் தங்களின் கூற்று பிரகாரம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தரைக்கு மேல் உள்ள கபுருகளை எல்லாம் தரைமட்டம் ஆக்குங்கள் என ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொண்டு ஏவியதாக சொல்லப்படும் ஒரு ஹதீஸை எடுத்துக்கொண்டு அதில் பிரயோகப்படுத்தப்படும் சொற்களை விளக்கி குறிப்பாக ‘’சவ்வைத்துஹு’’ என்ற அதன் பொருளை செவ்வையாக்குதல் எனச் சொல்லி இதே வாசகம் தான் திருக்குர்ஆனில் இன்ன இடத்தில் இறைவன் ஏழு வானங்களையும் செவ்வையாக்கினான் என்ற பொருளில் வருகிறது இதற்கு தரைமட்டமாக்குதல் என பொருள் கொண்டால் இறைவன் ஏழு வானங்களையும் படைத்து செவ்வையாக்கினான், சரியாக்கினான் என்பது தரைமட்டமாக்கினான் எனப்பொருள் படும்படி வந்துவிடும் இங்கு செவ்வை ஆக்குதல் தான் சரியான பொருளை தருகிறது என்றால் நபிகளாரும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து பாலைவனத்தின் சூழல் மணற்பாங்கான கடும் வெப்பத்தினதாகவும், பெரும் காற்றோடு கூடியதாகவும் இருப்பதால் கப்றுகள் இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாக போய்விடும் அவ்வாறான நிலையில் யாரின் கப்று எது, எங்கு உள்ளது என தெரியாது போகும், ஜியாரத்திற்கும் சிரமம் ஏற்படும் ஆதலால் அலியே! நீங்கள் கப்றுகளை ஜியாரத்துக்கு உகந்ததாக செவ்வையாக்குங்கள் எனத்தான் பணித்தார்கள் என விளக்கினார்கள்.

திருக்குர்ஆனில் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாமவர்கள் தம்மை மன்னிக்க தவ்பா செய்த போது இறைவன், ஆதம் ஒரு கலிமாவை கற்றுக்கொண்டார் அதன் பொருட்டு அவர் குற்றம் மன்னிக்கப்பட்டது என சொல்லும் இறைவசனத்தில் கலிமா என்ற வாசகத்திற்கு பொருள் எழுதும் போது தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தர்ஜுமாவிலேயே ஒரு வாசகத்தை ஆதம் கற்றுக்கொண்டார் அதன் மூலம் இறைவன் மன்னித்தான் என பொருள் கொடுத்திருக்கிறார்கள். எந்த கலிமாவை ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் ற்றுக் கொண்டதாக ஆதார கிரந்தங்கள் சொல்லுகிறதோ எந்த சொற்றோடரை கலிமா என்று நாம் சொல்லுவோமோ அந்த ''லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்'' என அதை தெளிவாக போடாமல் வெறுமனே ஒரு வாசகத்தை கற்றுக்கொண்டார் என மட்டும் மொட்டையாக போட்டிருக்கிறார்கள் இது எப்படி ஏற்புடையது இவ்வாறிருந்தால் எப்படி மக்கள் கலிமாவின் அருமையை. ஆதம் நபி அலைஹிஸ்ஸலாமவர்களை மன்னிக்க காரணமாக இருந்த முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மகிமையை உணர்ந்து கொள்வார்கள்? என உண்மையை சுட்டிக்காட்டி தர்ஜுமாக்களும் தெளிவாக சரியாக வரவேண்டும் என்ற தன் நிலையை தெளிவாக வெளிப்படுத்தினார்கள்.


இப்படியான அருங்குணஙக்ளும், சீரிய ஆற்றலும் பெற்ற பெருந்தகை ஹஜ்ரத் அவர்கள் பயானுக்கு வந்தால் பயான் முடிந்தும் பலமணி நேரம் அல்லாஹ், ரசூலை பற்றி பற்பல விசயங்களை கூறிக்கூறியே கண்ணீர் வடிப்பார்கள். ஹஜ்ரத் அவர்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பற்றிப் பேச ஆரம்பத்தாலே அவர்களுடைய கண்கள் கண்ணீரைத் தாரைத் தாரையாக வார்க்கும். தஙக்ளின் வாழ்நாள் முழுவதும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் நேசத்தைப் பற்றி மட்டுமே அதிகமாக பேசியவர்கள் ஹஜ்ரத் அவர்கள் என்றால் அது தான் உண்மை. ஒரு சமயம் அவர்களிடம் தாங்கள் ஏன் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வினவப்பட்ட போது, அல்லாஹ்வுடைய ரஸுலைக் கொண்டே இந்த சமூகம் ஒன்றுபடும், அல்லாஹ்வுடைய ரஸுலின் நேசத்தைத் தவிர வேறெதுவும் இந்த சமூகத்தை ஒன்றுபடுத்தாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், நாளைக்கு மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ்வினுடைய சன்னிதியில் வந்து இந்த இப்ராஹிம் ரப்பானி ஒவ்வொரு நொடிப்பொழுதும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார் என்று மட்டுமே என் சார்ந்த எல்லாமும் சாட்சியாகி கூறுவதை நான் வேண்டுகிறேன் என்றார். ஹஜ்ரத் அவர்களின் அஹ்லுல் பைத்தினரான நபிகளாரின் திருக்குடும்பத்தினர் மீது கொண்ட அளப்பறிய நேசமோ அளவிட முடியாதது. பல தருணங்களில் எங்கள் ஊரிலிருந்து ஹஜ்ரத் அவர்களை பிரிய  மனமில்லாமல் அவர்களின் பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காகவே தஞ்சை புது பஸ்நிலையம் வரை பின்னிரவுகளில் கொண்டு விட்டுவிட்டு வருவோம். அன்றைய நாட்களில் திருச்சியில் ஹஜ்ரத்தை சந்திக்கும் அவரது அலுவலகமும், வீடும், ரமலான் பிறை 15-ல் சந்திக்கும் ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உரூஸ் தினமும் மறக்க முடியாதவை. 

ஹஜ்ரத் அவர்கள் சூரா பாத்திகாவுக்கான தஃப்ஸீரை ஒரு நூலாக எழுதி யாத்துள்ளார்கள். சூரா பகராவிற்கான தப்ஸீரை அஹ்லெ சுன்னத் என்ற தனது மாதாந்திர பத்திரிக்கையில் தொடராக எழுதிவந்தார்கள். மற்றவை அச்சு ஏற்றப்பட்டதா என தெரியவில்லை. இவர்கள் ஒரு தலைசிறந்த பத்திரிக்கை ஆசிரியர். சாதாரணமாக ஒரு கேளிக்கை பத்திரிக்கை நடத்துவதையே நெருப்பாற்றில் நீந்துவது என்பார்கள் இதில் இஸ்லாமிய பத்திரிக்கை நடத்துவதென்றால் சொல்லவே தேவையில்லை அப்படி இருந்தும் எந்த ஒரு பலாபலனும் எதிர்பார்க்காமல் சத்திய கொள்கையை வளர்ப்பது அதை விளக்குவது என்ற ஒரே குறிக்கோளையே மையமாக வைத்து அஹ்லெ ஸுன்னத் என்ற மாதாந்திர பத்திரிக்கையை நடத்தி வந்தார்கள். தமிழகத்தில் வந்த எத்தனை எத்தனையோ பல இஸ்லாமிய பத்திரிக்கைகளில் அஹ்லுஸ் ஸுன்னத் மிக சிறப்பான பத்திரிக்கையாக வலம் வந்தது. அந்த பத்திரிக்கையை ஒருவர் தொடர்ந்து படித்து வந்தாலே இஸ்லாமிய வரலாற்றிலும், பிக்ஹிலும், தஸவ்வுஃப் எனப்படும் ஞானத்திலும் தலைசிறந்தவராக நல்ல இஸ்லாமியராக பரிணமிக்க செய்திடும் அத்தனை அம்சங்களும் அதில் மிகுந்திருந்தது என்றால் அது மிகையில்லை. பெரும் பொருளாதார பிரச்சனைகளிலும் அதை நடத்தி வந்த ஹஜ்ரத் அவர்கள் 2003க்கு பிறகு அதை நடத்தும் வகை இல்லாத காரணத்தால் மனமின்றி அதை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

ஹஜ்ரத் அவர்கள் பல நூற்களையும் எழுதி தமிழ் இஸ்லாமிய மாந்தருக்கு கொடையாக தந்துள்ளார். அதிற்சிலது தான் கீழ்காணும் நூற்களான

 • வஹ்ஹாபிய தோற்றம் பாகம் - 1 (பிரிட்டிஸ் உளவாளி ஹம்ப்ரேயின் ரகசிய ரிப்போர்ட்),
 • வஹ்ஹாபிய தோற்றம் பாகம் – 2 (பிரிட்டீஸ் உளவாளி ஹம்ப்ரேயின் ரகசிய ரிப்போர்ட்),
 • இன்னுமா உறக்கம்,
 • வஸீலாவும் உதவி தேடுதலும்,
 • கப்ருகளும் ஜியாரத்தும்,
 • இஸ்லாமிய கொள்கைகள்,
 • ஜோதியின் அகமியம்,
 • ஸலவாத்தின் சிறப்புக்கள்,
 • அறப்போரின் அற்புத தியாகிகள்,
 • தலாயிலுல் கைராத்,
 • நல்லோரை முத்தமிடுதல்,
 • ஹிதாயத்துல் ஆபிதீன்,
 • சுப்ஹான மெளலிது,
 • உம்மத்தின் வீழ்ச்சிக்குரிய காரணங்கள்,
 • வஸீலா என்றால் என்ன‌?
 • அன்னையும் பிதாவும்

போன்றவைகள் ஆகும். இவைகள் எல்லாம் ஹஜ்ரத் அவர்கள் எழுதியதில் குறிப்பாக தெரிந்தது மட்டுமே ஆகும். இது அல்லாமல் வேறும் இருக்கலாம். 
2008 ஆம் ஆண்டு எடுத்தப்படம் (இலங்கை)

கடைசியாக ஹஜ்ரத் அவர்களை நான் இலங்கையில் நடந்த மீலாது விழாவிற்கு சென்ற போது தான் சந்திக்கும் அரும்வாய்ப்பு கிடைத்தது, அப்போது ஹஜ்ரத் அவர்கள் என்னையும், மதிப்பு மிக்க தோழமைகள் அண்ணன் அப்துல் ரஹீம் (சாப்ஜி) மற்றும் பேச்சாளர் எஃப். அப்துல் கரீம் இவர்களையும் தமது மகன் அனுப்பியதாக அவர்கள் வைத்திருந்த மோட்டோரோலா மொபைலில் வாஞ்சையுடன் படம் பிடித்து கொண்டார்கள். எங்களுக்கும், அவர்களுக்குமான தொடர்பு ஒரு ஆசானுக்கும் மாணவனுக்குமான தொடர்பாகவே இருக்கும். இப்படியாக நாங்கள் மார்க்கத்தின் நுணுக்கங்களையும், சிறப்புக்களையும், ஞானத்தையும், அஹ்லெ பைத்தினரின் சிறப்புக்களையும் அறிய காரணமாக இருந்த பேரறிவின் தீபம் மலேசியா, சிங்கப்பூர், புருனை, இலங்கை என கடல் கடந்தும் தமிழகம், வட இந்தியா என வலம் வந்து எல்லா இடங்களிலும் மேடைகளில் கர்ஜித்த சத்தியத்தின் சிங்கம் இறுதியாக சென்ற 25ம் தேதி மே மாதம் 2010-ல் தனது அறுபத்து இரண்டு வயதை நிறைவு செய்து, அறுபத்து மூன்றாம் வயதில் தன்னுடைய ரஸுலின் வழியில் (1948-2010) தன் மூச்சை நிறுத்திக்கொண்டு ஹக்களவில் தன்னை நிறைத்துக்கொண்டது. அந்த உயரிய ஆன்மாவின் சிறப்பை இவ்வாண்டு நினைவு கூறும் முகமாக அவர்களின் மாணவன் என்ற அடிப்படையில் அந்த உயர்ந்த ஆன்மாவிற்காக இந்த கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.

 


வல்ல அல்லாஹ் இந்த மகானின் சீரிய பணிகளை எல்லாம் அங்கீகரீத்து அவர்கள் ஒவ்வொரு மூச்சிலும் நேசித்து அழுது காதலித்து கொண்டிருந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் கஸ்தூரி மணம் கமழும் நேசத்தில் ஹஜ்ரத் அவர்களை என்றென்றும் நிரந்தரப்படுத்தி வைப்பானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

வேண்டுகோள்
ஹஜ்ரத் அவர்களின் மகனார்களுக்கு எனது கனிவான அன்பு வேண்டுகோள் ஹஜ்ரத் அவர்களின் வெளிவந்த ஆக்கங்கள், வெளிவராத அக்கங்கள், தொடர் கட்டுரைகள் என பலவற்றை நீங்கள் மீள்பதிப்பு செய்தால் அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ் தமிழ்கூறும் இஸ்லாமிய உலகம் பற்பல பயன்பாடுகளை அடையும் அதன் மூலம் ஹஜ்ரத் அவர்களின் தூய ஆன்மா இன்னும் நிறைய நிறைய நெஞ்சங்களால் புதிய தலைமுறையினரால் நன்றியுடன் நினைத்து பார்க்கப்படும் என்பதே!
குறிப்பு
ஹஜ்ரத் அவர்களின் உயரிய வாழ்வு, மேதைமை, ஆக்கங்கள், குர்ஆன், ஹதீஸ்-ன் புலமை, ஞானம், மேடைப்பேச்சு, வசீகரம், கனிவு கொள்கை உறுதி என இவ்வாறு பற்பலவாக ஆராய்ந்தால் ஒவ்வொரு தலைப்பிலும் தனித்தனி நூற்கள் இயற்றலாம். இந்த கட்டுரையையே என்னால் எழுதி முடிக்க இயலவில்லை மனதில் பல சம்பவங்களும் ஹஜ்ரத் சார்ந்த நினைவுகளும் பொங்கி பீரிட்ட வண்ணமாகவே உள்ளது இருந்தாலும் நீண்ட கட்டுரை வேண்டாம் என்றும் பிரிதொரு வாய்ப்புகளில் நிறைய பகிரலாம் என்ற எண்ணத்தில் தான் இக்கட்டுரையை முடித்திருக்கிறேன்.

உளமார்ந்த நன்றிகள்

1. எங்கள் வழுத்தூருக்கு அந்நாட்களில் நாங்கள் ஹஜ்ரத் அவர்களை அறியும் வகையில் அழைத்து வந்து அறிமுகப்படுத்திய தர்ஹா பள்ளியின் இமாம் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் நூரி அவர்களுக்கும்,
2.ஹஜ்ரத்தின் மறைவு நேரத்தில் ஜியாரத்திற்கு சென்று வந்து இரங்கல் சுவரொட்டியையும் பகிர்ந்தளித்த எனது மாமனார் ஜனாப். முஹம்மது ஜாபர் சாதிக் அவர்களுக்கும்,
3. ஹஜ்ரத்தின் நூற்கள் குறித்தும் மற்ற எனது வினாக்களுக்கும் தெளிவு தந்த அவரின் புதல்வர் சகோதரர் நாசர் ரப்பானி அவர்களுக்கும்,
4. நான் மேடைகளின் கர்ஜனை அல்லது சத்திய உலமா (உலமா என்பது பன்மை என்பதும் யோசித்த ஒன்று) என்ற தலைப்ப்புக்களை சொல்லி எப்படி வைக்கலாம் நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன் எனக்கேட்டதற்கு அதை சத்தியத்தின் கர்ஜனை என மாற்றினால் சிறப்பாக இருக்கும் என ஆலோசனை கொடுத்த ஆத்ம நண்பர் அண்ணன் அப்துல் ரஹீம் (சாப்ஜி) அவர்களுக்கும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா