29 அக்டோபர் 2011

அவர்கள்..!


அவர்கள்..!
உன்னையே நினைத்தவர்கள்
உயர்நபியை துதித்தவர்கள்
சத்திய சஹாபாக்களை,
சன்மார்க்க சீலர்களை,
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு
சந்தோசமாய் நேசித்தவர்கள்
சதா உன் அருளையே யாசித்தவர்கள்.

முன் சென்ற சிலர்
முகங்கள் யாபகம் இல்லை,
அவர்கள் எனக்கு
முகவரி தந்தவர்கள்.
மூத்தவர்கள் சொல்ல-அவர்களின்
முத்தான விசயங்கள் அறிவேன்.

சிறுபிள்ளையாய் நானிருக்கையில்
சிலர் சென்றனர், - சிலர் சென்றனர்...
சிலகாலம் முன்னர்.

இளவயதில் அவர்களோடு
இன்பமான காலங்கள்,
இதயத்தில் நிறைந்த
இதமான தாளங்கள்.

ஆயிரம் அனுபவங்கள் நிறைந்த
அறிவுப் பொக்கிசங்கள்
அவர்கள் .

வாழ்க்கையை கற்றுத்தரும்
வண்ணமிகு களஞ்சியங்கள்
அவர்கள்.

வசந்தம் தேடிச்செல்லும்
வாசமலர் தோட்டங்கள்
அவர்கள்.

வெற்றாய் விரவிய
வெட்டவெளிக்கு ஒப்பானவர்கள்
அவர்கள்.

மனதால் வெகுளிகள்,
பாமர ஞானிகள்
அவர்கள் மீது பாபமில்லை.

சரிஅத்தின் சட்டம் மீதும்
சடங்கான விசயங்கள் மீதும்,
சங்கை நபிக்காதல் மீதும்,
சற்குண வலிமார் நேசத்தின் மீதும்
ஆசான்கள் அவர்கள்.

திருநபிக் குடுபத்தாரெனில்
திருவுளத்தோடு சங்கை செய்வர்,
பாசநபியின் பெயரைக் கேட்டால்
பயபக்தியோடு சலவாத்து சொல்வர்.

அவர்கள்.....! - நம்
கண்களுக்கு மறைந்திருக்கிறார்கள்,
தூலஉடல் இப்போது இல்லையாயினும்
மறைவாய் வாழ்கிறார்கள்..!
மகிழ்வாய் வாழ்கிறார்கள்..!

ஆத்மாவில் அண்ணலாரின் நேசம்
சுமந்ததால் என்றும் சுகமாய்
நம்முடன் அவர்கள்!.

இறைவ..!
அவர்களுக்கு ஆத்ம சுகமருளி
ஆனந்தம் செய் நாயனே!
அருளால் அணைத்துக்கொள் நாயனே!
அகமதிய அம்சத்தில் பிணைத்துக்கொள் நாயனே!
அனைத்திலும் நிறைத்துக்கொள் நாயனே!




-ஜே.எம்.பாட்ஷா


4 அல்லது 5 வருடங்களுக்கு முன் எழுதியது

24 அக்டோபர் 2011

அநியாயம் இல்லையா..!



பல்லவி
அஹ்லுல் பைத்தை மறந்து நாம் வாழ்வதா
அநியாயம் இல்லையா.. அநியாயம் இல்லையா..!
அல்லா ஹுவே வாழ்த்திக் கூறினான்
குர்ஆனில் இல்லையா.. குர்ஆனில் இல்லையா..!

அனுபல்லவி
அவர்கள் தந்ததே இந்த வாழ்வு நமக்கு..!
அவர்கள் தியாகத்தில் நம் வாழ்க்கை இருக்கு..!

சரணங்கள்
அன்னையவர் கதிஜாவின் வாழ்க்கை யெல்லாம் தியாகமம்மா
ஆருயிராம் பாத்திமாவின் ஆயுளெல்லாம் சோகமம்மா
ஆட்சிசெய்ய விடவில்லையே மாட்சிமிக்க அலிதனையே
சூழ்ச்சிசெய்து விசம்கொடுத்தார் ஆட்சிக்காக ஹஸனவர்க்கும்
நம்மநபி குடும்பம் பட்ட பாடிதுதான்…!

ராஜநபி பிரியர்ஹுஸைன் பீடமேற விரும்பவில்லை
இறைவனையே விரும்பியவர் இரவுபகல் இயம்பிவந்தார்
(கூஃபா)மக்களெல்லாம் மிகஅழைக்க விருப்பமின்றி மனதிசைந்தார்
மிக்கமோச மானஏஜீது படைஅனுப்பி சினந்து நின்றான்
கலிமாவின் முஹம்மதை மறந்து நின்றான்...!

பொறுமையுடன் வீரர்ஹுஸைன் போர்வேண்டாம் என்றுரைத்தும்
கருமையுள்ளம் கொண்டவர்கள் கர்பலாவில் தொடங்கினரே
பிறைஒன்றில் ஆரம்பித்து முறையின்றி போர்நடக்க
இறைத்தூதர் வம்சத்தாரின் உயிர்குடித்தார் பாவிகளே
சத்தியத்தை காத்து நித்ய மானார்ஹுஸைன்…!

ஹக்கன்நபி நாட்டிவைத்த தத்துவத்தை மீட்டெடுக்க
இத்தனைபெரும் தியாகங்களை செய்ததந்தத் திருக்குடும்பம்
இன்றுநாம் முஸ்லிமென முழங்குதற்கு காரணமே
அவ்வுத்தமர்தம் இணையில்லா நெக்குருகும் தியாகங்களே..
அதைநித்தம் நினைத்தாலே ஈமானில் முக்திபெரும்!

குறிப்பு : கூஃபா என்பது மாத்திரை அளவு குறைவாக ஒலிக்க வேண்டும்.


சங்கை நபி இசைக்கோர்வையில் 2016ல் வெளிவந்தது.

-ஜா. முஹையத்தீன் பாட்ஷா

21 அக்டோபர் 2011

தழுவல்!

உணர்வுகளின் கீதம்..தொடர் -1


போனும், ஸ்கைப்பும் எல்லாம் போதவில்லை.. நீ வைக்கிறேன் என்று சொல்லிய பிறகும் வேறு வழியில்லாமல் நானும் ஆமோதிக்கிறேன். எவ்வளவோ வார்த்தைகள் வெளிவந்த பிறகும் இன்னும் ஏதோ ஒரு கனம் மனதிலேயே நின்று கொண்டு கனத்துக்கொண்டிருக்கிறது. சந்தோசத்தை.., மகிழ்வை.., கோபத்தை.., கூடலை.., ஊடலை.., முத்தத்தை.., செல்ல வார்த்தைகளை.., மொத்தமாய் கொட்ட முடியாமல் பேசி.. பேசியும் பேச்சுக்களால் முடியாத மீதி வைக்கப்பட்டு கிடக்கும் மனதின் அந்த கனம் எப்படி நீங்கும்?.
ஈராயிரம் மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டு ஒலியிலும்.. ஒளியிலும் மட்டுமே நாம் நடத்தும் நம் குடும்பம் ஒலியும், ஒளியுமாக மட்டுமே ஆகிவிட்டது. காற்றலைகளில் காதலையும்.., காமத்தையும்.., திட்டங்களையும்.., நேற்றையையும்.., இன்றையும்.., நாளையையும்.., குடும்பத்தையும்.., வாழ்க்கையையும்.., பேச்சுக்களாலும், அசையும் நிழல்களாலும் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால் வாழ்வின் அர்த்த சங்கதிகள் தீருமா..?.
அது ஆத்மா கேட்கும் இணையோடு தழுவும் பேராவலின் தழுவலில் உண்டாகும் பறிமாற்றத்தில் நிகழும் மனமகிழ்வில்.. அழுகையில்.. பூரிப்பில்.. நிம்மதியில்.. அல்லவா தீரும்! அந்த தழுவல் தானே இங்கு தேவை.. அவ்வாறான ஒரு நிமிட தழுவலில் இறுக்கி அணைக்கும் ஏதோ ஒரு மைக்ரோ வினாடியில் என்னை நானும் உன்னை நீயும் நமக்கே தெரியாது மறந்து மீண்டெழும் அந்த சனத்தின் புண்ணியத்தில் எல்லாவிதமான ஆன்ம- உடலியல் பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு மனமே லேசாகிவிடுமே.. அந்த கனநேர தழுவலின் நிறைவை பலமணி நேர பேச்சுக்கள் தர முடியுமா..?.
எல்லா நேரங்களிலும் மனிதனின் மனநிலை ஒரே மாதிரி இருக்குமா.. சில நேரம் நிகழும் மனஅழுத்த சூழலுக்கு மருந்தாக தேவைப்படும் உன் ஸ்பரிசமும், பாசமும், அன்பும், ஆதரவும் கிடைக்காத ஏக்கத்திற்கு தனிமை தான் எப்படி பதிலளிக்க முடியும்? அல்லது சில சமயம் எழும் ஏகாந்த நினைவுகள் விரக்தியின் ஆரவரமற்ற எல்லைகளில் எங்கெங்கோ செல்ல பகிர்ந்து கொள்ள யாருமற்று போகும் வேளையில் அதன் உள்ளீடாய் மனதில் புழுக்கத்தையும்.. வெளிப்பாடாய் முகத்தில் இறுக்கத்தையும் கொண்டு அலையும் வேளையில் உன்னிடத்தில் மட்டுமல்ல எல்லோரிடத்திலும் சுடுசுடுப்பும், கோபமும் தான் என்னிலிருந்து பிரதிபலித்துவிட நேர்கிறது. அதுபோன்ற ஆதரவு தேடும் உணர்வுகள் அது கிடைகாத போது என்னை அறியாமல் கண்கள் குளமாகி ததும்ப.. வரும் விழியோர நீர் தாரைகள் விடைதேடி வடியும்போது அதன் சூடும்.. கரிப்பும் மனதின் ஏக்கங்களை ஏகபோகமாக சுமந்து கொண்டு வருவது தானே உண்மை!
இது இவ்வாறிருக்க.. இங்கே உள்ள சூழலிலோ அல்லது அங்கே உள்ள சூழலிலோ நம்மில் யாரேனும் சற்றே சகஜமாய் பேசுவது தவறினாலோ சட்டென நிறுத்திக்கொள்ள நேர்ந்தாலோ அல்லது சரியாக பேசாமல் போனாலோ.. நன்றாக பேசி வைக்கையிலேயே திருப்தி அடையாத அந்தராத்மா.. இப்போது இன்னும்.. இன்னும் அழுதழுது வெம்மி தனக்குள் புழுங்கி புலம்புமே அதை என்னவென்றுதான் சொல்ல..! ஐயோ! மனம் தேடும் உறவுகளை, உணர்வுகள் கேட்கும் உயிரான விசயங்களை, ஆதரவை, அமைதியை, தோழ் சாய்தலை, தோழமையை, அன்பினை, ஆலிங்கனத்தை, அடையாத வாழ்வெல்லாம் நாமே தேடிக்கொண்ட சாப வாழ்வேயன்றி வேறென்ன!.
ஆயிரம் தான் பணம் ஊரில் நம் மானத்தினை காப்பதற்கும்.. வீட்டில் தினம் அடுப்பில் ஆணத்தினை வார்ப்பதற்கும் மிக.. மிக.. முக்கியமாக இருக்கிறதே என்றாலும் அந்த அத்தியாவசியத்திற்காக மட்டுமே நாம் முயன்றிருந்தால் நாம் அல்லது நம் சமூகம் இத்தனை உயிரும்.. உறவும்.. உணர்வும் சார்ந்த சோதனைக்கு உள்ளாகி இருக்காது.
மாறாக, நாம் தேர்ந்தெடுத்த இவ்வாழ்வின் பிண்ணனியில் ஓர் சமூக பொறாமையும்.. போட்டியும் ஒளிந்துள்ளது.. மட்டுமல்ல வெற்று படோடோப வாழ்விற்கும்.., பெரும் பெரும் தொடர் கனவுகளுக்கும்.., ஆசைவைத்த பெருங்குற்றம் மறைந்துள்ளது. மேலும் ஒன்றுக்கு பத்தாக கிடைக்கும் என்ற நப்பாசையும், நம் நாட்டில் கஷ்டப்பட்டு உழைக்க மனமில்லாத சோம்பலும், துணிச்சலும்.. திராணியும் அற்ற நிலையும் தான் இதன் பின்ணனி. இந்த பின்ணணியின் முன்னணியில் நிற்பவர்கள் நம் சமூகவாதிகளான இருக்கும் நம் குடும்பத்தவர்களும் இன்னும் நமக்கு வேண்டிய அத்தனை ஆத்மாக்களும் தான்.
நாம் முளையென முளைத்து எட்டி வளர எத்தனிக்கையில் சரியான வழிகாட்டி நம் நாட்டிலேயே உழைத்து சிறக்க கைத்தூக்கி விடாது, பிழைப்பா..!! ஓடிப்போ எங்காவது வெளிநாடு என்னும் திருந்தாத சித்தாந்தம் தான் இதற்கு காரணம்! ஏனெனில் அவர்களும் நம்முடைய இதே சூழலில் சிக்குண்டு தாயகத்தில் உரிய பின்புலம் இல்லாது நிற்கையில் அவர்கள் நமக்கு உதவும் கரங்களாக இருப்பார்கள் என்று நாம் எங்ஙனம் எதிர்பார்க்க முடியும்? என்ன செய்ய இப்படியே எழுதிக்கொண்டு போனால் கேள்விகளால் தான் தாள்கள் நிறையும்..!!!
(தற்போது இது போன்ற நடைமுறை இடர்பாடுகளை அறியும் இளைஞர்கள் நன்றாக படித்து நாட்டிலேயே பணியில் அமர தொடங்கியுள்ள சமூகசூழல் மாற்றம் மனதிற்கு மகிழ்வை தருகிறது)
-ஜே.எம்.பாட்ஷா

ஆதரிப்பீர் தாய்ச் சபை வேட்பாளர்களை....

09 -அக்டோபர்-2011 அன்று அனுப்பப்பட்ட மின்மடல்.. இது பதிவுக்காக மட்டுமே

ஆணவமும்,அகந்தையும் கிடையாது;

ஆன்மீகமும்,அடக்கமும் நிறைந்திருக்கும்.

அடிதடியும்,அடாவடியும் கிடையாது;

அரவணைப்பும்,ஒருங்கிணைப்பும் மிளிர்ந்திருக்கும்.

ஆடம்பரமும் ஆரவாரமும் கிடையாது;

ஆர்த்தெழும் தக்பீர் முழக்கமும்,ஆர்ப்பரிக்கும் கொள்கைப் பிடிப்பும் நிலை பெற்றிருக்கும்.

பணவேட்கையும்,பதவி மோகமும் கிடையாது;

உளங்குளிர்தலும்,உதவி செய்தலும் உயர்ந்து நிற்கும்.

கட்டப்பஞ்சாயத்தும்,வெற்றுப் பஞ்சாயத்தும் கிடையாது;

அல்லாஹ்வை அஞ்சும் கூட்டமாகவும்,அடியார்களை கொஞ்சும் கூட்டமாகவும் பவனி வரும்.

அதனால் ஆர்த்தெழுந்து ஆதரிப்பீர் தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களை....

-----------------------------------------------------------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும், இறைத்தூதர் (ஸல்..) அவர்களின் நல்லாசியும் என்றும் நிறைந்து சூழட்டுமாக!

தற்போது தான் மின்னஞ்சலை பார்க்க நேர்ந்தது!

சகோதரர் முஜீப் அவர்களின் சமூக அக்கரை வரவேற்கத்தக்கது, அல்லாஹ் அருள்வானாக!

நானும் இங்கே என் கருத்தை அன்புள்ளத்தோடு பதிவு செய்கிறேனே அல்லாது வேறெந்த நோக்கமும் இல்லை.

நான் அனுப்பிய மின்மடல் பறிமாற்றம் முஸ்லிம் லீக்கின் மாதம் இருமுறை பத்திரிக்கையாக வரும் 'பிறைமேடை' யில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தலையங்க வாசகங்கள் அவை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் சமுதாய பேரியக்கத்தின் பிரதிநிதி என்னும் அடிப்படையிலும் ஒரு பொறுப்பான சமூகவாதி எனும் அடிப்படையில் நல்லெண்ண ரீதியில் மக்கள் மன்றத்திற்கு பொதுவாக அனுப்பியது. அம்மின்மடல் நமதூருக்கு மட்டுமல்ல தமிழகம் தழுவிய எல்லா நண்பர்களுக்கும் அனுப்பப்பட்ட ஒன்று.

முஸ்லில் லீக் என்பது நமது பாரம்பரியம் காத்த வரலாற்றுக்கு சொந்தமான இயக்கம். இந்திய தேசிய காங்கிரஸோடு அந்நாளில் இருந்த இரண்டு பேரியக்கங்களில் பிரிதொன்று தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

இந்திய சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் அனைவரும் இந்தக் குடையின் கீழ் தான் ஒன்று திரண்டனர். இதுநாள் வரை அதன் மாண்பு மாசுபடாது இஸ்லாமிய சமுகநலன் கருதி உழைத்து வருகிறது.

அந்த மடலில் குறிப்பிட்ட எல்லா அம்சங்களும் நிறைந்த இயக்கம் தான் இ.யூ.முஸ்லிம் லீக் ஆகும், அந்த அம்சங்கள் உள்ளவர்களால் நிறம்பியது தான் முஸ்லிம் லீக் எனும் சமூக பேரியக்கம். இதற்கு அன்று முதல் இன்று வரை உள்ள அரசியல் தெரிந்த இஸ்லாமிய நல்லுள்ளங்களே சாட்சி.

இதுவரை முஸ்லிம் லீக் எந்த ஊழலில் ஈடுபட்டு மக்களை ஏய்த்து குடித்திருக்கிறது என எப்போதாவது உண்டா.. இல்லை சாதி அல்லது இன வெறியைத்தூண்டி கீழான அரசியல் நடத்தி மக்களுக்குள் பகைமையை உண்டுபண்ணி சுயலாபம் சம்பதித்தது என யாராலும் கூற இயலுமா அல்லது பணமோசடி..நிலமோசடி..என சத்தியத்திற்கு அப்பாற்பட்டு அது தன் செயல்பாடுகளை ஊக்குவித்த இயக்கம் என எந்த நாளிதழ்களாவது பிரசுரித்த தினங்கள் புலர்ந்தது தான் உண்டா.. இல்லை மக்களின் உணர்வுகளை மோசமான வகையில் தூண்டி வன்முறையால் போராடவைத்து வேடிக்கை பார்த்து அவர்கள் சிறை செல்லவும், குடும்பங்கள் சிதறுண்டு போகவும் காரணமான இயக்கமாக வளர்ந்ததாய் அறியப்பட்ட ஒன்றா.. இது இயற்கையிலேயே அற்புதமான, தலைவர்களால் வழிகாட்டப்பட்ட கண்ணியமான அமைதிப்பேரியக்கம். இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை அன்று முதல் இன்று வரை மிக சாதுர்யமாக கையாண்டு அரசியல் தீர்வு காணும் ஓரியக்கம்.

நீங்கள் குறிப்பிடுவது போன்று எந்த தனிநபரையும் வைத்து எல்லாவற்றையும் சட்டென விமர்சிப்பது தகாது! மேலும் அது குறித்து இங்கே முழுவிவரங்கள் இல்லாமல் வாதப் பொருளாக்குவது சாலச்சிறந்த ஒன்றல்ல,.

மேலும் இறைமறையின் கூற்றுப் பிரகாரம் மனிதப்பிறவிகள் எல்லோரும் தவறிழைக்கக் கூடிய, பலகீனமானவர்கள் தான், தவறுகளை நயம்பட கூறினால் யாரும் தங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

ஒரு சமூகத்தின் கட்டுமானத்திற்கு, சமூகவியலில் சிதைவு நேறாதவண்ணம் காப்பதற்கு, கொள்கை உறுதிக்கு, நம்மவர்களின் மற்றும் நமதூரின் வளர்ச்சிக்கு, இன்றைய சமுதாயத்திற்கு எது தேவை.., யார் அவசியம்.. எந்த இயக்கம் அவசியம் என நாம் சிந்தித்து பார்த்தல் மிக அவசியம். இல்லாது போனால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்பது போல் ஆகி மாற்றாருக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதாகிவிடும். எல்லோரிலும் உள்ள குறைகளையே கண்டால் குற்றமற்ற யாரும் இருக்கமாட்டார்கள்

ஒரு குடிகாரன் இஸ்லாத்தில் உள்ளவனாக இருந்து அவனின் செயல்பாடுகளால் ஒருவர் ஒட்டுமொத்த இஸ்லாத்தினையே தவறாக விமர்சித்தால் நாம் ஏற்ப்போமா.. அதுபோலவே தான் ஒரு நிறுவனம், ஒரு இயக்கம் இவைகளை யாரையும் வைத்து எடைபோட்டு விடுதல் சரியாகாது.

இதெற்கெல்லாம் ஒரு அப்பாற்பட்ட ஒரு கேள்வி.. நீங்கள் ஆதரிக்க சொல்லும் வேட்பாளர் நூற்றூக்கு நூறு சதம் அரிச்சந்திர வம்சத்தில் வந்த வாய்மையாளராக, இந்தியன் தாத்தாவின் அனைத்து அம்ச குண பாவங்களும் ஒன்றிணைந்து பொது சொத்திற்கு பாதுகாவலராக.. இரவு நேரங்களில் அரசு அலுவல்களை பார்க்கும் போது மட்டும் அரசாங்க விளக்கையும், இடையே ஒருவர் குறுக்கிட்டு பேச வந்த போது அது தனிப்பட்ட விசயம் என சொல்ல அந்த விளக்கை அணைத்துவிட்டு தனது சொந்த விளக்கை ஏற்றி பேசிய கலிபாக்கள் இருந்தது போல இருப்பரென்றெல்லாம் நீங்கள் உத்தரவாதம் தருகிறீர்களா.. நாம் கொஞ்சம் நம் சமூகவியலோடு தொலைநோக்காய் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு நம் நிலைப்பாடு அமைதல் அவசியம்.

மேற்சொன்னவைகளை ஒரு கருத்திற்காகத்தான் சகோதரத்துவத்தோடு பறிமாறிக்கொண்டேன், அவர் கெட்டவர்.. இவர் இப்படி.. என வேறுபாட்டை நமக்குள் நிலைநிறுத்தாமல் எல்லோரும் நம் சகோதரர்கள் என்ற அடிப்படையில் மனதோடு கூடிய முகமலர்ச்சியோடு நாம் எல்லோரும் ஒன்று பட்டு நேசம் பூண்டு, ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்கிட.. இக்லாசான முறையில் நம்மக்களுக்குள் சிறந்த ஒருவரை.. மக்களுக்காய் உழைக்கும் ஒருவரை யாரின் மனமும் நோகாத வண்ணம் தேர்ந்தெடுத்திட தயவுசெய்து பாடுபட வேண்டும். நம் இஸ்லாமிய சமூகத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பது என் கருத்து.

நேர்மறை சிந்தனையோடு வாழ்வினைத் தொடருவோம்.. சமூகத்தினை ஒருங்கிணைப்போம்!

வஸ்ஸலாம்.

ஜே.முஹையத்தீன் பாட்ஷா (ராஜா முஹம்மத்)

(17-10-2011 அன்று நடைபெறவிருந்த உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி என்னால் அனுப்பபட்ட மடலுக்கு எழுந்த சர்ச்சைக்கு நான் அனுப்பிய பதில்.. இதை முதுவை ஹிதாயத் அவர்கள் உடனே அனைவருக்கும் அனுப்ப நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.அப்துல் ரஹ்மான் உடன் உற்ச்சாக பதில் எழுதி நன்றி தெரிவித்தார்)