01 அக்டோபர் 2014

ஜெயலலிதா கைதும்.. அதிமுகவும்!

(இந்த எழுத்துக்கள் ஒரு சாதாரணின் உணர்வுகள்.. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. . இப்படித்தான் என்போன்ற எத்தனையோ பேரின் எண்ணங்களும் ஆகும் என்பதை எழுத்துக்களில் என் எண்ணங்களில் புகும் முன்னே அறிக!)



அரசியல் கட்சிகளின்.. சினிமா நடிகர்களின் தனிநபர் ஆராதனை என்பது இந்தியாவிலேயே நம் செந்தமிழ் நாட்டை அடித்துக்கொள்ள எந்த மாநிலமும் இல்லை, அந்த வகையில் நமது முன்னாள் முதல்வரை அவரது அபிமானிகள் இதயதெய்வமாக வைத்துக்கொள்ளட்டும்  இதயத்தில் கோயில் கட்டி பூஜிக்கட்டும்.. ஆனால் அவர் சட்டத்தின் முன் குற்றம் சாட்டப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர். அதனால் தான் சட்டத்தின் தீர்ப்பின் பிரகாரம் சிறையில் இருக்கிறார். இது போன்ற நிகழ்வு இவருக்கு மட்டும் முதன்முதலாக நிகழவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த லாலு பிரசாத் இவ்வாறே வழக்கை சந்தித்திருக்கிறார். மூன்று மாதத்திற்கு பிறகு தான் பிணையில் வெளியே வந்தார்.. ஆட்சி அதிகாரத்தில் திமுக இருக்கும் போது தான் "குற்றம் சாட்டப்பட்டு" கனிமொழி சிறை சென்றார் அவரும் சிலமாதங்கள் கழித்துத்தான் வெளியே வந்தார், மத்திய அமைச்சர் இராசாவுக்கும் இந்நிலை தான் அவரும் பொறுமையாக சட்டப்படி வழக்கை சந்தித்து ஆறு மாதம் வரை சிறைவாசம் அனுபவித்து பிறது வெளியே பிணை பெற்று வந்தார்.



அப்போதெல்லாம் யாரும் நீதிபதியை திட்டவில்லை.. நீதிபதியின் மாநிலத்தை வைத்து மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடவில்லை.. நீதியை விமர்சிக்கவில்லை அவரது கட்சிக்காரர்களும் அமைதி காத்தார்கள் அநாவசிய கலவரங்களை உண்டுபண்ணவில்லை.. தெய்வத்திற்கு மனிதன் தண்டனை தர முடியுமா..????? என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக அலப்பறை செய்யவில்லை.. மாநில மொழியை வைத்து.. இரு மாநிலங்களுக்குள்ளான வாய்க்கால் தகராறை காரணம் காட்டி ஆ...ஊ... என பிதற்றவில்லை.. டிவியில் அங்கே ஆர்ப்பாட்டம்.. இங்கே போர்பாட்டம்.. இங்கே ஆராதணை.. இங்கே பிரார்த்தனை.. அங்கே மண்ணில் உருண்டார்கள்.. இங்கே அழுதார்கள்.. கடலுக்குள் விழுந்தார்கள்.. தீக்குளித்தார்கள்.. பிஸ்கட் சாப்பிட்டார்கள் என்றெல்லாம் வித.. வித வினோதங்களை நிகழ்த்தவில்லை.


இத்தனை நாளாய் எத்தனை எத்தனை பேர் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.. இது போன்ற விடயங்களின் தொடர்  மக்களிடம் இருந்த மனக்கசிவை.. இரக்கத்தை..எதிர்மறையாக வெறுப்பை விதைக்கும் விதமாக மாற காரணமாகி இருக்கிறது. இதை ஏனோ அவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள். சட்டத்தை எதிர்த்தும்.. சபித்தும் நீதியை.. நீதிபதியை குறைத்தும் பேசுவது  சட்டத்தை வைத்து மக்களை ஆட்சி செய்யும் ஆளும் கட்சியினருக்கு அழகல்ல.


வழக்கை பதினெட்டு ஆண்டு இழுத்தடித்தது நீங்கள், வழக்கில் தீர்ப்பு வந்து குற்றவாளி என ஆனதும் இச்சனமே வெளியே வரவேண்டும் என்று அப்போது காட்டத்தவறிய வேகத்தை வெளியில் வரமட்டும் காட்டுவது எப்படி சரியாகும். உங்கள் உணர்வில் எப்படியாவது வெளியே கொண்டுவர முயற்சிக்கின்றீர்.. நல்லது ஆனாலும் நீங்கள் நிதானத்தை கடைபிடித்தால் அழகாக காரியம் சித்தியாகி முன்னால் முதல்வர் நீங்கள் சொல்லும் இந்நாள் மக்களின் முதல்வர் வெளியே வர முடியும். ஏன் பதறி துடித்து நீங்களே அவருக்கு இன்னும் இம்சை கொடுக்கின்றீர்.

சட்டத்தை மதித்து கொஞ்சம் கட்சிக்காரர்களை அடக்கி வைத்து தேவையில்லாமல் வெளியாகியிருக்கும் பூதங்களை மீண்டும் பெட்டிக்குள் அடைத்து முறையாக நடந்து உங்கள் மதிப்பினை மாண்பினை மீட்டுக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உணர்ச்சிக்கு மட்டும் ஆட்பட்டவரக்ள் அல்ல சில தருணங்களில் சட்டென அவர்களின் ஞானோதயம் உங்களை இன்னும் சங்கடத்தில் ஆழ்த்திவிடலாம். எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருத்தல் நலம் பயக்கும்.

பகவான் சேமம் தரட்டும்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

Well said, Mr. Batcha. You are spot on.

Ramkumar

பெயரில்லா சொன்னது…

true.great

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

நன்றி நண்பர்களே!

Yarlpavanan சொன்னது…

சிறந்த பதிவு
தொடருங்கள்

வேகநரி சொன்னது…

உங்களுக்கு சலூட் வைச்சுகிறேன்.