14 அக்டோபர் 2022

நாவலர் கெளஸ் முஹைதீன்



"பூமான் நபியின் புனித வாழ்க்கை" எழுதிய நாடறிந்த எழுத்தாளர், நாவலர் கெளஸ் முஹையத்தீன் மறைந்தார் என்ற செய்தி திடுக்கிட வைத்தது.
வெகுளியான வெள்ளந்தி மனிதர், சஃபாரி உடை தான் அவருக்கான பேவரைட் எப்போதும் அதில் தான் காட்சி தருவார். இன்முகம் மாறாத அவரது வாஞ்சைமிகு அன்பு எல்லோரையும் அவரிடம் இழுக்கும் காந்தம்.
அவர் பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும் அவரின் பூமான் நபியின் புனித வாழ்க்கை என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாற்று நூல் தான் அவருக்கான மிகப்பெரிய அடையாளம்.
எண்பதுகளில் முதல் பாகம் வெளியிட்டார் தொடர்ந்து நான்கு பாகமாக நபிகள் பெருமானின் முழுவாழ்க்கையையும் எழுதியிருப்பார். அந்த புத்தகம் தான் நான் என் குழந்தைப் பருவத்தில் படித்த நபிகள் நாயகத்தின் முதல் வரலாற்று நூல். ரமலான் காலங்களில் ஈசி சேரில், தாழ்வார முற்றத்தில், திண்ணையில் என அந்த புத்தகத்தோடே கழிந்த நேரங்கள் இன்றும் மனதில் பசுமையாய் இருக்கிறது.
பூமான் நபியின் புனித வாழ்க்கை புத்தகம் குழந்தை பருவத்தில் என்னை ஈர்க்க மிக முக்கிய காரணம் இருக்கிறது. அது மற்ற புத்தங்களைப் போல அல்லாமல் குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் எளிமையான நடை அத்தோடு குழந்தைகளிடம் அன்பொழுக கேள்விகள் கேட்டு அதற்கான பதிலாக கதை சொல்லும் நடையோடு கூடிய அழகிய சொல்லாடல். அதனால் நான் அந்த புத்தகத்தோடு குழந்தை நான் எட்டு வயதில் அதிலேயே கட்டுண்டு விட்டேன்.
ஒரு பாகம் படித்து முடித்த பின் அடுத்த பாகம் எப்போது வருமென ஆவல் மிகுதியாக காத்திருப்பது வழக்கம். அப்போதெல்லாம் ஒவ்வொரு பாகத்தின் விற்பனைக்கும் தமிழகமெங்கும் ஜும்ஆ பள்ளிகளில் பயான் செய்து விற்கச்செல்வார். அப்படி ஜும்ஆ நாள் பயானில் அவரைக் கண்டுவிட்டால் அவ்வளவு மகிழ்ச்சியும் குதூகலமும் தொற்றிக்கொள்ளும்.
பார்க்க உருவத்தில் அமைதியாக சற்று உயரமில்லாமல் இருந்தாலும் மேடையேறிவிட்டால் சிங்கத்தின் கர்ஜனை போல முழங்குவார். அவரது வசீகரப்பேச்சு எல்லோரையும் தன்வயப்படுத்தும் வசியம் நிறைந்தது. அதில் நபிகளாரின் வரலாற்றுச் சம்பவங்களை கேட்கும் போது நாம் நம்மை இழந்திருப்போம் என்பது என் அனுபவம். இப்படித்தான் பூமான் நபிகளின் புனித வழ்க்கை புத்தகத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்தார். இன்றும் பெரும்பாலான வீடுகளில் அவற்றை பார்க்க முடிகிறது.
மேலும் ஜும்ஆ நாளில் பள்ளிக்கு வருபவர்களோடு சேர்ந்தே சாப்பிடும் பழக்கம் எனது பாட்டனார் மறைந்த சி.தா. சுல்தான் முஹைதீன் அவர்களுக்கு எப்போதும் உண்டு என்பதால் அன்றைய ஜும்ஆவிற்கு பிறகு எங்கள் மதிய விருந்தில் பெரும்பாலும் அவர் எங்கள் வீட்டின் விருந்தாளியாக இருப்பார். உணவு முடித்து வீட்டில் உள்ளவர்களுக்கு கட்டாயம் ஒரு பயானும் உண்டு.
மறைந்த நாவலர் துபாய் வந்த 2013ல் அவரோடு முஸ்லிம் லீக் சார்ந்த கூட்டத்தில் மறைந்த ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களோடு கலந்து கொள்ளும் வாய்ப்பு, என்னைப் பார்த்ததும் அவ்வளவு ஆவல் மிகுந்து விசாரித்தார், வழுத்தூரின் பல பேர்களைச் சொல்லி கிண்டலோடு அவர்களின் சேட்டைத் தனத்தைக்கூறி ஒவ்வொருவராக விசாரித்தார். அந்த அளவிற்கு எங்கள் வழுத்தூரோடு அவருக்கு நெருக்கமும் இருந்தது.
கடைசியாக 2017ல் அன்பிற்குரிய லைன்.பசீர் அஹமது அவர்களின் இல்லத்திருமணத்திற்காக வழுத்தூர் வந்திருந்த அவரிடம் விருந்து முடிந்தும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தேன். பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் நாட்டு வைத்தியம் மற்றும் நாடி வைத்தியத்திலும் சிறந்தவர் என்பது தான் தெரிந்தது. எல்லா வயதுக்காரர்களிடமும் அன்போடு பழகும்மனிதர் திருமணமான குழந்தையை எதிர் நோக்கும் இளைஞர்களுக்கு தாம்பத்திய டிப்ஸ் கூட சொல்லிக்கொடுத்து பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு சினேகமாகிப்போவார்.
விழாக்கள், நண்பர்கள் வீட்டு விசேசம் என்றால் தூரம், செலவு பார்க்காமல் வந்துவிடுவார். மிகச்சிறந்த சமூக சேவகர், இஸ்லாமிய சிந்தனையாளர், தாய்ச்சபை முஸ்லிம் லீக் பேச்சாளர், முஸ்லிம் லீக் தலைவர்களோடு பயணம் செய்த அனுபவம் மிக்கவர். பல நூற்கள் எழுதி சமூகத்தின் அறிவுக்கண் திறந்தவர். எல்லா ஆளுமைகளையும் போலவே சமூகத்தால் வாழும்போதே கண்டு கொள்ளப்படாமல் இருந்த மேதை இருந்தும் வலிந்து எனக்கு இது வேண்டும் என யாரிடமும் கேட்காதவர்.
அவர் இன்று மறைந்து விட்டார் அவரெழுதிய பூமான் நபிகளின் புனித வாழ்வு நூல் அவரின் பெயரை யுகங்களுக்கு தாங்கி நிற்கும் மகிமைகள் சேர்க்கும். அவரின் நினைவுகள் நினைவு இருக்கும் வரை எங்கள் நெஞ்சகங்களில் ஆர்பரிக்கும்.
அல்லாஹ் நாவலர் கெளஸ் முஹைதீன் அவர்களின் ஆன்மாவை பொருந்திக்கொள்வானாக.
துஆவுடன்,

- ஜா.மு