24 டிசம்பர் 2012

கலங்கரை விளக்கம் கலந்தர் மஸ்தான் ஹஜ்ரத்!

வியாழக்கிழமை காலை (20-12-2012) அன்று  அலுவலகம் வந்த உடனே தொலைபேசி வந்தது, இடியென என் நெஞ்சிற்கு செய்தியொன்றும் தந்தது அது நம் நெஞ்சுக்குகந்த பெருமேதை, நாநிலமறிந்த மார்க்க வல்லுநர், தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் கலங்கரை விளக்கம் மெளலவி எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சென்னையில் அதிகாலை  2.30 மணி அளவில் ஏகனளவில் ஏகிவிட்டார்கள் என்பது தான், தொலைபேசியில் ஒளித்த குரல் மிக வருத்தப்பட்டு சொன்னது தமிழகத்தில் எத்தனையோ மார்க்க மேதைகள் இருந்தாலும் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களும், திருச்சி ரப்பானி ஹஜ்ரத் அவர்களும் பிரதான அறிஞர்களின் மகுடமாக திகழ்தார்கள் ஊருக்கு சென்றால் மனதார பல மார்க்க விளக்கங்களை கேட்டு மன அமைதியடைந்து வருவோம் அவர்களில் ரப்பானி ஹஜ்ரத்தை தொடர்ந்து நம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களும் இறையடி சேர்ந்து விட்டார்களே இனி நாம் ஊருக்கு சென்றால் இது போன்ற மாமேதை யாரை காண்போம்.. என தன் அங்கலாய்ப்பை சொல்லி புலம்பி அழுதார்! அவர் சொன்னது மிக உண்மை தான் தமிழகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு இஸ்லாமிய மார்க்க கருத்தின் ஆழிய கருத்துக்களை அபூர்வ விளக்கங்கள் கொடுத்து இஸ்லாமிய அறிவூட்டியவர்கள் மறைந்த கலந்தர் மஸ்தான் சாஹிப் என்றால் மிகையாகாது. மிக சிறப்பான மனிதர், கண்ணியமானவர் இவைகளை எல்லாம் அவரது நடை உடை பாவணைகளே சான்றுகள் கூறும், எங்கும் எப்போதும் அல்லாஹ், ரசூலின் பேச்சே இவரது மூச்சுகாவும், ஞானிகளின் ஞானஒளியிலேயே இவரது கணங்கள் என்றும் என இவரது வாழ்வு அற்புத பெருவாழ்வாகவே இருந்தது.


1998 ஆம் ஆண்டு வழுத்தூரில் நாங்கள் நடத்திய மீலாது விழாவிற்கு சிறப்புப்பேச்சாளர்களில் பிரதானமானவராக ஹஜ்ரத் பெருந்தகை அவர்களை அழைக்க வேண்டும் என விரும்ப ஹஜ்ரத் பெருந்தகை  அவரக்ளோடு மிக நெருக்கம் கொண்ட எங்களூர் தர்ஹா பள்ளி இமாம் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் நூரி அவரகள் மூலம் முதலில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் சூழ்நிலை அறிந்து கொள்வோம் என அன்றைய செல்போன் வசதிகளெல்லாம் இல்லாத அந்த நேரத்தில் இராஜகிரி பூத்திலிருந்து போன் செய்த போது தான் நான் பார்த்த அந்த நிகழ்வு என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது…. ஆம்! ஹஜ்ரத் பெருந்தகை இருப்பதோ காயல் மாநகர் தர்ஹாபள்ளி இமாம் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் இருப்பதோ இராஜகிரி.. தொலைபேசி மணி அடித்ததும் யாரோ எடுக்க பிறகு ஹஜ்ரத் அவர்களின் கரத்திற்கு மாறுகிறது ஹஜ்ரத் அவர்களின் குரல் கேட்டதும் உட்கார்ந்து பேசுங்கள் என சொல்லியும் கேட்காது நின்று கொண்டே பேச ஆரம்பித்த தர்ஹா பள்ளி இமாமின் உடல் கூனி குறுகி போய் நடுக்கத்துடன்.. ஜீ! ஜீ! என மிக மரியாதையுடன் பணிவை வெளிப்படுத்திய வண்ணமாகவே இருந்தது.. பிறகு நான் கேட்டபோது தான் சொன்னார் ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் சிறப்பிற்கு முன் நான் மிக எளியவன், அவர்களது பார்வை அல்ல அவர்களது வார்த்தைக்கு முன் கூட என்னால் நின்று பேச முடியாது என சொன்ன போது இவ்வளவு தூர இடைவெளியில் ஹஜ்ரத் பெருந்தகை அவர்களுக்கு எவ்வகையிலும் தெரியாத நிலையிலும் கூட இவரின் செயல் பாடு என்னை ஆச்சரிபப்பட வைத்தது ஹஜ்ரத் பெருந்தகையின் மீது இப்படி பலபேர் மரியாதையும், அன்பும் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவரின் கண்ணியத்தை இதிலிருந்து நாம் அளவிட்டுக்கொள்ளலாம்.

தமிழகத்து ஊர்களில் ஹஜ்ரத் பெருந்தகை செல்லாத ஊர்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான் அந்த அளவிற்கு எல்லா ஊர்களுக்கும் சென்று இறைப்பணி ஆற்றியுள்ளார்கள். சற்று முந்தைய காலங்கள் வரை வழுத்தூரின் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அதில் முக்கிய பேச்சாளாராக ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் இருப்பார்கள். ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் பெயர் இருந்தாலே அவர்களின் பேச்சை கேட்பதெற்கென்றே மிகப்பெரும் கூட்டம் கூடும். அறிஞர்கள் என்றாலே உடன் அழைத்து வாரி அணைத்து புலங்காகிதப்படும் புண்ணிய மண்ணான எங்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூருக்கு இம்மாபெரும் அறிஞரின் வருகை அடிக்கடி நிகழும் அந்த வகையில் ஹஜ்ரத் அவர்களிடம் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. எங்கள் ஊரில் ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பேசாத தெருக்களோ, திக்குகளோ இல்லை எனலாம் முக்கியமாக எங்களூர் தர்ஹா பள்ளிக்கு அப்பள்ளியின் இமாம் ஜாபர் சாதிக் நூரி அவர்கள் அடிக்கடி அழைத்து வந்து உரைநிகழ்த்த வைத்து மக்களுக்கு நல்லுணர்வூட்டுவார்கள் என்பதும் இந்த நேரத்தில் நினைவு கூற தக்கது
ஹஜ்ரத் பெருந்தகை ஒவ்வொரு ஆண்டும் கல்கத்தாவில் மாதக்கணக்கில் உர்தூ தொடர் பயான் நிகழ்த்துவார்கள், கேரளாவில் அதிகமதிகம் சென்று மக்களுக்கு மார்க்க சொற்பொழிவாற்றுவார்கள், இன்னும் கடல்கடந்து பல நாடுகள் சென்று தன் செந்தமிழ் ஆளுமையால் செம்பணி செய்தார்கள். மெய்ஞான சொரூபர்களிடம் மிகுந்த கண்ணியம் கொண்டு அவர்களின் வழிநடத்துதலில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் தங்களது எல்லா பேச்சின் தொடக்கத்திலும் அல்லாஹ்வை புகழ்ந்து, அண்ணலாருக்கு சலாம் சொல்லி ஞானியர் திலகமாம் மஹ்பூபு ஸுப்ஹானி முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களை ஷைகாகவும், வழிகாட்டியாகவும் நினைவு கூர்ந்து பின்னரே உரையை துவக்குவது இவர்களது வழக்கம்.

ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் பேச்சில் தமிழ் அழகு சிந்தும், அடுக்கு தொடர்கள் முந்தும், சிலேடைகளும், சிறப்புயர் வாக்கியங்களும் இழையோடும். பேச்சில் கண்ணியம் விஞ்சி நிற்கும், ஹுப்பே ரசூல் மிகுந்து காணப்படும். அவரது நேர்த்தியான பேச்சு பலரின் நேத்திரங்களில் நீர் கசிந்துருக வைத்திருக்கும். எதிர் தரப்பை தாக்கி பேசினாலும் அதில் ஓர் தகைமை இருக்கும் வன்மம் இருக்காது. சாத்வீகம் தான் அவர்களது பாணியே அன்றி மூர்க்கம் இவர்களது அல்ல! ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் ஒரு பேச்சை கேட்டு விட்டு எழும் ஒவ்வொருவரும் நிச்சயம் உள்ள நிறைவுடனும், ஈமான் வழுவுடனும் மட்டுமே எழுந்து செல்வார் என்பது திண்ணம். இன்றும் இணையத்தின் யூடியூப்-ல் நிறைய பேச்சுக்கள் மக்களெல்லாம் பயனெய்தும் வகையில் காணக்கிடைப்பது தமிழ் இஸ்லாமியர்களுக்கு ஓர் புண்ணிய சொத்தாகும். ஆகவே அன்பர்களே உங்களில் யாரேனும் இன்னும் ஹஜ்ரத் அவர்களின் பயான் நிகழ்வுகளை பதிவு செய்து இருந்தால் தயங்காமல் அதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தாரைவார்த்துக் கொடுத்து பயன்யெய்துங்கள், அல்லாஹ் அருள்வான்! உங்களின் செயல் கண்டு மகிழ்வான்!!

 காயல் மஹ்லரா ஹஜ்ரத் பெருந்தகை தவமாய் மார்க்கப்பணி செய்தபதி, அதன் விளைவு தான்  இன்று மக்களால் கொண்டாடி மகிழும் ஹஜ்ரத். அப்துல் காதிர் மஹ்லரி முதல் எண்ணிரந்த உலமாக்கள் உலகத்திற்கு தீன் சேவையாற்ற புறப்பட்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகது. இவர்களது தலைமையில் வருடா வருடம் காயல் மஹ்லராவில் நடக்கும் திக்ரும், புகாரி மஜ்லிஸ் விழாவும் மிகப்பிரசித்தி பெற்றவை.

21ம் தேதி வெள்ளிக்கிழமை கடையநல்லூரில் நடைபெற்ற ஹஜ்ரத் பெருந்தகையின் நல்லடகத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கண்ணீர் மல்க தங்களின் உஸ்தாதும், மார்க்க போதகருமான அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டு தங்களுக்கு நேர்ந்த ஈடுசெய்ய இயலாத இழப்பினை குறித்து ஒருவரோடு ஒருவர் தங்களுக்கு ஆறாகுறையாக ஆகிவிட்ட நிகழ்வினை குறித்து ஆர்த்து ஆர்த்து  நினைவு கூர்ந்து வருந்தி வாடினர், இந்தியாவின் பலமுனைகளிலிருந்தும் கடையநல்லூருக்கு வருகை தந்த பெரும் பெரும் மார்க்க மேதைகள், அரசியல் தலைவர்கள், மற்றும் பொது மக்களுள் தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரிலிருந்து இரண்டு வேன்கள் நிறைய சென்ற  ஹஜ்ரத் அவர்களின் நேசர்களும் அடக்கம்.

முக்கியமாக நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் சாஹிப் சென்று கலந்து தன் நெஞ்சத்தின் இரங்களை பதிவு செய்து வந்திருப்பது குறிப்பிட தக்கதுஏனென்றால் ஹஜ்ரத் அவர்களின் மறைவை குறித்து மணிச்சுடரில் முனீருல் மில்லத் அவர்கள் எழுதிய மிக நீண்ட  இரங்கல் கட்டூரையை நான் படிக்க நேர்ந்தது அதில் பேராசிரியர் அவர்களுக்கு ஹஜ்ரத் அவர்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது அவர்களது பிரிவால் எந்த அளவுக்கு அவர் துயருறுகிறார் என்பதை விளங்கிக் கொண்டேன் மேலும் அக்கட்டூரையில் ஹஜ்ரத் தொடர்பான எல்லோரும் அறிந்திடாத ஆனால் அறிய வேண்டிய பல வரலாற்று தகவல்களையும் ஹஜ்ரத் அவர்களின் மேன்மையையும் பேராசிரியர் சுட்டிக்காடியது மிக அற்புதமாக இருந்தது, கட்டூரையில் முத்தாய்ப்பாக அரபிப்பழமொழியாம்மவ்த்துல் ஆலிம் மவ்த்துல் ஆலம்அதாவது ஒரு அறிஞரின் மரணம் என்பது இந்த உலகமே மரணமெய்தியற்கு சமம் என்பதை சுட்டிக்காட்டி இருந்ததை ஹஜ்ரத் அவர்களுக்கு பேராசிரியர் செய்த மிகப்பெரிய அரிய சமர்பணமாக கருதினேன். அதற்கு முற்றும் பெரும் தகுதியான பெருந்தகை ஹஜ்ரத் அவர்கள் என்பது பேருண்மை.

வல்ல அல்லாஹ் அவனது ப்ரியமான ஹபீப் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் மற்றும் ஞானிகளின் திலகம் ஹஜ்ரத் முஹையத்தீன் ஆண்டகை அவர்களின் பொருட்டாலும் ‘’அல் உலமாவு வரதத்துல் அன்பியா – (சத்திய) அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர்கள்“ என்ற நபிமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அன்னாரின் ஆன்மாவை மட்டற்ற பேரமைதியிலும், மகிழ்விழும் நீந்த வைப்பானாக! ஹய்யுல் கய்யுமாகிய வல்லவன் முடிவற்ற பேரின்பத்தை அவர்களுக்கு வழங்குவானாக! தாரணியில் அவரது ஓங்கு புகழை என்றும் நிலைக்கச்செய்வானாக! இன்னும் சங்கை படுத்துவானாக! அவரை பிரிந்து வாடும் எல்லா நெஞ்சங்களுக்கும் சப்ரன் ஜமீலாவை கொடுத்தருள்வானாக!. ஆமீன்.

 -வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2 கருத்துகள்:

ABUSAAEMA சொன்னது…

பாட்ஷா ஜீ...! ஜஷாகல்லாஹு க்ஹைரன்...! எமதூரைச் சேர்ந்த மரியாதைக்குரிய s.s.k ஹஸ்ரத் அவர்களைப் பற்றிய விளக்கமான பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.அடியேனும் தங்களது துஆவில் பங்கேற்கிறேன்....வல்ல ரஹ்மான் ஹஸ்ரத் அவர்களின் பிழை பொறுத்து மேலான சுவனபதிப் பேற்றை நல்குவானாக...ஆமீன்....!

vaisul karnai சொன்னது…

No Tamil font. All right. I saw your condolance message as above and I got much nervation and stimulation as he was a rarest orator who made a wonderful speech in our village even there were a few people looking on his speech. I am also a Juma speaker. I cant make such a verbata when there is a few audiencers. Really he was majestic mentor as you described. Allah may give him suitable reward for his sincere effort to enlive deen by his humble deeds. Vaisul Karn ai @Uvais |Valinokkam Ramnad dt. 9894156417.