19 ஏப்ரல் 2011

கேள்விக்குறி..!


உலகம் ஓர் மாயை

அடிக்கடி மறப்பதனால்

உலகப்பேய் வடிவாய் நீ!

அன்பு பாசம் அனைத்தும்

வானவில்லும் கானலும் போல..

எதையும் பார்த்து பயப்பட நேர்வது,

மனிதனாக பிறந்ததன் பாபம்!

நெருங்கிய உறவுகள்

உண்மையில் தங்கச்சங்கிலி விலங்கு!

முதல் செமஸ்டர் காலம், 1995ல் எழுதியது அகவை 17.

என் வாழ்வின் அன்றாடம் உலகின் நிகழ்வுகள் ஏற்படுத்தும் மன அதிர்வுகளுக்கு தக்க என் மனக்கவி உதடு கவிதை வாசிக்க ஆரம்பித்து விடும், எத்தனையோ எழுதி.. எத்தனையோ எழுதாமல்… இப்படித்தான் என் உணர்வுகளின் கவி முட்டைகளின் நிலை. அப்படித்தான் மேற்கண்ட கவியும் என் அந்நாளய தினத்தில் ஏதோ ஒரு உலகியலின் மோசமான நிலைகளை சிந்தித்ததன் அல்லது சந்தித்ததன் விளைவு!

-இப்படிக்கு

என் அந்த கால கவியுடன் உங்கள்

ஜே.எம்.பாட்ஷா

- இன்னும் புரியும்

05 ஏப்ரல் 2011

பொன் அந்திப்பொழுது..







அழித்து... அழித்து...

எத்தனை முறை தான்

அழகு பார்ப்பாய் சிற்பியே!


அந்திவான மேகத்தில்

பொன்துகள்கள் தூவி

எரியும் சூரியன் மேல்

குங்குமம் குலைத்துப் பூசி

மங்களம் செய்வதன்

நோக்கம் தான் என்ன..?


மறையப்போகும் நேரம் நெருங்குவதால்

சூரியனுக்கும்.. மேகத்திற்கும்..

சூசக அலங்காரம் தொடுத்தாயோ!


அட! அதற்குள் என்ன மாற்றம்

மேகம் வேறுரு பெற்றுவிட்டதே,

பொன் துகள்கள் இரத்தக்கட்டியாகியதே

என்ன! நொடிக்குள் சமாதானமா

இரத்தம் மறைந்து

லேசான கருமை சூழ்கிறதே


அடடா..

இரவின் அத்துமீறலை

அந்தி வானத்தால்

கட்டுப்படுத்த முடியவில்லையே

பகலை வென்ற அந்தி வீழ

ஆதிக்கம் செலுத்த முந்தி வந்தது கருமை…

சாதித்து வந்தது இரவு...இரவு...








இந்த கவிதை கூட என் அந்த காலத்தின் ஓர் அந்திப்பொழுதில் .........பள்ளிக்கூடம் சென்று விட்டு களைப்பு நீங்க என் மனதையும் உடலையும் புத்துணர்வு செய்யும் வழக்கம் கொண்ட நான் உடற்பயிற்சி செய்து கொண்டே உள்ளப்பயிற்சியாய் இயற்க்கையோடு இன்முகம் காட்டி இனிதே தழுவுவேன் இதமாய் எனக்குள் பூரிப்பேன் அப்படித் தான் அன்றைய பொழுதுகளின் மாலையில் என் அத்தா (என் தாய்வழி பாட்டனார்) வீட்டின் மாடியில் அந்தி வான எழிலினை ரசித்த போது என் இதய உதடு எழுதச்சொன்ன அந்த சின்னஞ் சிறு வயதின் வார்த்தைகள் (அகவை 16 இருக்கும், காலம் 1994 அல்லது 1995 இருக்கலாம்)

ஜே.எம்.பாட்ஷா

- இன்னும் புரியும்

01 ஏப்ரல் 2011

இணையதளம் மூலம் நவீன புறம்பேசுதல்



இணையதளம் மூலம் நவீன புறம்பேசுதல் சமூக ஆரோக்யத்திற்கு நல்லதல்ல..


எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குரள்

காப்பாற்றூங்கள்..காப்பாற்றுங்கள்.. என்று ஒரு பெண்ணின் அலரல் குரல் மிக பலமாக கேட்க அந்த வழியே சென்ற ஒருவர் மிகவும் திடுக்கிட்டு ஐய்யகோ! யாரோ ஒரு பெண்ணை பலவந்தம் செய்கிறார் போலும் என்று நினைத்து சற்று பக்கத்தில் யாரும் தென்படுகிறாரா என பதறிக்கொண்டே பார்க்க, வந்த ஒருவரிடம் இதோ இந்த வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலரல் சத்தம் கேட்கிறது எனச்சொல்ல அவரும் ஆமாம் ஏதோ ஒரு கொடுமை நடக்கிறது என நினைத்து அவ்வீட்டைக் கடக்கும் பாதையில் தெரியும் ஒரு திறப்பு வழி இருவரும் தூரத்திலிருந்து பார்த்தனர், அங்கு ஒரு பெண்ணை ஒருவன் கத்தியால் குத்த முயற்சிப்பதையும் அவள் அதிலிருந்து தப்ப வீட்டிலிருந்து அங்கும் இங்கும் ஓடி காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..என அலறிக்கூச்சலிடுவதையும் கண்டு மனவேதனைப்பட்டு உடனே ஊர்வாசிகள் அனைவரையும் கூட்டி அதை நிறுத்த வேண்டும் என எண்ணி இருவரும் தெருவில் நின்று கத்த எல்லோரும் கூடி விட்டனர், பின் இருவரும் நிலைமையை எடுத்துச்சொல்ல வீட்டை முற்றுகை இட்ட ஊரார்கள் உள்ளே சென்று பார்க்க அனைவரும் திடுக்கிட்டனர், வீட்டின் உள்ளே ஒருவரல்ல ஒரு கும்பலே நிற்கிறதாம். பிறகேன் இருவரையும் இப்படி துரத்தவும்..ஓடவும்..கத்தவும்.. விட்டு வேடிக்கை பார்கின்றனர் என எண்ணியவர்கள் அவர்களிடமே விசாரித்த போது தான் விசயமே தெரிந்தாம் அது வெறும் நாடக ஒத்திகை என்று.

இப்படித்தான் எதைப்பற்றியும் விபரமே தெரியாமல் தங்களுக்கு முற்றும் சம்பந்தம் இல்லாத விசயங்களில், தெளிவும், அறிவும் இல்லாமல், அவர்களுடைய உள்ளங்கையிலேயே சீல் வடிய அதையெல்லாம் பொருட் -படுத்தாமல் மற்றவர்களின் விசயத்தில் அது அப்படி இருக்குமோ அல்லது இப்படி இருக்குமோ என்ற தனது மனம் சொல்லும் வெற்றுக் கற்பனைகளுக்கு கை, கால்கள் வைத்து சோடித்து சுற்றவிடுபவர்கள் இவர்கள், அவர்களாகவே சமூகத்தில் தங்களின் அந்தஸ்தை மிககீழ் படுத்திக்கொள்கின்றனர் மட்டுமல்லாது இறையவனின் முனிவுக்கும், சாபத்திற்கும் தங்களை மட்டுமல்ல தங்களின் ஒட்டுமொத்த சந்ததியினரையும் ஆட்படுத்திக்கொள்கின்றனர்.

ஆம், முன்பு கிடைக்கும் இடத்திலெல்லாம் அங்கும் இங்குமாய் பிறர் பற்றியே பேசிக்கொண்டும், தங்களுக்கென்று தனிப்பட்ட கொள்கைகள் நல்ல சிந்தனைகள் ஏதும் இல்லாது பிறரின் குற்றங்குறைகள் என்று தான் விரும்பியவற்றையெல்லாம் விரும்பாதவர்கள் மீது பலியாக.. இட்டுக்கட்டி பேசி நரம்பில்லா நாவை சுழற்றி.. சுழற்றி சுகங்கண்ட சுரணையற்ற பிறவிகள் இப்போது நவீன காலத்தில் கண்ணியை வைத்து கலகம் செய்து சுகம் காண களம் இறங்கி இருக்கிறார்கள்.. தன்னை.., தன் குடும்பத்தை.., தன் சுற்றத்தை சற்றும் நினைத்துக்கூட பாராமல்.., தன் முதுகை கொஞ்சமும் பார்க்க துணியாத பார்க்கவும் திராணியில்லாத கேவலங்கள் பிறரின் முதுகை பற்றியே எப்போதும் குறை கூறித்திரியும் கொல்லிகளாகவே மாறிவிட்டார்கள்! அந்தோ இது எத்தகைய பிறவி ஈணம்..! இது இந்த உலகத்தில் இவர்களுக்கு இறைவன் கொடுக்கும் மிக இழிவான நரகம்..! நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நெறிப்பிரகாரம் ஒரு மனிதன் அண்டை அயலாருக்கு உதவி புரிந்தால் கூட அதை தவறான பார்வையில் பார்க்கும் கீழான சமூக அவலத்தை நான் என்னென்று செல்ல.. நபிகள் நாயகம் (ஸல்..) கூறியபடி அடுத்தவன் மீது அபாண்டமாக புறங்கூறித் திரியும் இவர்கள் மலத்தை திண்ணும் கேவலமானவர்கள்.., இவர்கள் உணவு.. உணவு என்று நாளை மறுமையில் கேட்கும் போது எரியும் கங்குகளை கொடுத்து உணவாக உண்ணுங்கள் என்று சொல்லப்படுமாம். என்ன செய்வது எல்லோருமா மேன்மை அடைய முடியும்.., ஊருக்கு ஊர் இப்படியும் சில ஜென்மங்களை அல்லாஹ் உலவ விட்டுத்தானே வைத்திருப்பான்.

வளைதளங்களை, ஈ-மெயில் குரூப்ஸ்-களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அதில் என்ன செய்தியை வேண்டுமானாலும் எழுதலாம், அனுப்பலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் தான் நினைத்தபடி வாந்தி எடுக்கலாம் என்று சில காலமாய் நம்மிடையேயும் அறிவுணர்ச்சி இல்லாத சில சின்னபுத்திக்காரர்களாகிய தாங்கள் இருக்கிறோம் என்பதை..,

· அறிவுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு கூட இல்லை, அறிவு விசயத்தில் தங்களுக்கு மிருகங்கள் கூட ஒரு படி அல்ல பல படிகள் மிக மேலானது என்பதை உலகுக்கு காட்டும் இவர்களின் பேச்சு, எழுத்து மற்றும் செயல்பாடுகள்..,

· எந்நிலையிலும் நல்ல விசயங்கள் தங்கள் மூலமாய் நடந்தேறக் கூடாது என்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கரை..,

· சமூகத்தில் ஊரில் யாரும் நிம்மதியாய், நல்லவிதாய் யாரும் இருந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் காட்டும் முனைப்பு..,

போன்ற இவைகளால் எல்லாம் இடைப்பட்டக் காலங்களில் அவர்களே தங்களை தாங்கள் எப்படிப்பட்ட இழிநிலையில் இருப்பவர்கள் என்று காட்டிக்கொள்ள.., நாம் அவர்களை எல்லோரும் கண்டுகொள்ளாமல் இல்லை, இது அவர்களுடைய மிக மோசமான மனநிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.., சமூகத்தில் இருப்பவர்கள் அவர்களின் மீது அதீதமாக வெறுப்பு கொள்ள அவர்களே காரணமாகிறார்கள்.., ஒருவரின் மனம் விரும்பினால் நாத்தீகத்தைக்கூட பின்பற்ற அல்லது அதைப்பற்றி பேசவோ அல்லது எழுதவோ செய்யலாம் என்ற நிலை இருக்க, தாங்கள் பின்பற்றும் அதே கொள்கைக் கோட்பாடுகளைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என நிர்பந்திப்பது எந்த விதத்தில் சரியாகும், அவ்வாறு ஒருவர் ஒரு கொள்கையில் இருக்கிறார் அதைப்பற்றி சில கருத்துகள் எழுதிகிறார் எனும் பட்சத்தில் அந்தக்கருத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாத அசூசை தூசுகள் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டால் நிறுத்திக்கொள்வார்கள் என நினைக்கிறார்கள் போலும்.பாபம் இந்த பிரிவினர் இவ்வளவும் செய்து விட்டு இஸ்லாம்.., தவ்ஹீது.., என்றெல்லாம் தம்பட்டம் அடித்தால் யார் தான் நம்புவார்கள் அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக..!

வலைதளம் மற்றும் ஈ-மெயில் குரூப்ஸ் மூலமாக எத்தனை எத்தனையோ நல்ல செயல்கள் உலத்தில் நடைபெறுகிறது, பேஸ்புக்.., மற்றும் பிளாக்குகள் முலமாக தான் எகிப்து மற்றும் துனிசியா போன்ற நாட்டு மக்களை ஒன்று கூட்டி அவ்வப்போது நிலைமைகளை எடுத்துச்சென்று மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தையே கூட நிகழ்த்த நல்லெண்ணம் மற்றும் சீறீய முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் காரணமாக இருந்தனர் என்பதை கண்டு உலகம் வியந்தது, இதை சுட்டிக்காட்டிய அதே கனம் சமநிலை சமுதாயம் போன்ற அறிஞர்கள் போற்றும் பத்திரிக்கைகள், பல இஸ்லமிய சமூக கவலைக்கொண்ட சிந்தனைவாதிகள் எல்லாம் சமீப காலமாக நம் தமிழ் சகோதரர்கள் மார்கத்தின் பெயரால், தான் சார்ந்திருக்கு சொந்த கொள்கையின் பெயரால் மற்றும் ஏதேதோ காரணத்தால் கணினி முலமாக செய்யும் சச்சரவுகள் குறித்து வேதனையுறுவதை சொல்லி எதிர்காலம் குறித்தும் எதிர்கால சமூக பிளவுகள் குறித்தும், ஏற்படப்போகும் சமூக அமைதின்மை குறித்தும் எச்சரிக்காமல் இல்லை.

தவறான சிந்தனைகளை மக்களுக்கு ஊட்டி குழப்பங்களை ஏற்படுத்துவது, சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்பது, தனிப்பட்ட நபர்களின் மீது தாக்குதல் தொடுத்து பூசல்களுக்கு காரணமாய் இருப்பது, ஜாமாஅத் ஒற்றுமைக்கு எதிராக, பாரம்பரிய சிந்தனைகளுக்கு எதிராக மக்களிடையே தூபம் இட்டு அடிதடிகளுக்கு காரணமாய் இருப்பது போன்ற வேலைகளை எல்லாம் சிலர் தங்களின் பிலாக்குகள் மூலமாக செயல் படுத்தி வருகின்றனர். இதை மக்கள் அறியாமல் இல்லை, இவர்களை நினைத்து நல்ல உள்ளங்கள் எல்லாம் நொந்து தான் போகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க அடியோடு அகற்றப்பட வேண்டிய ஒன்று என்பதை நல்லெண்ணம் கொண்ட எல்லோரும் ஒன்றுபட்டு உரைக்கின்றனர், அல்லவை என்றுமே புறந்தள்ளப்படும். அல்லாஹ் அதற்கு அருள்வானாக!

பேஸ்புக், ஈ-மெயில் குரூப்ஸ் மற்றும் பிளாக்குகள் வழியாக அதேசமயம் இவற்றுக்கு மாறாக சமூக மக்களுக்கு நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி, இளைய சமூகத்திற்கு தன்னம்பிக்கை தொழில் ஆர்வம், எதைவும் எதிர்கொள்ளும் துணிவு, நடுநிலை சிந்தனை இவைகளை கொடுத்து எதையும் நல்ல அணுகுமுறையோடு சிந்திப்பது போன்ற உயர்வானவைகளை நல்ல இளைஞர் பட்டாளங்களும் இருக்கத்தான் செய்கிறது, இவர்களுக்கு மேற்கூறப்பட்ட எந்த தீந்தொழிலும் தெரியாது,.இவர்கள் ஒவ்வொரு கணமும் சமூக ஒற்றுமை குறித்தும், சமூக நல்லிணக்கம் குறித்தும், சமூக அமைதி குறித்தும், சமூக மேம்பாடு குறித்தும் தான் இவர்களது சிந்தனைகள் இருக்கும். இவ்வாறான சன்மார்க்க இளைஞர்கள் இயற்கையாகவே நல்ல இயல்பிணர்கள்.. இறையவனின் செயல் கருவிகளாக பங்காற்றுபவர்கள்..

ஆக நல்ல வலைதளங்களை அடையாளம் கண்டு தவறான, சமூக ஒற்றுமையை குலைக்கும், தனிநபர் தாக்குதல் புரியும், இழிவான சிந்தனைகளை முன்வைக்கும், புறங்கூறி தரந்தாழ்ந்த வேலைகளை செய்யும், இளைய சமூகத்தின் நற்சிந்தனையை நாசப்படுத்தும் தீய பேய்களின் வலைதளங்களை புறக்கணிப்போம்.

சில நாட்களுக்கு முன் ஒரு கவிதையின் மூலம் தனது கருத்துக்களை சமுகத்திற்கு சொல்ல வந்த காரணத்தால் அந்த தனிநபர் மீது எந்த ஒரு முகாந்திரமும் இல்லாது அதை கொள்கை ரீதியில் அரோக்கியத்தோடு வாதிட வராமல் மிகவும் கீழ் ரகமாக போய் அடுக்கடுக்கான அசூசை வார்த்தைகளை கையாண்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் செயலை சிலர் அரங்கேற்றி அசிங்கப்பட்டனர் ஆனாலும் ஏன் நல்லவர்கள் பெரும்பாலும் நிதானம் காக்கிறார்கள் என்றால் 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ என்பது தான்.

மனித மனங்களை அறிந்தவர்கள் அல்ல நீங்கள், உங்கள் உள்ளத்தை தூய்மையாக்க இறையவனிடம் மன்றாடுங்கள்..!

அல்லாஹ் இந்த சமூகத்தை என்றென்றும் மேற்கூறப்பட்ட தீங்குகளிலிருந்து காத்தருள்வானாக!

சமூக விடிவை இறையவனிடம் வேண்டி..

ராஜா முஹம்மத் (எ) முஹையத்தீன் பாட்ஷா
வழுத்தூர்