28 செப்டம்பர் 2021

சுல்தான் பாட்ஷா மாமு



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் என்பது குறள். அது போல பொறாமையோ, பேராசையோ, வெறுப்போ, தீஞ்சொற்களோ பேசாத மிக பாமரத்தனமான மனிதர்.

வயது பார்த்து பழக்கம் கொள்வதெல்லாம் இவருக்கு தெரியாது சிறியவர்கள் முதல் எல்லோரும் இவரின் கூட்டாளிகள்.

என் மிகச்சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் இவரோடு என்போன்ற சின்னஞ்சிறுவர்கள் கூட்டம் பின்னால் போகும். காடோ செடியோ வயலோ வரப்போவெனச் சுற்றுவோம்..

அந்நாளில் ஒரு மொட்டை தென்னை மரத்தில் கிளிக்குஞ்சுகள் இருக்க, வளர்க்க விருப்பமா?வேண்டுமா எனக் கேட்டு எனக்கு பரிசளித்தவர். முடியோ சிறகுகளோ முளைக்காத அதை பிள்ளை போல வளர்த்ததும், ஈராண்டுக்கு பின் பெரிதாக பின் பறந்து சென்றதும் தனிக்கதை.

சென்றமுறை ஊர் சென்றபோது கூட சந்தித்து மகிழ்ந்தேன் (போட்டோ அப்போது எடுத்தது தான்11th SEP'2020) இவர் போன்றோரை சந்திக்கும் போது தான் நம் ஆன்மாவே மகிழ்வது போல உணரலாம்.

சூதுவாதற்று மனதில் ஏதும் வைக்காமல் இருப்பவர்கள் இறைவனின் செல்லப்பிள்ளைகள். எவருக்குத் தான் இவரோடு ஆசை தீர கதைக்கவும், நேரம் செலவிடவும் அவாவிருக்காது. அவனும் விரும்பினான் போல..

செல்ல ஆன்மா விடை பெற்றுச் சென்றுவிட்டது.
இன்று சுல்தான் பாட்ஷா மாமு காலமாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே மீள்வதுமாகும்.)

துஆ செய்வோம்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பிரபல கவிஞன்

சொல்வளம் கொண்டவன்
தமிழ் மணம் நுகர்ந்தவன்
மொழியின்பம் அடைந்தவன்
வாட்டிய வறுமையை
ஓட்ட அறியாதவன்
மதுவைக் கைகொண்டு
மகிழ்ச்சி மனக்கோட்டை கட்டினான்
புவிமறக்க குடித்து விட்டு
கவிச்சொற்களைக் கொட்டினான்
அவன் மயக்க விரும்பி;
மயக்கம் அவனை மயக்கித் தனதாக்கியது
தீரும் மயக்கத்தில் மூழ்குபவனை
தீரா மயக்கம் தீரத் தீர்த்தது.
மதுவைக் குடித்து
போதையெனும் சொற்பமரணத்தை
வேண்டித் தழுவியவனை;
மரணமெனும் மது குடித்துவிட்டது
தீராத போதையில் தீர்ந்து போனான்
ஜா.மு
1:41பிற்பகல்
17-09-2021


காப்பியக்கோ சந்திப்பு :2021

காப்பியக்கோ Ahamed Jinnahsherifudeen அவர்கள் இம்முறை துபாய் வந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் சந்திக்க முடியாத சூழல்; நிலவிவந்த பெருந்தொற்று அச்சம், உடல்நிலை வயது காரணமாக சந்திப்பு நிகழவில்லை.
நிலைமை தற்போது சீராக மீண்டிருப்பதாலும், காப்பியக்கோ அவர்கள் தடுப்பூசிகள் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டுவிட்டதாலும், அடுத்தமாதம் ஆஸ்திரியா பயணம் இருப்பதாலும் சந்திக்க மிக ஆவல் பூண்டிருந்தார். எங்களுக்கும் ஆவல் மிகுந்திருந்தாலும் மேற்சொன்ன விசயங்களை கருத்திற்கொண்டு அமைதி காத்தோம்.
ஆனாலும் தேடிடும் வாஞ்சை நெஞ்சங்களின் கூடல் ஆத்ம மகிழ்விற்கு வழிவகுக்குமென்பதாலும், சந்திப்பு மனக்களைப்பை நீக்குமென்பதாலும் "அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்" என்ற ஒப்பற்ற காவியத்தின் கூட்டணிச் சந்திப்பு மீண்டும் நிகழ்ந்தது.
காப்பியக்கோவின் அன்பிற்கும் ஆவலுக்கும் இணங்க காப்பியக்கோவை அவர்தம் மகனார் முஜீப் மிகுந்த கனிவோடு அழைத்துவந்திருந்தார், நேற்று எமீரெட்ஸ் டவரில் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கழித்து, புரவலர் வெள்ளம்ஜி முகம்மது இக்பால் Jamal Mohamed Mohamed Iqbal அவர்களும் நானும் காப்பியக்கோவை நேரில் சந்தித்த்து அகமகிழ்ந்தோம்.
நேரம் போனதே தெரியாமல் பற்பல நினைவுகளையும் "அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்" என்ற எங்கள் காவியம் குறித்தும் பேசி இன்புற்றோம்.
பிறகு காப்பியக்கோ தற்போது புதிதாக ஆக்கியிருக்கும் "மைவண்ணன்" என்ற இராமபிரானின் காவியத்தைப் பற்றியும் ஒரு இஸ்லாமியர் எழுதியுள்ள இராமகாதைக்காய் இலங்கை கம்பவாரிதி அவர்கள் தமக்கு செய்த தகைமை குறித்தும் பகிர்ந்தார் செய்திகள் செவிவழி புகுந்து உள்ளம் நிறைந்தது.
மேலும், இறைவனிடம் நபிகள் நாயகத்தின் வஸீலாவை முன்னிறுத்தி காப்பியக்கோ அவர்களால் எழுதப்பெற்றிருக்கும் இறையருள் மாலை குறித்தும் உரையாடினோம். அதை புரவலர் வெள்ளம்ஜி முஹம்மது இக்பால் அவர்களின் பெற்றோர் ஹாஜி.ஜமால் முஹம்மது - தாவூத் பேகம் இவர்களுக்கு சமர்ப்பணம் செய்த விருப்பத்தை பொருத்தத்தை அன்பை நெகிழச் சொன்னார். பிறகு அதை புரவலருக்கு அன்பாய் அளித்து மகிழ்ந்தார்.
இனிய உணவுகள் அன்பின் இசை நிறைந்த பகிர்வுகள் என உள்ளம் பூரிக்க சில புகைப்படங்கள் எடுத்து பிரியமாய் இனியொரு ஒன்று கூடலில் சந்திப்போமென விடைபெற்றோம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கொடிது


போர் தான் எத்தனை கொடிது..
ஆற்ற முடியாத வலிகளை சுமக்குமாறு
ஆயுதங்கள் எங்களை புணர்ந்தன
ஆறுதல் தரும் வழியை காட்டத்தான் ஒரு ஆயுதத்தையும் காணோம்..!!!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

13 செப்டம்பர் 2021

பெருங்காதல் உணர்வோடு - (பெண் குரலில்)


நிச்சயம் நாயகத்தின் நேசர்கள் மகிழ்வுடன் கேட்டு பரவசம் அடைவீர்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களது அகமியத்தைக் கூறும் பாடல் உங்களுக்காக இதோ..
2017ல் அபுல் பரக்காத் குரலில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடலை அன்பு நண்பர் ஹாஜித் இப்ராஹிம் Hajith Ibrahim சேனலில் வெளியிட நான் அனுப்பிய போது பத்துக்கும் மேற்பட்ட முறை இப்பாடலை கேட்டு உடனே எனக்கும் போன் செய்து சிலாகித்தார்.
இப்போது அவரே ரீ- ரிக்கார்டு செய்து ஷ்மாய்ளா என்னும் சகோதரி பாடி இப்பாடல் வெளிவந்திருக்கிறது.
பாடல் வரிகளும் யூ டியூப் கமெண்டில் உள்ளது.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ அலா ஆலிஹி வசஹ்பிஹி வஸல்லம்.
- ஜா.மு.


பல்லவி:
பெருங்காதல் உணர்வோடு நபியை 
பேரருளாக தந்தானே புவியில் – அவன்
பெருங்காதல் உணர்வோடு நபியை
பேரருளாக தந்தானே புவியில்

அனுபல்லவி:

தன் நூராக வைத்திருந்தான் ஒளிவாய்
பின்பு தாஹாவாய் அமைத்தானே நிறைவாய்

சரணம் :

அமாவெனும் இருளில் அறியாது கிடந்தான்
கமாலெனும் நிலையையே புரியாது இருந்தான்
சமாவெனும் வானும் விண்கோள்கள் இல்லை
நபி சர்தாரைக் கொண்டே  சமதவனை அறிந்தான்                                                                       
***
ஆதத்தின் சாரம் அவன் சமைக்கும் முன்பே
அஹ்மதின் நாதம் அவன் ஆக்கிவைத்தான்
நீதத்தின் ஓசை நிலமெல்லாம் ஒலிக்க
போதத்தின் வடிவாய் நபி யாஸினை தந்தான்.
***
நல்வழிகாட்ட பலரை நபியாக்கி வைத்தான்
நபித்துவ அசலாய் நம் மஹமூதை அமைத்தான்
ஃகலீல் கலீம் ரூஹென்று நபிமார்கள் வந்தார்
ஹபீபென்று அன்பால் அஹ்மதனில் லயித்தான்
***
மூஸா நபிக்கோ ஊசிமுனைக் காட்சி
முஹம்மதற்ளித்தான் மிஃராஜெனும் மாட்சி
எல்லோரும் அஞ்சும் மஹ்சரின் நாளில்
மகாமன் மஹ்மூதில் நீர் இருப்பீர் என்றான்
***
ரப்புல் ஆலமீன் என தன்னை விண்டவன்
ரஹமதுலில் ஆலமீன் எனநபியை விளித்தான்
இப்பெரும் சிறப்பெல்லாம் ஒருநபிக்கும் இல்லை
இனியுகம் ஜகமெதற்கும் நபிமஹ்மூதே என்றான்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

குறிப்பு: சங்கைநபி ஒலிப்பேழையில் 2016ல் பாடகர் அபுல் பரக்காத் பாடி  வெளிவந்து மிக வரவேற்பை பெற்ற பாடல்.