15 ஜூலை 2022

மருதாணி இரவு



அதே இரவு தான் இன்று,
கையில் உறவுகள் இட்டுவைத்த
மருதாணி நெஞ்சுக்குள்,
வண்ணம் போகாமல்..
வாசனைத் தீராமல்..!


ஆண்டுகள்...
இறக்கைக் கட்டிப் பறந்தாலும்
உள்ளங்கையின் சிவப்பை
உள்ளத்தால் உவந்து மகிழ்கிறேன்.


பச்சை இலைதான் மருதாணி
அதை நினைவுகளால் அரைத்து
அன்போடு குழைத்து பூசும் போது
நிறக்கும் சிவப்பென்பது
மகிழும் மனங்களின்
நுதலில் தெரியும்
இதழின் நகை தான்!


மருதாணி இட்டவர்கள்
கண்ணும் கருத்துமாய்
இருத்தல் அவசியம்!


இருக்கிறோம் நாங்களும் தான்..

கண்ணும் கருத்துமாய்!
என் கைகளில் அவள்
அவள் கைகளில் நானென
சிவந்திருக்கிறோம்.

15-07-2021

 

 

 






எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும்
நெஞ்சைவிட்டுச் செல்வதில்லை
ஒட்டிக்கொண்டு சிவந்த மருதாணி மணம்.

மெஹெந்தி ராத்!


15-07-2020
-ஜா.மு.


தடை சொற்கள்!

அன்பின் மன்றத்தோரே!
இன்று பட்டியலிடப்பட்ட
சிலச் சொற்கள்
பேச தடைஅறிவீர்!
நினைவில் கொள்க!
பிறகு, பேச வேண்டிய
சொற்களுக்கு
முன் அனுமதி வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட பேச்சில்
தவறி பேசிய சொற்களில்
உட்பொருள் வேறு இருப்பதாய்
ஆய்வுக்குழு நிரூபித்தால்
வெளியே வர முடியாத சிறை!
முக்கிய சட்டமியற்றும் நாளில்
"வாய்க்கு பிளாஸ்திரி இட்டு வர வேண்டும்.
மீறினால் ஒட்டப்படும்" என்ற
அறிவிப்பிற்கு ஆலோசனை.
அறிக, இங்கே
"ஆளுவோர் தவிர
நீங்கள்
அனைவரும் ஊமையர் தான்.
எதிர் கருத்து உடையவர்க்கு
எதிர்பார்க்காத தண்டனைகள்"
என்று கூட சொல்லும்
சொல்லைத் தாங்கிய
கட்டளைகளை எங்கள்
செயலகங்கள் வெளியிடலாம்.
ஜாக்கிரதை.
நான்கு நாட்களில்
அவை கூட இருக்கிறது
குளிராக இருக்கும்
போர்த்திக்கொண்டு
அடக்கத்தோடு வந்து சேருங்கள்.
ஜாலியாக
சில சின்னஞ்சிறு கதைகள்
பேசி சிரித்து மகிழ்வோம்.
ஜனநாயகக் கூத்துப் பட்டறை வரவேற்கிறது.
-ஜா.மு.
14-07-22
20:30

06 ஜூலை 2022

நன்றி

என எல்லோரும்
சொல்லி விட மாட்டார்கள்.
அவ்வளவு எளிதில்
மனிதர்களுக்கு
மனம் வராது.
பெரிய மனது வேண்டும்,
வாழ்க! என
வாழ்த்துவதற்கும் கூட.
வள்ளல்கள் தான் என்பேன்
வாழ்த்துவோர் எல்லோரும்.
*
முகம் தெரியாத மனிதருக்கும்
நிழல் தர மரம் நடுவோர்
யாரோ ஒரு சிலரே.

அன்பின் மொழியெல்லாம்
அடுத்து வைத்துக்கொள்வோம்,
எதிர்படுவோரை யெல்லாம்
எதிரியாக பார்ப்போருக்கு நடுவே..
பார்க்கும் மனிதர்களுக்கெல்லாம் கூட
இன்முகம் கொடுப்போர்
வெகு சிலரேயல்லவா!

ஆனால் நீங்கள்,
தேனின் சுவைக் கூட்டி
தெள்ளு தமிழ்ச் சொற்கள் தந்து
கள்ளூட்டி வாழ்த்தினீர்கள்.
இனியப் பலாச்சுளைகளைத்
தின்னத்தந்து இன்புறச்செய்தீர்கள்.
நிலாம்பரி ராகம் பாடி
இசைக்கூட்டி மகிழ்வித்தீர்கள்.

நிறையாத மனப்பெருவெளியெங்கும்
அள்ளியள்ளி அன்பைத் திணித்து
வாழ்த்து அட்சதைகளால்
திக்குமுக்காடச் செய்தீர்கள்.

அந்த வகையில் இன்று,
பூ மேடைகள் தான்
ஏறிய இடமனைத்தும்
சிவப்பு கம்பளங்கள் தான்
நடந்த வழி அனைத்தும்
மலர்த்தூவி வாழ்த்திசைத்தனர்
பார்த்த யாவரும்.

நீங்கள் என்னை
நெஞ்சம் நிறைந்து வாழ்த்தினீர்கள்
நான் அமிழ்தான தமிழ் கைகள் கூப்பி
நன்றி சொல்லி நெகிழ்கிறேன்.
வெறுப்பை ஒழிக்க
வேறொன்றும் செய்ய வேண்டாம்.

ஒரு முறுவல் போதும்.
வேரடி மண்ணோடு
வெறுப்பின் விருட்சம் வீழும்.

வாழ்வோம்.

ஜா.மு.
05-07-2022, 23:19.
ஷார்ஜா.



01 ஜூலை 2022

திருப்தி

அரசனிடம் காட்டமுடியாத
கட்டண ரசீதை ஆளாளுக்கு
பாரும் என பதிவேற்றி
திருப்தி அடைகிறது
இந்திய வலைத்தள உலகு

1-7-2017

- ஜா.மு