06 ஜூலை 2022

நன்றி

என எல்லோரும்
சொல்லி விட மாட்டார்கள்.
அவ்வளவு எளிதில்
மனிதர்களுக்கு
மனம் வராது.
பெரிய மனது வேண்டும்,
வாழ்க! என
வாழ்த்துவதற்கும் கூட.
வள்ளல்கள் தான் என்பேன்
வாழ்த்துவோர் எல்லோரும்.
*
முகம் தெரியாத மனிதருக்கும்
நிழல் தர மரம் நடுவோர்
யாரோ ஒரு சிலரே.

அன்பின் மொழியெல்லாம்
அடுத்து வைத்துக்கொள்வோம்,
எதிர்படுவோரை யெல்லாம்
எதிரியாக பார்ப்போருக்கு நடுவே..
பார்க்கும் மனிதர்களுக்கெல்லாம் கூட
இன்முகம் கொடுப்போர்
வெகு சிலரேயல்லவா!

ஆனால் நீங்கள்,
தேனின் சுவைக் கூட்டி
தெள்ளு தமிழ்ச் சொற்கள் தந்து
கள்ளூட்டி வாழ்த்தினீர்கள்.
இனியப் பலாச்சுளைகளைத்
தின்னத்தந்து இன்புறச்செய்தீர்கள்.
நிலாம்பரி ராகம் பாடி
இசைக்கூட்டி மகிழ்வித்தீர்கள்.

நிறையாத மனப்பெருவெளியெங்கும்
அள்ளியள்ளி அன்பைத் திணித்து
வாழ்த்து அட்சதைகளால்
திக்குமுக்காடச் செய்தீர்கள்.

அந்த வகையில் இன்று,
பூ மேடைகள் தான்
ஏறிய இடமனைத்தும்
சிவப்பு கம்பளங்கள் தான்
நடந்த வழி அனைத்தும்
மலர்த்தூவி வாழ்த்திசைத்தனர்
பார்த்த யாவரும்.

நீங்கள் என்னை
நெஞ்சம் நிறைந்து வாழ்த்தினீர்கள்
நான் அமிழ்தான தமிழ் கைகள் கூப்பி
நன்றி சொல்லி நெகிழ்கிறேன்.
வெறுப்பை ஒழிக்க
வேறொன்றும் செய்ய வேண்டாம்.

ஒரு முறுவல் போதும்.
வேரடி மண்ணோடு
வெறுப்பின் விருட்சம் வீழும்.

வாழ்வோம்.

ஜா.மு.
05-07-2022, 23:19.
ஷார்ஜா.



கருத்துகள் இல்லை: