24 அக்டோபர் 2023

ஏது பதில்?.

போரில் பரிதாபமாக
உயிர் துறப்பவர்களின் துன்பம்
ஒரு விதத்தில் அத்தோடு
விடை பெற்று விடக்கூடும்.
ஆனால்,
போர்ச் சூழலின்
பேரபாயகரத்தில் சிக்கி
வாதைக்குள்ளாகி
வகையறியாது நிற்போரின்
மனப்பிறழ்வு மனநிலை
அநாதியான வெறுமை
பசிப்பிணி
உறக்கமற்ற
உறங்கவும் இடமற்ற
ஈவிரக்கமற்ற பொழுதுகளின்
சாகவும் முடியாத
வாழவும் முடியாத
மிக வறண்ட கணங்களுக்கு
ஆதரவு தந்து அணைப்பது யார்?
செத்த உடலத்தின்
நிலை குத்திய கண் போல இருக்கும்
அவர்களின் இருண்ட வாழ்விற்கு
ஏது பதில்?.
- ஜா.மு

விடை காணாத கதறல்கள்
வாழ்வா சாவா போராட்டம்
ஒவ்வொரு வினாடியும் திகில்
வரலாற்றின் இரத்தம் சொட்டும்
பக்களை எழுதிக்கொண்டிருக்கிறது
விடியலை எதிர் நோக்கும்
வலி மிகுந்த பொழுதுகள்.

- ஜா.மு
09-10-2023

பாவப்பட்ட உண்மை


ஆயிரம் நர்த்தனம் ஆடி
அவரவருக்கு வேண்டியதை
ஆதலால் இதுவே உண்மையென
ஓயாது நிலை நாட்டிடும்
போட்டிகள் எங்கும் அரங்கேற
கேட்டு சோர்ந்தன ஒலி வாங்கிகள்.
அயராத பேச்சின் கம்பளம்
விரிந்து கொண்டே செல்கிறது
மனிதத்தை மாண்பை
பேரன்பை புன்னகையை
மறைத்து மூடிச் செல்கிறது.
தனக்கு நேர்ந்த சேதாரத்தை
காததூரம் தள்ளி நின்று
வேடிக்கைப் பார்த்து ரசிக்கிறது
பாவப்பட்ட உண்மை.
-ஜா.மு.

காஸாவின் பூனை

கருணை உடையோர்க்கு
காஸாவின் பூனையும்
கதறும் மழலையும் ஒன்று தான்.
உள்ளம் இல்லாதவர்கள் தான்
சிசுக்களின் ரத்தம் குடிக்கிறார்கள்.

- ஜா.மு
19-10-2023

சிட்டுக்குருவியை உயிர் பிழைக்கச் செய்துவிடுங்கள்!

இந்தக் குருவியை
பார்த்ததும் சிறுமி ஹனா
மனது வலியால் துடிதுடித்தது
ஹனாவின் வாழ்வே
வலி மிகுந்திருந்தும்
வலிக்கும் இழப்பிற்கும்
தன்னைப் பழக்கிய வாழ்வு
அவளுக்கு விதிக்கப்பட்டது.
ஆனால் பெரும் இரைச்சலுடன்
பூமியை அதிர வைத்து
வந்துவிழும் ராக்கெட் குண்டுகள்
ஒன்றும் அறியாத
காஸாவின் சிட்டுக்களை
நிலைகுலையச் செய்து
பாதித்ததில் வலித்து வலித்து
சோர்வுற்றாள் ஹனா.
பறக்க முடியாதிருந்த சிட்டைத்
தன் சிறிய கையில் ஏந்தி
பக்கத்திலிருந்த மருத்துவமனை
டாக்டரிடம் சொன்னாள்..
"எப்படியாவது
இந்த சிட்டுக்குருவியை
பறக்க வைத்து
உயிர் பிழைக்கச் செய்துவிடுங்கள்".

- ஜா.மு

06 அக்டோபர் 2023

வன்மம் மட்டும் கருப்பொருள்


எங்கு பார்த்தாலும் ரத்தம்,
கொஞ்சமும் ஈவிரக்கமற்று
மனிதத் தன்மையுமற்று
வெறிப்பிடித்த தாக்குதல்.
ஆயுதம் ஒன்றே
அறமென்று காட்டி,
மனதை கல்லாக்கும்
இரக்கத்தை இறக்கப் பழக்கும்
சுடுதல் வெட்டுதல்
இன்னும் கொடூரமாய் உயிர் நீக்குதல்
மட்டுமே கருப்பொருளாய்
மரண இயக்குநர்களின் படத்தையும்
வன்மத்தை ருசிக்கும் காலத்தில்
மக்கள் கூட்டம்
கொண்டாடித்தீர்க்கிறது.
வெறுப்பை நேசிக்கும்
இளைஞர் கூட்டம்,
கழுதைப் புலியின்
வேட்டை இரத்தம் தோய்ந்த
அதே வெறியாட்டத்துடன்
ட்ரைலர் வெளியிட்ட
திரையரங்கைக் கூட
நாசமாக்கி வளர்கிறது.
கண்ணீர் பெருக்குடன் நிற்கும்
அன்பு மறுதளிக்கப்பட்ட கூட்டம்
ஆறுதல் சொல்ல யாருமின்றி
அணைத்துக் கொள்ள பேருமின்றி
வகையின்றி வாடிக்கிடக்கிறது,
அதே இளைஞர்களை நம்பி.

- ஜா.மு

#லியோ  #லோகேஷ் #LEO

05 செப்டம்பர் 2023

சனாதனம் - உதயநிதி ஸ்டாலின் - சர்ச்சை



சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சில் தவறில்லை தான் நாம் அவரோடு முழுக்கவே உடன்பட்டு நிற்கிறோம்,  அமைச்சர் உதயநிதி கூறிய கருத்துக்களை பிஜேபி வடநாடு முழுக்க தீயாய் ஊதிப் பெருக்கி எங்கும் எரியவிட்டு நாட்டில் இது ஒன்று தான் பிரச்சனை என பரப்பி வருகிறது. இங்கு உதயநிதி பேசி சூடு ஆறுவதற்குள் பார்த்தீர்களா  இந்துக்களை அழிக்க வேண்டுமாம் என்று அமீத்ஷாவும், நட்டாவும் வடக்கில் அவதூறு பரப்ப ஆரம்பித்துவிட்டனர், உண்மையைச் சொல்லப்போனால் இந்தியா முழுக்க அறியப்பட்ட தமிழ்நாட்டுத் தலைவராக உதயநிதியை ஆக்கிவிட்டார்கள் என்பதும் மகிழ்ச்சியான செய்தி தான்.

ஆனாலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு  பெருவிருந்தைப் போல இதை அவர்களின் வடநாட்டு சங்கி ஊடகங்களை வைத்து மிகப்பெரிய பேசுபொருளாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் இதை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு எதிராக பரப்பி வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தகுந்தது. காங்கிரஸ் இது போன்ற இந்துக்களுக்கு எதிரானவர்களோடு தான் கூட்டணி வைத்திருக்கிறது, இது தான் இவர்கள் லட்சணம் இவர்களை ஜெயிக்கவிடலாமா? என்று களேபரமே நடத்திவருகிறார்கள்.

பிஜேபி எப்படி 2ஜி விசயத்தை பரப்பி அறுவடை செய்ததோ அதே போல இப்போது சி.ஐ.ஜி அறிக்கை வந்து அவர்களின் ஊழல் அம்பலப்பட்டு போக இருந்த நிலையில் இந்தியா கூட்டணி இதை பட்டி தொட்டி எங்கும் பரப்பி இவர்களின் உண்மை முகத்தை காட்டப்போகும் சூழலில் கிடைத்தது தான் சனாதன விவகாரம். மக்களுக்கு தங்கள் ஊழல் செய்தி நிர்வாக குறைபாடு எல்லாம் சென்று சேராமால் திசைத் திருப்ப இந்த வலுவான மதவாத காரணம் கிடைத்திருக்கிறது.

இருக்கவே இருக்கு வடக்கே சாமியார்களின் பலமும் ஒத்து ஊதும் ஊடகங்களின் பலமும் உண்டு கூடவே வளர்த்து வைத்திருக்கின்ற மூடர் கூட்டங்களும் உண்டு  எனவே இதை விட மாட்டார்கள் பிஜேபி தங்களுக்கு வந்தால் ரத்தம் எதிர்கட்சிக்கு வந்தால் தக்காளி சட்னி ரேஞ்சில் தான் இதை மடைமாற்றம் செய்துவிட்டது, இது அவர்களின் வாடிக்கை. ஏனெனில் இது போன்று மதவாதமாய் மடைமாற்றி மக்களை ஒன்று திரட்டி ஓட்டாக மாற்றுவதில் வெற்றிகண்டவர்கள் இதையா விடுவார்கள்.

ஆகவே நாம் மிகுந்து நிதானமாக அடியெடுத்து வைக்க வேண்டும், மிக முக்கியமாக தமிழ்நாட்டு சிந்தனைக்கும் வடநாட்டு சிந்தனைக்கும் நினைத்துப் பார்க்க முடியாத தூரம் வேறுபாடு உண்டு, அவர்களின் சிந்தனையை தூண்ட, உறக்கத்தைக் களைக்க இங்கு இருந்த தமிழ்ச்சான்றோர்கள் போல, திருவள்ளுவர் போல,  பெரியார் அண்ணா கலைஞர் போல தலைவர்கள் இல்லை. இவ்வளவு ஏன் வடநாட்டிற்கு நாம் போக வேண்டாம் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா கூட நமக்கு முன்னால் நிற்கமுடியாதவர்கள். அவர்களும் சித்தாந்த சிறையில் தான் அடைபட்டு உள்ளனர். அண்டை மாநில மக்களோடு பழகும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவர்களின் சிந்தனை ஓட்டம் நமக்கு எவ்வளவு வேறுபாடு மிக்கதாய் உள்ளது என ஆராய முடிகிறது.

இதில் கூட பாருங்கள் வடநாட்டு காங்கிரஸ்காரர்களே பலர் எதிர்க்கிறார்கள், ராகுல் இதுவரை கருத்துக்கூறாமல் தவிர்க்கிறார். மம்தா இதை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளாமல் யாரையும் வெறுக்கக்கூடாது நாங்கள் கூட பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வரை கொடுக்கிறோம் என்கிறார். சிவசேனா இதில் இதில் ஆதரிக்க முடியாது ஏனெனில் இந்துக்களுக்கு மட்டுமான கட்சியாக ஒரு காலத்தில் இருந்த் அந்த கட்சியை அதற்கு எதிரான கட்சி என பரப்பி  ஏற்கனவே அவர்கள் படு டேமேஜ் ஆகி கிடக்கின்றனர். ஆக இது இந்தியா கூட்டணியில் இது ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எனவே பல கட்சியினருக்கு தமிழ்நாட்டு சிந்தனை புரியாது, எவ்வளவு விளக்கினாலும் அவர்களின் மண், சிந்தனை, வளர்ப்பு வேறு நமது மண் நமது சிந்தனை நமது வளர்ப்பு வேறு தான்.

எனவே சூழ்ச்சிக்கார அசுரனான பிஜேபியை தேர்தல் நேரத்தில் எதிர்க்க வியூகம் அமைத்து செயல்படுவது மிக முக்கியம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அதிபராட்சியை நோக்கி நாட்டை நகத்திர்க்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்லும் இந்த நேரத்தில் இவர்களுக்கு இந்த செய்தி இன்னும் வெற்று வாய்க்கு கிடைத்த அவல் போல தீனியாய் கிடைத்துவிட்டது.

ஆகவே இந்த விசயத்தை தேர்தல் நேரமாக இருப்பதால் இப்போது கொஞ்சம் பேசாமல்  ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் உண்டு மேலும் வேண்டிய விளக்கத்தை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கவும் வேண்டும். கூட்டணி ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும். எல்லோரும் ஒரே அலைவரிசையில் என்பதை உறுதி செய்ய வேண்டும். இப்போதைய தேவையெல்லாம் பிஜேபி கூட்டணியை வியூகம் அமைத்து எப்படி வெல்லலாம் என்பது மட்டுமே. அதில் மட்டுமே இனி அல்லும் பகலும் இந்தியா கூட்டணி கவனம் செலுத்த வேண்டும்.

 

வாழ்க இந்தியா.

 

- ஜா.மு

22 ஆகஸ்ட் 2023

துரோகிஸ்டார்



பெயரிலேயே இணைந்திருப்பதால்
யோகியும் அல்ல.. - அவன்
யோக்கியனும் அல்ல..

காவி தரித்திருப்பதால்
துறவியும் அல்ல - அவன்
துறந்தவனும் அல்ல..

மத அரசியல்
மாட்டு அரசியல் என
வெறுப்பு அரசியல் செய்யும்
கருப்பு அரசியல் வாதியவன்.

பாமர நெஞ்சத்தில்
பாசிச வெறியேற்றுபவன்,
பாசமுள்ள பக்கத்து வீட்டான்

முஸல்மான் என்றால்
புலிக்கு மான்
அகோர வேட்டையாடு
ஆசி உண்டென்பவன்.

அரசியல் லாபத்திற்காய்
அறமில்லா மனங்களை
அபயங் கொடுத்து வளர்ப்பவன்.

இன அழிப்பின் அட்டூழியம்
நீதி நியாயம் கேட்டால்
வீடு இடிக்க புல்டோசர் வரும்.

அன்பில்லா நெஞ்சத்தார்க்கு
ஆயுதங் கொடுத்து மனிதம் அழிப்பதா?
கேட்டுவிட்டால் எண்கவுண்டர் தான்.

சோசியல் மீடியாவில்
பாசிசம் எதிர்த்துப் பகிர்ந்தால்
போலிஸ் லாக்கப்.

மண்ணில் நடந்ததை
மாற்ற முடியாது - இஸ்லாமிய
மன்னர்கள் ஆண்டதையும்
மறுக்க முடியாது என்பதெல்லாம்
இவன் உச்சந்தலையில் நச்சரிக்கும்.

அதனால் தான்
அலாஹாபாத் உட்பட
அழகிய இஸ்லாமிய பெயர்ப் பலதை
வன்மமாய் மாற்றிப்போட்டான்.

பாலகர்கள் படிக்கும்
பள்ளி புத்தகத்தின் சரித்திரத்தில்
சுள்ளி வைத்து கொள்ளி வைத்தான்.

இதெல்லாம் நாடறிந்தது,


ஊருக்கே அயோக்கியன்
சங்கி ஸ்டாருக்கு மட்டும்
கடவுளாகத் தான் தெரிகிறானாம்.

போடும் வேடம்
ஹீரோவானாலும்,
நம் மண்ணுக்கு
வில்லன் இவன்.

அறிவாளி போல் பேசும்
கோமாளி இவன்.

ஆரிய சித்தாந்தம்
தமிழ் நாட்டில் வேர் பிடிக்க
காவிக்கு ஆள் பிடிக்கும்
கால் பிடி கபடனிவன்.

கலைஞர் முதல் அறிஞர்கள் பலர்
பக்கத்தில் இருந்தும்
மூளை வளராத முடமிவன்.

வானத்து நட்சத்திரம் போல
கொண்டாடிடும் ரசிகர்களால்
சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தும்
குப்பையில் சேரும் சருகு இவன்.

தமிழ்நாடு தலையில் வைத்துக் கொண்டாட
புல்டோசர் வாயன் காலை
உ(த்)திரப்பிரதேசத்தில் தேடி ஓடுபவன்.

நல்லவேளை துரோகிஸ்டார்
கட்சி ஆரம்பிக்கவில்லை,
பத்து பைத்தியம் இவனுக்கும்
கொடி பிடித்திருக்கும்
தமிழ் நாடு தப்பித்தது.

தூத்துக்குடி போராட்டக்காரர்களை
சமூக விரோதிகள் என்று
முதுகில் குத்தியதை ஏனோ தமிழர் மறந்தோம்.

ஆனால், ஆஸ்பத்திரியில்
போராட்ட இளைஞன் கேட்டானே
அந்த கேள்வி தான்
எல்லார் நெஞ்சிலும் இப்போது


ஆமா… யார் நீங்க?
துரோகிஸ்டார்


-ஜா.மு

24 ஜூலை 2023

நம் நாட்டின் நம்பிக்கை இளைஞர்களே !

முன்னுரை: 
நம் நாட்டின் நம்பிக்கை இளைஞர்களே என்ற அழகிய தலைப்பை வழங்கிய ஆசிரியப்பெருமக்களுக்கு முதற்கண் நன்றி, ஏனெனில் அதுவே மிகையில்லாத உண்மை ஆகும். நம் பாரத திருநாட்டின் பலமே இளைஞர்கள் தான் அவர்கள் தான் நம் நாட்டின் வளர்ச்சி, உயர்வு மற்றும் எதிர்காலமாகவும் விளங்குபவர்கள். அதனைச் சற்றே விரிவாகக் காண்போம்.

 பொருளுரை: 

 இளைஞர் பலமே இந்தியாவின் பலம்: 

உலக மக்கள் தொகையில் நம் நாடு இரண்டாம் இடத்தில் இருந்தாலும் விரைவில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை மிஞ்சி முதலிடத்திற்கு வரப்போகிறது என நம்மில் பலரும் அலுத்துக் கொள்வோம், அதை ஒரு பெருங்குறையாக எண்ணிக்கொள்வதும் உண்டு ஆனால் உலக நாடுகளுக்குக் கிடைக்காத பெருமையும் பலமும் நம் நாட்டிற்குத் தான் உள்ளது, அது தான் இளைஞர்கள் பலம். 

 நாட்டின் கதாநாயகர்கள் இளைஞர்களே: 

நம் நாட்டின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய நூற்று முப்பது கோடி எனில் அதில் அறுபது கோடிக்கு மேல் முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கட் தொகையை விடக் கூடுதல் ஆகும். இந்த இளைஞர்களைஞர்களை முறையாக பயன்படுத்தி அவர்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்பும், அவர்தம் சுய தொழிலுமே நம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய காரணிகள்.

தவிரவும் நாடு கடந்து சென்றும் இன்றைய வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்குக் காரணிகளாகவும் விளங்கி அங்கிருந்து நம் நாட்டிற்கு அந்நியச்செலாவணியை அளித்துவருவதிலும் இளைஞர் சக்தி நிரூபணமாகியிருக்கிறது என்றால் நாளை நமது ஒளிமயமான தேசத்திற்கும்  இளைஞர்கள் தான் கதாநாயகர்கள். மேலும், நம் இளைஞர்களின் சக்தியும் திறமையும் ஒன்று திரண்டால் உலகில் அசைக்கமுடியாத வல்லரசு நாமே.
 
 விவேகானந்தரும் அப்துல் கலாமும் போற்றிய இளைஞர் சக்தி: 

இளைஞர்களின் சக்தியை உணர்ந்ததால் தான் "என்னிடம் நூறு இளைஞர்களைத் தாருங்கள் தேசத்தைச் சிறந்த முறையில் மாற்றிக்காட்டுகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர். நம் இளைஞர்களே இந்தியாவின் நாளைய நம்பிக்கை என்று தீர்க்கமாக நம்பியதால் தான் பாரத ரத்னா நம் மேனாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் “கனவு காணுங்கள்.. கனவு காணுங்கள்” என்ற தாரக மந்திரத்தைச் சுமந்து நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு பள்ளியாக, கல்லூரியாகச் சுற்றி மாணவர்களை இளைஞர்களை ஊக்கப்படுத்தி தயார்ப்படுத்தினார்.

 நம்பிக்கை நட்சத்திர இளைஞர்கள்: 

சென்ற 2021ஆம் ஆண்டில் விளையாட்டு வீரரான நீரஜ் சோப்ரா முதன் முதலாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று உலக அரங்கில் நம் நாட்டின் பெருமையை நிலை நாட்டினார், அபிஜிதா என்ற ஏழு வயது சிறுமி உலகின் மிகக்குறைந்த வயதுடைய நூலாசிரியராக விளங்குகிறார், ஆர்யா ராஜேந்திரன் என்ற இருபத்திரண்டு வயது யுவதி இந்தியாவின் வயதில் குறைந்த முதல் முதல் மேயர் என்ற பெருமைக்கு உரியவர்,  ஆறுவயது அர்ஹாம் ஓம் எனும் சிறுவன் தான் உலகின் இளைய கணினி நிரல் அமைப்பாளர். தனது இருபத்து மூன்று வயதில் காஷ்மீரைச் சார்ந்த பெண் மாவ்யா தான் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சார்ந்த இந்திய விமானப்படையில் சேர்ந்த முதல் இளவயது பெண் விமானி ஆவார். இப்படி இந்தியாவின்  நம்பிக்கை நட்சத்திரங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். 

அவ்வளவு ஏன், நமது சென்னையைச் சார்ந்த லீடியன் நாதஸ்வரம் தனது பன்னிரண்டாம் வயதில் அமெரிக்காவில் நடந்த தி வேல்ட் பெஸ்ட் என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்பரிசை வென்று உலகையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

 முடிவுரை: 
ஆகவே அறிவுத்தெளிவும், பரந்த சிந்தனையும், தேசப்பற்றும், சுயதொழில் சிந்தனையும், விவசாயம் காத்தலும், பொதுநலம் பேணுதலும், நாட்டுக்காக  உழைக்க வேண்டும் என்ற வேட்கையும் உள்ள இளைஞர்களே நாளைய நம்பிக்கை என்பதிலும் நாளைய இந்தியாவை மற்ற நாடுகளைவிட பலம் பொருந்திய நாடாக, தன்னிறைவு பெற்ற நாடாக நம் இளைஞர்கள் மாற்றி உலக அளவில் ஒளிர வைப்பார்கள் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை. நம் திறமைமிக்க இளைஞர்களின் உழைப்பில் செயலாக்கத்தில் நாளைய இந்தியா உலகையே வழிநடத்தும் என்பதும் மாற்றுக்கருத்தே இல்லாத பேருண்மை. வாருங்கள் இளைஞர்களே நாளை உலகிற்சிறந்த பாரதம் படைப்போம்.

(மகனின் பள்ளியில் நடந்த போட்டிக்காக, 2022)

01 ஜூலை 2023

கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா




தமிழே
அமுதே
வாழி!
எண்ணே
எழுத்தே
வாழி!
அரசே
முரசே
வாழி!
அறமே
அருளே
வாழி!
உயிரே
உணர்வே
வாழி!
கருணையே
நிதியே
வாழி!
கலைஞரே
புகழே
வாழி
எங்கள்
இன்பமே
இதயமே
வாழி!
02-06-2023

மாமன்னன்





படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நாமிருக்கும் சமூகத்தின் மீதான ஆயிரம் கேள்விகளை எழுப்பி, சாதிய உயர்வுத் தாழ்வு இழிவுகளை சாரமாக கொண்டு அது தரும் வலிகளின் அதிர்வலைகளால் பகுத்தறிவு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குநர்.
எந்த சாதியினரையும் படத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் எந்த சாதியினரை மேலாகவும் கீழாகவும் காட்டியிருக்கின்றார்கள் என்பது வடிவேலு கதாபாத்திரம் அவரது மேக்கப் இல்லாத இயல்பான முகம் அவர் மகன் உதய் வளர்க்கும் பன்றிகள் - பஹத் பாசிலின் மீசை மற்றும் மிடுக்கான உடை வளர்க்கும் நாய்கள் மூலமே குறியீடாக கடத்திவிட்டார் இயக்குநர்.
படத்தில் எல்லோருக்கும் இயல்பான அறிமுகம் ஆனாலும் வடிவேலுவின் அறிமுகமே ஈர்ப்பு. படத்தின் உண்மையான மாமன்னனாக உணர்வுப்பூர்வமான நடிப்பில் அனைவரையும் உறைய வைத்திருக்கிறார். முதன் முதலாக குணச்ச்சித்திர வேடத்தில் வேறுவகை நடிப்பில் திரையை ஆள்கிறார் வடிவேலு.
உதயநிதியின் ஆகச்சிறந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும் படம். ப்ரோமோவில் மாரி செல்வராஜ் சொன்னது போல உதயைத் தவிர வேறொருவர் தயாரிக்க & நடிக்க தயங்கும் கருக்களம், இதை மிகத் தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்ததற்கும் தயாரித்ததற்கும் மிகப்பெரிய பாராட்டு அவருக்கு உண்டு. இதைத் தேர்ந்தெடுத்ததில் அவரின் பெரியாரிய பகுத்தறிவுப் புரிதல் தெளிவாகிறது.
மேலும், படத்தில் ஒரு கட்சி சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்பதும் எதிர் கட்சி மறுமலர்ச்சி ச.ச.ம.கழகம் என்பதும், அந்த இரு கட்சிகளின் கொடிகள் வரை மறைமுகமாக திமுக - அதிமுகவை குறிப்பது தான் என்பது பார்ப்போருக்கு எளிதில் விளங்கும். படம் பேசும் பாத்திரங்களின் ஜாதிய அரசியல் உட்பட. அதில் தயங்காமல் நடித்தது தான் உதயநிதியின் பக்குவப்பட்ட மனமும் பரந்துபட்ட பார்வையும் அது இல்லாமல் இருக்குமானால் இப்படத்தில் நடிப்பது சாத்தியப்படாது.
இதை அவரின் பேட்டிகளிலும் பார்க்க முடிந்தது. எது எப்படியோ இப்படம் உதயநிதியின் அரசியலுக்கும் பயன்படப்போகும் படமாகிப்போனது அவருக்கு தனிப்பட்ட முறையிலும் பலம். இந்தப்படத்தில் பேரன் நடித்ததை கலைஞர் இருந்து பார்த்திருந்தால் நிச்சயம் உச்சி முகர்ந்து முத்திட்டு மகிழ்ந்திருப்பார்.
பஹத் பாசில் கண்ணாலேயேநடித்து பயமுறுத்துவதில் அசுரன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். கீர்த்தியின் நடிப்பும் படம் முழுக்க வரும் தீரமான கதாபாத்திரம்.
முடியும்வரை படத்தில் தொய்வு இல்லை என்றாலும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம். இடைவேளைக்குப் பிறகு படம் காட்டுத்தீ! ரஹ்மானின் இசை படத்தோடு பயணிக்கிறது.
சமத்துவம்
சமூகநீதியை உரக்கப் பேசும் காத்திரமான அரசியல் படம்.
அனைவரும் பார்க்க வேண்டிய
அருமையான
படம்.
வடிவேலு - மாமன்னன்
உதய் - தளபதி
பஹத் - எதிரிப் படைத்தலைவன்

- ஜா.மு
29-06-2023

09 பிப்ரவரி 2023

அறியாதபுரம் : நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம் - முஹம்மது பிர்தெளஸ்

J Mohaideen Batcha கவிதைத் தொகுப்பு வாழ்வின் பல பரிமாணங்களை காண்பிக்கிறது. குழந்தை, பருவ வயது, காதல் வயப்பட்ட பையன், வாழ்க்கையைப் பற்றி குழம்பும் 30+ வயது உடைய மனிதன், முதிர்ச்சி பெற்ற பக்குவப்பட்ட மனிதன், ஜென், சூஃபிசம் என பல வாழ்வையும் இந்தத் தொகுப்பில் காண முடிகிறது.
சமகாலத்துக்கேற்றவாறு பின்நவீனத்துவ கவிதைகளையும் அள்ளி தெளித்திருக்கிறார். எ.க: "கொடும் லாவா மனதில் இருக்க பெரும் லாவகம் காட்டாதே; நைட்ரஜன் குண்டுகள் எறிந்து கொண்டே நைசாகப் பேசி மெழுகாதே"
இங்கு யாருக்குமே வாழவே தெரியல என்கிற மாதிரி சில கவிதைகள்,"எல்லோரும் அதிகம் வாழ ஆசைப்படுகிறார்கள். ஆனாலும், வாழ்தல் என்பது தான் பெரும்பாலும் நிகழ்வதே இல்லை."
நிலாவை பெண்ணோடு மட்டும்தான் ஒப்பிட முடியுமா, விரல் நகத்தோடும் ஒப்பிடலாம் என்பதை அவர் கவிதை வரிகள் காட்டுகிறது, "குட்டி குட்டி நிலவாகத் தோன்றினாலும், வெட்டித்தான் எறிய வேண்டும் விரல் நகத்தை!"
தன் தாய் மொழியை நேசிக்கிறவனால் மட்டுமே கவிதையையும் நேசிக்க முடியும். ஏனென்றால், அந்த மொழிதான் கவிதைக்கு அழகையும் ஆற்றலையும் தருகிறது. அந்த வகையில் இப்படி ஒரு கவிதை, "அவசரத்தில் அழைக்கும் போது அந்நிய மொழி கை கொடுக்காது. அன்னை மொழிதான் அனிச்சியாய் வரும்!"
(நல்ல கவிஞனைவிட மோசமான கவிஞன் தன் வாழ்நாளில் ஈட்டிக்கொள்ளும் வெற்றிகள் அதிகமாக இருப்பதால் அவனை மோசமான கவிஞன் என்று நிரூபிப்பது கடினமாகவே இருக்கும். ஏனெனில் அவன் தொடர்ந்து சபையோரின் கரகோஷங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறான்.
புகழ்பெற்ற மோசமான கவிஞனை மோசமான கவிஞன் என்று நாம் கூறும்போது அவன் நம்மீது அவனுடைய புகழை விட்டெறிவான். புகழ், கவிதையின் குணத்தைத் தீர்மானிக்காது என்று நாம் சொல்ல முற்பட்டால் அவன் அவனுடைய புத்தகங்களை விட்டெறியத் தொடங்குவான். அவை எண்ணிக்கையில் மிக அதிகமானவை. அத்துடன் தடிமன் ஆனவையும்கூட.
- ந பிச்சமூர்த்தி)
இந்த நல்ல கவிஞனுக்கும் கேலக்ஸி பதிப்பகத்துக்கும் என்
வாழ்த்துகள்
.
நன்றி Balaji Baskaran





03 பிப்ரவரி 2023

அறியாதபுரம் .. ஆலஞ்சி முஹம்மது மன்சூர் கருத்துரை


தம்பி ஜா.முஹையத்தீன் பாட்சா J Mohaideen Batcha (ராஜாமுகமது) எழுதிய கவிதை தொகுப்பு..
..
தம்பியை நான் சிறுவயதிலிருந்தே அறிவேன்.. பொதுவாழ்வு ஆன்மீகம் என நாட்டம் கொண்டவர் நிறைய படிப்பவர் .. நல்ல இஸ்லாமிய கவிதைகளை தந்திருக்கிறார். பலதரபட்ட விடயங்களிலும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் அதை சரியாக உணரும் திறமையும் கொண்டவர்.. நல்ல பேச்சாளரும் கூட.. அவரின் அறியாபுரத்தை தந்திருக்கிறார் ..
..
கவிதை நூல்..
எந்தவொரு புத்தகமாயினும் படிக்கும் போதே நம்மோடு பேசும் .. மெய் மொழிகிறதா இல்லை புனைவா என்று .. தம்பியின் கவிதை யதார்த்தத்தை போகிற போக்கில் சொல்லிவிடுகிறது
வாழ்தல் பற்றி
எல்லோரும் அதிகம் வாழ ஆசைபடுகிறார்கள் .....
என்றுமே "வாழாதது தான்"
வாழ்தல் என்பது நிகழ்வே இல்லை என்கிறார் ..
எல்லோரும் எதோவொன்றுக்காக வாழ்கிறோமே தவிர "வாழ்வை " சரியாக வாழ்தே இல்லை..
..
எல்லா தண்ணீரும் புனிதம் தான் என போட்டு உடைக்கிறார் .. "ஞானியின் சட்டையில்"
கடைசிவரை இறைவனைப் பற்றி மட்டும் சொல்வே இல்லை ..
ஞானியின் கண்ணாடியை கூட தொட முடியவில்லை என அஞ்சாமல் உண்மையை சொல்கிறார்..
Fear is the beginning of wisdom..
அஞ்சுதலே ஞானத்தின் ஆரம்பம் என்பார்கள் உண்மையில் தேடுதலே ஞானத்தை நோக்கிய நகர்வென்பேன்
தேடுதலே ஞானத்திற்கு வழிவகுக்கும்..
..
நாத்திகர்களையும் விடவில்லை
அறுதியிட்டும் அவர்கள் சொல்லும்
"இல்லை" என்பது தான் உண்மை
இல்லை எனும் அவ்வுண்மைக்குள் (#لة )اللة) (லா) என்றால் இல்லை என்ற பொருளை உட்கொண்டு பேசுகிறார்)
அவர்களால் போகத் தெரியாமலிருப்பதாலோ அல்லது பிடிவாகமாக போக மறுப்பதாலோ "#இல்லை" என்ற எல்லைக்குள் நிற்கின்றார்.. என்கிறார் ..
தெளிவாக விளங்க முடிகிறவர்களால் மட்டுமே இப்படி எழுத முடியும் .. ஞானத்தின் சிறப்பு இது ..
..
தம்பியின் முதல் கவிதை தொகுப்பு
பலதரப்பட்ட கவிதைகள் தஞ்சாவூர் கதம்பம் போல இருக்கிறது .. எளிய நடையில் நல்ல மலர்களால் பூங்கொத்து செய்திருக்கிறார் ..
இன்னும் நிறைய எழுத வேண்டும் .. எழுத்தாளர் சுஜாதா "புதுக்கவிதை " இஸ்லாமியர்களின் கைவசம் என்பார்..
கவிதைகளில் இஸ்லாமியர்களுக்கு தனி இடமுண்டு .. பெரும் பட்டியல் அது .. அந்த பட்டியலில் தம்பி "ராஜாமுகமது " நிச்சயம் இடம் பெறுவார் ..
..

25 ஜனவரி 2023

அறியாதபுரம் நூல் அறிமுக விமர்சனம் - திரு. கரந்தை ஜெயக்குமார்


ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றவர் என்பது கூடுதல் சிறப்பு. இனி அறியாதபுரம் நூல் பற்றி..
***
"தொண்ணூறு வயது முதியவர் மடியில்
முன்னூறு நிமிடத்திற்கு முன்
பிறந்த குழந்தை ஒன்று
சிரித்துப் பார்த்து சிறுநீர் கழிக்கிறது
முதுமை அதையும் பேறாய் மகிழ்ந்து
மெச்சிப் பேசி, உச்சி முகர்ந்து
இறையை நிறைய துதிக்கிறது."
படிக்கும் பொழுதே மனம் நெகிழ்ந்து போகிறது. முதுமையின் பெருமையினையும், வாழ்வின் உன்னதத்தையும், முழுமையாய் உணர்ந்திருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன, இவரது எழுத்துக்கள்.

இன்றைய உலகு அவசர உலகாகி விட்டது. எதற்கெடுத்தாலும் அவசரம். இரண்டு சக்கர வாகனப் பயணம்கூட, பறத்தலுக்கு இணையாகிவிட்டது. உணவு கூட, துரித உணவாகிவிட்டது.
எதற்கு இந்த அவசரம். இந்த அவசரத்தையும் கவியாக்கி இருக்கிறார் இக்கவிஞர்.
"ஏன் அந்தக் கவிதையை
இத்தனை அவசர அவசரமாய் படிக்கிறாய்?
பரபரப்புடன் இப்படிப் படிக்க
என்ன தான் அவசியம்?
இங்ஙனம் அந்தக் கவிதைப் புத்தகத்தை
இனியும் கேவலப்படுத்தாதே.
உன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதும் கவிதை இல்லையா?
உன் வாழ்வே ஒரு கவிதைப் புத்தகம் இல்லையா?"
கவித்துவமாய் வாழ வேண்டிய வாழ்வில், நட்பு என்பதைக்கூட, ஒரு கருவியாக்கி, சுயநலத்தினை மட்டுமே முதன்மையாக்கி வாழும் மனிதர்களை வேதனையோடு எண்ணிப்பார்க்கிறார்.
"அறம் பொருள் இன்பமெல்லாம் பேசினாய்
அக்கறை இருப்பதாய் காட்டிக் கொண்டாய்
பேச்சில் எப்போதும் தேன் கூட்டுவாய்
மூச்சில் எனை வானெனச் சாற்றுவாய்
நண்பர் என்றே எண்ணியுமிருந்தேன்.
…..
…..
பாவி நான் அறிந்திருக்கவில்லை
நீயொரு இரயில் சிநேகிதன் என்பதனை.
உன் நிறுத்தம் உனக்கு தெரிந்திருக்கிறது
நீ கவனத்தோடு இறங்கி விட்டாய்."
இவருக்கு உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசுவதில் என்றும் விருப்பம் இல்லாதவர். இதனையும் தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறார்.
"பொய்யாய் வந்து
பொய்யாய் முகம் காட்டி
பொய்யாய் ஆலிங்கனம் செய்து
பொய்யாய் பேசிச் சிரித்து
பொய்யாய் போய் வரவேண்டும்.
ஆதலினால் நான் மாட்டேன்."
பொய்யாய் வாழவிரும்பாத இவர், ஒரு தனிமையின் ரசிகர். தனிமையைத் திருவிழாவாய் கொண்டாடுபவர். தனிமையில் இவரது சந்தோச சாம்ராஜ்யம் பரந்து விரிகிறது.
"என் நண்பனான நானும்
என் எதிரியான நானும்
நானான நானும் இணைந்திருக்கையில்
நீங்களெல்லாம் நினைப்பது போல
எனக்கேது தனிமை… ?
…..
…..
என் சூரிய சந்திரர்களை
நீங்கள் சந்திக்கவில்லை தானே.
என் இல்லத்து வின்மீன்கள்
உங்கள் கண்களுக்கு
அகப்பட்டவை இல்லைதானே.
பின் நீங்கள் எப்படி அறிவீர்கள்?
நானே நிரம்பிய என் பரப்பில்
என்மையின் வட்டம் மிக நிரம்பிக் கிடக்கிறது."
தனிமையை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வாழ்வின் ஒரு பகுதி, காத்திருப்பதிலேயே கழிந்து விடுகிறது. பிறந்தது முதல், வளர்ந்து முதுமை அடைந்த பின்னும், ஏதோ ஒன்றிற்காக காத்துக் கிடக்கத்தான் வேண்டியிருக்கிறது.
"காத்திருப்பு
சில நெருப்பை அணைத்து விடுகிறது
சில நெருப்பை வளர்த்து விடுகிறது.
காத்திருப்பு
ஒரு தவத்தை வலிந்து தினித்து விடுகிறது.
….
….
காத்திருப்பு
ஏதேனும் ஒரு சேதியை தாமதப் படுத்துகிறது.
பரபரப்பின் நகங்களை கடித்துத் தின்கிறது
இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது
எதையோ தீவிரமாக எதிர்பார்க்கிறது
அதுவரை நம்பிக்கையை வளர்க்கிறது."
மனிதனாய் இப்புவியில் வாழும், ஒரு சிறு வாழ்வில், ஒரு பக்கம் அவசரம், மறுபக்கம் காத்திருப்பு, நடுவில் ஏமாற்றங்கள், துன்பங்கள் , துயரங்கள் எனச் சுழலும் இவ்வுலகில், மனித மனங்களுக்குள் மறைந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை கண்டு எள்ளி நகையாடுகிறார்.
"வாழும் இச்சிறு வாழ்வில்
ஆகுவதாம் … ஆகாததாம்
உறவாம் … வஞ்சகமாம்
பணமாம் … பரதேசித்தனமாம்
அரசியலாம் … ஆட்டுக்குட்டியாம்
மதமாம் … மசிராண்டியாம்"
கவிஞரின் வார்த்தைகளில் கோபம் ததும்பி வழிகிறது. தொண்ணூறு கவிதைகளால் கோர்க்கப் பெற்ற, கவி மாலையாய் மலர்ந்து மணம் வீசுகிறது இவரது நூல்.
இவர் யார் தெரியுமா? அதையும், இவரே கூறுகிறார், கேளுங்கள்.
"அனல் காற்றினிலே
அல்லாடும் சிறு கொடி நான்.
ஆதரிக்க யாருமின்றி
பேதலித்துத் தவிக்கிறேன்.
காட்டாற்று வெள்ளம்
கழுத்துவரை செல்கிறது.
நான் கடுகளவும்
எதிர்பாராதது வதைக்கிறது.
எந்தக் கொழுகொம்பும்
இதுவரை கிடைக்கவில்லை.
நெஞ்சமோ கூப்பாடு போடுகிறது.
எங்கிருந்தாவது உன் உதவிகள் வரட்டும்.
அறியாத புரத்திலிருந்து
செல்வமும் உதவியும் வரும்
என்பது என் பாட்டியார் வாக்கு."
இவர், தன் பாட்டியார் மீது கொண்டிருக்கும் பற்றால், பாசத்தால், நம்பிக்கையால், பாட்டியார் வாக்கினையே, இந்நூலுக்கு, தன் முதல் நூலுக்கு, கவிநூலுக்கு வைத்திருக்கிறார்.
இவர் வாய்மொழி அறியாதிருந்த போதே, தமிழ் மொழியால் சுவீகரிக்கப் பட்டவர். என்ன எழுதுகிறோம் என்று அறியாமலே, கிடைக்கும் காகிதங்களில் எல்லாம், எழுதும் பழக்கம், இவரது பால பருவத்தில் இருந்தே தொடங்கி விட்டது. இள வயது கவிதைகள் இவரிடத்தில் மலை மலையாய் குவிந்து கிடக்கின்றன.
இன்றைக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்னரே, எழுந்து வா என்னும் இவரது, இளவயது கவிதையை, இலங்கை வானொலி, பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் காந்தக் குரலில் ஒலிபரப்பியபோது, நோபல் பரிசு பெற்ற உணர்வு இவருக்கு.
மேலும், இளவயதில் இவருக்கு வாய்த்த தமிழாசான்கள் கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களும், புலவர் கலியபெருமாள் அவர்களும், எழுது, எழுது என இவரை உசுப்பிவிட்டனர், உற்சாகப்படுத்தினர், இவரும் மனமகிழ்ந்து கவிஞராய் வளர்ந்தார், உயர்ந்தார்.
கவிதை இவரது உயிராகிப் போனது. கவிதைகள் இவர் மனவானில் ததும்பி வழியத் தொடங்கின.
"விடாப்பிடியாக
தரதரவென எழுத்துக்களின்
கழுத்தைப் பிடித்திழுத்து
கவிதை செய்பவன் நானல்ல.
தானே ததும்பி வருவதற்கு
தடம் அமைக்க
தெரியாதவனும் நானல்ல …
கவிதை பயிர் செய்வது
என் தொழிலல்ல….
அதுவே என் உயிர்."
இவர் தன் கவி நூலை, தன் முதல் நூலை, தன் தாய், தந்தையாரிடம் இருந்துதான் தொடங்குகிறர்.
"நேர்படும் இறையருள்
நேத்திரங்களின் குளிர்ச்சி
எந்தாய்."
"வாழ்வில் கிடைத்த வரம்
நாளெல்லாம் ரசிக்கும் ஸ்வரம்
எந்தை."
இந்நூலுக்கு உயிரினிய முதல் வாழ்த்தை வழங்கி இருப்பவர்கள், இவரது பெற்றோர்கள்தான்.
"எங்களது வாழ்த்து எனும் தாலாட்டு
எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்" என்ற மனதார, மகிழ்ந்து வாழ்த்தி இருக்கிறார்கள்.
தாலாட்டி, சீராட்டி வளர்த்தவர்களின் வாழ்த்து, இவரை மேலும் உயர்த்தும்.
ஒரு நல்ல கவிதை கிடைத்துவிட்டால்
பிரபஞ்சம் மகிழ்ந்து நிறையுமே
அதுபோதும். என இவரது கவிதை வரிகளாலேயே, அகம் மகிழ்ந்து, வாழ்த்தியிருக்கிறார், இவரது தமிழாசான் கவிஞர் ப.திருநாவுக்கரசு.
கோர்க்கப்படாதிருந்த மணிகளைக் கவிதை நூலாக, அறியாதபுரமாக, அற்புதமாகக் கோர்த்துள்ளார்
இது ஆரம்பம்
வரவுகள் பல உள்ளன
வாழ்த்தி மகிழ்வோம். என வாழ்த்தியிருக்கிறார், அமீரகத் தொழிலதிபர் மற்றும் அறிவியல் அறிஞர் விருதாளர் முனைவர் வெள்ளம்ஜி.எம்.ஜே.முஹமது இக்பால்.
"ஆழ்மனக் கிடக்கையில் அரும்பிய மலர்களை
அறியாத புறமெனும் ஆரத்தில் கோத்துமே
தோழமைக் கவிமொஹி தீன்படைத் தளித்துள்ளார்
தமிழுக்குச் சூட்டிடும் சரமென வாகுமே"
என வாழ்த்தியிருக்கிறார், இதுவரை பதிமூன்று காவியங்களை, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை, கவி வடிவில் வழங்கிய, இலங்கை காப்பியக்கோ. ஜின்னா ஷரிபுத்தீன்
"தாயே… தமிழே
உன் அன்பு உயிரெல்லாம் வேண்டுமடி
என்றும் நீ அணைக்க மகிழ்வேனடி.
நான் வாழ இதயமும்
என் வாழ்வின் உதயமும் நீ தானடி.
நாளும் நீ இன்றி நான் ஏதடி"
என நாளும், தமிழ், தமிழ் எனத் துடிக்கும், தமிழிதயம் பெற்றவர்தான் இந்நூலின் ஆசிரியர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா.
வாசித்துப் பாருங்கள்.
அறியாதபுரத்தில்,
தங்களையும் அறியாமல் கரைந்து போவீர்கள்.
"அறியாதபுரம்"
கேலக்ஸி பதிப்பகம்,
1068, என்.பெருமாள் பட்டி,
ஆட்டுகுளம் விளக்கு,
சிவகங்கை சாலை,
மேலூர்.
மதுரை- 625 106.
99944 34432
admin@galaxybs.com
விலை ரூ.150
கரந்தை ஜெயக்குமார்
ஜனவரி 24, 2023.
கரந்தை ஜெயக்குமார் அவர்களின் இணைய தளப்பதிவு. http://karanthaijayakumar.blogspot.com/.../blog-post_24.html
FB post Link

24 ஜனவரி 2023

நம்பலையே



செய்த வேலைகளை
அப்படியப்படியே விட்டுவிட்டு
தடுப்புக்கூரைகள் நோக்கி
எல்லோரும் விரைந்தோட
நனைந்த ஆடைகளை உதறி
கைகளால் தலையைத் துவட்டி
ஆசுமாசமாகி..
"ச்சோ" வெனப் பெய்யும்
மழையை பார்த்துக்கொண்டே
"ஏம்ப்பா..
எஃப் எம் ரேடியோல ஒன்னும்
மழப் பெய்யும்ன்னு
சொன்னதா தெரியலயே.."
என்றவனைப் பார்த்து
"பொத்துக்கிட்டு ஊத்தியும்
அட..
வெத்துப் பய நம்பலையே"
என்றது மழை.
-ஜா.மு.
23-01-23