24 ஜூலை 2023

நம் நாட்டின் நம்பிக்கை இளைஞர்களே !

முன்னுரை: 
நம் நாட்டின் நம்பிக்கை இளைஞர்களே என்ற அழகிய தலைப்பை வழங்கிய ஆசிரியப்பெருமக்களுக்கு முதற்கண் நன்றி, ஏனெனில் அதுவே மிகையில்லாத உண்மை ஆகும். நம் பாரத திருநாட்டின் பலமே இளைஞர்கள் தான் அவர்கள் தான் நம் நாட்டின் வளர்ச்சி, உயர்வு மற்றும் எதிர்காலமாகவும் விளங்குபவர்கள். அதனைச் சற்றே விரிவாகக் காண்போம்.

 பொருளுரை: 

 இளைஞர் பலமே இந்தியாவின் பலம்: 

உலக மக்கள் தொகையில் நம் நாடு இரண்டாம் இடத்தில் இருந்தாலும் விரைவில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை மிஞ்சி முதலிடத்திற்கு வரப்போகிறது என நம்மில் பலரும் அலுத்துக் கொள்வோம், அதை ஒரு பெருங்குறையாக எண்ணிக்கொள்வதும் உண்டு ஆனால் உலக நாடுகளுக்குக் கிடைக்காத பெருமையும் பலமும் நம் நாட்டிற்குத் தான் உள்ளது, அது தான் இளைஞர்கள் பலம். 

 நாட்டின் கதாநாயகர்கள் இளைஞர்களே: 

நம் நாட்டின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய நூற்று முப்பது கோடி எனில் அதில் அறுபது கோடிக்கு மேல் முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கட் தொகையை விடக் கூடுதல் ஆகும். இந்த இளைஞர்களைஞர்களை முறையாக பயன்படுத்தி அவர்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்பும், அவர்தம் சுய தொழிலுமே நம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய காரணிகள்.

தவிரவும் நாடு கடந்து சென்றும் இன்றைய வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்குக் காரணிகளாகவும் விளங்கி அங்கிருந்து நம் நாட்டிற்கு அந்நியச்செலாவணியை அளித்துவருவதிலும் இளைஞர் சக்தி நிரூபணமாகியிருக்கிறது என்றால் நாளை நமது ஒளிமயமான தேசத்திற்கும்  இளைஞர்கள் தான் கதாநாயகர்கள். மேலும், நம் இளைஞர்களின் சக்தியும் திறமையும் ஒன்று திரண்டால் உலகில் அசைக்கமுடியாத வல்லரசு நாமே.
 
 விவேகானந்தரும் அப்துல் கலாமும் போற்றிய இளைஞர் சக்தி: 

இளைஞர்களின் சக்தியை உணர்ந்ததால் தான் "என்னிடம் நூறு இளைஞர்களைத் தாருங்கள் தேசத்தைச் சிறந்த முறையில் மாற்றிக்காட்டுகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர். நம் இளைஞர்களே இந்தியாவின் நாளைய நம்பிக்கை என்று தீர்க்கமாக நம்பியதால் தான் பாரத ரத்னா நம் மேனாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் “கனவு காணுங்கள்.. கனவு காணுங்கள்” என்ற தாரக மந்திரத்தைச் சுமந்து நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு பள்ளியாக, கல்லூரியாகச் சுற்றி மாணவர்களை இளைஞர்களை ஊக்கப்படுத்தி தயார்ப்படுத்தினார்.

 நம்பிக்கை நட்சத்திர இளைஞர்கள்: 

சென்ற 2021ஆம் ஆண்டில் விளையாட்டு வீரரான நீரஜ் சோப்ரா முதன் முதலாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று உலக அரங்கில் நம் நாட்டின் பெருமையை நிலை நாட்டினார், அபிஜிதா என்ற ஏழு வயது சிறுமி உலகின் மிகக்குறைந்த வயதுடைய நூலாசிரியராக விளங்குகிறார், ஆர்யா ராஜேந்திரன் என்ற இருபத்திரண்டு வயது யுவதி இந்தியாவின் வயதில் குறைந்த முதல் முதல் மேயர் என்ற பெருமைக்கு உரியவர்,  ஆறுவயது அர்ஹாம் ஓம் எனும் சிறுவன் தான் உலகின் இளைய கணினி நிரல் அமைப்பாளர். தனது இருபத்து மூன்று வயதில் காஷ்மீரைச் சார்ந்த பெண் மாவ்யா தான் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சார்ந்த இந்திய விமானப்படையில் சேர்ந்த முதல் இளவயது பெண் விமானி ஆவார். இப்படி இந்தியாவின்  நம்பிக்கை நட்சத்திரங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். 

அவ்வளவு ஏன், நமது சென்னையைச் சார்ந்த லீடியன் நாதஸ்வரம் தனது பன்னிரண்டாம் வயதில் அமெரிக்காவில் நடந்த தி வேல்ட் பெஸ்ட் என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்பரிசை வென்று உலகையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

 முடிவுரை: 
ஆகவே அறிவுத்தெளிவும், பரந்த சிந்தனையும், தேசப்பற்றும், சுயதொழில் சிந்தனையும், விவசாயம் காத்தலும், பொதுநலம் பேணுதலும், நாட்டுக்காக  உழைக்க வேண்டும் என்ற வேட்கையும் உள்ள இளைஞர்களே நாளைய நம்பிக்கை என்பதிலும் நாளைய இந்தியாவை மற்ற நாடுகளைவிட பலம் பொருந்திய நாடாக, தன்னிறைவு பெற்ற நாடாக நம் இளைஞர்கள் மாற்றி உலக அளவில் ஒளிர வைப்பார்கள் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை. நம் திறமைமிக்க இளைஞர்களின் உழைப்பில் செயலாக்கத்தில் நாளைய இந்தியா உலகையே வழிநடத்தும் என்பதும் மாற்றுக்கருத்தே இல்லாத பேருண்மை. வாருங்கள் இளைஞர்களே நாளை உலகிற்சிறந்த பாரதம் படைப்போம்.

(மகனின் பள்ளியில் நடந்த போட்டிக்காக, 2022)

கருத்துகள் இல்லை: