01 ஜூலை 2023

மாமன்னன்





படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நாமிருக்கும் சமூகத்தின் மீதான ஆயிரம் கேள்விகளை எழுப்பி, சாதிய உயர்வுத் தாழ்வு இழிவுகளை சாரமாக கொண்டு அது தரும் வலிகளின் அதிர்வலைகளால் பகுத்தறிவு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குநர்.
எந்த சாதியினரையும் படத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் எந்த சாதியினரை மேலாகவும் கீழாகவும் காட்டியிருக்கின்றார்கள் என்பது வடிவேலு கதாபாத்திரம் அவரது மேக்கப் இல்லாத இயல்பான முகம் அவர் மகன் உதய் வளர்க்கும் பன்றிகள் - பஹத் பாசிலின் மீசை மற்றும் மிடுக்கான உடை வளர்க்கும் நாய்கள் மூலமே குறியீடாக கடத்திவிட்டார் இயக்குநர்.
படத்தில் எல்லோருக்கும் இயல்பான அறிமுகம் ஆனாலும் வடிவேலுவின் அறிமுகமே ஈர்ப்பு. படத்தின் உண்மையான மாமன்னனாக உணர்வுப்பூர்வமான நடிப்பில் அனைவரையும் உறைய வைத்திருக்கிறார். முதன் முதலாக குணச்ச்சித்திர வேடத்தில் வேறுவகை நடிப்பில் திரையை ஆள்கிறார் வடிவேலு.
உதயநிதியின் ஆகச்சிறந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும் படம். ப்ரோமோவில் மாரி செல்வராஜ் சொன்னது போல உதயைத் தவிர வேறொருவர் தயாரிக்க & நடிக்க தயங்கும் கருக்களம், இதை மிகத் தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்ததற்கும் தயாரித்ததற்கும் மிகப்பெரிய பாராட்டு அவருக்கு உண்டு. இதைத் தேர்ந்தெடுத்ததில் அவரின் பெரியாரிய பகுத்தறிவுப் புரிதல் தெளிவாகிறது.
மேலும், படத்தில் ஒரு கட்சி சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்பதும் எதிர் கட்சி மறுமலர்ச்சி ச.ச.ம.கழகம் என்பதும், அந்த இரு கட்சிகளின் கொடிகள் வரை மறைமுகமாக திமுக - அதிமுகவை குறிப்பது தான் என்பது பார்ப்போருக்கு எளிதில் விளங்கும். படம் பேசும் பாத்திரங்களின் ஜாதிய அரசியல் உட்பட. அதில் தயங்காமல் நடித்தது தான் உதயநிதியின் பக்குவப்பட்ட மனமும் பரந்துபட்ட பார்வையும் அது இல்லாமல் இருக்குமானால் இப்படத்தில் நடிப்பது சாத்தியப்படாது.
இதை அவரின் பேட்டிகளிலும் பார்க்க முடிந்தது. எது எப்படியோ இப்படம் உதயநிதியின் அரசியலுக்கும் பயன்படப்போகும் படமாகிப்போனது அவருக்கு தனிப்பட்ட முறையிலும் பலம். இந்தப்படத்தில் பேரன் நடித்ததை கலைஞர் இருந்து பார்த்திருந்தால் நிச்சயம் உச்சி முகர்ந்து முத்திட்டு மகிழ்ந்திருப்பார்.
பஹத் பாசில் கண்ணாலேயேநடித்து பயமுறுத்துவதில் அசுரன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். கீர்த்தியின் நடிப்பும் படம் முழுக்க வரும் தீரமான கதாபாத்திரம்.
முடியும்வரை படத்தில் தொய்வு இல்லை என்றாலும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம். இடைவேளைக்குப் பிறகு படம் காட்டுத்தீ! ரஹ்மானின் இசை படத்தோடு பயணிக்கிறது.
சமத்துவம்
சமூகநீதியை உரக்கப் பேசும் காத்திரமான அரசியல் படம்.
அனைவரும் பார்க்க வேண்டிய
அருமையான
படம்.
வடிவேலு - மாமன்னன்
உதய் - தளபதி
பஹத் - எதிரிப் படைத்தலைவன்

- ஜா.மு
29-06-2023

கருத்துகள் இல்லை: