30 மார்ச் 2014

நான் பாஸாகிட்டேன்



நேற்று ஒரு சுகமான அனுபவம், நடைபெற்றது மழலைகளுக்கான விழாவாக இருந்தாலும் பெற்றவர்களின் நிலையிலிருந்து பிள்ளைகள் பெறும் சந்தோசத்தின் சங்கீதத்தை உணர்வது, பூரிப்பது என்பதே அலாதியானது.

கே.ஜி. - 2 தேர்வு எழுதிவிட்டு காத்திருந்த என் மகன் நளிருக்கு கடந்த 14ஆம் திகதி முடிவு வந்தது தான் தாமதம். படிக்காதவன்  ரஜினி காந்தெல்லாம் தோற்றுவிடுவார் அந்த அளவிற்று ஊருக்கு போன்செய்து அங்குள்ள எல்லோரையும் தனித்தனியே அழைத்து " நான் பாஸாகிட்டேன்... நான் பாஸாகிட்டேன்" என ரகளை செய்துவிட்டான். இன்னும் சில நேரம் "அத்தா.. நான் ஜெயிச்சுட்டேன்... அம்மா..நான் ஜெயிச்சுட்டேன்" என்றெல்லாம் ஒரே அமர்களப்படுத்தி தன் தேர்வு முடிவை கொண்டாடிக் களித்தான்.

அப்படிப்பட்டவனுக்கு பட்டமளிப்பு என்ற ஒரு நிகழ்வு இருப்பதாக அவனது பள்ளி டைரியில் குறிப்பிட்டிருந்தார்கள். தொலைபேசியிலும் அழைத்திருந்தார்கள். இது குறித்து அறிந்தவன் "எல்லா பிள்ளைங்களும் பட்டம் விடுவாங்கலாம், யார் உயரத்திற்கு பறக்கவிடுகிறார்களோ அவங்க தான் ஜெயிப்பாங்கலாம்" என்று இரண்டு மூன்று நாட்களாக இதே பேச்சு. அந்த நாளும் வந்தது. நேற்றைய நாள் தான் அது.

பையனை எப்போதும் போல் பள்ளி அனுப்பி வைத்து பிறகு மதியம் 12:40 வாகில் அழைக்கச்சென்றோம். நாங்கள் சென்றதற்கும் அந்த நிகழ்ச்சிக்கும் சரியாக இருந்தது.

ஒவ்வொரு வகுப்புப்பிரிவு மாணவர்களாக அரங்கத்திலிருந்து பட்டம் வாங்கும் மாணவர்கள் அணியும் அங்கிகளை அணிந்து கண்ணை பறிக்கும் வண்ணம் வந்து கொண்டிருந்தார்கள். அதுவும் மழலைச்செல்வங்கள் தாங்கள் சென்ன செய்கிறோம், என்ன நடக்கிறது என்றே தெரியாத அவர்களுக்கு இந்த அலங்காரம் புரிந்ததோ என்னவோ மகிழ்வளித்து குதூகளிக்கச்செய்தது.


மகன் நளீரை தேடி ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கடைசியில் அரங்கத்தினுள் சென்றோம். சரியாக மகன் நளீர் வகுப்புப் பிரிவுக்கு பட்டம் வழங்குதல் என்ற உற்சாக நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சென்ற தருணம் மகன் எங்களை கண்களாலும், மனதாலும் தேடிக்கொண்டிருந்தான். எங்களை பார்த்தவுடன் அளவில்லா மகிழ்ச்சி அவனுக்கு. மேடையில் அவனது சக தோழர்களுடன் நின்று கொண்டிருந்தான். நாங்கள் நுழைந்த சிறு மணித்துளிகளிலேயே அவனது கைகளில் சுருட்டப்பட்ட பட்டம் போன்ற சான்றிதழை அளித்தார்கள். வாழ்த்தினார்கள். பெற்றோர்களுக்கு பேரின்பமான அந்த தருணத்தை அளித்து சந்தோசப்படுத்தினார்கள்.


இது ஏதோ விளையாட்டு நிகழ்வாக தெரியலாம். ஆனால் இது  இந்த சிறு நிகழ்வின் ஊடாக அந்த சிறு பிள்ளைகளுக்கு மிகப்பெரிய மனதாக்கத்தை அளிக்கிறார்கள். வருங்காலத்தில் இது போன்று நிறைய பட்டங்கள் பெற்று உயர வேண்டும் என்ற மனரிதியான ஊக்கத்தை வளர்க்கிறார்கள். இது விதை அவர்களே அறியாமல் அத்தனை மாணவச்செல்வங்கள் மனதிலும் வீரியமாக தெளிக்கப்படுகிறது. சிறப்பான இது போன்ற நிகழ்வை பார்த்த எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி. அவனது மனதெல்லாம் ஆரவாரம், அளவில்லா கிளர்ச்சி. நாங்கள் அவனுக்கு அன்பு முத்தம் கொடுத்து அளித்து அள்ளி அணைத்துக்கொண்டோம்.


இது போன்ற சிறப்பான நிகழ்வுக்காக பள்ளி நிர்வாகத்திற்கு மனம் அதுமகிழ்ந்து நன்றி நவின்றது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா