13 டிசம்பர் 2012

வள்ளுவன் வல்லவன்

காமத்துப்பால் சமைத்த வள்ளுவன் - அவன்
சாமத்துகலைகளில் வல்லவன்

காமத்தை இவன் திங்க காமம் இவன் திங்க
காமக்கரை அளந்து கடந்தவன் இவன்!

அணுவணுவாய் பெண்மை பருகியவன் - பெண்
அணுவுக்குள்ளும் பன்மையிலாது உருகியவன்


இடையிலக்கணமும் தொடையிலக்கணமும்
இவன் பகுத்தவை எனலாம்!
நடையிலக்கணமும் நலிவிலக்கணமும்
நயம்படவே நவில்வான் இவன்!

ஊடுதல் கூடுதல் கணக்கெல்லாம்
கூடுதல் குறைவின்றி வகுத்தறிவித்த வித்தன்!
ஆடற்கலை உச்சத்தின் இவன் ஜித்தன்!

இவன் ஒரு முனி
முற்றும் துறந்தவன் அல்ல!
முற்றும் திறந்தவன்!

இவன் ஒரு பனி!
பெண்மையின் தேகத்தில்
மென்மையாய் படர
பாதை பகர்ந்த மேதையிவன்!

ஆசான் இவன், ஆசான் இல்லாக் கலைக்கு!
பிழையாய் பிழை செய்யும் கலையில்
பிழையை சரியாய் செய்ய
சரியாய் செய்யுள் செய்தவன்!

தான் அறிவான் அறமும் பொருளும்
காமத்தினால் அடையும் முழுமையென்று,
ஆதலினால் உலகுக்கு உரைத்தான் நன்று!

அறிவால் இவன் பால் பருகி
அறிவாய்! காமம் செய்தால், - இன்பம்
அரியும் அரிவாள் நம் வசமே!

விளக்கமுடியாதிதை இவன் விளக்கியபடி
விளக்கில்லா நேரமதில் ஏதும்
விலக்கில்லாமல் விளங்கினால்
நிறைவாய் நெஞ்சத்தில் இனித்திடும்!
துணையும் மஞ்சத்தில் மகிழ்ந்திடும்!

ஆதலினால் காதலர்களே அறிக!
வள்ளுவப்பால் ஓர் வயாக்ரா
வீடுபுகுமுன் இப்பால் அருந்தி
இன்பத்தின் எல்லைக்கு அப்பால் நீள்க!

முடிவு!
காமத்தில் ஜெயிக்க வள்ளுவம் வேண்டும்!
காமத்தில் லயிக்க வள்ளுவம் வேண்டும்!!.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

5 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

சொற்திறமும் பொருட் திறமும் கண்டு
அசந்து போனேன்
மனம் கவர்ந்த அருமையான கவிதை
படித்து முடித்ததும் இப்படி ஒரு படைப்பையாவது
தர வேண்டும் என்கிற எண்ணம் வந்தது நிஜம்
வாழ்த்துக்கள்

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி திரு ரமணி ஐயா!

கவியன்பன் கலாம் சொன்னது…

விடுமுறையில் துய்த்தக் கலவி இன்பம் இப்பொழுது கவி இன்பமாய்ப் பொங்கி வழிகின்றதோ?

LKS.Meeran Mohideen சொன்னது…

சமீப நாட்களாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறளோவியம் எழுதாத குறையை சகோதரர் தீர்த்து வைத்துள்ளார்.என்ன ஒரு சிந்தனை,.....கவிவளம்.
வள்ளுவனும்,குறளுக்கு உரை தந்த பரிமேலழகரும் டாக்டர் மு.வ.வும் சிந்திக்காமல் விட்டதை தேடிப்பிடித்து மெச்சும் அளவிற்கு தந்துவிட்டார் இவர், என்று எண்ணிப்பார்த்து வியக்கின்றேன். அருமை அருமை.வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஆசான் இவன், ஆசான் இல்லாக் கலைக்கு!
பிழையாய் பிழை செய்யும் கலையில்
பிழையை சரியாய் செய்ய
சரியாய் செய்யுள் செய்தவன்!

அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.