30 ஆகஸ்ட் 2014

“Dawn of the Planet of the Apes” ஆங்கிலப்படம்



ரொம்ப நாள் ஆச்சே ஒரு ஆங்கிலப்படம் அல்லது ஒரு ஹிந்திப்படம் பார்க்கலாம் என நேற்று துபை மாலில் Hercules, Gardian of the Galaxy அல்லது  Raja Natwarlal (Hindi) இதில் ஒன்று பார்ப்போம் என்று தான் முடிவெடுத்து கவுண்ட்டரை நெருங்கினேன்.. ஆனால் காட்சி நேரம் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவில்லை காத்திருக்க முடியாது மற்றொன்று 3D காட்சிக்கான கட்டணம் தேவையில்லாமல் 48 திர்ஹம் கொடுக்க மனம் வரவில்லை. 3D இல்லாமலே 35 திர்ஹம், கவுண்டரிலேயே கேட்டேன் நீங்கள் எது நல்ல படம் என நினைக்கிறீர்கள் எனறு.. அந்த பிலிப்பினோ சொன்னது “Dawn of the Planet of the Apes”  நன்றாக இருக்கிறது அதை நீங்கள் பார்க்கலாம். 

தியேட்டருக்குள் நுழைந்தேன்.. படத்தின் ஆரம்பமே காட்டில் மழை 7.1 dolby digital surround sound system அந்த மழைக்குள் என்னையும் சேர்த்து நனைத்தெடுத்தது அருமையான அனுபவமாக இருந்தது. படத்தின் ஆரம்பம்  மனிதக் குரங்கை வைத்து உலகில் பரவிவரும் நோய்க்கான வைரஸை செலுத்தி சோதனை செய்யும் போது அது தப்பி காட்டுக்குள் தன் இனக்குழுவோடு சேர்ந்து விடுகிறது அதை தேடி சிலர் வரும் போது காட்டில் சில குரங்குகள் திடீரென எதிர்பட அதற்கு பயந்து வந்தவர் துப்பாக்கியால் சுட சிறிய ஆண் குரங்கு இறந்து விடுகிறது.. தப்பி ஓடும்போடு இன்னொரு குட்டிக்கு சிராய்ப்புகள்.. குரங்குகள் கத்த காட்டில் எல்லா குரங்குகளும் கூடிவிட வந்த மனிதர்கள் மாட்டிக்கொள்கிறார்கள் அவர்களின் நிலை என்னவாகும் என இருக்கும் போது மனிதக்குரங்கின் இனக்குழு தலைவர் சீசர் என்ற குரங்கு இடைப்பட்டு நிலைமையை புரிந்து ஓடி விடுங்கள் என தப்பித்துப் போக வைக்கிறது. இறந்த ஆண் குரங்கின் தந்தை “கோபா” குரங்குக்கு மிக வேதனை.. சிராய்ப்புள்ள குரங்கின் தந்தை இனக்குழு தலைவர் “சீசர்”. 

தன் மகனை இழந்த கோபாவிற்கு மனிதர்கள் மீது வெறுப்பு வருகிறது, காட்டில் குரங்குகள் கூட்டம் கூடுகிறது, தலைவர் சீசரை மனிதர்களோடு போரிட அழைக்கிறது கோபா… நான் மகனை இழந்திருக்கிறேன், உன் மகனுக்கு காயங்கள் என சுட்டிக்காட்டுகிறது ஆனால் சீசரோ மிக ஆழமாக சிந்தித்து “நாம் போரிடப்போனால் பேரிழப்பு நமக்காகத்தான் இருக்கும் அத்தோடு நாம் நமது குடும்பங்களை இழக்க நேரும்.. பெரும் உயிர் சேதமாகும்.. இப்படி காட்டில் அமைதியாக வாழும் நிலை போய் வருத்தமான சூழல் வந்துவிடும்” என்று புத்திமதி சொல்லி அனுப்பிவிடுகிறது கூட்டம் கலைகிறது. ஆனாலும் கோபாவிற்கு போரிடவேண்டும் என்ற எண்ணம் தணியவில்லை.. அதற்காக சதிவேலையில் ஈடுபடுகிறது.. சீசரின் மகனை தன் சதிவலையில் சிக்க வைக்க தவறான பல செய்திகளை கூறி அதற்கு தன் தந்தை மீதே வெறுப்பை விதைத்து தன் வழிக்கு இழுக்கிறது. சீசரின் மகன் குரங்கிற்கு மெல்ல மெல்ல தந்தைமேல் வெறுப்பு வருகிறது.. தந்தையின் பாசம் பொய்யென நினைக்கிறது.. தன்னை காயப்படுத்தியவர்களுக்கு உதவி தன்னை கண்டுகொள்ளவில்லை என கோபப்படுகிறது.. கோபாவை நம்புகிறது. இந்நிலையில் கோபா ஒரு திட்டம் தீட்டி மனிதர்களின் ஆயுதக்கிடங்கு இருக்கும் இடத்தை அறிந்து அதிலிருந்து துப்பாக்கியை எடுத்து வந்து நேரம்பார்த்து சீசரை சுடுகிறது.. சுட்டுவிட்டு பார் இங்கே மனித துப்பாக்கி கிடக்கிறது.. மனிதர்கள் தான் சீசரை சுட்டுவிட்டனர் என நாடகமாடி இன்னும் மனிதர்கள் மீது குரங்குகளுக்கு வெறுப்பை வளர்க்கிறது..  இந்த நேரத்திற்காக காத்திருந்த கோபா அவசர கூட்டத்தை கூட்டி தன்னை குரங்குகளின் தலைவனாய் அறிவித்துக்கொள்ள்கிறது.  உடனே மனிதர்களை பலி தீர்த்தே ஆகவேண்டும் என கூறி தன் பழைய பகையை தீர்க்க சீசரின் மகன் மற்றும் மற்ற தலைவர்களையும் சேர்த்துக்கொண்டு மக்கள் வாழும் நகரை நோக்கி குரங்குகள் படை விரைகிறது.

இதற்கிடையே காட்டிற்கு மீண்டும் வந்து முகாமிட்டிருக்கும் அதே மனிதக்குழுக்களால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சீசர் கண்டெடுக்கப்பட சிகிச்சைக்காக மனிதர்கள் சீசரை தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று குண்டை எடுத்து சிகிச்சை கொடுக்கிறார்கள். இதற்கிடையில் மனிதர்களுக்கும்.. குரங்களுக்கும் அதிரடியான சண்டை குரங்குகள் ஆயுதக்கிடங்கை கைப்பற்றி மனிதர்களை கொடூரமாக கொன்று குவிக்கிறது.. மனிதர்களும் அதி நவீன கருவிகளால் சண்டையிட குரங்குகளுக்குள்ளும் உயிர்பலி மிக அதிகம். நகரமே போர்களமாக இருக்கும் கோலம், போருக்கு உடன்படாத குரங்குத் தலைவர்கள் மற்றும் மற்ற குரங்குகளை சிறை செய்து வைத்திருந்தது கோபா.. பற்றி எறியும் சண்டையில் சீசரின் மகன் அதிஷ்டவசமாக உயிர் தப்பி நிற்கும் வேளை குரங்கின் முதிய தலைவர் சீசரின் மகனுக்கு நிலைமையை எடுத்துச்சொல்லி நீ உன்னை தற்காத்துக்கொள்.. கோபாவோடு இன்னும் நீ இருந்தால் உனக்கு நல்லதல்ல என சீசரின் மகனுக்கு அது தப்பான தலைமையின் கீழ் இருப்பதை உணர்த்துகிறது.

இதற்கிடையே சீசர் பிழைத்துக்கொள்கிறது.. அந்த மனிதக்குழுவில் உள்ளவர் சீசரின் மகனை பார்த்துவிட சீசர் உயிரோடு இருக்கும் தகவலை கூறி சீசரின் மகனை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். தவறான தலைமையின் கீழ் போனதையும், போதிய சிந்தனை இல்லாது செய்த தவறையும் உணர்ந்து மன்னிப்பு கோரி அழுது தந்தையோடு சேர்கிறது மகன் குரங்கு. மகனிடம் தன் குடும்பத்து மற்ற குரங்குகள் மற்றும் தலைவர்கள் பற்றி கேட்க நிலைமையின் கொடுமையை சொல்கிறது மகன் குரங்கு. பிறகு களத்தில் இறங்கி கோபாவை வெல்கிறது சீசர்.
அற்புதமான படமாக்கம்.. விருவிருப்பான காட்சிகள்.. அசரவைக்கும் காடுகள்.. குரங்குகிற்கும் மனிதர்களுக்கும் இடையேயான பயம்.. போராட்டம்.. பாசம்.. அன்பு எல்லாம் தத்ரூபம்.குரங்குப்படம் பல வந்திருக்கிறது.. இது குரங்குப்படம் தானே என நீங்கள் நினைக்கலாம் ஆனால் அருமையான கருத்தை இப்போது உலக மக்களுக்கு தேவைப்படும் கருத்தை அழகாக குரங்கை வைத்து படம் பாடம் எடுத்திருக்கிறார்கள். மக்கள் எப்போதுமே மந்தை ஆட்டுக்கூட்டம் போலத்தான்.. தலைவர்கள் தப்பாய் அமைந்தால் என்ன விபரீதம் என்றும் தலைமை எப்படி இருக்க வேண்டும் நல்ல தலைமை ஏன் பின்பற்ற வேண்டும் அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்று சிறப்பாய் சொன்னவிதம் அருமை. படத்தில் ஒரு விரசம் இல்லை.. சிறுவர்களும் ரசிப்பார்கள். இதில் சிறுவன் ஒருவன் குரங்கு தலைவரோ ஒருகட்டத்தில் நெருக்கம் கொண்டு பழகி அன்போடு புத்தகப்பாடம் சொல்லித்தரும் காட்சியெல்லாம் உண்டு.





படம் முடிந்து வரும்போது எல்லோரும் நிறைவாக சென்றனர். அருமை.. அருமை என தியேட்டர் முழுவதும் கைதட்டி எழுந்ததை இப்படத்தில் தான் முதன்முறை கண்டேன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

24 ஆகஸ்ட் 2014

எதிர்ப்பார்க்கப்பட்ட மொட்டு!



அந்தப்பூச்செடியில்
எதிர்பார்க்கப்பட்ட மொட்டு பூக்காதது
நல்லதா.. கெட்டதா என
தெரியவில்லை!

பூக்காதது பற்றி கொஞ்சம்
நெஞ்சில் கவலை இல்லாமலில்லை!
மொட்டு அரும்பியும்..
பூக்காமல் போவதெல்லாம்
நாம் நினைத்து நடந்ததல்ல..!

மொட்டைக் கண்டச்சனமே
மெட்டுப்பாட நெஞ்சம் தவறுவதில்லை!
சனநேரத்து அக்கனவில்
அத்தனை அலங்காரமும்.. மகிழ்வும்..
நெஞ்சத்திரையில் வந்து போயிருக்கும்.

ஆனாலும் பூ பூக்கவில்லை,
தவறிப்போனப் பின்பு
ஏங்கவும்மனம் தவறுவதில்லை!

வளந்த அச்செடியில்
எத்தனையோ மொட்டுக்கள் பூவாகியிருக்கிறது,
எதிர்ப்பார்க்கப்பட்ட மொட்டு
மலராதது குறித்து மனதில் 
விவாதம் வேண்டாம் சமாதானங்கள்.

செடியில் இன்னும் பல
மொட்டுக்கள் அரும்பும்..
அப்போது மலரும்
பலப்பூக்களால் நெஞ்சத்து தோட்டம்
கனவுகளால் நிரம்பும்!

இனி மொட்டுக்களை எல்லாம் பார்த்து
மலருமென்ற கனவு வேண்டாம்
என நெஞ்சத்திடம் கூறி இருக்கிறேன்!

இனி என்றும் 
பூத்துச் சிரிக்கும் 
பூக்களோடு மட்டும்.
கனவுகள் அல்ல,
நிஜம்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

23 ஆகஸ்ட் 2014

அண்ணாலாரை உவந்த ஆன்மா அபூதாலிப் நாயகம்

சமீபத்தில் எதார்த்தமாக ஒரு மார்க்க கேள்வி பதில் நூலை பார்க்க நேர்ந்தது..
அதில் ஒரு கேள்வி, நரகத்தில் குறைவாக வேதனை செய்யப்படும் நபர் யார் என்று... பரபரப்புடன் என் கண்கள் பதிலை தேடியது.. பதில் பார்த்து அதிர்ந்தேன்!!!!!!
அதில் எழுதப்பட்டிருந்த பெயர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை மிக நேசம் கொண்டு போற்றி வளர்த்திர்ட்ட மேலானவரின் பெயர்.. அண்ணல் தன் அன்னை, தந்தை, பாட்டனார் போன்ற ஆதரவினை பிரிந்து அனாதையாய் நின்றபோது தன் பேரன்பின் சிறகால் ஆரவணைத்து காத்தவரின் பெயர்... இஸ்லாமிய பிரச்சாரம் துணிந்து செய்ய ஆரம்பித்த நாட்களில் எட்டுத்திசையிலும் அண்ணலுக்கு எதிராக கிளம்பிய புழுதிப்புயல்களை தன் அசாத்திய அரண்கள் கொண்டு அற்புதமாய் காத்திட்ட கருணையின் பெயர்...அந்தப்பெயரை எப்படித்தான் மனம் வந்து இப்படியெல்லாம் பிரசுரிக்க இவர்களின் கள் நெஞ்சத்திற்கு மனம்வந்ததோ தெரியவில்லை.. ஆம் அந்தப்பெயர் அண்ணலின் ஆருயிர் சிரிய தந்தையார் அபூதாலிப் அவர்களின் பெயராகும்.
அண்ணலின் நேசம் ஒன்றே போதும் ஒருவன் இறை திருப்தியை பெற.. இன்று இந்த இஸ்லாம் நிலத்தில் நிலைப் பெற அவர்களும் ஒரு ஆணி வேர். நபிகள் நாயகத்தினை நயவஞ்ச சூழ்ச்சிகள் எதுவும் தீண்டாமல் தனது என்பது வயதிற்கு மேலேயும் காத்து நின்ற காவலர் அவரது உங்களையும் என்னையும் இன்னும் எவரையும் விட நபிகள் நாயகத்தினை அறிந்தவர்.. அவர் கொள்கையை அறிந்தவர்... அதனை விரும்பியவர் அதனால் தான் இத்தனையையும் செய்ய முடிந்தது. அவர்கள் வாயால் மொழிந்தால் ஏற்கிறேன் என மொழிந்தால் என்ன மொழிந்தவர் செய்வதையெல்லாம் தன் செயலால் செய்தால் என்ன.. இப்படி இருக்கையில் அவர்களைப் பற்றி பேச.. அல்லது முடிவெடுக்க நீ யார்? அந்த பிரச்சனை உனக்கு ஏன்.. நபிகளை நேசித்தவரை.. காத்தவரை.. சிறுவயதிலிருந்து உணவும், உறைவிடமும் கொடுத்து அன்பும்.. ஆதரவும்.. பாதுகாப்பும் அளித்த அண்ணலின் பேரன்பருக்கு இந்த கதி ஏற்பட அண்ணல் சம்மதிப்பார்களா... என்ன ஒரு அபத்தம்..
வேண்டாம் உங்கள் ஈனக் கொள்கை! அண்ணலோடு சம்பந்தப்பட்ட எல்லாமும் உயர்ந்தவையே.. சிறந்தவையே.. அவை ஒரு போதும் மோசம் போகாது. மேலும் சொல்கிறேன் கேள் உனது பார்வையிலுள்ள சொர்க்கமும் நரகமும் அவர்கள் போன்ற மேலானவர்களுக்கெல்லாம் ஒரு பெருட்டே அல்ல...சொர்க்கத்தின் அதிபதியின் பொருத்தமும் அவனின் திருத்தூதரின் பொருத்தமுமே அவர்களது இலக்கு. அவ்விருவரின் தூய பேருண்மை இந்நிலத்திலும் எல்லார் உள்ளத்திலும் விருட்சமாய் வேரூண்ட வேண்டும் என்பதே அவர்களது இலக்கு. மேலோர்களை மேலாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சிற்றறிவால் பெரிய சங்கதிகளுக்குள் நுழையக்கூட முயற்சிக்க வேண்டாம். அவைகளெல்லாம் ஒத்துவராது உங்களுக்கு.
எண்ணத்தை தூய்மைய்யாக்கி கொள்ளுங்கள்.. உள்ளத்தில் நல்லதை விதைத்து பழகுங்கள். அண்ணல் அருள் புரிவார்களாக... அவனும் அருள் புரியாவானாக.

வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

22 ஆகஸ்ட் 2014

முகநூல் இடுகை ஆகஸ்ட் 2014 நடுவாரங்கள்

சமூகத்தின் பார்வையில் தப்பானவர்கள் எல்லாம் தப்பானவர்கள் அல்ல.. அவ்வாறு ஒதுக்கப்பட்டவர்களிடமிருந்து எத்தனையோ நல்ல விடயங்களும்.. கற்கவேண்டிய அறிவின் விழுமியங்களும் கிடைக்கத்தான் செய்கிறது. 

அது நமது சிந்தனையின் நீள அகலத்தையும் பொறுத்தது.. 
அது நமது பார்வையின் ஆழத்தைப் பொறுத்தது..
அது நமது அணுகுமுறையின் இயல்பினைப் பொறுத்தது
அது நமது தேடலின் வேட்கையைப் பொறுத்தது
******************************************

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் 
நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம் 
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் 
இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை".

மேற்கண்ட வாசகங்கள் திருநாவுக்கரசருடையது. ஆழ்ந்த ஆன்மீக பேரதிர்வு உள்ள அவ்வாசகங்கள்.. மனிதத்தின் அசாத்திய ஆற்றலை... அவனின் சூக்கும உலகின் வலிமையை.. வெளிப்படுத்தும் ஏகபோக வார்த்தைகள். இதை எத்தனையோ பேர் தனது மேடைப்பேச்சுக்களிலும்.. கட்டூரைகளிலும் மேற்கோள்களாக காட்டியிருக்கிறார்கள் ஆனால் முதன் முதலாக இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் இதை சாரு நிவேதிதா சொல்லக்கேட்டு அவ்வரிகளின் வீரியத்தில் பேரதிர்வில் ஆழ்ந்தேன்.

வாழ்வின் நிகழ்வுகளோ அல்லது பிற ஆதிக்கமோ மனச்சோர்வாய் நம்மை வீழ்த்த வரும் வேளை இவ்வரிகளை நினைத்தால் ஒரு தட்டு தட்டி விட்டு எழலாம்.

******************************************
பொறுமை மிகவும் தேவைப்படுகிறது...அதுவும் நம்மை பட்டென உசுப்பேற்றும் நமக்கு தொடர்பில்லாத துடுக்குச்சொற்கள் அல்லது வசைச்சொற்களுக்கு மத்தியில்..!

துடுக்குச்சொற்கள்.. ஆத்திரமூட்டும் சொற்கள் பூனையைக்கூட போர்க் கோலம் பூண வைக்கும் கோமாளியைக்கூட போற்களம் புகவைக்கும்..!

செவிடாய் இருப்பதற்கு பயிற்சி எடுத்தல் அவ்வளவு எளிதன்று..! மனதை சாந்தப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவம் இது போன்ற தருணங்களில் விளங்கும்.

குடும்பமோ... பொதுத்தளமோ.. எவ்வளவு பொறுமையாய் இருந்தாலும் எதிர்தரப்பு நம்மை எளிதில் ஆட்கொள்ள அனுமதி தந்தால் கதை கந்தல் தான். பொறுமை அவ்வளவு எளிதல்ல..
அதனால் தான் "பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான்" என்றது திருக்குர்ஆன். "பொறுத்தார் பூமி ஆள்வார்" என்றது முதுமொழி

தற்போது சுதந்திர தினம்.. சுதந்திர தினம்.. என்றே முகநூல் எங்கிலும் தென்படுகிறது.

ஒரு தகவலுக்காக..

சுதந்திரம், தினம் என்ற இரண்டும் சமஸ்கிருதம் தான், முந்தைய காலத்தில் செய்தித்தாள்.. செய்தி எல்லாவற்றிலும் மிக அதிகமாக சமஸ்கிருத எழுத்துக்கள் அதிக பயன்பாட்டில் இருந்தது, இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனாலும் நாம் தவிர்க்க முடியாமல் அது கலந்துவிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருத மொழிக்கு நாம் ஒரு போதும் எதிரிகள் அல்ல.. ஆனால் பிற மொழி நம் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அதுவும் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பெரும்பாலான சொற்றொடரில் அல்லது ஒரு சொல்லில் இடையிடையே வந்து அதற்குரிய தமிழ் பெயரையே மறைப்பதை அல்லது அது போன்ற தமிழ் பெயர் இருப்பதையே தமிழர்களிடமிருந்து மறக்கடித்து அழிப்பதை தான் வேண்டாமே என்கிறோம் ஆதலால் நாம் சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக விடுதலை நாள் என்று சொன்னால் ஒன்றும் குறைந்து போகாதே.

முன்பெல்லாம் கிரஹப்பிரவேசம் என்பார்கள் இப்போது புதுமனை புகுவிழா என்கிறோம். கல்யாணம் என்பார்கள் முற்றிலுமே இப்போது அது திருமணம் என்று பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கிறது, ஜனனம், மரணம், தோஸ்த்,புஸ்தகம், கருணை,நிதி,பந்தோபஸ்து, முஸ்தீபு, கர்மம், குரு, சிஷ்யன், போஜனம், சாலை, ராத்திரி, பத்திரிக்கை, சுவாசம், சமீபம், ஜாஸ்தி, கம்மி......................................................................... என சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இப்போது அந்நிலை சற்றே மாற்றம் கண்டுள்ளது. ஆயினும் சில நேரங்களில் நாம் தவிர்க முடியாததாகிறது. ஒரு சில சந்தர்பங்களில் (சந்தர்ப்பம் -சமஸ்கிருதம்) அதாவது சில வேளைகளில் ஒரு பொருளுக்கு எந்த வழக்கில் அது சொல்லப்படுகிறதோ அந்த சொல்லை சொன்னால் தான் அச்சொல்லுக்குரிய அச்சொல் சொல்லப்பட்ட விளைவை, நோக்கை, இலக்கை அது குறிக்கும் அப்படி உள்ள நிலைகளில் பல சொற்களின் வழக்குச்சொல்லாகவே இருக்கும் பிற மொழி சொற்களை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் (சமஸ்கிருதம்) உள்ளோம், ஆதாவது சூழலில் உந்தப்பட்டு உள்ளோம். ஆயினும் தம் தாய்மொழிப்பயன்பாட்டை அதிகரித்து நெஞ்சம் மகிழ முயல்வோம்.

நம் மொழியை நாம் நேசிக்காமல் யார் நேசிப்பது. (இது வெறியல்ல.. மொழியன்பு.

வாழ்க எம் மொழி.. வாழ்க தமிழ்..

(அறிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் மட்டும் தான் தனது பகிர்வில் எல்லாம் விடுதலை நாள் என குறிப்பிட்டுக்கொண்டே வருகிறார்கள். பார்க்கவே மிக மகிழ்ச்சியாக இருக்கும்.)



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

சென்னை மற்றும் நான்


சென்னை

உன்னை
என்னை
ஆளாக்கியிருக்கிறது.

எனது பொருள் தேடலுக்கும்
ஆரம்பப்புள்ளி அது தான்.

இணையுடன் முதன்முதலாய்
இன்ப உலா இனிதே சென்று
இதய விழா கண்டதும் அங்கு தான்.

அறியா சிறுவயதில்
பெரியப்பாவோடு பேருந்தில் வந்து
பேரின்பம் பெற்றதெல்லாம் பெரும் சென்னையில் தான்.

வாழ்க்கையில் உயர வாவென அழைத்து
வாஞ்சையோடு விமானத்தில்
உட்கார வைத்து உயர்த்தியதும் உயர்ச் சென்னை தான்.

நெஞ்செல்லாம்நெகிழ வைக்கும்
பெற்றோரின் ஹஜ்ஜுப்பயணம்
உற்றாருடன் இச்சென்னையில் தான்.

வாழ்வின் திருப்பங்கள் தந்த நகரங்களில்
முதல் நகரம் முக்கிய நகரம்
சென்னை.. சென்னை.. சென்னையே தான்.

நன்றியுடன் மீண்டும் சொல்வேன்...

சென்னை
உன்னை
என்னை
ஆளாக்கியிருக்கிறது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 ஆகஸ்ட் 2014

காலித் பிறந்த நாள் 16-08-2014

ஆகஸ்ட் 16

என் அன்புத் தம்பி தாவூத் காலித் பிறந்த நாள்
ஆர்ப்பாட்டமில்லாதவர்.. அமைதியானவர்.. எதார்த்தமானவர்.




தம்பி தாவூத் காலித்....

நிறைகள் எல்லாம் வாழ்வில் பெற்று
நிம்மதி வாழ்வில் நிதமும் உற்று
வளங்கள்..சுகங்கள் என்றும் சூழ
பெற்றோர்.. உற்றோர் யாவரும் மகிழ
காற்றோர் சபையில் கண்ணியம் மலர
கணங்கள் தோறும் ஏற்றம் கண்டு
கருணை இறைவனின் காரணத்தாலே
அருமை நபிகள் ஆசிகள் சூழ
நீடித்த ஆயுளுடன் நிறை நலம் கொண்டு
நிலங்குளிர எங்கள் மனங்குளிர வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
நித்தியமாய் புகழெய்தி வாழ்வில் மிளிர்க! மிளிர்க!!! மிளிர்க!!!

வாழ்த்துடன்
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

15 ஆகஸ்ட் 2014

நல்ல மனம் வாழ்க!

எம். ஜே.முஹம்மது இக்பால் அவர்களுடன் நான் (2006-ல் எடுத்த படம்) 

இன்று ஆகஸ்ட் 15, 
இந்திய விடுதலை நாள்..!

நாடெங்கும் சிறப்பான கொண்டாட்டம்… மகிழ்ச்சி.. குதூகலம்... இப்படியான ஒரு நாளில் தான் வாழும் போதே சூஃபியின் இலக்கணங்களுக்கு ஒப்ப ஒப்பற்ற வாழ்வை நடத்திவந்த மேன்மைக்குரிய எங்கள் அஜ்ஜி அத்தா.. ஜமால் முஹம்மது – தாவுத் பேகம் தம்பதியினருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்கிறது. குடும்பத்தில் மட்டட்ற்ற மகிழ்ச்சி. பிறந்த குழந்தைக்கு இஸ்லாமிய குடும்பங்களின் வழக்கப்படி பிறந்தவுடன் அழைக்க ஒரு பெயர் உடன் வைத்துவிடுவர். எல்லா குழந்தைகளும் முஹம்மதிய அம்சத்தில் (அதாவது இறைவனின் அருளாய் ) பிறப்பதினால் ஆண்குழந்தை என்றால் முஹம்மது என்றும், பெண்குழந்தைக்கு முஹம்மதா அல்லது மஹ்மூதா என்றும் வைத்து ஒரு பெயர் வைப்பது மரபு வழக்கம் அது போலவே இக்குழந்தைக்கும் ஆசையாசையாய் உடன் வைக்கப்பட்ட பெயர் புகழோங்கும் ராஜாதி ராஜா எனப்பொருள் படும் முஹம்மது ஷாஹின்ஷா என்பது தான்.

பின் எப்போதுமாக அழைக்க ஒரு அழகுப்பெயர் சூட்டவேண்டுமே.. அது என்ன பெயர்..? அன்புக்குழந்தை பிறந்தநாள் இந்தியாவின் விடுதலை நன்னாள் பெயரை ஆருயிர் தந்தை சூஃபி ஜமால் முஹம்மது அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள் அப்பெயரை அன்றைய காலத்தில் எங்கள் வழுத்தூரில் கண்ணியமான இமாம் பெருந்தகையாக இருந்த சின்னத்தெரு முஹம்மது லத்தீப் பாய் அவர்களிடம் சென்று சொல்லி வாழ்த்து பெற்றுக்கொண்டு வருகிறார்கள் பிறகு குடும்பத்தில் மூத்த உறுப்பினரும்… ஆழிய ஆன்மீக ஞானம் பெற்ற பெண்மணியும், எல்லோரும் மிக மதிக்கக்கூடியவருமான ஓசாடி புவ்வா என்று அழைக்கப்பட்ட அவரகளின் நண்ணியம்மா அவர்களிடமும் சிறுதாளில் எழுதிவந்த அப்பெயரை காட்டி ஆசியும், வாழ்த்தும் பெறுகிறார்கள். எல்லோருக்கும் மிகுந்த பூரிப்பு.. ஏனெனில் அந்த பெயருக்கு அத்தனைச் சிறப்பு. 


தந்தையார் சூஃபி ஜமால் முஹம்மது அவர்களுடன் மாண்பாளர் முஹம்மது இக்பால்


அப்பெயர் விடுதலை வேள்வியை வீறுகொண்டு வளர்த்த பெயர்.. தூங்கிக்கிடந்த இந்திய மக்களை தட்டி எழுப்பி சுய உணர்வூட்டிய பெயர்.. இஸ்லாமிய ஆன்மீகத்தில் இவரது கருத்துக்கள் எல்லார் உள்ளத்திலும் மிக தாக்கம் ஏற்படுத்தியது.. இவர் இனம், மதம் கடந்து பேசப்பட்டார்.. இவர் ஒரு மகாகவி.. இவரின் கவிதை இன்பத்தில் இளைஞர்களும், அறிவுஜீவிகளும் பேதங்கள் கடந்து இவரில் இலயித்து கிடந்தனர். 

இவர் இந்திய மண்ணை நேசித்து இயற்றிய தேசியகீதமே எல்லார் இதயத்திலும் உணர்வோடும் உயிரோடும் பதிந்த காலங்கள் அன்று.. அந்த “சாரே ஜஹான்ஸே அச்சா.. ஹிந்துஸ்தான் ஹமாரா” எழுதிய உலகப்புகழ் மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால் (ரஹ்..) அவர்களின் கவிமயக்கமும், கருத்து கிரக்கமும் எங்கள் ஆருயிர் அஜ்ஜி அத்தா சூஃபி ஜமால் முஹம்மது அவர்களுக்கும் இருந்தது. தான் மிகவும் விரும்பிய ஒரு மேதையின் பெயரை.. மார்க்க அறிஞரின் பெயரை.. தேசபக்தரின் பெயரை.. ஒப்பற்ற சூஃபியின் பெயரை.. ஆழ்ந்த சிந்தனையாளரின் பெயரை.. உலகப்புகழ் பெற்ற நல்லான்மாவின் பெயரை தன் பிரியப்பிள்ளைக்கு சூட்ட விரும்பினார். அதனால் பெற்ற தன் பிள்ளைக்கு “முஹம்மது இக்பால்” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

அந்த சிறப்பான குழந்தை இன்று தன் தாய் தந்தையின் ஆசிகள் போலவே பல சிறப்புக்களை அடைந்து மிளிர்கிறது. தனது வாழ்வியல் பயணத்தில் எண்ணற்ற குடும்பங்கள் சிறக்க உதவி இன்று அவர்கள் மனமாற வாழ்த்துகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இன்று பிறந்தநாள் காணும் அச்சிறப்பான மனிதர், எங்கள் அன்பிற்குரிய அறிஞர் ஜனாப். முஹம்மது இக்பால் (MD @ TOSHIBA Elevator Middle East (L.L.C.) ) அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரியப்படுத்திக்கொள்கிறேன். 

எல்லா நலவளங்களும், குறைவிலாது பெற்று குடும்பம்.. குழந்தைகள் சிறந்து மனமகிழ்ச்சியுடன் நீண்ட சிறப்பான வாழ்வை வாழ எல்லாம் வல்ல பேரிறையை.. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் வாழ்த்துக்களோடு வேண்டுகிறேன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

12 ஆகஸ்ட் 2014

ஈராக்கில் அட்டூழிய அரங்கேற்றம்

ஈராக்கில் மனிதாபிமானமே இல்லாமல் சிறுபான்மை மக்களான எஜீதிகள், கிருத்துவர்கள்,குர்துக்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் போன்ற இனத்தவர்களை ஈவிரக்கமே இல்லாமல் கொன்றும், புதைத்தும், விற்றும் இன்னபிற அநீதங்களையும் செய்யும் கொடிய குழுவினரை எனதளவில் வன்மையாக கண்டிக்கிறேன். 

இச்செயல் இஸ்லாத்திற்கும், நபிகள் நாயகத்தின் இனிய செயல் பாட்டிற்கும் முற்றும் எதிரானது மக்காவை வெற்றி பெற்று தாங்கள் ஆற்றிய இறுதி உரையிலும், பலமுறை தனது தோழர்கள் மத்தியிலும் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் போது சிறுபான்மையினர் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களது உரிமை, உடமை, உயிர் போன்றவற்றிற்கு முழுமுதலாக பொறுப்பேற்று பேணி நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் எண்ணத்தில் கூட தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று எண்ணிவிடக்கூடது என்று பல முறை அறிவுருத்திச் சென்றிருக்கிறார்கள். இது தான் இஸ்லாம். நபிகள் நாயகம் ஸல்லல்லஹு அலைஹிவசல்லம் அவரக்ள் கூறிய இதன் சாரத்தை அவர்களின் இறுதி உரை என்று பதியப்பெற்றிருக்கும் எந்த மொழி அல்லது எந்த வருட, எந்த நாட்டு நபிமொழிப் பதிப்பிலும் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய பெயரில்.. இஸ்லாத்திற்கு சேவை செய்வதாக கூறி இஸ்லாத்திற்கு எதிராக.. மனிதாபிமானமே இல்லாமல் மனித உயிர்களை கொன்று குவிக்கு யாராக இருந்தாலும், எந்த குழுவாக இருந்தாலும் அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவரக்ள். அவர்களுக்கும் நபிகளாரின் வழிகாட்டலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களை இஸ்லாத்தின் பிரதிநிதிகளாக யாரும் தொடர்பு படுத்த வேண்டாம். சில இந்து நண்பர்கள் அவர்களையும் இஸ்த்தினையும் தொடர்பு படுத்தி குழப்பிக்கொள்கின்றனர், இஸ்லாமிய பெயரில்.. இஸ்லாத்திற்காக என்று அவர்கள் செய்வது ஆண்டவனுக்கே அடுக்காது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

ஈராக் கொடுஞ்செயல்கள் - கார்டூனிஸ்ட் பாலாவின் பதிவு - பின்னூட்ட புரிதல்

முகநூல் நண்பர் Bala Cartoonist Bala அவர்கள் நேற்றுமுன் தினம் ஈராக்கில் பாதிக்கப்பட்ட ஒரு யஜீதி இனப்பெண் அங்குள்ள பாராளுமன்றத்தில் அவ்வினத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி அழுது முறையிடும் கொடுமையான ஒரு யூடியூப் லின்க் கொடுத்திருந்தார். (மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் அக்குழுவின் மிக மோசமான கொடுஞ்செயல்கள் கண்டனத்திற்கு உரியது) இது போன்ற சென்சிடிவான வியங்களை அவர் எப்போதெல்லாம் பகிர்கிறாரோ அப்போதெல்லாம் பாசிச சிந்தனையாளர்களும், விசமிகள்லும், விளங்காதவர்களும் இது தான் தங்களுக்குள்ள மேடையெனக் கருதி.. ஒரு குஜராத் கலவரத்தை.. ஒரு முசாபர்பூர் கலவரத்தை நடத்தி..ப்போயிருப்பார்கள் அதாவது அந்த அளவிற்கு ஒரு புரியாமல் ரண கலமாக போயிருக்கும். அதில் பரிவாரங்களின் பிரதிநிதிகள் வேறு வந்து இஸ்லாத்தினை அவர்கள் எப்படி காண்பிக்க வேண்டுமோ அப்படி மிக மோசமாக காண்பித்து போயிருப்பார்கள். இது போன்ற பதிவுகளின் பின்னூட்டங்களை நான் பார்பது இல்லை, பார்த்தால் மனம் நோகும்.. தேவையில்லாத சிந்தனைகள் வரும்..என போய்விடுவேன்.. ஏனோ நான் பார்த்து அதில் இரண்டு மூன்று கருத்துகள் பதித்தேன் அது உங்கள் பார்வைக்கு....

*************

உலகத்தில் எத்தனையோ ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.. எத்தனையோ போராளி குழுக்கள் இருக்கிறது அதுவெல்லாம் அவர்கள் சார்ந்திருக்கிற மதம் சொல்கிற வகையில் தான் இருக்கிறார்கள் என்று நாம் எண்ண முடியுமா.. யாரோ ஒரு குழு செய்கிறது என்பதனால் அதை இஸ்லாம் அப்படித்தான் கூறியுள்ளது என்பதாக சொல்வதெல்லாம் அபத்தமும், அறிவீனமும். அப்படியானால் இந்தியாவில் பரிவாரங்கள் நடத்திய கலவரஙக்ளை இந்து சமயம் இப்படித்தான் செய்யச்சொன்னது என்றும், இலங்கையில் நடந்ததை பவுத்தம் சொன்னபிரகாரம் தான் செய்தார்கள் என்றும் சொல்லல் தகுமா.. சிந்திப்பீர்.

விரிவாக சிந்தித்து மனிதம் வளர்ப்போம்.

****************

திருக்குரானின் வசனத்தை போட்டு இதை தான் இஸ்லாம் சொல்கிறது என்று காட்டுவதில் எத்தனை மகிழ்ச்சி உங்களுக்கு, திருக்குர் ஆனின் வசனங்களை அதன் முன்.. பின்.. ஏதும் தெரியாமல் ஒரு பகுதியை போட்டு நீங்கள் போட பலரும் அதை பார்த்து பாருங்கள் எப்படி எல்லாம் இருக்கிறது என சொல்லிவிட்டு வெறுப்பை உமிழலாம் ஆனால் திருக்குர் ஆன் என்பது 23 வருடங்கள் நபிகள் நாயகத்தின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து அது சார்ந்து வெளியானது.. விமர்சிக்கும் உங்களில் யாரேனும் நல்ல சரித்திர ஆசிரியர்கள் எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாற்றை படித்தவர்கள் உண்டா.. இல்லை அறிஞர்கள் சொல்ல அதை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரிந்தவர்கள் உண்டா..பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், அண்ணா போன்றவர்கள் எல்லாம் இவற்றை கற்காமல் ஆராயாமல் தான் இஸ்லாத்தை ஏற்றி போற்றீனார்களா.. சிந்தியுங்கள்.. மக்களை ஒருங்கிணைப்பதில்.. எல்லா சமூகத்தையும் அரவணைப்பதில்.. ஒரு மனிதன் நெறி தவறி இருக்கிறான் என்றால் அவனை நெறிபடுத்துவதில் முனைப்பு காட்டுங்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் பெரும்பாலான இஸ்லாமியர்களே திருக்குர் ஆனை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரியாமல் பலரும் பலபிரிவாக இருந்து பேதங்கள் கொண்டலைகிறார்கள்.. (ஏனெனில் அவர்கள் தற்போது உருவாகி இருக்கும் நவீன இயக்கங்கள்.. குறுகிய சிந்தனையாளர்களீன் சிந்தனைக்கு தங்களை சிறைபடுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதால்) அப்படி இருக்க நீங்கள் எப்படி புரிகிறீர்கள். திருக்குர் ஆனை புரிவதற்கு அதன் பின்புலம் தெரிய வேண்டும், எந்த சம்பவத்திற்காக இது வெளியானது என்ற விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.. இதெற்கெல்லாம் உலகம் முழுவதும் உள்ள நிறைய அறிஞர்கள் தப்ஸீர் என்ற விளக்க உரைகளை எழுதி இருக்கிறார்கள் இத்தனையும் இருக்கிறது.

நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள் அன்பால் இணைந்து உல்கம் ஆள்வோம். வாழ்வது கொஞ்சநாள் அன்பை விதைத்து செல்வோம்.

எப்போதும் Bala Cartoonist Bala இது போன்ற பதிவு போடும் போது இப்படியே வன்மம் கக்குவது வாடிக்கையாகிவிட்டது. நாம் மனிதர்கள்..

தீயவர்கள் தீயவர்களின் செயலை உதாரணமாக ஏற்கவேண்டாம்.. அதை அவர்களை அம்மதத்தின் பிரதிநிதிகளாக்க வேண்டாம். அவர்கள் கழிசடைகள்.

****************

மனித இனத்திற்கு எதிரான செயல்களை எந்த மதத்தவன் செய்தாலும் எதன் பெயரில் செய்தாலும் தவறு தவறு தான்.. அவர்களை மனிதத் தன்மை கொண்ட எவரும் ஆதரிக்க மாட்டார்கள். அந்த இதயமில்லாதவர்களை எந்த மதத்தின் பிரதிநிதிகள் என்றும் சொல்லாதீர்கள். அவர்கள் வேண்டுமானால் அவ்வாறு தம்பட்டம் அடிக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல. நல்ல இதயம் உள்ளோர் சிந்திப்பீர்.

*********************


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

10 ஆகஸ்ட் 2014

“அப்பாபாய்” குழந்தை மாதிரி..!



அப்பாபாய் (அல்ஹாஜ்.பதுவுத்தீன் ஸாஹிப், வழுத்தூர் முஸ்லிம் லீக் கிளையின் மூத்த தலைவர்) மறைந்த செய்தி இன்று நண்பகல் இரண்டு மணிவாகில் தான் தெரிய நேர்ந்தது, அவரின் தூயஆன்மா எல்லாவகையிலும் சிறப்படைவதாக..! நிறை சாந்தியில் ஆழ்வதாக..! நித்தியமெய்துமாக! இறைவனும்.. இறைத்தூதர் மிக்க மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் மேன்மக்களும் சோபனம் செய்வார்களாக. ஆமீன். வருத்தம் மேலிட எண்ணங்கள் அவ்வினியவரின் நினைவுகளோடு நனைந்தது. அவரோடு பழகிய கணங்கள் எனக்கு பனிச்சுனை நீர் போன்ற சுகம் தோய்ந்த நாட்களாய் இருந்திருக்கிறது. இப்போதும் கூட அவரது சிரித்த முகம் தான் என் நினைவினில்.

அப்பாபாய் நட்பிற்கு ஓர் இலக்கணம், அவரது சகத்தோழர்கள் மர்ஹூம் நெருப்பு சாஹிப் அப்துல் வஹாப் பாப்பும், மர்ஹூம் சேக்பரீத் அப்துல் ஹமீது அத்தா அவர்களும் இன்னும் பலரும் இவர்களின் நெருக்கங்கள் வார்த்தைகளினால் வடிக்க முடியாது..அவைகளெல்லாம் உண்மையான நட்பு. மற்றவார்த்தைகள் இல்லை.எங்கே முஸ்லிம் லீக்கின் விழாக்கள் நடந்தாலும் வஹாப் பாப்பை பின்னால் வைத்துக்கொண்டு அப்பாபாயின் டி.வி.எஸ் பரக்கும், பின்னால் சிறுபிள்ளையை போல் வஹாபாப் ஒருபக்கமாக அமர்ந்து கையை கேரியரில் மிக கவனமாக பிடித்துக்கொண்டு பயணிப்பார், இதை அடிக்கடி சாலைகளிலும், தெருக்களிலும் பார்க்கலாம். இருவரும் இணைபிரியா நண்பர்கள், முஸ்லிம் லீக்கின் மதிப்பு மிகுந்த அன்பர்கள். வழுத்தூரின் முஸ்லிம் லீக்கின் பிரைமரியில் இவர்களின் பங்கு மகத்தானது.

வழுத்தூரில் அந்நாட்களில் அப்பாபாயின் நட்பு வட்டாரங்கள் எல்லாம் முஸ்லிம் லீக்கர்களாகவே இருந்து அலங்கரித்தனர். இச்சினேகிதர்கள் எல்லாம் அன்றைய காலங்களில் அதிகாலை நேரஙகளிலேயே அப்பாஸ்பாய் சைக்கிள் கடையருகில் ஒன்று கூடி முகமன் கூறி மகிழ்வார்கள், மணிச்சுடர் படித்து சமூக விடயங்கள் குறித்து பகிர்ந்து கொள்வாரக்ள். அவர்களெல்லாம் பச்சை ரத்தம் ஓடும் லீகர்கள். உண்மையான தேசபக்தர்கள், எல்லா சமூகத்தையும் அரவணைத்து போகும் பாங்கு உள்ளவர்கள். அன்பின் உருவங்களாக உலா வந்தவர்கள். அவர்களால் முஸ்லீம் லீக் நிறைவடைந்தது, முஸ்லிம் லீக்கில் இருந்ததனால் இவர்கள் வாழ்வின் பயனை அடைந்ததாக மனதில் பூரணம் எய்தினர். ஏனெனில் முஸ்லிம் லீக்கின் அங்கமாக தங்களை ஆக்கிக்கொள்வதில் இவர்கள் தங்களையே அற்பணம் செய்திருந்தனர் அது காலத்தின் கட்டாயம் என்றும் அது நாட்டின் நலனுக்கும், சமூகத்தின் நலனுக்கும் அடிகோலும் என்றும் வலுவாக நம்பி இருந்தனர். அதனால் வழுத்தூரை சிராஜுல் மில்லத்க்கும், சம்ஸீரே மில்லத்திற்கும் சொந்த வீடுபோல ஆக்கிவைத்திருந்தனர். (அப்பாபாயை இராண்டுக்கு முன் நமது முனீருல் மில்லத் அவர்கள் வீடு வந்து பார்த்து நலம் விசாரித்தார்கள் என்பதும் குறிப்பிட தக்கது)

ஊரில் நடக்கும் மீலாது விழாக்கள், மேலத்தெரு பயான் நிகழ்வு என பலவற்றில் அப்பாபாய் தலைமை ஏற்றிருக்கிறார், சொற்பொழிவாற்றி-யிருக்கிறார். இவர் தெள்ளிய ஞானம் மிக்கவர் ஆன்மிக சிந்தனையில் தான் விரும்பி தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தெளிந்த சிந்தனை மிக்கவராக இருந்தவர், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை, சஹாபாபெருமக்களை, வலிமார்கலெனப்படும் மேன்மக்களை நேசிப்பதில் சிறப்பானவராக திகழ்ந்தார். எளியவருக்கு மிக இரங்கும் சுபாவம் கொண்டவர்.

உழைப்பிற்கு அவர் என்றுமே அஞ்சாதவர், வயதில் பெரியவராக இருந்தாலும் ஒரு சிறு பிள்ளை போல களத்தில் இறங்கி செயலாற்றுவார், அவர் இடைபட்ட் காலத்தில் தர்காவின் பின்புரம் பள்ளிக்கூட எதிரில் அவர் வைத்திருந்த மிட்டாய் கடையில் அவரோடு பீராளம் கமால் அண்ணனை உதவிக்கு வைத்துக்கொண்டு இரண்டு பேருமாய் காலை, மாலை என மாணவர்கள் கூடும் கூட்டமான வேளைகளில் வியாபரம் செய்வதே அழகு. அப்பாபாய் ஒரு இளைஞனின் சுறுசுறுப்பை ஒத்து பம்பரமாய் சுழன்று அவர் வியாபரம் செய்தது எல்லாம் மனத்திரயில்.

அவரைப்போல மனநிலை கொள்வது என்பதெல்லாம் எளிதல்ல.. எப்போதும் சிரித்தமுகத்தோடு இருப்பார், முகத்தில் வன்மமே இருக்காது, எத்தனை.. எத்தனையோ சோகங்கள்.. இடர்பாடுகள் என அவர் எதிர்நோக்காதவைகள் இல்லை, அத்தனையையும் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு வெள்ளந்தியான சிரிப்போடு தான் மக்கள் முன்னே நிதம் நடமாடுவார். அப்பாபாய்க்கு, எனக்கு தெரிந்து பொறியாளர் வெள்ளம்ஜி.முஹம்மது இக்பால் அவர்களின் சமூகப்பணி மிகப்பிடிக்கும், எஃப்.கரீமின் அரட்டை பிடிக்கும், நாட்டகார சாப்ஜியின் மார்க்க உணர்வு பிடிக்கும். அப்பாபாய் நகைச்சுவை உணர்வு மிக்கவர், குழந்தைமனதுக்காரர் ஆதலால் எனக்கு மட்டுமல்ல.. என் போன்ற இளையவர்கள் பலருக்கும் பேதமில்லாமல் அப்பாபாயை மிகப்பிடிக்கும் ஏனெனில் அவர் அத்தனை பேருக்கும் அரும் நண்பர்.

என்னோடு அப்பாபாய் மிகப்பாசம் கொண்டிருந்தார் என்றால் மிகையில்லை, அதை நானும் அவரும் அளவலாவிக்கொள்ளும் போது மட்டுமே நான் பலமுறை கண்டு நெகிழ்ந்திருக்கிறேன், என்னை பார்த்தாலே அணையை விட்டு தாவும் நீர்போல் ஆரத்தழுவி என்னை அணைத்து பூரிப்பார். எனக்கும் அப்பாபாய்க்கும் இப்படி ஒரு அன்பு ஏற்பட ஆன்மீக சம்பந்தங்கள் உண்டு, என்னிடம் அவர் இளம்பிராயத்தில் பினாங்கில் வேலை பார்த்த தருணங்களை நினைவு கூர்ந்திருக்கிறார். அன்றைய நாட்களில் நமது வழுத்தூரைச் சார்ந்த ஆன்மீக செம்மல் குலாம் ரசூல் பாவா அவரக்ள் விஜயம் செய்ததை சொல்லி இருக்கிறார். இளம்பிராயத்திலிருந்து மானசீகமாக தான் நேசிக்கும் குலாம் ரசூல் பாவா-வின் புகைப்படத்தை தனது சட்டைப்பைக்குள் என்றும் வைத்திருப்பார். அதை என்னிடம் காட்டி புலங்காகிதம் அடைவார்.

ஆன்மீகத் தேடல் கொண்டு அலைந்திருந்த அன்றைய காலங்களில் எங்களோடு அப்பாபாய் மிக நட்போடு கலந்திருக்கிறார். எங்களோடு ஆன்மீக அமைப்பில் மிக்க ஆவல் பூண்டு திக்ரு மஜ்லிஸை பத்திற்கும் குறையாத ஆண்டுகள் கண்ணியப்படுத்தி இருக்கிறார், மிக முடியாமல் போனால் கூட எப்படியும் கலந்துகொள்ள எத்தனிப்புடன் வந்துவிடுவார். தரிக்காவின் விர்துகள், பிரார்த்தனைகள் அடங்கிய கிதாபை தன் ஹஜ்ஜுடைய காலத்தில் தன்னுடனே வைத்து ஓதிவந்ததை என்னிடம் சொல்லி இருக்கிறார்.

என் கவிதைகளை ரசிப்பார் நான் எழுதிய சில ஆன்மீகப் பாடல்களில் ஏன் இந்த சொல்லை இப்படி போட்டால் என்ன? என்றெல்லாம் பறிமாறிக்கொள்வார். இரண்டு வருடங்களுக்கு முன் அப்பாபாய் அவர்கள் ஆற்றஙகரை செல்லும் வழியில் உள்ள வீட்டில் இருக்கையில் தான் சற்று நேரம் நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்க நேர்ந்தது, கடைசியாக ஒராண்டுக்கு முன் என் மகனை செள.இ. பள்ளியிலிருந்து அழைத்து செல்ல நேர்கையில் சற்றும் எதிர்பாராத வண்ணமாய் மக்கிபாய் வீட்டிலிருந்து கதவை திறந்து வர எதிரெதிரே சந்தித்துக் கொண்டோம். இரண்டு பேரும் ஆவல் மேலிட சந்தித்துக்கொண்டோம். உண்மையில் சில நாட்களாகவே அப்பாபாயை என் நெஞ்சம் தேடியது. என் ஆன்மாவின் சினேகிதரை அது தேடித்தான் என் அலைபாய்ந்திருக்கிறது.. அது எனக்குள் ஒரு மறைவான தாகமாய் இருந்தது.. ஆனால் ஸ்தூலத்துடனான இனியொரு சந்திப்பிற்கு இடங்கொடாமல் அவ்வான்மா உடற்தடைகளை தாண்டி தன் மூலத்தோடு ஐக்கியமாகிவிட்டது. இனி பிரியமுள்ள அப்பாபாய் தூரம்.. காலம்..இன்னபிற தடையின்றி என்னோடு சூக்குமமாக ஆன்மளவில் உறவாடுவார்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

09 ஆகஸ்ட் 2014

குழந்தைகள் மீது அன்பு காட்டுங்கள்

காஸா-வின் சிறுவர்கள்


குழந்தைகள் அழகு ஒப்பில்லாதவை
குழந்தைகள் உலகம் தப்பில்லாதவை

குழந்தைகள் சிரித்தாலும் அழகு
குழந்தைகள் அழுகையிலும் அழகு

குழந்தைகள்
கவலைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் – தூய்மையில்
அவ்விளந்தைகள்
பனித்திவளைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள்

குழந்தைகளுக்கு…

வன்மம் வெறி பழிவாங்கள்
என்பவையெல்லம் தெரியாது
துன்பம் நேர்ந்தால் கூட துளியளவும்
பகைசெய்யும் வகை அறியாது

சூது வாது காமம் குரோதம்
இவைகளுக்கெல்லாம் இவர்கள் விரோதம்
தீது செய்யும் என்று தெரியாமலே
தீயைக்கூட தொடும் இவர்கள் வினோதம்

தனக்கு சந்தோசமேற்பட்டால்
சங்கீதம் தோற்கச் சிரிக்கும்
தனக்கு துக்கமென்றால்
பரிவு வேண்டி அழுகையில் தரிக்கும்

மாறாத அன்போடு பேசும்
மறைவில்லாத நேசம் வீசும்
காசான உலகம் பற்றி கடுகளவும் அறியாது
தூசான குணங்களேதும் துளிகூட இராது

நம்முகம் கண்டாலே மலர்ந்து முகப்பூ விரிக்கும்
அம்மழலை முகம் நாம்காண
மனதில் இருக்கும் இறுக்கம் உடைந்து தெரிக்கும்..
மனசிலெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி ஒளி நிறைக்கும்.

அவர்கள் மென்மையானவர்கள்…
உடலில் மட்டுமல்ல உள்ளத்தாலும் தான்,
உள்ளொன்று வைத்தெல்லாம்
புறமொன்று பேசாத பதுமைகள் குழந்தைகள் தான்.

நம்மின் முரட்டுத்தனங்களை அவர்கள் தாங்கமாட்டார்கள்
நமது வன்மங்களை அவர்களால் ஏற்க முடியாது
நமது அவசரங்களை அவர்களால் சகிக்க முடியாது

அவர்கள் அன்பிற்கு மட்டும் சொந்தம் பாராட்டவந்தவர்கள்
அடிதடி கொண்டு யாரும் வதைத்திட வேண்டாம்!

நம்மை முழுமையாக நம்பும் - இவர்கள் தான்
நமது காப்பாளர்கள் என்று!
யாரேனும் அச்சம் ஏற்பட செய்தால் கூட
தப்பித்து நம்மிடம் அபயம்புகும் காப்பார்கள் என்று!

பிஞ்சுக்கால்களில் முள் குத்தினாலும்
பீறிட்டு அழுது நம்மிடம் வரும்
பஞ்சு போன்ற படைப்பினத்தை
பிஞ்சிச் சிதற அழித்திட வேண்டாம்!

குஞ்சுகள் உலகம் உங்கள் சூதறியாது
குண்டுகளால் அவைகளை ஏன் சிதைக்கிறீர்
மனிதப்பிறவிகளின் கொடூரங்கள் அறியா
மாகத்தான பிறப்புக்கள் குழந்தைகள்
அவைகளை மண்ணில் புதைத்து
உங்கள் கொடுமைகளுக்கு உரமாக்காதீர்!

நீவீர் மிகபாதகமாக தாக்கினாலும்
உங்களின் கோரத்தையெல்லாம்
குழந்தைகளின் அன்பு உள்ளத்தால் சிந்திக்ககூட தெரியாது!

குழந்தைகள் இயற்கையை
இயற்கையாய் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்
உங்களின் செயற்கை கோள்களால்
குறிவைத்து நொறுக்காதீர்கள்!

குழந்தைகள் சாகும்போது…..
குழந்தைகளோடு சாவது
உங்களின் அன்பு.. பரிவு..இரக்கம்
இவைகளெல்லாம் தான்!

மற்றொரு குழந்தையை கொன்றுவிட்டு
உன் குழந்தையை மட்டும் நீ
குற்ற உண்ர்ச்சியே இல்லாமல்
கொஞ்சவா முடியும் ????

குழந்தைத் தனங்களை
கொண்டாடக் கூடவேண்டாம்
குறைந்த பட்சம்
கொன்று ரசிக்காதீர்கள்.
ஆயுதம் ஏந்தி நிற்கும்
மனிதர்களெனப்படும்
மதவாதிகளே.. அதிகார வெறியர்களே..
ஆயுத வியாபாரிகளே..

குழந்தைகளின் மீது
குறைந்த பட்ச அன்பையாவது காட்டுங்கள்!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



(காஸாவில் கொத்துக்கொத்தாக குழந்தைகளை கொன்று குவித்த போது எனது மனம் இப்படி அழுதது)

08 ஆகஸ்ட் 2014

நபிநேசமும் நற்குணமும்




நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் நேசமும்.. மனிதர்களின் குணங்களும்...


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நேசிப்பது தான் எல்லாவற்றின் மூலம்.. அந்த நேசம் இருந்தால் ஒரு இஸ்லாமியன் மனித தன்மை உள்ளவனாக, ஒழுக்கம் நிறைந்தவனாக, உயர்வான அம்சங்கள் அடங்கியவனாக, மகத்துவமுள்ள மனிதாபிமானியாக, எல்லோருக்கும் பரோபகாரியாக, இரக்கமுள்ளவனாக, நல்ல சிந்தனை தெளிவுள்ளவனாக, நல்லது தீயதை பிரித்தறியக்கூடியவனாக, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவனாக, எல்லோரையும் அரவணைத்து போகக்கூடியவனாக, மன அமைதி பெற்றவனாக, வாழ்வில் நிம்மதி அடைந்தவனாக, வருங்கால சந்ததிகள் பின்பற்றும் நற்குணங்கள் ஒருங்கே உடையவனாக, மற்ற சமூகத்துடன் மதத்தவருடன் இணக்கம் காப்பவனாக, இப்பேற்பற்ற ஒப்பற்ற வாழ்வியலை தந்தீர்களே எங்கள் நாயகமே... என உருகி நன்றி உணர்வுவை பறைசாற்றக்கூடியவனாக எல்லா அருங்குணங்களும் அமையப்பெற்றவனாக ஆவான் என்பது திண்ணம். நபிகளை நேசிக்காமல் ஒரு இஸ்லாமியன் இருப்பானானால்மேற்கண்ட நல்லகுணங்கள் ஒருக்காலும் அவனிடம் இருத்தல் முடியாது... அப்படியே ஒருசில பண்புகள் ஒட்டிக்கொண்டு இருந்தாலும் அவனை நல்லவன் என்றோ அல்லது நற்குணசீலன் என்றோ சொல்லல் தகாது ஏனெனில் அவனது மூலகுணம் அல்லது மூலசிந்தனை அவனிடம் இருக்கும் ஒரு சில நல்ல குணங்களின் பலாபலன்களை, சிறப்புக்களை மிகைத்து சிதையில் தான் தள்ளிவிடும்.
********
ஏனெனில் நற்குணங்களின் தாயகமே நபிகள் நாயகம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தான் அவ்வாறான நற்குணங்களின் தாயகப் பெருந்தகையை ஒருவன் உதாசினப்படுத்துகிறான் என்றால் அந்த குணம் என்பது நல்லவற்றை ஏற்றுக்கொள்ளாத குணம், பெருந்தகையை புறந்தள்ளும் குணம், புகழ் மேகம் சூழ்ந்துள்ள பேரருளின் மீது பொறாமை கொண்டுள்ள குணம், மேன்மையாளர்களை மரியாதை செய்யத்தெரியாத குணம், இளகிய இதயமில்லாத குணம், இறுகிய இதயமுள்ள குணம், மற்றவர்களோடு இணக்கம் பாராட்டாத குணம், இத்தனை தியாகங்கள் செய்து, இவ்வளவு உயர்வான வாழ்க்கை தரத்தை அமைத்துக்கொடுத்து இவ்வழியில் நீ நடந்தால் சிறப்பாவாய் என்று இஸ்லாத்தையே தந்தார்களே அதை ஒரு ஒரு கணம் சிந்தித்து நன்றி உணர்வு கூடகொள்ளாதவனாய் இருக்கும் நன்றி கொட்ட வஞ்சக குணம். ஆக நபிநேசம் இல்லாதவன் எத்தனை எத்தனை கீழான குணங்கள் இருக்கின்றனவோ அத்தனை கீழான குணங்களுக்கு உரியவனாகிறான்.
************
ஆக ஒருவன் நல்லுள்ளம் கொண்டவனாக நற்பண்புகள் நிறைந்தவனாக இருப்பானேயானால் அவன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை மதித்தல்.. போற்றுதல்.. ஏற்றுதல் எல்லாம் அவசியம், மேலோர்களை சார்ந்திருப்பது என்பதும், அவர்களின் மேன்மையை போற்றுவது என்பதும் அவர்களின் வழிக்காட்டுதலில் வாழ்வியலை அமைத்துக்கொள்வது என்பதும் நற்பண்புகளின் பகுதியாகும்.அப்படிபட்ட ஒருவனால் மட்டுமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நேசிக்க முடியும். அப்படி பட்டஒருவனையே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் நேசிப்பார்கள்.. அப்படி பட்ட ஒருவனையே நாயனும் நேசிப்பான். ஏனெனில் அவனது மிகக்காதலுள்ள ஹபீப் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நேசிப்பவர்களை அவன் நேசம் கொள்ளாமல் இருப்பானா.. ஒருக்காலும் இல்லை.. இறைவனின் நேசம் வேண்டுவோர்.. இணையில்லாத நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நேசிப்பார்களாக. அதன் மூலம் ஒப்பற்ற பண்பு நலன்களை பெற்று சிறப்புறுவார்களாக.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

05 ஆகஸ்ட் 2014

முகநூல் நிலைத்தகவல் 8-5-2014

பல்திறன் கூடம் நீ!
பலபேர்க்கு பாடம் நீ!

சொற்திறன் வேடன் நீ!
சோற்விலா தேடன் நீ!

செந்தமிழ் நாடன் நீ!
செம்மொழிச் சீடன் நீ!


உண்மையிலேயே ராஜேந்தர் அற்புதமான மனிதர்.. கொஞ்சம் எமோசனல் கேரக்டர் அவ்வளவு தான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



உலகத்து ஆண்கள் அனைவரையும் ஞானிகளாக்க வேண்டும் என்ற உயர்ந்த நிலைப்பாட்டின் பின்னணியிலேயே இறைவன் ஒவ்வொருவருக்கும் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் மனைவியை தந்திருக்கிறான் போலும்...!

தத்துவம்: புரிந்தவன் ஞானியாகிறான்.. புரியாதவன் போனியாகிறான்.

அத்தனை சோதனிகளின் முடிவிலும் மிகைத்திருப்பது உன் கருணையன்றோ இறைவா!!!!!!!!!!!!! (..பயபக்தியோடு..)

ஏன்னா.. லெப்ட்..ரைட்டு..அப்பு.. டவுனுன்னு... ஏந்தப்பக்கமும் திரும்பமுடியாம.. வாழ்க்கையையே தியானமாக்கி புடம்போட்ட தங்கமா மாத்திடுறானே அது தான் அந்த இறைவனின் மகிமை.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இலாவகமாக செயல்படுகிறார்கள்
எல்லோரும் அவர்தம்
திருட்டுத்தனத்தையும்
இயலாமையையும்
மறைக்க

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பெருக்கு இல்லாத ஆடி! - போனில்
உருக்கத்தோடு சொன்னார் என் டாடி!
.
.
.

# இன்று ஆடிப்பெருக்காம்.. நாம் தான் "ஆடி.. பெருக்க" வேண்டும்.. கை விரல் நனைக்க சிறு சுனை அளவு கூட நீரில்லை எங்கும்.. நெடுகிலும் வற்றிய ஆறுகள்.. வற்றாத வேதனை!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எந்த மோதல்களும் முன்பே தீர்மானிக்கப்படுவதில்லை, அரசியல் மோதல்களைத் தவிர.

(மத மோதல்களும் அரசியலில் அடக்கம்)

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

04 ஆகஸ்ட் 2014

சர்ச்சை உலகம்

ஆங்காங்கே ஆயிரம் சர்ச்சைகளின் அரங்கேற்றம்
அறிஞர்கள் சபையினிலே மோனத்தின் கொடியேற்றம்
பாங்குடன்தெடிப் பொறுத்திட்டோற்கு காலமேபறிமாற்றம்
ஓங்கும் இரைச்சலோடு குரைப்பவர்க்கெலாம் மிஞ்சுமே ஏமாற்றம்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

03 ஆகஸ்ட் 2014

வாதமே போதமாக!

கடக்கவேண்டிய தூரமோ கணக்கற்று
கால் நனைக்கையிலேயே இவன்
நனைப்பதுகூடுமா.. கூடாதாவென 
வாதம் செய்துகொண்டிருக்கிறான்.

இன்னும் இவன்
இம்மிதூரம் கூட நகரந்துவில்லை,
நூற்றாண்டு கடந்துவிட்டது

"கடந்துவிடக்கூடாதிவன்"
என்ற சூழ்ச்சி பலித்ததில் 
கயவர் கூடாரங்களில்
கட்டற்ற மகிழ்ச்சி.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா