18 டிசம்பர் 2011

அபுதாபியில் கூடிய அமீரக காயிதேமில்லத் பொதுக்குழு -1

கடந்த 15-12-2011 வியாழன் அபுதாபியில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் பொதுக்குழு கூடியது. எப்போதும் முனைப்புடன் ஏற்பாடுகளை செய்யும் நம் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் இம்முறையும் மிகச்சிறப்பாக விழா ஏற்பாடுகளை
சகோதரர் எச்.ஏ.சி.ஹமீது மற்றும் சமூக ஆர்வளர்கள் துணையுடன் செய்திருந்தார்.

விழா சரியாக மாலை 8.22க்கு ஆரம்பமாயிற்று நான் புஜைராவிலிருந்து மதியம் புறப்பட்டு துபை வந்து பிறகு அன்பர் முதுவை ஹிதாயத்தின் உதவியுடன் ஹமீது யாசினின் வாகனத்திலும் பிறகு ஜமால் அவர்களின் வாகனத்திலுமாக நண்பர்களோடு விழா நடக்கவிருந்த ஏர்லைன்ஸ் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.

சகோதரர் ஜமால் திருக்குரானின் வசனங்களை ஓதி கூட்டத்தை ஆரம்பித்து வைக்க ஜனாப் அல்ஹாஜ் குத்தாலம் லியாக்கத் அலி அவர்கள் தலைமையேற்க, ஜனாப் தாஹா, ஜனாப் களமருதூர் சம்சுதீன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த நிகழ்விற்கு வரவேற்புரை நிகழ்த்தினார் லால்பேட்டை அப்துர் ரஹ்மான். அதில் பேராசிரியரின் அணுகுமுறைகளையும், பாக்கிஸ்தான் பிரிவினையில் காயிதே மில்லத் எவ்வாறு செயல்பட்டு இந்திய முஸ்லீம்களுக்கு அரணகாக இருந்தார்கள் என்றும், பட்டேல் போன்றவர்கள் நீங்கள் பாக்கிஸ்தானுக்கு போகவேண்டியது தானே என சொல்ல அதற்கு நாங்கள் மண்ணின் மைந்தர்கள் என்றும் எங்களை எங்கும் போவென சொல்ல யாருக்கும் அருகதை இல்லை என்று உரைத்ததையும் நினைவு கூர்ந்து இன்று வரை முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் எவ்வாறு எல்லா சந்தர்ப்பங்களிலும் எவ்வாறு செயல்பட்டு அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளுக்காக பாடுபடுகிறது அதன் தலைமையை பேராசிரியர் ஏற்றதிலிருந்து அவர் சமீபத்தில் கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக வழக்காடுவதற்கு சமீபத்தில் ரூபாய் பத்தாயிரம் ஏற்பாடு செய்து வழங்கியது உட்பட் பலவற்றை எடுத்துரைத்தார்.

விழா தொகுப்புரையாளர் ஹமீது ரஹ்மான் அழகான முறையில் சலவாத்தோடு ஆரம்பிக்க நமது பேரவைக்கு வைத்திருக்கும் பெயரின் சொந்தக்காரர் கண்ணியமிக்க காயிதே மில்லத் (ரஹ்) எத்தகைய சிறப்பினை கொண்டவர்கள் என விளக்கி பேசுகையில் நேருவின் அமைச்சரவையில் கிருஷ்ணமேனன் பாதுகாப்பு அமைச்சராகவும், வல்லபாய் பட்டேல் உள்துறை அமைச்சராகவும் இருந்த போது நடந்த சீனா இந்தியவின் காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்த சமயத்தில் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்த இடம் ஒன்றுக்கும் உதவாத ஒன்று தானே என நேரு உட்பட எல்லோரும் கருத்து தெரிவிக்கையில் அதற்கு எதிராக எனது தாய் நாட்டு மண்ணை யாரும் ஆக்கிரமிக்க ஒரு கணமும் ஒத்துக்கொள்ள மாட்டோம் அது ஒரு பிடிமண்ணாக இருந்த போது சரிதான் ஆகவே சீனா அங்கிருந்து தன் படைகளை திரும்ப பெற்றே ஆகவேண்டும் என முழங்கிய ஒப்பற்ற தேசபக்தர் என்றும், இந்தியா – பாக்கிஸ்தான் பிரிவினையின் போது ஜின்னா அவர்கள் பாக்கிஸ்தானை வழிநடத்தி சென்ற சமயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்க்கின் தலைமையை காயிதே மில்லத் ஏற்ற போது கட்சிப்பணம் 80,000ரூபாய் இருப்பதை நீங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு வைத்து கொள்ளுங்கள் என சொன்ன நேரத்தில் அதை கூட வாங்க மறுத்து விட்ட தூய்மையையும் இன்னும் சில சரித்திர நிகழ்வுகளையும் கூறி அப்பேர்பட்ட அற்புத தலைவரின் பெயரைத்தான் நாம் நமது பேரவைக்கு வைத்திருக்கிறோம் என நினைவு கூர்ந்தார். இடையிடையே அவர் கூறிய தொகுப்பு மொழிகளும் அருமை.

தீர்மானங்களை முன் மொழிந்தும் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையுயர்வை திரும்பப்பெற சென்னையில் முஸ்லிம் லீக் நடத்திய போராட்டத்தை ஆதரித்து பேசுமாறு பணிக்கப்பட்ட நான் சற்றே இடைவெளிக்கு பிறகும், முன்னறிவிப்பு இல்லாமலும் தயார்நிலை ஏதும் இல்லாத நிலையில் திடீரென பணிக்கப்பட்டேன்,  விழா ஏற்பாட்டாளர்  லால்பேட்டை அப்துர் ரஹ்மான் அவர்களோடு முன்பு அபுதாபியில் இருந்த காலங்களில் அவரோடு கூடிய நட்பு மற்றும் அவரின் இயக்கப்பணிகள் மீதுள்ள ஆர்வத்தையும் சொல்லி பிறகு பேரவைத் தலைவர் அல்ஹாஜ்.குத்தாலம் லியாகத் அலி அவர்களின் எளிமை மற்றும் அவரின் அரவணைப்பு இவைகளால் ஈர்க்கப்பட்ட விதத்தையும், அண்ணன் தாஹா, ஹமீத் ரஹ்மான், மற்ற நிர்வாகிகளின் தனித்தன்மைகளையும் மகிழ்ந்து கூறி தமிழ்நாடு மாநில முஸ்லிம் லீக்கிற்கு அமீரக காயிதே மில்லத் புத்துணர்வூட்டி வருவதையும் அதில் நமது பாராளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் அவர்களின் மக்கள் பணிகள் பற்றியும் பேசி விளக்கிவிட்டு....எனது தலைப்பான‌ சமீபத்திய பஸ் கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வால் நடுத்தர மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், சிரமங்களையும்  எடுத்துக்கூறி அதை அரசு கருத்தில் கொள்ளுவதன் அவசியம் குறித்தும் பேசி சென்னையில் முஸ்லிம் லீக் நடத்திய போராட்டத்தையும் அதில் முன்மொழியப்பயட்ட‌ தீர்மானத்தையும்  ஆதரித்து உரைநிகழ்த்தி அமர்ந்தேன்.

பிறகு அமீரக காயிதெமில்லத் பேரவையின் துணைத் தலைவர் களமருதூர் ஹாஜி.ஷம்சுத்தீன் அவர்கள் நம் வீடு பழையதாக இருப்பதால் மராமத்து பணி செய்யும் தருணங்களில் அடுத்த வீட்டு திண்ணைகளில் குடியேறலாம் ஆனால் அங்கேயே எவ்வாறு தங்க கூடாதோ.. அனுமதிக்க மாட்டார்களோ அது போல நமது தாய்சபை சற்றே தளந்த சமயத்தில் எங்கெங்கோ பிற கட்சிகளுக்கு சென்ற சகோதரகள் நம் வீட்டிற்கு தாய்சபைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். காயிதேமில்லத் அவர்களுக்கு 1962-ல் தான் சேவையாற்றியதையும் நினைவு கூர்ந்தார்.

அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது,துணைப்பொருளாளர் முத்தலிபு இக்பால்,ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்,இராமநாதபுரம் தைய்யுப் அலி,கீழக்கரை ஹமீது யாஸீன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மாவட்டத் தலைவர் பி.கே.என்.அப்துல் காதிர் ஆலிம் பேசும் பர்மாவிற்கு சென்று வசூல் செய்து காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் இரண்டும் கேரளத்தில் ஒன்றுமாக கல்லூரிகளை நிறுவியதை சிலாகித்தார்.

அபுதாபி இந்தியன் ஸ்கூல் தலைமை ஆசிரியர் ஷேக் அலாவுத்தீன் கல்வியால் மட்டுமே சமூகம் வளரமுடியும் ஆகையால் நமது குடும்பத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் குறைந்த பட்சம் ஒரு டிகிரியாவது படிக்கும் வாய்ப்பினை வழங்கவேண்டும் என்றார். பிறகு அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது,சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் இஜாஜஸ் பெய்க்,அய்மான் கல்லூரியின் பொருளாளர் திருச்சி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தாய்ச்சபை பாடகர் அரங்கம் அதிர கொள்கை முழக்கங்களை முழங்க எல்லோரும் உடல் சிலிர்க்க ஒன்றிப்போய் உணர்வு பொங்க கேட்டு ரசித்தனர்.

------மற்றவை  தொடர்கிறேன். இன்ஷா அல்லாஹ்-ஜே.எம்.பாட்ஷா

17 டிசம்பர் 2011

ஒளிந்து மீந்திருந்தது!
இருக்கின்ற அழுக்கை
தொலைக்க நினைக்கையில்
தெரியவில்லை கொஞ்சம்
ஒளிந்து மீந்திருந்தது!

தொலைக்க வேண்டியது
இருக்கக்கூடாதது தான்!

இருந்து விட்டு போகட்டும்
துவைத்து தொலைக்கும் அளவுக்கு
சேரும் வரை!
என்று எண்ண நேரலாம்..!

ஆனாலும் நல்லவைப் பக்கம்
நெருங்காது தள்ளியே
புறந்தள்ளியே வைப்போம்!

தூய்மையோடு
தூசுகள் கலக்கக்கூடாது
வாய்மையோடு
பொய்மைமை சேரவே கூடாது

தூய்மையை அணியும் பொது
அடையும் நல்லுணர்வு
அழகிய புத்துணர்வு
மனதிலிருந்து முகம் தாவும்.

அழுக்கை அணிகையில்..
கைகள் எடுதணிந்தாலும்
மனம் ஏசுவதை கேட்டிருக்கிறோமே!

பின் ஏன் அந்த அழுக்குகள்
நம்மோடினி வேண்டாம்!

வேண்டுக என்றென்றும் தூய்மை!

சில நேரம்
நாம் கவனிக்க தவறுவதன்
காரணி கொண்டு அவைகள்
சற்றே ஜீவன் பெறுகின்றது

நச்சுக்கள் பிறந்தாலே
நல்லவைக்களுக்கெல்லாம் கேடுதான்
கொல்வதில் தவறில்லை

ஆனாலும் ஏனோ
தெரியவில்லை கொஞ்சம்
ஒளிந்து மீந்திருந்தது!

தொலைக்க வேண்டியது
இருக்கக்கூடாதது தான்
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா

13 டிசம்பர் 2011

ரஜினி..முத்து..!பிறை நிலவாய் பிறந்து
முழுநிலவாய் ஒளிரும்
முத்து மதியே!

உழைப்பில் நீ எறும்பு
களைப்பறியா இரும்பு
வீரத்தில் நீ சிங்கம்
ஓரத்தில் நின்றால்
உனக்கு பங்கம்!
வா! எங்களுக்காக வா!!

இளைய தலைமுறைக்கு
திரை அறையில் மட்டுமல்ல
வாழ்வியல் வழிமுறைக்கும் மன்னவனே
நீ கொடுப்பதோ அதிக தானம்,
நீ அரசியலில் காட்டுவதோ நிதானம்

ஆனாலும்..,
வேலைதெரியாத – பொற்கொல்லர்கள்
வைரத்திற்கு பட்டைதீட்டுகிறோம் என்கிறார்கள்
சேலை வேட்டியால் மட்டுமே
அவர்களால் கவரத்தெரியும் மக்களை,
நாளை நமதே வா!

குறிஞ்சி மலரே!
எப்போது மலர்வாய் என
ஏங்கியிருக்கிறோம் –நீ
மலர் காட்சிக்கு மட்டுமல்ல
எங்களின் வாழ்வில்
மணம் பரப்பவும் தான் வா!

கோடிகள் மட்டுமல்ல – எங்கள்
நாடியும் உன்கையில் தானே தலைவா!

-ஜா.மு.பாட்ஷா

ஜூலை 1995 ஆம் வருடம் (16 வருடங்களுக்கு முன், 17 அகவை எனக்கிருக்கும் அப்போது) ரஜினி காந்த்-ன் முத்து திரைப்படம் வந்த நேரம், அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அந்த தருணத்தில் சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதிக்கொடுத்தது, அந்த பிள்ளைத்தன நினைவுகள் இன்னும் என் மனதில் அப்படியே பசுமையாகத்தான் இருக்கிறது.
-ஜே.எம்.பாட்ஷா

அறியாமை அகற்றும் ஆசான்!
அறிவுதரும் ஆசான் பெருமக்களே..!

எங்களின் வாழ்வெனும்
வண்டிக்கு அச்சாணி போல..
எங்களின் வாழ்வெனும்
கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல 
அறிவு நிறைந்த படிப்பினைகளையும்
அனுபவம் வாய்ந்த அரியவைகளையும் 
மன்னன் புலவனுக்கு தரும் பொற்குவியல் போலத்தந்து
சுண்ணாம்புக் கட்டியால் கரும்பலகையில்
உன்னதப்புரட்சி செய்பவர்கள் நீங்கள்!

நீங்கள் கற்றவைகளை எல்லாம்
எங்களையும் கசடறக் கற்கச் செய்து
சேற்றுநீரைச் சிறந்த நீராக்கி..
ஒழுக்க உண்மைகளை ஓயாதுரைத்து
மனதில் பதியவைப்பது 
உங்களின் திருச்சமூகமன்றோ!

எங்கள் வாழ்க்கை பயணத்தில்
வசந்த காலத்தை உருவாக்க எண்ணி
தங்கள் நிகழ்காலத்தையே
தியாகம் செய்யும் வள்ளல்களே
பாரி..ஓரி.. என்ன அவர்களை விட
நீங்கள் தான் பன்மடங்கு உயர்ந்தவர்கள்!

சாதனையாளர்கள் பலரின்
வெற்றிக்கு பின்னால் சப்தமிடாமல்
பின்னால் மறைந்திருந்து
சரித்திரம் படைத்துக்கொண்டிருப்பவர்கள் 
நீங்களன்றோ!

எங்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கவே..
இருள் விளக்கத் தீக்குளித்து
தீபஒளி இயற்றிடும் தீக்குச்சிகள் வேறுயாரோ!

அற்றங்காக்கும் கருவியாம் அறிவு 
அறிவுசார் சமூகத்திற்கு ஊட்டியவர்களே 
நீங்கள் தானே!


அருமை ஆசான்களே..!
உங்கள் ஆத்திரம் கூட
எங்கள் கோத்திரத்திற்கு
நல்ல சூத்திரமாக அமைந்து
நேர்த்தியாய் செய்திடுமே வாழ்வை!!

ஆசிரியர்களுக்கு 
குடும்பக்கட்டுப்பாடெல்லாம் 
இல்லை என்பேன்;
நாங்கள் அனைவரும் 
உங்களின் பிள்ளைகள் என்றான பின்!


கட்டுக்கடங்காமல் சுற்றிச்த்திரிந்தவனை,
கிணற்றுத் தவளையாய் கத்திக்கிடந்தவனை,
குறைக்குடமாய் கூத்தாடியவனை,
நன்னெறி புகட்டி
மலர்ந்த மல்லிகையாய்
மணங்கமழ வைத்த எம் ஆசான்களை
என்னென்றும் போற்றி..!
மனமேடையெனும் ஆசனத்தில்
எப்போதும் அவர்கள்தானென்றே ஏற்றி..! 


என்றென்றும் என் நெஞ்சில் நிறைந்த ஆசான்களுக்கு வந்தனங்களும்.. வணக்கங்களும் உரித்தாகுக!. 

-ஜே.எம்.பாட்ஷா


வழுத்தூர், செளக்கத்துல் இஸ்லாம் பாலிய முஸ்லிம் சங்கம் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் போது நடந்த கவிதைப்போட்டிக்காக 1994-ஆம் ஆண்டு எழுதிய கவிதையின் சில பாகங்களை சற்றே சரி செய்து பதித்திருக்கிறேன், அதில் ஆருதல் பரிசு தான் கிடைத்தது என்றாலும் எனக்கு அது ஆன்ற பரிசாக தோன்றியது, (முதல் மூன்று பரிசுபெற்ற கவிதைகள் மிக அருமையா என்ற கேள்விக்கு நான் போகவில்லை) 'இதனால் சகலமானவர்களுக்கும்' என்ற வைரமுத்துவின் கவிதை புத்தகம் தந்தார்கள். பரிசு வழங்கும் விழாவின் போது எனது ஆருயிர் பாட்டனார் (தாய் வழி )  சி.தா. சுல்தான் முஹைதீன் அத்தா அவரகள் வருகை தந்து உவகை அடைந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்த ஒன்று. நான் என் கவிதைக்காக வாங்கிய முதல் பரிசு அது தான்.

11 டிசம்பர் 2011

அராபிய மண் அங்கலாய்க்கிறது...!
அல்லாஹ்வின் தூதர்
அருட்பத மலர் சுமந்த
அராபிய மண் இன்று
அங்கலாய்க்கிறது...!

வெதும்பிக் குமுறி
வெறுத்துக் கதறி
சதா சபித்து
அவர்களிடமே முறையிடுகிறது..!

நீதநபியே என்னைக் கொஞ்சம் பாருங்கள்!
நீங்கள் வெருட்டிய சாத்தான்கள்
ஒன்று சேர்ந்து விட்டதோ..!

நீங்கள் சுத்தம் செய்த இடங்களில்
சாக்கடை சங்கமிக்கிறதே..!

சன்மார்க்கம் வளர்த்த மண்
தன்மானம் விற்றுக்கிடக்கிறதே..!

கத்தூரி வலம் வந்த நகர்களில்
செத்தவாடை அடிக்கிறதே..!

ஆனந்தமாய் ரசிக்க வேண்டிய கண்களில்
அழுக்குத்திரை சூழ்கிறதே..!

தேனான வேத ரீங்காரம் கேட்க வேண்டிய காதுகளில்
தேவை இல்லாதது கேட்கிறதே..!

பண்பாடு வளர்த்த அரபத்திலே
ஆடை துறவரம் நடந்து
அசிங்கம் தின்ம் அரங்கேருதே..!

நல்வாழ்வு அளித்து
நறுமணம் கொடுத்த
நபிவழி இங்கே
நசுங்கி கிடக்குதே!


-ஜே.எம்.பாட்ஷா


8 வருடங்களுக்கு முன் எழுதியிருப்பேன்..!

தெருவிளக்கு!

என்னை மட்டும் எரிவைத்து விட்டு

எல்லோரும் உறங்குகிறார்கள் நிம்மதியாக‌

தெருவிளக்கு!


-ஜே.எம்.பாட்ஷா

நீ பாரதி!நீ வள்ளுவம் பெற்ற தமிழின் சொத்து பாரதி..!
நீ வரலாறு கொண்ட தமிழரின் முக்கால தளபதி பாரதி..!

நீ வாழ்வையே கவியாக கண்டவன்
நீ வாழ்வையே கவியாக வாழ்ந்தவன்
நீ கவிதையிலேயே வாழ்ந்ததனால் மகாகவியானாய்

நீ எங்களுக்கு மட்டுமே கிடைத்த புதையல்
அதனால் தான் புதையல் எனச் சொல்லிக்கொண்டே கொண்டே
பாவிக்கப்படாது பூமிக்குள் புதைந்திருக்கும் காலப்பெட்டகம் ஆனாய்!

பாடப்புத்தங்களிலும்,
பட்டிமன்றங்களிலும்,
திரைப்பாடல்களிலும் அல்லாது என்று ஆவாய்
தமிழர்களின் உணர்வாய் நீ பாரதி..?
உன் உணர்வலைகள் எல்லோரையும் உலுக்குவது எப்போது..?
உன் சிந்தையின் சில துளியிலாவது எங்களவர் குளிப்பது என்றோ..?

நல்லதோர் வீணையே.. சுடர்மிகும் அறிவே..!
நானிலம் பயனுற கவிபாடியவனே..!
காக்கையையும் தன்னினமாக கண்டவனே..!
அச்சமற்று.. எதிர்த்தவரை துச்சமென்றவனே
நினது புகழ் வாழ்க!
நின் சிந்தை எங்களை ஆள்க!!!


-ஜா.முஹையத்தீன் பாட்ஷா09 டிசம்பர் 2011

கர்பலா மாதியாகம்!பல்லவி
மன்னர் ஹுஸைன் மாதியாகத்தில்
எந்நாளும் உலகம் தஞ்சம்
எம்மான் நபி குலக்கொழுந்துகள்
சோகங்கள் எதையும் மிஞ்சும்

அனுபல்லவி
முஹரம் பத்தின் நினைவு வந்தால்
மூமின் நெஞ்சில் ஈட்டி பாயும்
நாதியின்றி நபியின் குடும்பம்
அந்தோ ஆசூராவே..!

சரணங்கள்
நாட்டை ஆளகடிதங்கள் போட்டவர்கள்
வேட்டை நாய்களிடம் மாட்டவைத்தனரே
காட்டிக் கொடுத்தனரே
வாக்கு மாறினரே
அகிலம் வாழவைத்த நபிகள் குடும்பத்தின்
இரத்தம் குடிக்க வேண்டி
அரக்கத் தனம்மீது ஆடி
நெருப்பாய் சிரித்தார்கள் கூடி
அரசபதவி மோகம் வேண்டி
ஏஜீது தீது செய்தான்..!

சத்தியத்தை நிலை நாட்டுதற்கே
பெரும் தியாகம் செய்தனரே
தம் உயிரெல்லாம்
இன் னுயிரையெல்லாம்
இதயம் கருகிவிடும் சோகம் நடந்ததம்மா
குழந்தை சகீனா தாகம்
அஸ்கர் சிசுவின் சோகம்
அதுதான் இன்றைக்கும் சாபம்
அஹ்லுல்பைத்தை கொடிய களத்தில்
காத்தார் ஜைனப் தாயே..!


27-01-2007 ஹிஜ்ரி 1428 முஹரம் பிறை 10 இரவு 11 மணிக்கு எழுதியது


குறிப்பு; இப்பாடல் கர்பலாவின் உடைய நெஞ்சை உருக்கும் சரித்திரம் தெரிந்தவர்களுக்கு உணர்வு ரீதியாக தாக்கத்தைக் கொடுக்கும். கர்பலாவின் கொலைகளத்தில் கொடிய சூழ்ச்சியால் நபிகளாரின் குலக்கொழுந்துகள் கருவறுக்கப்பட்ட சரித்திரத்தை இளைஞர்கள் நடுநிலையான சிறப்பான ஆசிரியர் எழுதியதை தேடிப்பிடித்து படிக்க வேண்டும் அவ்வாறு படித்து உணர்ந்தால் அவர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகத்தை உணரலாம் மேலும் எதற்காக அந்த போராட்டம் என்பது அதிலிருந்து இஸ்லாம் எவ்வாறு எழுச்சி அடைந்தது அவர்கள் தங்களை தியாகம் செய்து இந்த மார்க்கத்தை எவ்வாறு புதுப்பித்தார்கள் என்பது தெளிவாகும். இன்ஷா அல்லாஹ். ஆமீன்!

-ஜே.எம்.பாட்ஷா

07 டிசம்பர் 2011

இறையே.. நிறைவே..சரணம்


நான் எதைப் பற்றிய கவலையும்அற்றவன்

நான் எதற்கும் பயப்படாதவன்

நான் எந்நிலையிலும் தைரியமுள்ளவன்

நான் சதா உயர்வான சிந்தனையில் உள்ளவன்

நான் ஆளுமைக்காகவே அனுப்பட்டவன்

துணிவும் நிதானமும்

அறிவுக் கூர்மையும்

என் புதிய கூட்டணிகள்

சகல திடுக்கங்களிருந்தும் ஆபத்துக்களிருந்தும் சோதனைகளிருந்தும்

என் அறியாமைகளிருந்தும்,பலகீனத்திலிருந்தும் அதனால் ஏற்படும்

பின்விளைவுகளிருந்தும்,

அல்லாஹுவும், அருமை ரசூல் (ஸல்) அவர்களும் அவர்களின்

திருக்குடும்பத்தினர்களும் மற்றும் புனித ஆத்மாக்களும் எம்மை

பரிபூரணமாக சூழ்ந்து காத்து வருகிறார்கள்.

அந்த பேருண்மையின் பேரன்பின் அரவணைப்பால்

உயர்கிறேன்...

உயர்கிறேன்...

மேலும் உயர்வேன்... உயர்வேன்...

நான் மிகச்சிறப்பாக..

மிக மகிழ்வாக...

மிக உற்சாகமாக..

மிக மேன்மையாக..

மிக நிறைவாக..

இருக்கிறேன்.. என்றும் இருப்பேன்.-ஜே.எம்.பாட்ஷா

இந்த இறைஞ்சுதல்களை 2002-லிருந்தே தினமும் காலையில் அலுவலகம் சென்ற உடன் பணிகளை ஆரம்பிப்பத்ற்கு முன் நபிகள் நாயகத்தின் புகழ் கூறும் சில முக்கிய குர்ஆன் சூராக்கள் ஸலவாத்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளோடு மன்ம் ஒன்றி தியானமாக சொல்லி வரும் இயல்பு கொண்டிருந்தேன். இது போன்ற சுய உசுப்பு சொற்றொடர்களால் நம்மை நாளும் புதுப்பித்தல் மிக அவசியம்!


ஹாஜிகளே வருக! (07-12-2011)இப்ராஹீம் நபியின் அழைப்பை ஏற்று
இந்தியா விலிருந்து சென்றவர்களே வருக.. வருக...

சர்தார் நபியின் சந்நிதானம் சென்று சலாமுரைத்து
சரணமடைந்த சத்தியவான்களே வருக.. வருக...

காஃபா வெனும் இறையாலயத்தை தரிசித்து
கண்ணீரால் கறை போக்கியவர்களே வருக.. வருக...

சஹாபாக்களெனும் சங்கைக்குரியவர்களை
சாந்தியோடு சம்பாசித்தவர்களே வருக.. வருக...

சாரா அம்மையார் சஞ்சலத்தோடு ஒடிய
சஃபா மர்வா”-க்களை சந்தித்தவர்களே வருக.. வருக...

இஸ்மாயில் நபியின் பாதத்திலுதித்த
பாலைவன பன்னீர்ஜம் ஜம்சுவைத்தவர்களே வருக.. வருக...

ஹஜருல் அஸ்வத்”-தெனும் சுவனக் கல்லை
களிப்புற தொட்டுச்சுவைத்தவர்களே வருக.. வருக...

ஷைத்தானுக்கு கல்லெறிந்து
ஷைத்தானியத்தை எறிந்து விட்டவர்களே வருக.. வருக...

கண்ணீல் கண்ணீர் பெருக...பெருக...
அருள் மணம் தருக... தருக...என்று
இருகரம் ஏந்தியவர்களே
இன்று பிறந்த பாலகனைப் போல் - நீர்
என்றும் வாழ்கவே...!

-ஜே.எம்.பாட்ஷா