27 செப்டம்பர் 2010

வாலிபத்தை உறிஞ்சி..





எத்தனைப் பேர் இந்த

அரபு நாட்டு அழகியை

கைப்பிடிக்கக் கனவு காண்கிறார்கள்.


யார் கேட்கிறார்கள்..?

இவள் மூர்க்கத்தனமானவள்

அடைய ஆசைப்படாதீர்கள்,

உங்களுக்கு முன்னே

உறவு கொண்டவன்

நான் என்றால்…

யார் கேட்கிறார்கள்..?


அவளின்…

ஒய்யாரத்திலும்..,

அலங்காரத்திலும்..,

எல்லொரும் எச்சில் வடிய

பிச்சைக் கேட்டு பின் செல்கிறார்கள்!


ஆ..மீசை மிக்க ஆண்களே..!

ஆசையை அடக்கிக் கொள்ளுங்கள்,

ஓசையின்றி வேறு திசை ஓடிவிடுங்கள்,

மாசில்லா உள்ளூர் அழகியோடு

வாழ்க்கை தொடங்குங்கள்,

இல்லையெனில்…

பாஷை தெரியாமல்

விழிக்க வேண்டிவரும் இவளோடு, – பின்

கொஞ்சி..கொஞ்சி.. குலாவலாமென

நினைத்த நீங்கள்,

கெஞ்சி..கெஞ்சி..கேட்டாலும் தரமாட்டாள்,

விவாகரத்து..!


உங்கள் வாலிபத்தை உறிஞ்சி..

தோல் சுருங்கும் வரை அனுபவித்து..

மேல் ஏதும் ஆகாதெனத் தெரிந்தால்

கால் கொண்டு உதைத்தெறிவாள்!


புரிந்து கொள்ளுங்கள்

அனுபவம் சொன்னேன்..

அமுதம் விட்டு

விசம் வேண்டி வரவேண்டாம்.


நீ…

பருவம் அடைந்தது

தெரிந்து விட்டால்..

பாதம் கழுவவாவது அவளைப்

பற்றிக்கொள் பாக்கியமடா அது,

என்கிறார்கள் பெற்றோர்கள்.


நீ...வேண்டுமானால்

அவளின் வாடகை கணவன் என்று

பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!

ஊரில் உனக்காக..

காதல் கண்ணிகைகள் காத்திருக்க,

பெண்ணியம் போல் காட்டிக்கொள்ளும்

பேய் இவளையா ஆசைப்படுகிறாய்..?


கேள்! – இவள்

உன் அத்தனைத் திறமைகளையும்

திருடிக்கொள்வாள், - நீ

கடைசிவரை முயன்றாலும்

திருப்திப் படுத்தமுடியாது இவளை!


ஆனாலும்..

நீ போனால்,

ஆயிரம் பேர் இவளுக்கு!


2008 ஆம் ஆண்டு அறை நண்பர்களின் வெளிநாடு பற்றிய விவாதம் சில என்னை இப்படி எழுத வைத்தது. ஜே.எம்.பாட்ஷா

22 செப்டம்பர் 2010

நெடுநாளைய கனவு..


அழகிய இல்லம்...

நெடுநாளைய கனவு..

விளைச்சல் நிலத்தில்!



18 செப்டம்பர் 2010

உள்ளம் சுருட்டிவிட்டாள்..


ஒரே சொல்லில் உள்ளம் சுருட்டிவிட்டாள்..

அள்ளிக் கொடுத்துவிட்டேன் என்னை,

அந்த அழகிய மழலைக்கு..!

17 செப்டம்பர் 2010

குயிலின் மொழி..






குயில்களின் கூவுதல்கள் எல்லாம்

குதூகலத்துடன் கூடியது தானென

நாமாக முடிவெடுத்தால்

அதெப்படி உண்மை..?

கூவுதல் மட்டுமே நாம் அறிவது – அதில்

கூறிடும் கூறுகள் குறித்து அறிந்தது யார்..?


நமக்கு வேண்டுமானால்

அதன் இதய ஓலம் கூட

இனிய இசையாக இருக்கலாம்!

அதற்கு மட்டுமே வெளிச்சம்

அதன் சந்தோசமும் சோகமும்!

சில தருணங்களில் நம்முடைய நிலையும் இது தான், யார் அறிவார் நம் இதய வாசலை, நம்மைத் தவிர -ஜே.எம் பாட்ஷா

08 செப்டம்பர் 2010

பிரிந்தால் சரியாச்சொல்..?


எத்தனை எத்தனை மாண்புதனை

நித்தமும் நிதமும் சுமந்துவந்தாய்

பக்தனை பக்குவப் படுத்திடவே

பாரினில் நீதான் பிறந்துவந்தாய்


சாந்தியும் தூய்மையும் நீயேஏந்தி வந்தாய்

சரித்திர பத்ரையும் நீயேபெற்றுக் கொண்டாய்

ஆண்டுகள் யாவும்நீயே ஆகியிருக்கக் கூடாதோ

அகிலத்தை அருளில்நீயே அமிழ்த்திநிற்கக் கூடாதோ


இறையவன் நினைவினில் இகத்தவர் ஆழ்கிறாய்

இராப்பகல் எங்கிலும் இபாதத்து செய்கிறார்

பெரியவன் தூதராம் பெருமான் நபிகளை

நிறைம னமாகவே நேரமும் புகழ்கின்றார்


பள்ளிகள்யாவும் நிறைந்திருக்கும் காட்சிகள் தருவாய்

நல்லஉள்ளத் தோடேதர்மமீயும் மாட்சிகள் சொறிவாய்

மீட்சிப்பெறவே தெளபாவேற்று மலர்ச்சி அருள்வாய்

மகிழ்ச்சிசூழ் சொர்க்கப்பூங்கா வாங்கியுந் தருவாய்


விலங்குதனை சைத்தானுக்கு உன்னில் இட்டாய்

விலங்குகுணம் மனிதனிலே அகற்றி விட்டாய்

அமரகுணம் மனிதன் தன்னில் மிளிரவைத்தாய்

அமரத்துவம் எய்திடவே அழைத்தும் நின்றாய்


வானினில் வதிந்திடும் பிறையிற் கெல்லாம்

உன்னைப் போல்மவுசுக் கிடைத்தது மில்லை

வாழ்வினில் வந்திடும் மாதங்க ளெல்லாம்

உன்னைப் போல்மகத்துவம் தந்தது மில்லை


நேற்றுவந்து நேசம்கொண்டு இன்று பிரிந்தால் சரியாச்சொல்..?

நேயன்மனதை நெகிழச்செய்து விலகிப் போவதும் முறையாச்சொல்..?

மீண்டும்மீண்டும் வாழ்வினிலே வந்தே பூத்திடு ரமலானே..!

வேண்டும்நலன் கள்யாவையுமே நீதான் சேர்த்திடு ரமலானே..!


ஒவ்வொரு வருடமும் ரமலான் பிரிகையில் மனது மிகவும் கவலையில் ஆழ்ந்து வருந்துவது எல்லோருக்கும் இருக்கக்கூடியது தான் ஏனெனில் அதை சுவைத்தவர்கள் அதை அவ்வளவாக பிரிய தயாராவதில்லை - ஜே.எம்.பாட்ஷா

04 செப்டம்பர் 2010

ரமலான்



பலவகைப்பழங்களும் கடற்பாசியும்..

சமோசாபஜ்ஜியுடன் சுடச்சுடக்கஞ்சி..

இன்னும் இருபது நிமிடம் நோன்புதிறக்க.,




30 ஆகஸ்ட் 2010

முஸ்லீம் லீக்கின் சேவை இந்திய முஸ்லீம்களுக்குத் தேவை




எந்த ஒரு இயக்கமும் பிறப்பது மிகப்பலமான சமூக புழுக்கத்திற்கு பிறகாகத்தான் இருக்கும், அப்படித்தான் அன்றைய பிரிட்டீஷ் இந்தியாவில் முஸ்லீம்களுக்கென்று அவர்களின் உரிமைக்கொடியை உயர்த்திப் பிடித்து உணர்வின் மொழியை உச்சரித்து வெளிக்கொணர யாரும் இல்லாமல் மற்ற சமூகங்களெல்லாம் பெரும்பான்மையாக வாழ முஸ்லீம் என்ற ஓரினம் மட்டும் கேட்பாரற்று இருந்த நிலையில், இந்திய துணைக்கண்டத்தில் வாழும் ஒவ்வொரு இஸ்லாமியனின் மீதும் பரிவும் அக்கரையும் கொண்ட சமூக உணர்வும், சன்மார்க்க உணர்வும் மிகுந்த அறியவர்களும், அறிஞர்களும் ஒத்திசைந்து நிறுவிப் பிறந்திட்ட நாடறியப்பட்ட நல்லியக்கம் என்று பெயரெடுத்த பேரியக்கம் தான் முஸ்லீம் லீக் ஆகும்.

முஸ்லீம் லீக் தோன்றி பரந்த இந்தியாவெங்கும் உள்ள முஸ்லிம்களின் இதய ரோஜாவாக அது பீடமிட்டமர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்தது. இதற்கு வித்திட்டவர்களெல்லாம் பெரும் பெரும் சமூக பொறுப்புக்களைச் சுமந்தவர்கள்.. மிகப்பெரும் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள்.., இந்திய சுதந்திரப்போராட்டத்திற்காக தங்களை அற்பணித்தவர்கள் என்றால் அது மிகையில்லை. முஸ்லீம் லீக் அன்றைய காங்கிரஸ் கட்சிக்கு இணையான மிகப்பெரும் பலம் வாய்ந்த சக்தியாக இருந்தது எனில் அதற்கு இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

அதன் வளர்ச்சி கண்ட பெரும் பெரும் தலைவர்கள் கூட, ஏன் நேரு உட்பட்ட காங்கிரஸின் தேசிய தலைவர்களெல்லாம் பேரதிர்ச்சி கொண்டு அதன் தாக்கத்தை அறிக்கைகளாலும், மேடைப்பேச்சுக்களாலும் அவர்களின் அச்சத்தை வெளிப்படுத்தி இயக்க வளர்ச்சியையே தடுக்க முனைந்த நேரம் நெஞ்சுரத்தோடு கூடிய பதிலடிகளாலும், விளக்கங்களாலும் அஞ்சாது இயக்கம் வளர்த்த காயிதே மில்லத் போன்ற தலைவர்களின் பல நிகழ்வுகளை அடக்கியது தான் அக்கால முஸ்லிம் லீக் வரலாறு.

ஒட்டுமொத்த இந்திய முஸ்லீம்களின் உணர்வை உலகறிய செய்ய செய்வதும், நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து எட்டுத்திசை எங்கிலும் ஐக்கியத்தை நிலைபடுத்தி முஸ்லீம்களும் நாட்டின் பிற சமய மக்களும் அமைதியுடன் சச்சரவுகள் இல்லாத அமைதியைப் பெற்று நல்வாழ்வு வாழ வழிவகுப்பதும் அதன் பிரதான கொள்கையாய் இருந்தது. முஸ்லீம் லீக் என்றும் துவேச மனப்பான்மைக் கொண்டதாக அது இருந்ததே இல்லை. மேலும் அவ்வியத்தை நடத்திச் சென்ற தலைவர்களின் தலைமைத்துவமும், அவர்களின் அணுகுமுறையும், சாதுர்யமும் எல்லாதரப்பு மக்களிடமும் அது ஓர் சிறப்பான நல்லெண்ணத்தை வலுப்பெறச் செய்தன. முஸ்லிம் லீக் அதன் பெயரிலேயே ஒரு மதப் பெயரான முஸ்லிம் என்றப் பெயரை தரித்திருந்தாலும் அது என்றும் ஒரு மதவாத இயக்கமாக இருந்ததே இல்லை, மாறாக அது நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கற்றுக்கொடுத்த நல்லிணக்கத்தையே தன் அடிப்படை அடிநாதமாக கொண்டிருந்தது. நமது தலைவர் பேராசிரியர் அடிக்கடி கூறுவது போல இனவாதம் இல்லாத இதவாதத்தையே தன் நிலையாக கொண்டு பறைச்சாற்றி எல்லோருடனும் நேசத்தையும் பாசத்தையும் பிணைத்து பிறச்சமூக அமைப்பினரின் உரிமைக்கும், வாழ்வாதாரங்களுக்கும் கூட குரல் கொடுக்கத் தவறாத இயக்கமாகத் தான் முஸ்லீம் லீக் வளர்ந்தது என்பதும் அதன் வரலாற்றின் பக்கங்களே. ஆக இது நல்லிணக்கம் பேணி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் இயக்கம். லீக் என்னும் ஐக்கியம் என்ற சொல்லால் நாட்டு முஸ்லீம்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் திரள செய்த நாட்டின் பேரியக்கம், இவைகள் மூலம் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக முஸ்லீம் லீக் இருந்தது. அதனால் எல்லா அரசியல் கட்சிகளும், எல்லா அரசியல் தலைவர்களும் முஸ்லீம் லீக்கின் தலைவர்களுக்கும் மதிப்பு தந்து இதன் தயவை எதிபார்க்கும் இயக்கமாக இருந்தது. இவைகளெல்லாம் இவ்வியக்கத்திற்கு கண்ணியத்தை இயல்பாகவே வகுத்துத்தந்தன.

இன்றைய தினங்களில் தினம்..தினம் முளைக்கும் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிடும் இயக்கங்களை நினைத்தாலே நெஞ்சு பதைக்கிறது. சிலரின் சொந்த சுயநலனுக்காக அவைகள் மக்களிடம் தவறான சிந்தனையை, மதம் சார்ந்த தீவிரப் போக்கையும் விதைத்து இளைஞர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் திசைத்திருப்பி ஆரோக்கியமில்லாத சமூக சூழலை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடரக்கூடாது, அது தொடர்ந்தால் நாட்டிற்கும், வீட்டிற்கும், தனிமனிதனுக்கும் அது உகந்ததாக இருக்காது. பல இனம், பல மதம், பல மொழி என இருக்கும் நம் உயர்தேசத்தில் நமது மேன்மைக்குரிய தலைவர்கள் காட்டிச்சென்ற சாந்த வழியைப் பின்பற்றி அழகிய ஒற்றுமையோடும், அமைதியோடும் வாழும் சூழலைத்தான் வளர்க்க முயலவேண்டும், ஆனால் இன்றைய தினங்களில் சில இயக்கங்களால் அது அருகி வருவதாய் சில காட்சிகள் தென்படுகிற நிலை சரி செய்யப்பட வேண்டும், இதை அதன் வழி தொடரும் இதயங்கள் சிந்தித்தால் நலம் பயக்கும்.

மட்டுமல்லாது சமூக கண்ணியம் என்பது மிக முக்கியமான அம்சம் அது இல்லாது கண்ணியம் இழந்த சமூகமாய் வாழ்வது அர்த்தமற்றது. சில இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்வரை அப்பாவி இளைஞர்கள் அனுதினம் சிறைப்பிடிக்கப்படாத சூழல் வரை, ஊருக்கு ஊர்.., ஜாமாஆத்துக்கு ஜமாஆத் .., வீட்டுக்கு வீடு கூச்சலும், குழப்பங்களும், சண்டைச் சச்சரவுகளும் எழாத வரை இஸ்லாமியர்களுக்கென்று ஓர் கண்ணியம் அரசு அதிகாரிகளிடத்தும், காவல்துறையிடத்தும், நீதித்துறையிடத்தும், பிறச்சமூக மனிதர்களித்தும் இருந்தது. ஏனோ அவைகளெல்லாம் பாழ்பட்டது நினைக்கவே மனம் கணமாகிறது.

தற்கால சில இயக்கங்களின் செயல்பாடுகள், வழிகாட்டுதல்கள், அவ்விக்கம் சார்ந்தவர்களின் பேச்சுக்களின் மூலம் எத்தனை, எத்தனையோ இடர்பாடுகளை இச்சமூகம் சந்தித்துள்ளது. வெறும் மேடைப்பேச்சின் வசீகரமும், தீவீர போக்கும் மட்டுமல்ல அல்ல அரசியல், இதனை சரியாக உணராததால் இப்படிப்பட்ட தங்களுக்கு சேரும் வரலாறோ அல்லது அரசியல் பிண்ணனிகளோ உணராத ஆனால் சமூக உணர்வால் உந்தப்பட்ட அப்பாவி இளைஞர்களையும், சிறுவர்களையும் கலமிறக்கி அவர்கள் சுய ஆதாயம் பெறுகின்றனர். மேலும் அவ்விளைஞர்களை இரையாக்கியது போதாது..பல குடும்பங்களில் கண்ணீர் இன்னும் வற்றாது ஓட விடுவது போதாதென, யாரை மறைவில் இருக்க வேண்டியவர்கள் என்றும், யாருக்கு போர்களில் சலுகை செய்து அபயம் தரப் படவேண்டியவர்கள் என்றும், இஸ்லாம் கூறியதோ, இதய நபிகள் (ஸல்..) அவர்களும் கூறிச் சென்றார்களோ, யார் சமூகத்தில் கண்ணெனப் பாதுகாக்கப்பட வேண்டியவர்களோ அத்தகைய கண்ணியமிகு இஸ்லாமிய பெண்களை தங்களுக்கு கிடைத்த இப்போதைய ஆயுதங்களாக ஆக்கி வீதியில் இறக்கிவிட்டு

பலரின் அசூசையான கண்கள் பட கொடி பிடிக்க செய்தும், கோசங்கள் இடச்செய்தும், சில தருணங்களில் போலீசாரின் அடக்குமுறைகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் கூட ஆளாக்கி பெரும் சமூக அவலத்தையே அறங்கேற்றி வருகிறார்கள். இது கட்டாயம் களையப்பட வேண்டிய ஒன்று, அதை நம் இஸ்லாமிய சமூதாய அங்கத்தவர்கள் அனைவரும் ஆய்ந்தறிதல் காலத்தின் அவசியம். இது போன்ற எந்த ஒரு தவறான வழிகாட்டுதல்களை முஸ்லீம் லீக் தன் வரலாற்றில் என்றுமே செய்தது இல்லை, பொய்யான கூட்டம் கூட்டி அரசியல் கட்சிகளின் அனுதாபம் பெற்றதில்லை, இஸ்லாமியர்களின் உணர்வை அது என்றும் இதயமில்லாமல் இரையாக்கியது இல்லை இது காலங்கூறும் உண்மை.

இஸ்லாமியர்களுக்கு ஓர் உரிமைப் பிரச்சனை என்றால் அதை அரசியல் பூர்வமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் வராத வகையில் அரசியல் சாசன சட்டங்களுக்கு உட்பட்டு அதை எப்படி அணுக வேண்டுமோ, யாரை அணுக வேண்டுமோ, எங்கே ஒலிக்க வேண்டுமோ, எங்கே எடுத்துச்செல்ல வேண்டுமோ அதை மிகச்செவ்வனே செய்து படோடோபமில்லாமல், வீண் விளம்பரம் செய்து பொப்பிரச்சாரத்தால் மக்களிடம் பொய்ப்பெயர் வாங்கிக்கொள்ள முயலாமல் முஸ்லீம் லீக் அதற்கென இருக்கும் கண்ணியத்தை பயன்படுத்தி ‘கத்தியின்றி ரத்தமின்றி’ என்பது போல ஆற்ப்பாட்டங்கள் இல்லாமல், பேரணி கோசங்கள் இல்லாமல், போர்க்கொடிகள் இல்லாமல், வீண்செலவுசெய்து கூட்டங்கூட்டி கைது நடவடிக்கைகள் இல்லாமல், ஒரு பிரச்சனையை அதன் முக்கியத்துவம் அறிந்து அதை முதலமைச்சரின் காதுகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டுமெனில் அதை நயமுடன் முதலமைச்சரின் காதுகளுக்கு மாத்திரமல்ல அவரின் உள்ளத்திற்கே எடுத்துச்சென்றும், ஒரு விசயம் சட்டசபையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ குரலெழுப்பி தீர்வு காணப்பட வேண்டும் என்றால் அதை அவ்வாறே திறம்பட அழகுடன் செய்து தீர்வு கண்டும் மக்கள் நலனுக்காக அன்று உழைத்த இயக்கமும், இன்று உழைக்கும் இயக்கமும், நாளை உழைக்கப்போகும் இயக்கமும் தான் முஸ்லீம் லீக் ஆகும்.

ஆகவே இதையெல்லாம் தூர நோக்குடனும், நல்லறிவுடனும் சிந்தித்து முஸ்லிம் லீக்கின் சேவை இன்றைய இஸ்லாமியர்களுக்கும், இந்தியாவுக்கும் தேவை எனும் நோக்கில் இளைஞரக்ள், பெண்கள் என சமுதாயத்தில் அழகான சிந்தனைத் தெளிவு பிறந்து வருகிறது அதன் காரணமாகவே தான் எங்கும் மக்கள் தங்களை இவ்வினிய இயக்கத்தில் தங்களை இணைத்த வண்ணம் இருக்கின்றனர். ஒரு புதிய சமூக மலர்ச்சிக்காய் இந்த இயக்கத்தை தூக்கி நிறுத்தி அதை வருகின்ற தலைமுறைக்கு கொண்டு சென்று நாளைய பொழுதை மகிழ்வாக்கப் போகிறார்கள், சிறப்பாக்க போகிறார்கள் எனும் போது நம் மனமெல்லாம் நிறைகிறது. அதற்கு வல்ல பேறிறை இசைவு நல்குமாக, ஆமீன்!

-வழுத்தூர் ஜே.எம்.பாட்ஷா


21 ஆகஸ்ட் 2010

விசிட் விசா




பெருமூச்சே – எங்களின்

சாதாரண சுவாச

சப்தங்களானது,


வாக்குறுதி கொடுத்து

நம்பிக்கையூட்டும்

ஒவ்வொருவரையும் நம்பியே

நம்பிக்கை இழக்கிறோம் நாங்கள்!


ஊரில்…

வெளியே சென்றுவிட்டு வந்தாலோ

"இப்படியே பொலப்பில்லாம

ஊர் சுத்துறியே" என்ற குரல்கள் தடித்தது,


துபையில்…

வேலைத்தேடி அலைந்து விட்டு

வெறுத்துப் படுத்தாலும்

"யார் வேலைத் தருவா போய்

பார்க்கும் கட்டிடங்களி லெல்லாம்

ஏறி இறங்கு" என்ற உரல்கள் இடிக்கிறது.


நண்பர்களைப் பார்த்தால்

புலம்பி தீர்ப்பதைத் தவிர

வேறு என்ன வடிகால்..

அதிகமாக உஷ்ணப்படும் போதெல்லாம்..

ஊதித்தள்ளுவது கொண்டு தான்

சற்று தப்பிக்கிறோம் சூழலை விட்டு.


எத்தனையோ கனவுகளைச் சுமந்து

பறந்து வந்த நாங்கள்,

இரவுகளின் தனிமையில்

கண்ணீர் காதலியைத் தான்

கட்டித் தழுவுகிறோம்.


வரும் வரண்களில் – எந்த

முதலாளி மாப்பிள்ளையாவது

எங்களை மணந்து கொண்டு

வேலை கொடுத்தால் – இந்த

கண்ணிகள் மகிழ்வாய்

சொந்தம் சேர்ந்து கரை சேருவோம்.


கண்ணாடி சிரிக்க

தினம்..தினம்.. டிரஸ் செய்து,

காலையில் மணப்பெண்ணாய் புறப்பட்டு,

மாலையில் சீரழிந்தவளாய் கசங்கி வருகிறோம்.


பயோடேட்டாவை மட்டும்

சிரித்துக் கொண்டே வாங்கும் சிலர்

வேலைக் கேட்டாலோ

சிந்தித்து நிதானமாய்

பதிலைத் தேடுகிறார்கள்

அவர்களின் ஈரமொழிகளை நம்பி

தொலைபேசி தொடர்பு கொள்கையில்

செவிடு அவர்களின் செவிகளை

தொற்றிக் கொள்கிறது,

அடித்துக் கொண்டேயிருந்து

இறுதியில் நிற்கும் செல்போன் மணி.


முகம் தெரியாதவர்கள் எல்லாம்

துக்கம் விசாரிப்பது போல்

விசாரிக்க தவறுவதில்லை,

முகம் தெரிந்தவர்கள்

முன்னால் வந்தாலோ

முகம் ஏன் இவர்களுக்கெல்லாம்

என்றே எண்ணத் தோன்றுகிறது.


இந்த

கொடும் வெயில் தேசத்தில்

நெடுந்தூரம் அலைகையில்,

நடுவான் சூரியன் சுடுகையில்

வழித்து விடும்போது

பூமி தொடுவது

வியர்வை மட்டுமல்ல

கண்ணீரும் கலந்து தான்.


இங்கே

சூரியன் மட்டும் எரிக்கவில்லை

சிலரின் சிரிப்பும்

குடும்பச் சூழல் நெருப்பும்

சேர்ந்து எரிக்கிறது எங்களை,


வீட்டில் செல்லப்பிள்ளையாக

வளர்ந்தவர்கள் தான்

வீட்டை நினைத்துத்தான்

சொல்கிறோம் "நல்லா பாப்பேங்க

எந்த வேலையானாலும்" என்று

வாசல்த்தேடி நிற்கிறோம் என்பதற்காக

வயிற்றில் அடிக்கிறார்கள் – எங்களை

குறைந்த சம்பளக் கற்களால்…


தண்ணீர் தாகம்,

பசி மயக்கம் – இதற்கிடையில்

என் இனிய தாய் தந்தை

மனைவி மக்களின் முகங்கள்

நெஞ்சில் தோன்றினாலோ

மேலும் பல்கீனம்

நெஞ்சு பதைக்கிறது

பஞ்சு பற்றி எரிகிறது


இந்த

ஐஸ்கீரீம் விசாவோடு

எங்கள் வயிற்றில்

எப்போதும் நெருப்புத்தான்

கரைந்து விட்டால்

யார் தருவார்

‘ஐந்நூற்று ஐம்பது’

ரினிவல் செய்ய.


எங்களின் கனவெல்லாம்

ஒரு "எம்ப்ளாய்மென்ட் விசா"

எங்களின் மீது இரக்கமுள்ளவர்களே

ஏதாவது வேலையிருந்தால்

கொஞ்சம் சொல்லுங்களேன்..!


யார் யாருக்கோ

வேலை கொடுக்கும் துபாயே!

வேலைகிடைக்காமல் ஊர் சென்றால்

என் மக்களே - ஒரு

மண்புழுவிற்கு கொடுக்கும்

மரியாதையைக் கூட

கொடுக்காமல் போவார்களே

அதற்காகவாவது - ஓர்

வேலைக் கொடு..!

(ஷார்ஜா சீமான் அமைப்பின் 10வது ஆண்டு மலரில் பக்கம் 212-ல் வெளியிடப்பட்டக்கவிதை, 2008) - ஜே.எம்.பாட்ஷா

20 ஆகஸ்ட் 2010

சரித்திரம் சமைப்போம்.


எழுந்து வா

என் அருமை நண்பா

எழுந்து வா

- எழுந்து வா...!


நீ..!

விழுந்த போது

ஒட்டிய தூசு தட்டி

வருந்திய காயத்துக்கு

மருந்து போட்டு,

விருந்து படைக்க பலர்

அருந்தி சுவைக்க

- எழுந்து வா...!


அழுத கண்களைத்துடை

வடிந்த கண்ணீரால்

உப்பங்குளம் செய்,

உப்பை விற்று

நட்பை வாங்கு,

ஆதரவு திரட்டு

அகிலமெங்கும் உன்

ஆட்சிக்கொடி பறக்க

- எழுந்து வா...!


பூமாதேவியின் மேனியை

புண்ணாக்க வேண்டாமென,

மண்ணை உழாமல்

நெல்லைத் தெளித்தால்

நல்ல விளைச்சல்

நல்கிடுமோ நிலம்..?

அது போலவே

உன் மனம் – எனவே

- எழுந்து வா...!


நீ..!

சாகும் மனிதன் தான் – அதில்

சந்தேகமில்லை

சதை எழும்பாலானது தான் - உன்

சடலம் – இதில்

சரித்திரம் எங்கே

படைப்போமென் றெண்ணாதே

இனிப்பை நினைத்தாலே

ஜனிக்கிற தல்லவா

வாயினில் உமிழ்நீர்..!

- எழுந்து வா...!


மண்ணும் மலையும்

சரித்திரம் படைக்குமா..?

மனிதா..! உன்னைத் தானே

தேர்ந்தெடுத்திருக்கிறது

இந்த இயற்கை – எனவே

- எழுந்து வா...!


மெருகேற்றினால் தான்

தங்கமும் ஒளிரும்

அணிந்த உன் அங்கம்

பிறர் கவரும்.

நீ...!

சாதனைப் படைக்க

வாளேந்தத் தேவையில்லை

வைராக்கியம் மட்டுமே தேவை- எனவே

- எழுந்து வா...!


எத்தனைக் காலம் தான்

முன்னால் உள்ளவனின்

முதுகில் ஒளிந்து கொள்வாய் ?

உன்னையும் உலகறிய வேண்டாமா

உலகமெனும் சந்தையிலே

மந்தை ஆட்டைப் போல்

மந்த புத்தியுடன் இல்லாமல்,

சொந்த சிந்தையுடன்

விந்தை பல புரிய

- எழுந்து வா...!


குளிர்கால உறக்கம் போதும்

இருட்டறைக் குள்ளே

எவ்வளவு நேரம் தூங்குவாய் ?

கண்ணை கசக்கி விழித்துப்பார்

வெளியில் என்ன நடக்கிறதென்று,

சூரியன் உச்சிக்கு வந்து விட்டான்.

-எழுந்து வா...!


உணவும் உறக்கமும்

உலகமல்ல புரி,

உடல் நலத்திற்கே.

விழிக்க மறுக்கும்

கண்களுக் கோர்

எச்சரிக்கை விடு..!

விழிக்க மறுத்தால்

வீண்விழி வேண்டாமென

விழினோக நீக்குவேனென்று

-எழுந்து வா...!


எழுந்து வா

என் அருமை நண்பா

எழுந்து வா

(1995 ஆம் ஆண்டு எழுதிய இக்கவிதை நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் அனைவரின் முன்னால் அரங்கேற்றப் பெற்று பாராட்டப்பட்டது, பிறகு 1997ல் இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் B.H அப்துல் ஹமீது அவர்களின் அழகு குரலில் ஒரு மாலை நேரத்தில் காற்றில் தவழ்ந்து வந்தது, பிறகு துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் 2006ஆம் ஆண்டு மலரில் வெளியிடப்பட்டது) - ஜே. எம்.பாட்ஷா

14 ஆகஸ்ட் 2010

என்று அமைதியுறும்…



சொந்த தேசத்தின் மதிப்பை நாம் சிந்தித்ததில்லை,

தாய்மண்ணின் கண்ணியம் நமக்கு புரியவில்லை

சொந்த மண்ணில் வாழ்வது – அதுவும்

சுதந்திரமாய் வாழ்வது இவைகளெல்லாம்

நாம் மிக்க பேறுபெற்றவர்கள் என்பதை காட்டுகிறது.


நமக்கொல்லாம் நகம் வெட்டும் போது

சற்று சதைவெட்டி இரத்தம் வந்தால் கூட

சகித்துக் கொள்ள முடியவில்லை,

ஏனெனில் நாம் அத்தனை சுகவாசிகள்!


ஒரு நாடில்லாத அகதியிடமோ..

அந்நியன்தன் மண்ணை ஆக்கிரமிக்க

அஞ்சி..அஞ்சி..வாழ்வு வாழும்

அடிமை குடிமகனிடமோ – அல்லது

ஓர் பலஸ்தீனியிடமோ –

ஓர் ஈராக்கியிடமோ – இவைகளின்

அருமையெல்லாம் கேட்டுப்பாருங்கள்.


அவர்களின் அன்றாட நிகழ்வுகளைப் பார்க்கையில்

உள்ளம் தாங்க முடியவில்லை,

அந்நாட்டவர்களை கண்டு நிகழ்வினைக் கேட்டாலோ

கண்களில் ரத்தக்கண்ணீர் நம்மை அறியாமலே..

கேட்கும் போதே தாக்கம் இப்படி எனில் – அதை

நொடி நொடியாய் சுமக்கும் அவர்களை

நினைக்கக்கூட முடியவில்லை


ஒவ்வொரு நாளும்

பலஸ்தீனத்தின் சோகம்..

அணுகுண்டை விட அதிபயங்கரமாய்…!


கதரி அழுதிடும் குழந்தைகள்..,

கசிந்துருகி குமுறிடும் தாய்மார்கள்..,

இறைவனிடம் அபயம் கேட்டு அழுதிடும் முதியோர்கள்.. என

சோகமே அவர்களின் ஆயுளை நிறைத்து நிற்கிறது.

சோர்ந்த முகத்தில் வடிந்து கொண்டே இருக்கும்

கண்ணீர் தாரைகளின் ஓரங்களைக் கூட

சமநீதி.. மனசாட்சி கொண்டு துடைப்பதற்கோர்

தலைவன் பிறப்பெய்த வில்லை…


விஞ்ஞானப்புரட்சியும்.. பல்ஞானப்புரட்சியும்

அடைந்து விட்டதாய் மார்தட்டும்

மேற்கத்திய முதல் எட்டுத்திசை மனிதர்களில்,

சிறு இரக்கங்கூட காட்டாமல், இறுக்க மனமே பூண்டு

அதிகார புரட்சியின் மூலம் மனிதம் அழிக்கும்

துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணைக் குண்டர்களை

அதட்டிக் கேட்க ஓர் ஆடைகட்டிய ஆண்மகன்

இதுவரை பிறக்க வில்லை…

ஊன்றி எழுந்து நீதியினைக உரக்க கேட்க

உலகத்திற்கு துப்பில்லை…


ஆட்சிக் கட்டிலிலும், ஆசைக்கட்டிலிலும்..,

இருக்கும் மோகத்தால்

பாபம்.. அரபக ராஜாக்கள்

மௌனிகளாய்.. பெட்…ளாய்…மா..மிழந்து..கேடாய்..!

ஆனாலும் கேட்கிறது மனம்

இந்த மண் எப்போது அமைதியுறும் என்று…?


ஆடிப்பாடி ஓடி விளையாடி குதூகலிக்க வேண்டிய

அப்பாவி குழந்தைகளின்

அழுகை ஓலங்களெல்லாம்…

ஆனந்த ரீங்காரமாய் மாறுவது என்னாள்..?


கண்ணியமாய் இருக்க வேண்டிய – பலஸ்தீனிய

கன்னிப்பெண்களும்.. குடும்பப் பெண்களும்

உணவுக்காகவோ… உடைக்காகவோ

பாழ்பட்டு பலர்கண்பட,

பலரால் உள்ளமும் உடலும் புண்பட

நாய்போல் நடுவீதிகளில்…

திரிந்திடும் காலமெல்லாம் மாறி

நல்லக்காலம் பிறப்பது எப்போது..?


இடிபாடுகளுக்கிடையில்

இவர்களது பிணங்கள் இல்லாமல்

இயற்கையாய் மரணம் என்பது எப்போது..?


குண்டுசப்தம்.. போர்விமான ஓசை..

அழுகை ஓலம்..பேரணிப் பேரொலி..

போராளிகளின் ஓட்டம்..

திடுக்கம்..

பயம்…

சோகம்…

இவைகளெல்லாம் இல்லாத

பலஸ்தீனம் என்று பிறக்கும்….?


இறைவா..!

உன் இதய நபிக்காகவாவது

கொஞ்சம் இரக்கம் செய்..!


விடிவை இறைஞ்சி…

ஜே.எம்.பாட்ஷா