
எழுந்து வா
என் அருமை நண்பா
எழுந்து வா
-
நீ..!
விழுந்த போது
ஒட்டிய தூசு தட்டி
வருந்திய காயத்துக்கு
மருந்து போட்டு,
விருந்து படைக்க பலர்
அருந்தி சுவைக்க
-
அழுத கண்களைத்துடை
வடிந்த கண்ணீரால்
உப்பங்குளம் செய்,
உப்பை விற்று
நட்பை வாங்கு,
ஆதரவு திரட்டு
அகிலமெங்கும் உன்
ஆட்சிக்கொடி பறக்க
-
பூமாதேவியின் மேனியை
புண்ணாக்க வேண்டாமென,
மண்ணை உழாமல்
நெல்லைத் தெளித்தால்
நல்ல விளைச்சல்
நல்கிடுமோ நிலம்..?
அது போலவே
உன் மனம் – எனவே
-
நீ..!
சாகும் மனிதன் தான் – அதில்
சந்தேகமில்லை
சதை எழும்பாலானது தான் - உன்
சடலம் – இதில்
சரித்திரம் எங்கே
படைப்போமென் றெண்ணாதே
இனிப்பை நினைத்தாலே
ஜனிக்கிற தல்லவா
வாயினில் உமிழ்நீர்..!
-
மண்ணும் மலையும்
சரித்திரம் படைக்குமா..?
மனிதா..! உன்னைத் தானே
தேர்ந்தெடுத்திருக்கிறது
இந்த இயற்கை – எனவே
-
மெருகேற்றினால் தான்
தங்கமும் ஒளிரும்
அணிந்த உன் அங்கம்
பிறர் கவரும்.
நீ...!
சாதனைப் படைக்க
வாளேந்தத் தேவையில்லை
வைராக்கியம் மட்டுமே தேவை- எனவே
-
எத்தனைக் காலம் தான்
முன்னால் உள்ளவனின்
முதுகில் ஒளிந்து கொள்வாய் ?
உன்னையும் உலகறிய வேண்டாமா
உலகமெனும் சந்தையிலே
மந்தை ஆட்டைப் போல்
மந்த புத்தியுடன் இல்லாமல்,
சொந்த சிந்தையுடன்
விந்தை பல புரிய
-
குளிர்கால உறக்கம் போதும்
இருட்டறைக் குள்ளே
எவ்வளவு நேரம் தூங்குவாய் ?
கண்ணை கசக்கி விழித்துப்பார்
வெளியில் என்ன நடக்கிறதென்று,
சூரியன் உச்சிக்கு வந்து விட்டான்.
-எழுந்து வா...!
உணவும் உறக்கமும்
உலகமல்ல புரி,
உடல் நலத்திற்கே.
விழிக்க மறுக்கும்
கண்களுக் கோர்
எச்சரிக்கை விடு..!
விழிக்க மறுத்தால்
வீண்விழி வேண்டாமென
விழினோக நீக்குவேனென்று
-எழுந்து வா...!
எழுந்து வா
என் அருமை நண்பா
எழுந்து வா
(1995 ஆம் ஆண்டு எழுதிய இக்கவிதை நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் அனைவரின் முன்னால் அரங்கேற்றப் பெற்று பாராட்டப்பட்டது, பிறகு 1997ல் இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் B.H அப்துல் ஹமீது அவர்களின் அழகு குரலில் ஒரு மாலை நேரத்தில் காற்றில் தவழ்ந்து வந்தது, பிறகு துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் 2006ஆம் ஆண்டு மலரில் வெளியிடப்பட்டது) - ஜே. எம்.பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக