30 ஆகஸ்ட் 2010

முஸ்லீம் லீக்கின் சேவை இந்திய முஸ்லீம்களுக்குத் தேவை




எந்த ஒரு இயக்கமும் பிறப்பது மிகப்பலமான சமூக புழுக்கத்திற்கு பிறகாகத்தான் இருக்கும், அப்படித்தான் அன்றைய பிரிட்டீஷ் இந்தியாவில் முஸ்லீம்களுக்கென்று அவர்களின் உரிமைக்கொடியை உயர்த்திப் பிடித்து உணர்வின் மொழியை உச்சரித்து வெளிக்கொணர யாரும் இல்லாமல் மற்ற சமூகங்களெல்லாம் பெரும்பான்மையாக வாழ முஸ்லீம் என்ற ஓரினம் மட்டும் கேட்பாரற்று இருந்த நிலையில், இந்திய துணைக்கண்டத்தில் வாழும் ஒவ்வொரு இஸ்லாமியனின் மீதும் பரிவும் அக்கரையும் கொண்ட சமூக உணர்வும், சன்மார்க்க உணர்வும் மிகுந்த அறியவர்களும், அறிஞர்களும் ஒத்திசைந்து நிறுவிப் பிறந்திட்ட நாடறியப்பட்ட நல்லியக்கம் என்று பெயரெடுத்த பேரியக்கம் தான் முஸ்லீம் லீக் ஆகும்.

முஸ்லீம் லீக் தோன்றி பரந்த இந்தியாவெங்கும் உள்ள முஸ்லிம்களின் இதய ரோஜாவாக அது பீடமிட்டமர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்தது. இதற்கு வித்திட்டவர்களெல்லாம் பெரும் பெரும் சமூக பொறுப்புக்களைச் சுமந்தவர்கள்.. மிகப்பெரும் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள்.., இந்திய சுதந்திரப்போராட்டத்திற்காக தங்களை அற்பணித்தவர்கள் என்றால் அது மிகையில்லை. முஸ்லீம் லீக் அன்றைய காங்கிரஸ் கட்சிக்கு இணையான மிகப்பெரும் பலம் வாய்ந்த சக்தியாக இருந்தது எனில் அதற்கு இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

அதன் வளர்ச்சி கண்ட பெரும் பெரும் தலைவர்கள் கூட, ஏன் நேரு உட்பட்ட காங்கிரஸின் தேசிய தலைவர்களெல்லாம் பேரதிர்ச்சி கொண்டு அதன் தாக்கத்தை அறிக்கைகளாலும், மேடைப்பேச்சுக்களாலும் அவர்களின் அச்சத்தை வெளிப்படுத்தி இயக்க வளர்ச்சியையே தடுக்க முனைந்த நேரம் நெஞ்சுரத்தோடு கூடிய பதிலடிகளாலும், விளக்கங்களாலும் அஞ்சாது இயக்கம் வளர்த்த காயிதே மில்லத் போன்ற தலைவர்களின் பல நிகழ்வுகளை அடக்கியது தான் அக்கால முஸ்லிம் லீக் வரலாறு.

ஒட்டுமொத்த இந்திய முஸ்லீம்களின் உணர்வை உலகறிய செய்ய செய்வதும், நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து எட்டுத்திசை எங்கிலும் ஐக்கியத்தை நிலைபடுத்தி முஸ்லீம்களும் நாட்டின் பிற சமய மக்களும் அமைதியுடன் சச்சரவுகள் இல்லாத அமைதியைப் பெற்று நல்வாழ்வு வாழ வழிவகுப்பதும் அதன் பிரதான கொள்கையாய் இருந்தது. முஸ்லீம் லீக் என்றும் துவேச மனப்பான்மைக் கொண்டதாக அது இருந்ததே இல்லை. மேலும் அவ்வியத்தை நடத்திச் சென்ற தலைவர்களின் தலைமைத்துவமும், அவர்களின் அணுகுமுறையும், சாதுர்யமும் எல்லாதரப்பு மக்களிடமும் அது ஓர் சிறப்பான நல்லெண்ணத்தை வலுப்பெறச் செய்தன. முஸ்லிம் லீக் அதன் பெயரிலேயே ஒரு மதப் பெயரான முஸ்லிம் என்றப் பெயரை தரித்திருந்தாலும் அது என்றும் ஒரு மதவாத இயக்கமாக இருந்ததே இல்லை, மாறாக அது நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கற்றுக்கொடுத்த நல்லிணக்கத்தையே தன் அடிப்படை அடிநாதமாக கொண்டிருந்தது. நமது தலைவர் பேராசிரியர் அடிக்கடி கூறுவது போல இனவாதம் இல்லாத இதவாதத்தையே தன் நிலையாக கொண்டு பறைச்சாற்றி எல்லோருடனும் நேசத்தையும் பாசத்தையும் பிணைத்து பிறச்சமூக அமைப்பினரின் உரிமைக்கும், வாழ்வாதாரங்களுக்கும் கூட குரல் கொடுக்கத் தவறாத இயக்கமாகத் தான் முஸ்லீம் லீக் வளர்ந்தது என்பதும் அதன் வரலாற்றின் பக்கங்களே. ஆக இது நல்லிணக்கம் பேணி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் இயக்கம். லீக் என்னும் ஐக்கியம் என்ற சொல்லால் நாட்டு முஸ்லீம்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் திரள செய்த நாட்டின் பேரியக்கம், இவைகள் மூலம் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக முஸ்லீம் லீக் இருந்தது. அதனால் எல்லா அரசியல் கட்சிகளும், எல்லா அரசியல் தலைவர்களும் முஸ்லீம் லீக்கின் தலைவர்களுக்கும் மதிப்பு தந்து இதன் தயவை எதிபார்க்கும் இயக்கமாக இருந்தது. இவைகளெல்லாம் இவ்வியக்கத்திற்கு கண்ணியத்தை இயல்பாகவே வகுத்துத்தந்தன.

இன்றைய தினங்களில் தினம்..தினம் முளைக்கும் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிடும் இயக்கங்களை நினைத்தாலே நெஞ்சு பதைக்கிறது. சிலரின் சொந்த சுயநலனுக்காக அவைகள் மக்களிடம் தவறான சிந்தனையை, மதம் சார்ந்த தீவிரப் போக்கையும் விதைத்து இளைஞர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் திசைத்திருப்பி ஆரோக்கியமில்லாத சமூக சூழலை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடரக்கூடாது, அது தொடர்ந்தால் நாட்டிற்கும், வீட்டிற்கும், தனிமனிதனுக்கும் அது உகந்ததாக இருக்காது. பல இனம், பல மதம், பல மொழி என இருக்கும் நம் உயர்தேசத்தில் நமது மேன்மைக்குரிய தலைவர்கள் காட்டிச்சென்ற சாந்த வழியைப் பின்பற்றி அழகிய ஒற்றுமையோடும், அமைதியோடும் வாழும் சூழலைத்தான் வளர்க்க முயலவேண்டும், ஆனால் இன்றைய தினங்களில் சில இயக்கங்களால் அது அருகி வருவதாய் சில காட்சிகள் தென்படுகிற நிலை சரி செய்யப்பட வேண்டும், இதை அதன் வழி தொடரும் இதயங்கள் சிந்தித்தால் நலம் பயக்கும்.

மட்டுமல்லாது சமூக கண்ணியம் என்பது மிக முக்கியமான அம்சம் அது இல்லாது கண்ணியம் இழந்த சமூகமாய் வாழ்வது அர்த்தமற்றது. சில இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்வரை அப்பாவி இளைஞர்கள் அனுதினம் சிறைப்பிடிக்கப்படாத சூழல் வரை, ஊருக்கு ஊர்.., ஜாமாஆத்துக்கு ஜமாஆத் .., வீட்டுக்கு வீடு கூச்சலும், குழப்பங்களும், சண்டைச் சச்சரவுகளும் எழாத வரை இஸ்லாமியர்களுக்கென்று ஓர் கண்ணியம் அரசு அதிகாரிகளிடத்தும், காவல்துறையிடத்தும், நீதித்துறையிடத்தும், பிறச்சமூக மனிதர்களித்தும் இருந்தது. ஏனோ அவைகளெல்லாம் பாழ்பட்டது நினைக்கவே மனம் கணமாகிறது.

தற்கால சில இயக்கங்களின் செயல்பாடுகள், வழிகாட்டுதல்கள், அவ்விக்கம் சார்ந்தவர்களின் பேச்சுக்களின் மூலம் எத்தனை, எத்தனையோ இடர்பாடுகளை இச்சமூகம் சந்தித்துள்ளது. வெறும் மேடைப்பேச்சின் வசீகரமும், தீவீர போக்கும் மட்டுமல்ல அல்ல அரசியல், இதனை சரியாக உணராததால் இப்படிப்பட்ட தங்களுக்கு சேரும் வரலாறோ அல்லது அரசியல் பிண்ணனிகளோ உணராத ஆனால் சமூக உணர்வால் உந்தப்பட்ட அப்பாவி இளைஞர்களையும், சிறுவர்களையும் கலமிறக்கி அவர்கள் சுய ஆதாயம் பெறுகின்றனர். மேலும் அவ்விளைஞர்களை இரையாக்கியது போதாது..பல குடும்பங்களில் கண்ணீர் இன்னும் வற்றாது ஓட விடுவது போதாதென, யாரை மறைவில் இருக்க வேண்டியவர்கள் என்றும், யாருக்கு போர்களில் சலுகை செய்து அபயம் தரப் படவேண்டியவர்கள் என்றும், இஸ்லாம் கூறியதோ, இதய நபிகள் (ஸல்..) அவர்களும் கூறிச் சென்றார்களோ, யார் சமூகத்தில் கண்ணெனப் பாதுகாக்கப்பட வேண்டியவர்களோ அத்தகைய கண்ணியமிகு இஸ்லாமிய பெண்களை தங்களுக்கு கிடைத்த இப்போதைய ஆயுதங்களாக ஆக்கி வீதியில் இறக்கிவிட்டு

பலரின் அசூசையான கண்கள் பட கொடி பிடிக்க செய்தும், கோசங்கள் இடச்செய்தும், சில தருணங்களில் போலீசாரின் அடக்குமுறைகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் கூட ஆளாக்கி பெரும் சமூக அவலத்தையே அறங்கேற்றி வருகிறார்கள். இது கட்டாயம் களையப்பட வேண்டிய ஒன்று, அதை நம் இஸ்லாமிய சமூதாய அங்கத்தவர்கள் அனைவரும் ஆய்ந்தறிதல் காலத்தின் அவசியம். இது போன்ற எந்த ஒரு தவறான வழிகாட்டுதல்களை முஸ்லீம் லீக் தன் வரலாற்றில் என்றுமே செய்தது இல்லை, பொய்யான கூட்டம் கூட்டி அரசியல் கட்சிகளின் அனுதாபம் பெற்றதில்லை, இஸ்லாமியர்களின் உணர்வை அது என்றும் இதயமில்லாமல் இரையாக்கியது இல்லை இது காலங்கூறும் உண்மை.

இஸ்லாமியர்களுக்கு ஓர் உரிமைப் பிரச்சனை என்றால் அதை அரசியல் பூர்வமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் வராத வகையில் அரசியல் சாசன சட்டங்களுக்கு உட்பட்டு அதை எப்படி அணுக வேண்டுமோ, யாரை அணுக வேண்டுமோ, எங்கே ஒலிக்க வேண்டுமோ, எங்கே எடுத்துச்செல்ல வேண்டுமோ அதை மிகச்செவ்வனே செய்து படோடோபமில்லாமல், வீண் விளம்பரம் செய்து பொப்பிரச்சாரத்தால் மக்களிடம் பொய்ப்பெயர் வாங்கிக்கொள்ள முயலாமல் முஸ்லீம் லீக் அதற்கென இருக்கும் கண்ணியத்தை பயன்படுத்தி ‘கத்தியின்றி ரத்தமின்றி’ என்பது போல ஆற்ப்பாட்டங்கள் இல்லாமல், பேரணி கோசங்கள் இல்லாமல், போர்க்கொடிகள் இல்லாமல், வீண்செலவுசெய்து கூட்டங்கூட்டி கைது நடவடிக்கைகள் இல்லாமல், ஒரு பிரச்சனையை அதன் முக்கியத்துவம் அறிந்து அதை முதலமைச்சரின் காதுகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டுமெனில் அதை நயமுடன் முதலமைச்சரின் காதுகளுக்கு மாத்திரமல்ல அவரின் உள்ளத்திற்கே எடுத்துச்சென்றும், ஒரு விசயம் சட்டசபையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ குரலெழுப்பி தீர்வு காணப்பட வேண்டும் என்றால் அதை அவ்வாறே திறம்பட அழகுடன் செய்து தீர்வு கண்டும் மக்கள் நலனுக்காக அன்று உழைத்த இயக்கமும், இன்று உழைக்கும் இயக்கமும், நாளை உழைக்கப்போகும் இயக்கமும் தான் முஸ்லீம் லீக் ஆகும்.

ஆகவே இதையெல்லாம் தூர நோக்குடனும், நல்லறிவுடனும் சிந்தித்து முஸ்லிம் லீக்கின் சேவை இன்றைய இஸ்லாமியர்களுக்கும், இந்தியாவுக்கும் தேவை எனும் நோக்கில் இளைஞரக்ள், பெண்கள் என சமுதாயத்தில் அழகான சிந்தனைத் தெளிவு பிறந்து வருகிறது அதன் காரணமாகவே தான் எங்கும் மக்கள் தங்களை இவ்வினிய இயக்கத்தில் தங்களை இணைத்த வண்ணம் இருக்கின்றனர். ஒரு புதிய சமூக மலர்ச்சிக்காய் இந்த இயக்கத்தை தூக்கி நிறுத்தி அதை வருகின்ற தலைமுறைக்கு கொண்டு சென்று நாளைய பொழுதை மகிழ்வாக்கப் போகிறார்கள், சிறப்பாக்க போகிறார்கள் எனும் போது நம் மனமெல்லாம் நிறைகிறது. அதற்கு வல்ல பேறிறை இசைவு நல்குமாக, ஆமீன்!

-வழுத்தூர் ஜே.எம்.பாட்ஷா


கருத்துகள் இல்லை: