31 ஜூலை 2014

சதாவதானி ஷைகுத்தம்பி பாவலர் பிறந்த நாள்



இன்று கோட்டாறின் பாட்டாறு சதாவதானி ஷைகு தம்பி பாவலருக்கு பிறந்த நாள்.

அதையொட்டி நாகர்கோவில் ரேடியோ நிலையத்தார் விசேட நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும், அதில் என்பிற்கினிய கவிஞர் அத்தாவுல்லா கலந்து கொண்டதாகவும் பகிர்ந்திருந்தார். வாழ்த்துக்கள்.

ஷைகு தம்பி பாவலர் என்றாலே நமக்கெல்லாம் ஞாபகத்திற்கு உடன் வரும் நிகழ்வு ஒன்று அது.. ஒருவர் பாவலரிடம் நூறு ரூபாய் கேட்டுப் போக பாவலர் அவர்கள் அந்த நூறு ரூபாய் கொடுக்கையில் அதைப்பற்றி சொல்லிக்காட்டிய சிலாகிப்புகள் எல்லாராலும் அன்றிலிருந்து இன்று வரை ரசிக்கப்பட்டவை அது

"ஒரு" நூறு தருகிறேன்..
"இரு" நூறு தருகிறேன்
"முன்" நூறு தருகிறேன்
"நான்" நூறு தருகிறேன்
"ஐ" நூறு தருகிறேன்
"அற" நூறு தருகிறேன்
"எழு"  நூறு தருகிறேன்

இன்னும் சொன்னார்களா என எனக்கு தெரியவில்லை. இத்தனை கூறியும் குறிப்பிட்டதெல்லாம் அந்த ஒரு நூறு ரூபாயைத்தான் அது தான் சதாவதானி. நிலத்தில் தசாவதானிகளை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் தசாவதானிகளை காண்பது சிரமம் என்பார்கள்.. ஆனால் தமிழுலகம் ஏற்று போற்றிய தமிழின் உயர்வல்லமை பொருந்திய ஒருவர் இருந்தார் என்றால் அது சதாவதானி அவர்கள் தான்.

பாவலரின் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது கவிஞர் அத்தாவுல்லாஹ் பின்வருமாறு பாவலரின் சொல்லாற்றலுக்கு எடுத்துக்காட்டு தருகிறார்...

பாவலர் சதாவதானம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் ஈற்றடி கொடுத்து பாடச் சொன்னார்...

''கண் கெட்ட பின்னென்றும் காணாத காட்சியைக் கண்டனரே"

எல்லோரும் திகைத்தனர்...
அது எப்படி முடியும்...?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல் அல்லவா இருக்கிறது...

பாவலர் திகைத்தாரில்லை...
இந்து மத வேதங்களையும் இலக்கியங்களையும் விரல் நுனியில் வைத்து விளையாடும் அவர்க்கு இந்த ஈற்றடித் தலைப்பு எம்மாத்திரம்...?

அவர்க்குப் பெரிய புராணத்தின் காட்சி ஓன்று கண்களில் ஆடியது.
ஆமாம். திண்ணப்பர் கண்ணப்பரான கதையது..

வேட குல கண்ணப்பர் ஒரு சிவ பக்தர்...
காட்டுப் பொருட்களையும் வேட்டைப் பொருட்களையும் சிவனுக்குக் காணிக்கையாய் படைப்பவர்...
ஆனாலும் அனுதினமும் அயராமல் சிவ பூசை செய்பவர்...

அவரிடம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிவனுக்கு வந்தது...
என்ன செய்தார் தெரியுமா...?
அவர் பூசை செய்யும் நேரத்தில் தன்னுடைய கண்களில் இருந்து இரத்தக் கண்ணீரை வழிய விட்டார்...

பதறிப் போனார் திண்ணப்பர்...

ஐயையோ...! என்னுடைய சிவன் கண்களில் இரத்தமா...
எப்படித் துடைப்பேன் என்று யோசித்தார்..
ஏதேதோ செய்து பார்த்தார்...
வேடருக்கு என்ன மருத்துவம் தெரியும்...?
பக்கத்திலே கிடந்த மூலிகைகளைப் பறித்து வைத்தியம் செய்தார்...
அப்போதும் இரத்தம் நிற்கவில்லை..

ஒன்றுமே புரிய வில்லை..
திகைத்து நின்றவருக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது...

அப்படிச் செய்து பார்த்தால் என்ன என்று நினைத்தவர் தன கையில் இருந்த வேலைக் கொண்டு தன்னுடைய ஒரு கண்ணைப் பெயர்த்தார்...
அப்படியே சிவன் கண்ணில் பொருத்தினார்...
வழிந்த ரத்தம் நின்றது...
கண்ணுக்குக் கண் சரியாயிற்று.....!

மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் திண்ணப்பர் ...
ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை...
சிவனுக்கு மீண்டும் ஒரு விபரீத எண்ணம்...
இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்த்தால் என்ன...?

திடீரென்று அடுத்த கண்ணிலும் இரத்தத்தை வழிய விட்டார்..
இப்போது திண்ணப்பர் திணறவே இல்லை..
உடனே தன்னுடைய மற்றொரு கண்ணையும் பெயர்த்துப் பொருத்தி விட்டார்...
அகமகிழ்ந்து போனார் சிவபெருமான்...

இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட வேட பகதனையா சோதித்தோம்...?

அவனுக்கு தன்னுடைய திருக்காட்சியை வழங்கி விட வேண்டியதுதான் என்று திருக்காட்சி வழங்கினார்..

திண்ணப்பருக்கு இப்போது சிவக் காட்சி கிடைத்தது..
ஊனக்கண் போன பிறகு ஞானக் கண் கிடைத்து இதுவரை காணாத காட்சி கிடைத்தது..

திண்ணப்பனே! ...எனக்குக் கண் வழங்கிய காரணத்தால் இன்று முதல் உனக்குக் கண்ணப்பன் என்ற பெயரை வழங்குகிறேன் என்று கூறி திருக்காட்சி வழங்கினார் சிவ பெருமான்...

பக்தனுக்கு இறைக் காட்சியை விட வேறென்ன வேண்டும்...?

இதை அப்படியே கவிதையாக்கி ஒவ்வொரு வார்த்தையாக உதிர்த்துக் கவிதையாக்கினார் பாவலர்...

"விண் தொட்டசையும் தருமலி கானில்
பண்பட்ட செந்தமிழ் பாவாணர் போற்றும் பரமன் விழி
புண் பட்டதென்று தன் கண்ணைப் பெயர்த்துப் பொருத்தியிரு
கண் கெட்ட பின்னென்றும் காணாத காட்சியைக் கண்டனரே..."

இந்த இலக்கிய அழகில் கேள்வி கேட்டவர் மட்டுமா அனைவருமே அழகிய இலக்கியக் காட்சியை அல்லவா கண்டார்கள்...?

தமிழ் அன்பர்களுக்காக மேலும் ஒரு தகவல்....

பாவலர் சொன்ன ஏகம்...!

பல் சமய நண்பர்களுடன் பழக்கம் கொண்டிருந்தும் எந்த மத காழ்ப்புணர்வுக்கும் இடம் கொடுக்காதவர் பாவலர்..

சமயக் காழ்ப்புணர்வுக்கு அப்பாற்பட்டு பிற சமய தெய்வங்களைப் பாடினார் எனினும் அடிநாதமாக ஏகத்துவம் எனும் ஒளியிழை அவர் பாடல்களில் பொதிந்து கிடந்தது...

நபிகள் நாயக மான்மிய மஞ்சரியில் ஏகத்துவம் குறித்து அவர் பாடுவதைப் பாருங்கள்...

எவையெல்லாம் இறை என்று மக்களால் கருதப் படுகிறதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாய் ஒதுக்கி வைத்து விட்டு
உண்மையான ஏகத்தை நிலை நிறுத்த முயல்கிறார்...

யோகமன்று ஞானமன்று யூகமன்று மோனமன்று
தேகமன்று நாமமன்று சித்தமன்று சத்தமன்று
போகமன்று சுத்த பரிபூரணத்தில் பூரணமா
ஆக நின்ற ஏகம் ...

வானுமில்லை நீருமில்லை வாயுமில்லை தேயுமில்லை
நானுமில்லை நீயுமில்லை நாளுமில்லை கோளுமில்லை
பானுமில்லை மீனுமில்லை பாரமதியோடு வெளி
தானுமில்லை ஏகம்

விண்ணுமில்லை மண்ணுமில்லை மேலுமில்லை கீழுமில்லை
பெண்ணுமில்லை ஆணுமில்லை பேடுமில்லை மூடுமில்லை
தண்ணுமில்லை சூடுமில்லை சார்ந்தகர ணாதிகளின்
கண்ணுமில்லை ஏகம்....


இத்தகு ஆற்றல் பெற்ற  கோட்டாரின் பாட்டாறு சதாவதானி செய்கு தம்பிப் பாவலர்
அவர்களின் பிறந்த நாள் இன்று ...


அன்னாரைப்பற்றி இன்னும் கூடுதல் தகவல் நாம் கற்கவேண்டும். தமிழின் சுவையை இவர் போன்ற கடல்களில் கொஞ்சமேனும் நம் சிட்டுக்குருவி அலகாலேனும் பருக ஆசை கொள்ளவேண்டும்.

வாழ்க தமிழறிஞர்கள்!
வளர்க என் தாய்த் தமிழ்!!
உயர்க தமிழர் தம் மாண்பு!!!




படம்: சதாவதானி ஷைகுத்தம்பி பாவலர், மற்ற படத்தில் கவிஞர் அத்தவுல்லாஹ் அவர்களுடன் நாகர் கோயில் வானொலி நிலைய தொகுப்பளர் திரு.சண்முகையா அவகர்கள்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

30 ஜூலை 2014

எடுப்பார் கைப்பிள்ளைகள் திருந்தட்டும்

முகநூலில் வெளியாகி எங்கும் பரவிவரும் ஒரு புகைப்படம் என்னை வேதனைக்குள்ளாக்கியது.. இது குறித்து நீங்கள் பலரும் அறிந்திருப்பீர்கள்..அந்த புகைப்படத்தில் நிற்கும் இளைஞர்களுக்கும், அதை ஆதரிக்கும் ஒரு சில ஆட்களுக்கும் சிலவார்த்தைகள்....

மூடர் கூட்டம் ஒன்றை வைத்துக்கொண்டால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற சிந்தனை அபாயகரமானது.. மூதேவிகள் சிலரால் இந்த சமூகத்திற்கு கிடைத்த அவப்பெயர் இன்னும் நீங்கவில்லை... சமூக அரங்கில் பின்னுக்கு இருக்கும் சமூகத்தை முன்னேற்ற ஒழுங்கான வேலையை பார்க்காமல் இன்னும் எத்தனை பேரடா புறப்படுவீர்கள்.. ஏற்கனவே கணக்கற்ற பிரிவுகளாய் காரி உமிழும் வகையில் சிதைந்து சின்னா பிண்ணப்பட்டு நிற்கிறது இந்த சமூகம்.

நல்ல சிந்தனையை வளர்த்துக்கொள்ளுங்கள்.. நல்ல நீதமான தலைவர்களை பின்பற்றுங்கள்.. எவனவெனோ உணர்ச்சி வசப்பட்டு பேசினால் அவனுக்கெல்லாம் அல்லாஹ் அக்பர் எனச்சொல்லிக் கொண்டு பின்னால் ஓடாதீர்கள். சுயசிந்தனை இல்லாவிட்டால் இன்னும் கடைநிலைக்கு போய் அசிங்கப்படுவீர்கள், ஏற்கனவே முகநூல போன்ற சமூக ஊடகங்களில் எப்படி மெளடீகமாகவும், மதவெறியை தூண்டுவதாகவும் சில மாற்று மத அமைப்புக்கள் நாசகார சிந்தனையை தூண்டுகிறதோ அதே வகையில் நீங்களும் சமூகத்தின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் வகையில்லாத தேவையில்லாத விசயங்களை பறிமாறி ஏன் உங்களையும், உங்களை சார்ந்தோரையும் படுகுழிக்குள் தள்ளிக்கொல்லுகிறீர்கள்...

உங்களைவிட உணர்ச்சி வசப்பட்ட எத்தனையோ நபர்களின் வாழ்வு இன்றுவரை விடைகிடைக்காமல் உள்ளது, சிறைக்கூடம் நிரந்தர வாழ்வுக்கூடாரமாகி அவர்களது தாயும், தகப்பரும், மனைவி மற்றும் பிள்ளைகளும் நிற்கதியாகி நிற்பதை நீங்கள் அறிவீர்களா.. அவர்களின் ஆராத்துயர் நீங்க இன்னும் வழி பிறக்கவில்லை

உங்களை உசுப்பேற்றிவிடும் நபர்கள் உங்களை ஓட விட்டுவிட்டு பின்னால் ஒளிந்து கொள்வர்.. நீ பிடிபட்டால்.. நீ சிறைபட்டால்.. ஒரு பயல் உன்னை சீண்ட மாட்டான்.. பிறகு அழுதென்ன லாபம் உனக்கு வேண்டுமானால் இது தியாகமாக தோன்றலாம்.. ஆனால் முன்பின் யோசனையில்லாத மகா அறிவிழித்தனம் என சமூகமே உன்னை தூற்றும் ஆனால் உன் சகஅறிவிழி அதற்கு மார்க்கப்பாதை என பெயரிட்டால் அது உனக்கு போதையூட்டலாம்... அது நிதர்சனமல்ல.





எவனுடைய இயக்கத்துடையவோ எழுத்தை நீ பனியனாக வாங்கி அணிந்து போஸ் கொடுக்கிறாயே.. அது என்ன..? அதன் பின்னணி யாது..? அவர்களின் உருவாக்கம் எப்படி..? அவர்களின் கொள்கை ஏற்புடையதா..? இது போன்ற கூட்டத்தினால் என்ன பயனுண்டாகும்.. பழங்கால வரலாறு எப்படி என எதையாவது மக ஆழமாக சிந்தித்தது உண்டா.. அது இந்த பூமிக்கு எந்த வகையிலும் தொடர்புடையதா... ??????????????

பெரும்பாலனவர்கள் உன் புறவாழ்வை பார்த்துத் தான் உன்னையும் உன் சமூகத்தையும் எடை போடுகின்றனர் அவர்கள் உட்கார்ந்து உன் விலாசம் என்ன உன் சமயம் சொல்லு அறக்கருத்துக்கள் எது எனவெல்லாம் பார்க்க மாட்டார்கள் அதனால் திருந்து எல்லோருக்கும் கெட்டப்பெயர் வாங்கிக்கொடுக்காதே. நீங்கள் ஏதோ ஒரு தெருவில் ஒரு சிலர் செய்யும் சில தகாதவைகள் ஒரு தேசத்து ஒட்டுமொத்த சமூகத்தின் பெயருக்கே கலங்கம் ஏற்படுத்தும் அளவில் இருக்கிறது.இதையெல்லாம் சிந்தித்து திருந்தி நடந்தால் நன்மை பிறக்கும், இல்லையேல் ஒன்றும் சொல்வவதற்கு இல்லை!

பெரியோர்களை மதித்து... உணர்ச்சி வசத்திற்கு அப்பாற்பட்டு.. பொறுமையோடு எதையும் ஆராய்ந்து நிதானமாக முடிவெடுத்து எல்லோரையும் அன்பு செய்து அரவணைத்து யாரையும் பிரித்து பார்க்காது வாழப்பழகினால் உன் வாழ்வும் மகிழ்ச்சியாய் இருக்கும், எல்லோருக்கும் நல்லது.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 ஜூலை 2014

மகனின் மழலை நோன்பு

சுல்தான் அஹமது நளீர்


J Mohaideen Batcha
என் செல்லக்கண்மணி அன்பு மகன் அஹமது நளீர் தனது ஐந்தாம் அகவையில் முதன் முறையாக இன்று ஒரு நோன்பை நிறைவாக்கியிருக்கிறார்.

அந்நாளில் இதே ஐந்தாம் அகவையில் நான் முதல் நோன்பு வைத்துக்கொண்டு மதியம் தாண்டிட பசியால் வாட எனது தாயார் என்னை தன் இடுப்பிலேயே சுமந்து ஆருதல் சொல்லி.. ஆருதல் சொல்லி.. என்னை அமைதிப்படுத்தி... அந்த ஆறரை மணியை தொடும் வரை என்னை தேற்றி அதிலும் சிலோன் ரேடியோவில் பாங்கு சொல்லும் போது அது தான் பாங்கு சொல்லிவிட்டார்களே என அந்த பாங்கிற்கே நோன்பை ஆவலாக திறந்த நிகழ்வெல்லாம் என் நெஞ்சத்திரையில் படமாய் வருகிறது.

அன்புச் செல்வம் அஹமது நளீர் எல்லா நலவளங்களும் பெற்று இறையருளும், இரசூல் நாயகத்தின் இதயமலரருளும், இன்னும் மெய்ஞானிகள் எல்லோர் அருளும் சூழ நிறைநலத்துடன் வாழ்ந்திடட்டும். தகைசால் தாங்களும் வாழ்த்துங்களேன்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

19 ஜூலை 2014

வாலி!

வாலி!
அவன் முதுமக்கள் தாழி!!
தோண்டி எடுக்க.. எடுக்க..எல்லாம் 
ஆவணப்படுத்தப்பட வேண்டிய அதிசயம்!!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 ஜூலை 2014

நன்னாட்கள்!

வாழ்வில் ஆகியிருந்த 
சுபதினங்கள் சிறப்பான கணங்கள் 
எல்லாம் எப்போதும்
சுகமானதாய் மட்டுமே கடப்பதில்லை,
அந்நாளின் மனநிலைகளாலும்
சூழ்நிலைகளாலுமே முடிவாகிறது
அவற்றின் சுக..துக்க.. அளவீடுகள்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

11 ஜூலை 2014

ஹனீபா குரல் சுலைமான்

கேட்டுப்பாருங்கள் வழுத்தூர் சுலைமானின் பாடலை

இவர் மதிப்பிற்குரிய பாடகர் நாகூர் ஹனீபா அவர்களால் ஈர்க்கப்பட்டவர் அவரது அத்தனை பாடல்களையும் அவரைப்போலவே பாடுவார், எங்கள் ஊரிலும் சுற்றுப்புறங்களிலும் நடக்கும் சுபகாரியங்களில் ஹனீபாவின் பாடல்கள் லைவாக இவரது குரலில் தான் ஒலிக்கும், எங்கள் ஊர் மதரஸா பள்ளியில் இவரது குரலில் அடிக்கடி பாங்கின் ஓசையை ஹனீபா வாய்ஸில் கேட்டுமகிழலாம். பள்ளிக்கூட நிகழ்ச்சி மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளிலும் இந்த ஹனீபா சுலைமான் ஆஜராகி பாடாமல் இருக்கமாட்டார். சுலைமான் எல்லோரிடமும் அழகாக நகைச்சுவையோடு பழகும் பண்பு கொண்டவர், நான் உட்பட எல்லோரிடமும் மிகுந்த பாசமும் நட்பும் பாராட்டுபவர்.

தற்போது வேலை நிமித்தமாக அபுதாபியில் வசிக்கிறார், ரூம் நண்பர்கள் ரஜீக், பாவாஜி, ஷாஜஹான், மற்றும் பலர் இந்த கிளிப்பை பாடச்சொல்லி தரவேற்றி உள்ளார்கள்.

வாழ்த்துவோம் சிறப்பான குரல்வளம் கொண்ட ஹனீபா சுலைமானின் பிரகாசமான எதிர்கால வாழ்வுக்காய்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

10 ஜூலை 2014

பாழ்பட்டிருக்கும் பலஸ்தீனமே!







நோன்பு திறக்கும் நேரம் கூட 
தேம்பித் தேம்பி அழுதது மனது!

தொழப்போனேன் பள்ளிக்கு
தொய்வின்றி வியாபித்திருந்தது
அந்த அழிச்சாட்டியக்கொடூரங்களின் மீதான 
கேள்விக் கொக்கிகள் என்னில் எங்கும்!

சிந்தனை எல்லாம் இன்று இதுதான்
சிந்திய இரத்தம் போதாதா இப்போதும் ஏன் என்று?

நாமெல்லாம் இரமலானை
புனிதமென்றும் அருள் தேடிடும் மாதமென்றும்
பக்தியில் மூழ்கிடும் போதினில்
அங்கே அதே இறைவனை நோக்கி
பல அபலைகளின் குரல்....
"இறைவா... நாங்கள் மட்டும் என்னபிழை செய்தோம்
இப்படி எங்களை சோதிக்கிறாயே" என்று...
மாற்றைப்பற்றி சிந்திக்கவே இயலாததாய்
தேம்பலும்... கூப்பாடும்..அழுகுரலும்
அவர்களின் இபாதத்தாய் ஆனதே!

வலிமையான அரசமைப்பும்
இராணுவ பலமும் அவர்களிடம்
குன்றினை கூட வசப்படுத்தமுடியாத
குன்றிப்போன அரசென்பதாய் ஒன்று மட்டும் இவர்களிடம்!

மிகப்பெரிய டேங்கிகள் அவர்களிடம்,
ஒரு ஓட்டை துப்பாக்கிக்கூட இல்லை
இந்த இளைஞர்களிடம்,

ராக்கெட் லாஞ்சரெல்லாம் அவர்களிடம்
பொறுக்கி எடுத்த கட்டிட இடிபாடுகளின்
கற்கள் மட்டுமே இவர்களிடம்!

இதையெல்லாம் வைத்து என்னதான்
செய்வதாம் இவர்கள்???
பக்கத்து வசிப்பிடம்
படுகொடூர சப்தத்தோடு
குண்டிற்கிறையான ஓலம் பார்த்து
இரண்டரை வயதேயான
தன் தம்பி திடுக்கிடுகிறானே என
தமையனவன் சற்றே அணைத்துக்கொண்டிருந்தான்,
செத்துக்கிடந்தனர் அவர்களிருவரும்
அதே கிடப்பிலே அணைத்தவாரே அடுத்தச்சனம்.
நேற்று முன் தின இஸ்ரேலிய தாக்குதலில்!

வழக்கமான நாள் பொழுதில்
அழிக்கவந்த குண்டுகள் மீதி இருந்த
குடும்பங்களின் எதிர்காலங்களை
கேள்விக்குறியாக்கிவிட்டு போக!!
சிக்குறக்கூடாதே என வீட்டிலிருந்து
வீதியிலே அலறலோடு பீதியிலே
வாலிபர்கள் நிறைந்த ஆண்கள் கூட்டம்
என் புள்ளகுட்டிங்கள்ளாம் போச்சே
என்றெ அழுதோடும் பெண்கள் கூட்டம்
பறிதவித்தோடிட..மீண்டும்.. மீண்டும்..
துறத்திக்கொண்டு வருகிறதே
விழும் குண்டுகளின் பிரமாண்ட சப்தமும்
உயிரை குதறும் அதிர்வும்..
சாவை போர்த்தும் இருளும்...!!!!!!!!!!!!!!!!

என்று தான் விடியுமோ அவர்களுக்கு
இறைவா!!!!??????

பாழ்பட்டிருக்கும் பலஸ்தீனமே
உன் இரணங்களுக்கு
மருந்து கிடைக்குமா????

நீ சுகமாவாயா?????


வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா




05 ஜூலை 2014

பெற்றோர்கள் வளர்ப்பும் நோன்பும்

எல்லா இடங்களிலும் ஒரு சிலர் நோன்பு பிடிப்பதில்லை.. அதற்கு காரணம் சிறுபிராயத்திலிருந்து மார்க்கக்கடமைகளின் சிறப்பை சொல்லி அதனை அப்பிராயத்திலிருந்தே பழக்காதது தான் பெற்றவர்கள் ஆஹா.. என் பிள்ளை எப்படி நோன்பு வைப்பான் தாங்க மாட்டான், ஸ்கூல் வேறு செல்ல வேண்டும் அதனால் வைக்க வேண்டாம் என்று சொல்லி அவர்களை ஆரம்பத்திலிருந்தே செல்லம் எனச்சொல்லி கெடுத்து வைப்பது தான், அவ்வாறு வளர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் திடீரென நோன்பு வைக்க அவர்களால் முடிவதில்லை

என்னைப்பொருத்தவரை நல்ல உடல் நலம் இருந்தும் நோன்பு பிடிக்காதவர்களுக்கு பெரும்பாலும் நாம் எப்படி வைக்க முடியும் என்ற பயமே காரணம். இதற்கு விதி விலக்காக நான்கு ஐந்து வயது முதலே நோன்பு வைக்கச்சொல்லி ஆசையூட்டி அப்படி வைத்து முடித்துவிட்டால் மிகப்பாராட்டி வளர்தெடுக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறது. இத்தருணத்தில் எனது மிக இளம்பிராயத்தில் தனது இடுப்பில் சுமந்து இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது, அதோ அந்த கடிகாரமுள் இந்த இடத்திற்கு வந்தது நீ நோன்பு திறந்து விடலாம் என என்னை வளர்தெடுத்த தாயாருக்கு வல்லவன் அல்லாஹ் நீண்ட ஆயுளும், நல்ல உடல் நலமும் கொடுத்து சிறப்பாக்கி வைக்க துஆ செய்கிறேன். ஆமீன்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மாபாவி

விலங்குகள் எல்லாம் மனிதனை நம்புகிறது
மனிதன் தான் கழுத்தறுக்கிறான்!

**************

தழைத்து கிளைத்து நிழல்கொடுத்தது மரம்
தழலினில் காலூன்ற வழியில்லாத போதும் உணரகிறானில்லை, 
கொடூரமாக வெட்டிய மரங்களில் 
அவன் பேரக்குழந்தையின் அழுகுரலை!

*****************

இருக்கிறதென்று செலவழிக்கும் தண்ணீரோ அளவீடுக்கப்பால்,
வறண்டிருக்கும் நாவிற்கு சொட்டுமில்லை என்றானால்..
நீரே நீ கிடைத்தால் போதுமென்று தேடுகிறான்
உற்றபின் உயிரே மீண்டும் வந்தது போல் பெருமூச்சு..
அந்நிம்மதிக்கு அப்பாலோ மீண்டுமவன் நீரழிக்கும் மாபாவி.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா