20 ஜூன் 2017

தெய்வீகம் சொட்டும் பானம்தன்னிலை மறத்தல் என்பது
ஆன்மீகத்தின் படிநிலை தான்
அதுபோன்ற
நம்மை மறந்த ஒன்றிப்பை..
மெய்மறத்தலை.. 
சனநேர ஜென்நிலையை..
போகிற போக்கில் தந்துவிடுகிறது;
இளஞ்சூடினும் கொஞ்சம் கூடுதலாய்
நா மொட்டுக்கள் பொறுக்கும் அளவு சூடும்..
ஆவிகள் அதிலிருந்து அழகாய் பிரிய
நாசியில் தொற்றிக்கொள்ளும்
மென்மைக்கும் வன்மைக்கும் இடைப்பட்ட
வசீகர நன்மணமும்..
சுவை நரம்புகளையே சொக்கவைத்திடும்
கொஞ்சமும் கூடுதல் குறைவின்றி
அழகுற சங்கமமான
இருந்தும் இல்லாத கசப்பும்,
இருப்பை உணர்த்தும் துவர்ப்பும்
இதமாக இட்ட இனிப்பும்
அமையப்பெற்ற கோப்பை தேநீர்.

.
.
.
.
அதிலும் நீ
காதலையும் கரிசனத்தையும்
உன் கனிவிரல் தீச்சுவையையும்
கரைத்துக்கொடுத்தால்
அவ்வளவு எளிதில்
வெளிவரத் தான் முடிந்திடுமோ
தரிசனத்திலிருக்கும் நிராமயத்திலிருந்து.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா.
20-06-2017
1.31 அதிகாலை.