10 ஜூலை 2012

தனிமரம்




கூட்டத்தோடு சேர்ந்து 
ஆடி அசைந்து 
நெளிந்து மகிழ்ந்திடும் 
மரத்திற்கு தெரியாது,
தனி மரத்தின் 
வெறுமை.., 
ஏக்கம்.., 
துக்கம்.., 
ஆவல்..., 
பெருமூச்சின் சூடு, 
விழியோர கண்ணீர்..,
கனவுகளின் மீதுள்ள பிரார்தனை..
இவற்றின் வலி!

ஒற்றை மரத்தினது
மனதின் அதீத கனத்தினை
கூட்டத்தொகுப்பாய்
கூடிக்களிக்கும் மரங்கள்
காற்றின் ராகத்திற்கேற்ப
தூரத்திலிருந்து பார்த்து
உணராது நகைத்தவாறே கூட
ஆடிக்கொண்டிருக்கலாம்..

அவைகள்,
தனிமரத்தின் மிக தடித்து..
காலத் துக்கத்தில் 

சிதிலமடைந்த
நினைவு பட்டைகளை
உரித்தா பார்க்க போகிறது..???



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

09 ஜூலை 2012

கீழக்கரை டைம்ஸ்-க்கு வாழ்த்து



கீழக்கரை டைம்ஸ்.. இணைய வெளியில் இணையில்லாத தளமாக செயல்
பட மனமுவந்த வாழ்த்துக்கள்! கீழக்கரை டைம்ஸ் பிளாகாக இருந்த போதே
 தன் தனித்தன்மையை நிரூபித்த தளம்.. இப்போது தனித்தளமாக 
ரூபமேற்றிருப்பது நமது சமூக ஊடகத்தின் முதல் படியாய் திக்ழட்டும்.. 
இதன் தொடக்கமாக நிறைய நிறைய ஊடகத்துறையில் சாதிக்க வல்ல 
இறைவன் அருள்வானாக!. தளம் இப்போது காணவே மிக செழிப்பாக 
விளங்குகிறது, இன்னும் தளத்திலிருந்து மிக சிறப்பான சேவையை 
எதிர்பார்க்கிறோம். சமூதாய சிந்தனை உள்ளவர்களால் தான் 
ஊரைப்பற்றியும், உலகைப்பற்றியும் சிந்திக்கமுடியும்.. சமூக
உணர்வுள்ளவர்கள் என்றும் உயர்வானவர்கள். தனக்கென்று வாழாது 
பிறர்கென்று வாழுதல் மிகச்சிறப்பு. அந்த வகையில் கீழக்கரை எனும் 
பெரும்பதிக்கு எவ்வாறு நீண்ட புகழ் உண்டோ அது போல் கீழக்கரை டைம்ஸ் 
தளமும், ஹமீது யாசீன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சிறப்புற வாழ்க! நமது தமிழ் 
சமூகத்திற்கு முன்னோடிகளாய் திகழ்க!

கீழக்கரை டைம்ஸ் - பார்வையிட அழுத்தவும்.


ஜா.முஹையத்தீன் பாட்ஷா

புஜைரா மண்டல செயலாளர்
அமீரக காயிதெ மில்லத் பேரவை



06 ஜூலை 2012

இறைநேசப் பெருவேறு

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் சென்ற 03-07-2012 மாலை மறைந்த மஹான் மகா கண்ணியம் பொருந்திய இஸ்லாமிய பேரறிஞர் அண்ணலாரின் அஹ்லுல்  பைத்தென்னும் புனித திருக்குடும்பத்தில் வந்துதித்த‌ அஷ்ஷெய்கு மௌலானா மௌலவி ஹஜ்ரத் 'செய்யிது அலவி' பாஜில் மன்பஈ கிப்லா காதிரிய்யு அவர்களின் மறைவிற்காய் என் இதயம் எழுதிய இரங்கற்பா


தவராஜ செம்மேரு
இதற்கோர் இலக்கணமாய் வாழ்ந்த
இறைநேசப் பெருவேறு!

வழுத்தூர் பதியில்
வாழ்ந்து முடித்த
கடைஞான வள்ளல்!

சூஃபி தத்துத்துவத்தை
சூசகமாய் வாழ்ந்து காட்டிய
எதார்த்தத்தின் ஏகாதிபதி!

ஞாலத்தின் ஞானம் பேசி
கோலத்தில் வெண்நரை தரித்த
குழந்தை மனக் கோமான்!

நாயகம் விரும்பிய எளிமையை
தாயகமாக்கி ரசித்து
வாழ்ந்த சீமான்!

எளிமையாக வாழ்ந்து
வலிமையான தவக்கோலம்
பூண்டிருந்த புண்ணிய பிறவி!

தாயுமானவர் தான் இவர்,
எந்தத்தாய் தான் இவர்க்கு நிகர்!

இல்லறத்தில் கட்டினீர் ஆரணம்
நல்லறம் நடத்த விரும்புவோர்க்கு
நீங்களே தலை சிறந்த உதாரணம்!

ரத்தின முத்தான திங்களை
கண்டு கொண்டவரெல்லாம்
இதய ஒளி பெற்றனர்!

வாழ்வினில் உண்மையாய்
வாழாதவர் மத்தியில்
மனத்தூய்மையுடன் மணந்த
நறுமணத் திருமனம்!

தத்துவம் ஆயிரம் பேசினும்
'அஸி'த்'துவம்' அறியா மாந்தரில்
'தத்துவமஸி'யாய் தனித்துவம் பெற்றீர்!

ஜீவனோடிருந்த போதே
சதா சமாதிநிலை கண்டீர்!
ஜீவன் துறந்த நிலையில் இன்று,
ஜீவசமாதியில் நித்தியம் கொண்டீர் !

சத்தனில் நித்தமும் சங்கமம் ஆன நீங்கள்
நித்திரை கொள்வதும்  சங்கையின் சந்நிதி!
அங்கே என்றும் பொங்கிடும் நன்றே பெருகிடும்
முத்திரை தூதின் தங்கிடும் அருள்நிதி!

அல்லாஹ் அருள்க!
அவன் அருட் தூதர் அருள்க!
எல்லா நேசரும் அருள்க!
நீங்களும் எங்கட் கருள்க!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



பொருள் :
செம்மேரு : குறைகளற்ற மலை
பெருவேறு : பெரு+ஏறு (ஏறு : சிங்கம்)
பதி : இடம்
கடை : கடைசி அல்லது இறுதி
கோமான் : அரசர்
சீமான் : செல்வ செழிப்புள்ளவர்
தத்துவமஸி என்பது ஆன்மீக உயர்நிலையை விளக்கும் வடமொழி வேதச்சொல் (தத் : அது (அப்பரம் பொருள்)துவம் : நீ(யாக)அஸி : உளாய்)
சமாதி : சமம் + ஆதி அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.
சத்தன் : இறைவனை குறிக்கும் சொல், நித்தமும் : எப்போதும்
சங்கை : கண்ணியம் முத்திரை : இறுதி, தூது : நபித்துவம்


04 ஜூலை 2012

"அஸ்ஸய்யித் மெளலானா மவ்லவி செய்யித் அலவி ஹஜ்ரத்" அவர்களின் நல்லடக்கம்

நேற்று(03-07-2012 ) மாலை மறைந்த மஹான் மகா கண்ணியம் பொருந்திய இஸ்லாமிய பேரறிஞர் அண்ணலாரின் அஹ்லும் பைத்தென்னும் புனித திருக்குடும்பத்தில் வந்துதித்த‌ அஷ்ஷெய்கு மௌலானா மௌலவி ஹஜ்ரத் செய்யிது அலவி பாஜில் மன்பஈ கிப்லா காதிரிய்யு அவர்களின் புனித ஜனாஸா இன்று காலை தஞ்சை மாவட்டம் வழுத்தூர் பிரசித்தி பெற்ற 465 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த தர்ஹா சரீபில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் மகான்களின் நிலையைப்பற்றியும்,  மனித வாழ்வின் எதார்த்தத்தை பற்றியும் தேங்கை சர்புத்தீன்,வி.ஏ.ஓ.அப்துல் காதர் மற்றும்  எஃப்.அப்துல் கரீம் உட்பட அறிஞர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்ந்த்தினர். ஹஜ்ரத் அவர்களின் மகனார்களான மெள்லானா முஹம்மது அலி, மெளலானா சித்தீக் அலி உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர். 

ஹஜ்ரத அவர்கள் மிகப்பெரிய ஞானியாக வாழ்ந்து வந்த தன்னிகரற்ற தவஞான சூஃபி, எதார்த்தத்திலும் எதார்த்தமாய் உலகியல் வாழ்வை வாழ்ந்து.. நாடி வருபவர்களுக்கெல்லாம் ஆன்மீக போதத்தையும், சிறப்புயர் நல்துஆ வையும் அள்ளி வழங்கி அன்பை சொறிந்து வந்த மிகத்தூய ஆன்மா ஆவார்கள்.

"ரலியல்லாஹு அன்ஹும் வரலு அன்ஹு" அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான் அவர்களும்  அல்லாஹ்வை பொருந்திக்கொண்டார்கள். - அல் குர்ஆன்










































நன்றி : மு.மு.ஜா.சா

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா