26 பிப்ரவரி 2017

தேசியத் தலைவரானார் பேராசிரியர் காதர் மொகிதீன்

எங்களிடை மட்டுமிருந்த ஒளிவீசும் வைரம் இந்திய முஸ்லிம் சமூகத்தின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது *** பெருந்தன்மைப் பண்பினாலும் பேரறிவின் ஒளியினாலும் தன்னிகரில்லா தகைசால் அடக்கத்தாலும் இதுகாரும் தன்னைத் தானே மறைத்துக்கொண்டிருந்த நட்சத்திரத்திற்கு இனி நீங்கள் தான் எங்கள் வானின் சூரியனென மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது *** காதர் மொகிதீன் தங்களைத் தான் வாழும் காயிதே மில்லத்தென நாளும் பார்ப்பதனாலோ என்னவோ கேரள சிங்கங்களும் தாய்ச்சபை தங்கங்களும் சிங்கார சென்னைக்கு தேடிவந்து சிங்காசனம் தந்தார் தங்களுக்கே. *** துறவுக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம், அதிலும் நித்தியப் பகை - ஏனெனில் தலைமை, பதவி, பவிசு அது ஈனும் புகழிவற்றால் நித்தம் நிலையறியாது நிலத்தில் கால் ஊன்றாது ஆகாயத்தில் பறப்பவர்கள் தான் அதிகம் இங்கே. - ஆனாலும் அரசியலில் இருந்தும் துறவியாய் கட்டுச்சோறு கூட இல்லாத எதார்த்த வழிப்போக்கனாய் எங்கள் முன்னே வாழும் தங்களைத் தவிர எட்டுத்திக்கும் தேடினாலும் ஒட்டுமொத்த அரசியலில் யாரைத் தான் சொல்லமுடியும் என் தலைவா?. *** நீங்கள் தேசிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் இந்நாள் இந்திய இஸ்லாமியர்களின் வாழ்வில் இனிய பொன்னாள். *** தேசிய ஒறுமைப்பாட்டிற்காய் மதநல்லிணக்கம் காப்பதற்காய் மதம் கடந்து நேயமுடன் எல்லா சிறுபான்மை சமூகத்தாரின் அடையாளம் காப்பதற்காய் நீங்கள் என்றும் முழங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கொள்கை பயணத்திற்கு நீங்களே தளகர்த்தரென தலைமை வகிக்கிறீர்கள். *** இனிவரும் நாட்களில் உங்கள் தலைமை நலிவடைந்த இந்திய சிறுபான்மை சமூகத்திற்கு பொழிவு பல பெற்றுத்தரட்டும் இறையவனோடு இனிய அவன் தூதரும் மறையுணர்ந்த நாதர்களும் என்றும் தங்களை வாழ்த்தட்டும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுடன் - வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா. கொள்கை பரப்புச் செயலளாலர் துபாய் மற்றும் வடக்கு அமீரகங்கள் அமீரக காயிதே மில்லத் பேரவை. ******


குறிப்பு: சென்னையில் இன்று (26-02-2017) கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்க்கின் தேசிய செயற்குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவராக சமுதாயத் தலைவர் பேராசிரியர் K..M. காதர் மொகிதீன் அவர்களும், பொது செயலாளராக P.K.குஞ்சாலி குட்டி,M.L.A அவர்களும், அமைப்பு செயலாளராக E.T. முகம்மது பஷீர் M.P அவர்களும், பொருளாளராக P.V. அப்துல் வகாப், M.P அவர்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மகிழ்வான செய்திக்கு வாழ்த்துமடல்.

மனசிருந்தால்...

இருவரும் ஒரு குடையில் 
கொஞ்சம் கஷ்டம் தான்!
மனம் இருந்தால்
ஊசியின் காதில்
ஒட்டகமும் உலா வரலாம்!

***

இறந்த காலம் போட்டு வைத்த
காலடி தடங்கள் தான்
வழிகாட்டுகிறது!
நிகழ்காலத்தில்
ஊர் செல்ல நினைப்பவர்களுக்கு.

2014-ல் இதே நாளில் எழுதியது

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

24 பிப்ரவரி 2017

புத்தகம் பற்றி..

ஒவ்வொரு புத்தகத்தை படித்து நிறைவு செய்த பின்னரும் எவ்வளவு மன நிறைவு.. மன மகிழ்வு..!
மூடப்பட்டு கிடந்த அந்த புத்தகப் பெட்டகம் திறந்தவுடன் தான் எத்தனை.. எத்தனை.. புதையல்கள்.. எத்தனை.. எத்தனை.. செல்வக்குவியல்கள் இத்தனை நாளும் உன்னை நான் ஏன் நாடாமல் இருந்தேனோ என்று உள்ளுணர்வு புலம்பிடடும். என் அறிவுக்கண்ணை இத்தனை நாளாய் மறைத்த பேரிருளை நீ விளக்கும் விதம் தான் என்ன புத்தகமே நீ தான் என் மொத்த அகமே!
(ஒரு புத்தகம் படித்து விட்டு புத்தகங்களை பற்றி நான் எழுதியது)

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

எனக்கு மிகப்பிடித்த பாடல்:

எனக்கு மிகப்பிடித்த பாடல்:
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.
- திருநாவுக்கரசர் பாடியது
பாடலின் பொருள் : நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம்.எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார்.
நரகத்தில் இடர்ப்படோம். அதாவது நரகத்திற்கு போக மாட்டோம் என்றில்லை. ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற மாட்டோம் என்றில்லை, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது.என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 பிப்ரவரி 2017

ஆரியம் வென்றது?

பிஜேபி / ஆர். எஸ்.எஸ்-ன் ப்ளான் மாஸ்டர் பிளான் இது வரை உலக சரித்திரத்தில் ஆரியர்கள் முன்வாசலை எப்போதும் பயன்படுத்தியது கிடையாது, அவர்களுக்கு அது பழக்கமும் இல்லை. இப்பவும் அதையே மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். இந்தியாவில் அவர்கள் எப்படியும் நுழைந்துவிடத் துடிக்கும் மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம். கேரளாவில் தமிழகத்தை விட மேலதிகமாக தினம் ஒரு லோக்கல் இந்துத்துவ நிர்வாகியை கொலை செய்து அதை கம்யூனிஸ்ட் அல்லது முஸ்லிம் லீக்குடைய பெயரில் போட்டு அங்கே நடக்கும் பல மதத்துவேசக் கூத்துக்களும், வெறியாட்டங்களும், கேரள அரசியலை கண்கானித்துவருபவருக்கு தெரிந்திருக்கும். அதைப்போலவே மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு, மோடி வகைராக்களுக்கும் நடக்கும் மோதல் யுத்தம் மிகவும் நினைவில் கொள்ள வேண்டியது. அடுத்து நமது தமிழ்நாடு, இங்கு அவர்களது பாச்சா பலிக்காமல் இருக்க இங்கே இருக்கும் இரண்டு திராவிட கட்சிகளும் அதன் மூலமான பெரியாரியமும் தான் என்பது அவர்களுக்கு பெரிய தலையிடியாகவே தொடர்கிறது எவ்வளவோ முயன்றும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடியாத சூழ்ச்சிக்காரர்களுக்கு கிடைத்த அல்வா துண்டு தான் ஜெயலலிதாவின் மருத்துவ மனை பிரவேசமும், இறப்பும். விடுவார்களா போட்டார்கள் மாஸ்டர் ப்ளான், அந்த சரியான திட்டத்தின் வழியே தான் இன்று நடக்கும் அதிமுக பிளவு, பன்னீரை தூக்கிப்பிடிப்பது, ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவை தூக்கிப்பிடிக்கும் சசிகலாவை மக்கள் வெறுக்கும் கொலைகாரி, கொள்ளைகாரியாக சித்தரிப்பது, பிறகு கவர்னரை வைத்துப் படங்காட்டி அவரை பதவியேற்கவிடாமல் தாமதப்படுத்தி பிறகு தீர்ப்பின் பெயரால் அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டி சிறைக்கு அனுப்பியது என எல்லாம். ஆனால் பிஜேபி-யின் மிகப்பெரிய வஞ்சகம் தெரியாமல் எல்லோரும் சசிகலாவை திட்டி சந்தோசமடைகின்றனர், ஓன்றுமில்லாத குஜராத்தை இந்தியாவின் மிக முதன்மை மாநிலம், பூலோக சுவர்க்கம், என்றெல்லாம் சீன் காட்டியும், நரபலி மோடியை இந்தியாவை ரட்சிக்கவந்த பிதாமகன் போலவும் காட்டிய பிஜேபியின் ஊடக தந்திரத்திற்கும், அவர்கள் உருவாக்கும் மீம்ஸிற்கும் பலியாகி நிற்கும் தமிழக அறிவாளிகளை நினைத்தான் அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை. ஜெயலலிதாவின் பல அரசியல் முடிவுகளுக்கு பக்க துணையாக இருந்த சசிகலா தான், ஜெயலலிதா துணிந்து செய்தார் என்று பேசப்படும் ஜெயேந்திரரின் கைது நடவடிக்கைக்கு பின்புலத்தில் இருந்து அதை துணிந்து செய்ய தூண்டுகோளாகவும், காரணகர்த்தாவாகவும் செயல்பட்டார் என்ற ஆரியவர்க்கத்தின் கோபமும் ஜெ.மறைவை அடுத்து பஜாகவின் பல உடன்படிக்கைகளுக்கு அவர் அடிபணியாததும் தான் இப்போதைய சசிகலாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காரணமென பல நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகளை அறிய முடிகிறது. எது எப்படியானாலும் பின்னால் இருந்து நிகழ்வின் வெற்றியை ரசித்து பெரியார் பூமி எனப்படும் தமிழ்மண்ணில் அதன் முதல் அறுவடையாக ஒரு திராவிட கட்சியை சிதைத்து தன் திட்டத்தில் பரிவாங்கள் வெற்றிகண்டிருப்பதை தமிழர்கள் உணர்ந்தால் நல்லது. இல்லையே இப்போது அரிக்கத் தொடங்கி இருக்கும் பாசிசத்தின் சூழ்ச்சி முழுவதும் வெற்றிபெற்றால் இத்தனை நாள் திராவிடம் வளர்த்தும் பயனில்லாமல் போகும், எச்சை ராஜாக்கள் நாடாளும் நிலை கூட வரலாம். - வழுத்தூர். ஜா.முஹையத்தீன் பாட்ஷா

15 பிப்ரவரி 2017

காதல் கைதி

உன் கைதியாக இருப்பதில் தான்
எனக்கு அலாதி பிரியம்;
வா!
வந்து விலங்கிடு
தனிமை சிறையில் அடை
இடைவிடாது இம்சை செய்
பிறகு,
என்னை கொல்ல
மின்சாரம் செலுத்து
உன்னால் சாவதை நேசிக்கிறேன்
மூர்க்கமாய் கொலை செய்!
நான் அழிவதில் தான் எத்தனை பேரின்பம்.
# மெய்யாலுமே காதலர் தினக்கவிதை, இதை அதிகாலையிலேயே எழுதினேன். ஆனாலும் பதிவிட யோசித்தேன், வந்த தீர்ப்போடு தொடர்பு படுத்தினால் நான் பொறுப்பல்ல.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
14-02-2017

அமீரக காயிதேமில்லத் பேரவையின் அபுதாபி கருத்தரங்கம்

அபுதாபியில் நேற்றைய தினம் "இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி" என்ற மாபெரும் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடந்தேறியது. நிகழ்விற்கு மிக பெரிய அளவில் ஏதோ தமிழ்நாட்டில் பிரமாண்ட திடலில் நடக்கும் பெரிய மாநாடு போல மக்கட்திரள் வந்திருந்தது பெரும் உற்சாகத்தை தந்தது விழாவிற்கு அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி அவர்களும், துணை தலைவர் முஹம்மது தாஹா அவர்களும் தாயகத்திலிருந்து வந்து கலந்து கொண்டு சிறபித்தார்கள்.
குறிப்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்க்கின் தேசிய தலைவராக பெறுப்பேற்று சிறப்புரையாளராக வருகை புரிந்த பேராசிரியர் பெருந்தகை அவர்களின் பேச்சைக் கேட்க பல்வேறு இயக்கதிதினர்கள் வந்த்திருந்ததும், மரியாதை செய்ததும் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்வில் எல்லா தரப்பு அமைப்புகள், ஜமாத்துகள் மற்றும் காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பேச வாய்ப்புகள் வழங்கப்பட அனைவரின் பேச்சுக்களும் பல தரப்பட்ட அறிய கருத்துக்களை சுமந்திருந்தது சிறப்பாக இருந்தது. விழாவின் மைய நிகழ்வாக தலைவர் பேராசிரியர் பேசும் போது அதிக மணித்துளிகள் இல்லை என்றாலும் பேசிய அந்த 38 மணித்துளிகளில் பெரும் சிறப்பு வாய்ந்த விழா சிறப்புரையை நிகழ்த்தியிருந்தார்கள், பேராசிரியர் பெருந்தகையின் பேச்சு அவரதம் தலைமைத்துவ முதிர்ச்சி, சமுதாய ஒற்றுமை, தேசிய நலன், தமிழ் மொழியின் ஞானவளம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்திய கருத்தழமிக்க பேச்சாக இருந்தது.
விழாமிகச்சிறப்பாக நடந்தேற இரவு பகல் பாராது கண் துஞ்சாது அல்ஹம்துலில்ஸாஹ்.. அமீரக காயிதேமில்லத் பேரவையின் பெரும்பான்மை அங்கத்தினர்களும் பங்காற்றி இருந்தாலும் பேரவையின் பெதுச்செயலாளர் ஹமீது ரஹ்மான், நிர்வாக செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி மற்றும் ஆவை அன்சாரி அண்ணன், பரக்கத் அலி அண்ணன், லால்பேட்டை சல்மான், மாங்குடி சலீம், முகம்மது இஸ்மாயில் இவர்கள் போன்றபெயர் குறிப்பிட வேண்டிய ஆனால் பட்டியல் நீளக்கூடிய
இன்னும் ஏராளமான எனைய நெஞ்சம் நிறைந்த கண்மணிகளின் களப்பணி மிகக்குறிப்பிடத்தக்கது. விழா நிகழ்வின் மாபெரிய வெற்றியை பார்த்த மாத்திரத்தில் மனதில் இதற்காக உழைத்த நெஞ்சங்களுக்காக என்னளவில் இறைவனிடம் பெருந்துஆ செய்தவனாக இருந்தேன். எல்லா புகழும் இறைவனுக்கே.
மனநிறைவுடன்,
வழுத்தூர்
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
(கொள்கை பரப்புச் செயலாளர்
துபாய் மற்றும் வடக்கு அமீரகங்கள்)
அமீரக காயிதே மில்லத் பேரவை.

பாசிசத்தின் விளையாடல்

கரையானை ஒழிக்க 
பூதத்தை வரவழைப்பதா?
புற்றீசலை தொலைக்க 
பூமிக்கே தீயிடுவதா?
சாமி வரங்கொடுக்கவில்லை எனில்
சந்தியிலிட்டு உடைப்பதா?
எதிரிப்படை அழிய
துரோகிகளை துணைக்கழைப்பதா?
இருட்டு கிரகத்தில் புகுந்து
இனி நமக்கே விடியலென்பதா?
முரட்டுக்குதிரை மீதேறி
குருட்டு சவாரி செய்வதா?
பாழும் விசமாயிருக்கும் வெண்மையை
பாலென நம்பிச் சாவதா?
நீளும் அறியாமையால் நாளுமே
வீழும் இச்சமுதாயம் என்றுமே.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
14-02-2017

****
இதுவும் அரசியல் சூதே! 
ஒரு சூதின் முதுகில் மற்றொன்று.
14-02-2017

****

நான் அந்த கட்சியை சாரந்தவனோ அல்லது அபிமானியோ அல்ல, ஆனாலும் பெரும்பான்மை பெற்ற அவர்களது கட்சியில் மாநிலத்தின் ஆட்சியை யார் நடத்தினால் நன்றாக இருந்திருக்கும், மோதிக்கொண்ட இருவரில் யார் எனும் கேள்வி உருவாகும் போது பன்னீர் நன்னீரல்ல.. சசி மீது நிறைய பொய்யான பிம்பம்ஙக்ள் கட்டமைக்கப்பட்டதும் சங்பரிவாரத்தின் கூலியாக பன்னீர் விலைபோனதும் உண்மை, சசியை அவரது எதார்த்தமான அவரால் மறைக்கமுடியாத அல்லது மறைக்கத்தெரியாத உடல்மொழி வெளிப்படுத்திக்
காட்டிவிடுகிறது ஆனால் பன்னீர் பதுங்கும் கழுகு, ஊமைக்குசும்பன்.
உண்மையில் சசி நல்லவரா கெட்டவரா என்பதை தாண்டி பாஜாகாவின் சித்துவிளையாட்டில் தமிழகமக்கள் வலிந்தே மாட்டிக்கொள்வதையும், பன்னீரை தியாகியாக சித்தரிப்பதையும், காமராஜராக வர்ணிப்பதையும் ஏற்கமுடியவில்லை அவர் இத்தனை நாள் படமெடுக்காத பாம்பாகத்தான் ஜெ.முன் உலவியிருக்கிறார். தவிர வழங்கப்பட்ட தீர்ப்பு சசிக்கு எதிரானது என்றால் கட்சியில் பன்னீர் உட்பட பதவியில் இருந்து மிக தூயவாழ்வு நடத்தியவர்கள் இல்லை அவர்களின் நமட்டு சிரிப்பிற்கு பின் மனசாட்சியின் கேள்வி இல்லாமல் இருக்காது, உள்ளே பயமும் இருக்கத்தான் செய்யும். தவிர கொல்லைப்புறமாக திராவிட சிந்தனையை, பெரியாரியத்தை ஒழிக்க துடிக்கும் பஜாக, சங்பரிவாரங்களின் இப்போதைய மதவாத வெற்றியை ஒருவேளை சசிக்கு தீர்ப்பின் பின்னடைவு வராமல் இருந்திருந்தால் வேரறுத்திருப்பார் என்றே நம்புகிறேன். ஆனால் நடந்தது எல்லாம் பாசிசத்தின் துரோகத்தின் பற்களால் குதறப்பட்டவை.

!5-02-2017

03 பிப்ரவரி 2017

இன்னொருவர் இனி யார்?


கண்ணூரில் பிறந்த நீர்
இந்தியா முழுமையும்
என்னூர் என்றல்லவா வாழ்ந்தீர்
இன்னுயிர் பிரியுமட்டும்
மண்ணுயிர் காக்கவே உழைத்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
சொந்த மண் கேரளாவிற்கு
பட்டியலில் அடங்காத பலவற்றை செய்தீர்
பத்தொன்பது ரயில்களை மலையாள மண்ணுக்கு
விட்டுத்தராமல் பேராடி பெற்றீர்
மலப்புரத்தில் அலிகார் கல்லூரி கண்டீர்,
மட்டுமல்ல..
ஹஜ் ஹவுஸும், பாஸ்போர்ட் ஹவுஸும்
தன் மண்ணின் மக்களுக்கு கொடுத்தீர்
பாழும் சிறையில் வாழ்விழந்து கழித்தோரை
தொடர்போராட்ட்த்தால் வெளிக்கொணர்ந்து
பலருக்கு புதுவாழ்வளித்தீர்.
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
அன்றே உதயமாகி ஆங்கிலேயரை எதிர்த்து களம் கண்ட
இனிய தன் தகைமைசால் இயக்கம்
இந்தியாவெங்கும் இனிதே புத்தெழுச்சி கண்டிட
கேரள முஸ்லிம் லீக்கை
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கென
சட்டப்பூர்வமாக மாற்றி சரித்திரம் காண
தமிழ்நாட்டிலும் முஸ்லிம் லீக் தனிச்சிறப்பு பெற்றிட
தலைவர் காதர் முகைதீனுக்கு தளிர்க்கரம் தந்தீர்
எள்ளி நகையாடிவருக்கெல்லாம்
சொல்லி வைத்தடித்தாற்போல தனியாய்
ஏணிச்சின்னம் தந்து ஏற்றம் செய்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
பெல்லட் குண்டுகளால் சிதைக்கப்பட்ட
காஷ்மீரத்து இளைஞர்களின்
ஒளியிழந்த கண்களின் கண்ணீர் கதையை
மீறப்படும் சமூகநீதியை
இழைக்கப்படும் பெருங்கொடுமையை
நேரில் கண்டு அவர்களோடு தானும் அழுது
ஆளும் வர்கத்திற்கு அவர்களின் வருத்தத்தை
அறிக்கையென அறிய தந்தீர்
அவர்களுக்கே மனசு வலித்த்து
அதை சுஸ்மாவின் வாசகமே உரைத்தது.
இது போல எளிவருக்காய் இதயம் இரங்க
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
காவிப்பேய்களின் கோரப்பற்கள்
முசாஃபர்ப்பூரில் ருத்ர தாண்டவமாட;
பவிகளால்; அப்பாவி ஏழைமக்கள்
வாழ்வாதாரம் அழிந்து
சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட,
அன்னையில்லா பிள்ளைகளாய்
அழுது மாண்டிருந்தார்,
கலங்கிய மனதோடு கலவர பூமி சென்று
அள்ளி அணைத்தீர் அவரனைவரையும்.
அச்சமின்றி வாழ பேராதரவும்
இனி வாழ புதுவீடும் கூட தந்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
இருபத்தேழு முறை .நாவில்
இந்தியாவின் நாவாய் பேசினீர்
அருந்தவ இந்தியாவிற்கும் அரபு நாடுகளுக்கும்
உரிய பாலமாய் இருந்தீர்
ஈராக்கில் இதயமில்லா தீவிரவாதிகள்
இந்தியர்களை பிணைக்கைதியாக்கிய போது
முதலில் நின்று மீட்டீர்
பலஸ்தீனத்திற்காகவும் சிரியாவிற்காகவும்
பரவிவரும் பாசிசத்திற்கெதிராகவும்
என்றும் போர் குரல் தொடுத்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
இன்று நீங்கள் இல்லையே
.அஹமது ஸாஹிபே..
இதயம் வலித்து அழுகின்றோம்
இனி நீங்கள் வரப்போவதில்லை,
தன் நண்பரின் பிரிவை தாங்கிடாமல்
இரங்கல் கூட்டத்தில் என் தலைவர்
காதர் முகைதீன் கண்ணீர் வடித்து அழுதாரே
பார்த்த நாங்களும் விழிகள் பனிக்க
மீண்டும்.. மீண்டும்.. அழுதிருந்தோம்
****
மயங்கினீர் உணர்விழந்தும்
நாடாளுமன்றத்திலே தான்
நடந்தீர் இறுதி மூச்சுவரை
காயிதே மில்லத்தின் கண்ணிய வழியினிலே
வாழ்ந்தீர் மானிடத்திற்காய்
வாழ்ந்திருந்த நாள் முழுதுமே.
****
மக்களுக்காக உழைத்த உங்களை
மக்களின் மனதும் போற்றும்
மறுமையும் பெரிதே போற்றும்
மகிமை செய்தே ஏற்றும்
இனிதே நிகழ்க உங்கள் இனிய சுவர்க்கப்பயணம்.
அழியாது உங்கள் புகழ்
அருமை தலைவர் .அஹமது சாஹிபே!
****
துஆக்களுடன்,
ஜா.முஹையத்தீன் பாட்ஷா

3-1-2017