03 பிப்ரவரி 2017

இன்னொருவர் இனி யார்?


கண்ணூரில் பிறந்த நீர்
இந்தியா முழுமையும்
என்னூர் என்றல்லவா வாழ்ந்தீர்
இன்னுயிர் பிரியுமட்டும்
மண்ணுயிர் காக்கவே உழைத்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
சொந்த மண் கேரளாவிற்கு
பட்டியலில் அடங்காத பலவற்றை செய்தீர்
பத்தொன்பது ரயில்களை மலையாள மண்ணுக்கு
விட்டுத்தராமல் பேராடி பெற்றீர்
மலப்புரத்தில் அலிகார் கல்லூரி கண்டீர்,
மட்டுமல்ல..
ஹஜ் ஹவுஸும், பாஸ்போர்ட் ஹவுஸும்
தன் மண்ணின் மக்களுக்கு கொடுத்தீர்
பாழும் சிறையில் வாழ்விழந்து கழித்தோரை
தொடர்போராட்ட்த்தால் வெளிக்கொணர்ந்து
பலருக்கு புதுவாழ்வளித்தீர்.
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
அன்றே உதயமாகி ஆங்கிலேயரை எதிர்த்து களம் கண்ட
இனிய தன் தகைமைசால் இயக்கம்
இந்தியாவெங்கும் இனிதே புத்தெழுச்சி கண்டிட
கேரள முஸ்லிம் லீக்கை
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கென
சட்டப்பூர்வமாக மாற்றி சரித்திரம் காண
தமிழ்நாட்டிலும் முஸ்லிம் லீக் தனிச்சிறப்பு பெற்றிட
தலைவர் காதர் முகைதீனுக்கு தளிர்க்கரம் தந்தீர்
எள்ளி நகையாடிவருக்கெல்லாம்
சொல்லி வைத்தடித்தாற்போல தனியாய்
ஏணிச்சின்னம் தந்து ஏற்றம் செய்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
பெல்லட் குண்டுகளால் சிதைக்கப்பட்ட
காஷ்மீரத்து இளைஞர்களின்
ஒளியிழந்த கண்களின் கண்ணீர் கதையை
மீறப்படும் சமூகநீதியை
இழைக்கப்படும் பெருங்கொடுமையை
நேரில் கண்டு அவர்களோடு தானும் அழுது
ஆளும் வர்கத்திற்கு அவர்களின் வருத்தத்தை
அறிக்கையென அறிய தந்தீர்
அவர்களுக்கே மனசு வலித்த்து
அதை சுஸ்மாவின் வாசகமே உரைத்தது.
இது போல எளிவருக்காய் இதயம் இரங்க
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
காவிப்பேய்களின் கோரப்பற்கள்
முசாஃபர்ப்பூரில் ருத்ர தாண்டவமாட;
பவிகளால்; அப்பாவி ஏழைமக்கள்
வாழ்வாதாரம் அழிந்து
சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட,
அன்னையில்லா பிள்ளைகளாய்
அழுது மாண்டிருந்தார்,
கலங்கிய மனதோடு கலவர பூமி சென்று
அள்ளி அணைத்தீர் அவரனைவரையும்.
அச்சமின்றி வாழ பேராதரவும்
இனி வாழ புதுவீடும் கூட தந்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
இருபத்தேழு முறை .நாவில்
இந்தியாவின் நாவாய் பேசினீர்
அருந்தவ இந்தியாவிற்கும் அரபு நாடுகளுக்கும்
உரிய பாலமாய் இருந்தீர்
ஈராக்கில் இதயமில்லா தீவிரவாதிகள்
இந்தியர்களை பிணைக்கைதியாக்கிய போது
முதலில் நின்று மீட்டீர்
பலஸ்தீனத்திற்காகவும் சிரியாவிற்காகவும்
பரவிவரும் பாசிசத்திற்கெதிராகவும்
என்றும் போர் குரல் தொடுத்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
இன்று நீங்கள் இல்லையே
.அஹமது ஸாஹிபே..
இதயம் வலித்து அழுகின்றோம்
இனி நீங்கள் வரப்போவதில்லை,
தன் நண்பரின் பிரிவை தாங்கிடாமல்
இரங்கல் கூட்டத்தில் என் தலைவர்
காதர் முகைதீன் கண்ணீர் வடித்து அழுதாரே
பார்த்த நாங்களும் விழிகள் பனிக்க
மீண்டும்.. மீண்டும்.. அழுதிருந்தோம்
****
மயங்கினீர் உணர்விழந்தும்
நாடாளுமன்றத்திலே தான்
நடந்தீர் இறுதி மூச்சுவரை
காயிதே மில்லத்தின் கண்ணிய வழியினிலே
வாழ்ந்தீர் மானிடத்திற்காய்
வாழ்ந்திருந்த நாள் முழுதுமே.
****
மக்களுக்காக உழைத்த உங்களை
மக்களின் மனதும் போற்றும்
மறுமையும் பெரிதே போற்றும்
மகிமை செய்தே ஏற்றும்
இனிதே நிகழ்க உங்கள் இனிய சுவர்க்கப்பயணம்.
அழியாது உங்கள் புகழ்
அருமை தலைவர் .அஹமது சாஹிபே!
****
துஆக்களுடன்,
ஜா.முஹையத்தீன் பாட்ஷா

3-1-2017

கருத்துகள் இல்லை: