26 நவம்பர் 2014

ஆண் அன்னை தெராசா மறைந்தார்

மருத்துவர் மு.கோட்டைசாமி
ஆம் இந்த ஆண் அன்னை தெரசா எங்கள் அய்யம்பேட்டையில் வாழ்ந்து சேவையாற்றியவர். இங்கு அவ்வாறு என குறிப்பிட்டது மிகைப்படுத்தும் வார்த்தை அல்ல.. உண்மையில் அந்த வார்த்தைக்கு முற்றும் பொருத்தமுள்ளவரை தான் அவ்வாறு குறிப்பிட்டேன், அந்த ஆண் அன்னை தெரசா மறைந்த மருத்துவ சீலர் ஐயா. மு.கோட்டைச் சாமி அவர்கள் தான். பார்ப்பதற்கு கூட அதே சாந்தத்துடனும்.. அமைதியுடனும் கூடிய கனிவு பொங்கும் உருவம்.. தனது வாழ்நாளெல்லாம் மக்கள் பணிக்காகவே அற்பணித்த தியாகி.. அவருக்கு அடி மனதின் ஒரு முனையில் கூட இவர் முஸ்லிம்.. இவர் இந்து என எண்ணத்தெரியாத உண்மையான மனிதர்.. மேன்மையான மனித நேயர். அவர் இன்று இராமேஸ்வரம் சாலையில் ஏற்பட்ட வாகனவிபத்தில் மறைந்தது அவரின் சேவைமய்யமான மருத்துவமனை இருக்கும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மக்களுக்கு  மட்டுமல்ல அந்த உயர்ந்த மனிதரின் மருத்துவ சேவையால் பயன் அடைந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுவட்டார மக்களுக்கும் பேரிழப்பு… பேரிழப்பு.. பேரிழப்பே தான். இந்த துக்ககரமான செய்தி காலையில் அறிந்தது முதலே பேரதிர்ச்சி அடைந்தேன்.


 இந்து முஸ்லிம் என்ற மதமாச்சர்யங்கள் எல்லாம் அவர் அறியாதவர்..   வாழும் போது எப்படி அன்பை மட்டுமே பிரதானமாய் கொண்டு மனிதர்களை கருணையால் சூழ்ந்து சிகிச்சை செய்து சாதித்தாரோ அது போலவே அவர் இறந்த போதும் மதமாச்சர்யங்களை தவிடு பொடியாக்கி மனித நேயத்தை.. மதம் கடந்த பெரும் நேசத்தை அவர் இறந்து போய்விட்டலும் அவரது பூத உடல் நிரூபித்துக் காட்டிவிட்டது.  ஆம், ஐயா.கோட்டைசாமியின் பூத உடலை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆரா துயரத்தில் சூழ்ந்து கொண்டு கண்ணீர் வடித்து கலங்கி நின்ற காட்சி பார்த்த எல்லோருக்கும் பேரதிர்வை உண்டாக்கிவிட்டது.. இது போன்ற கோட்டைச்சாமிகளால் தான் இந்த தேசத்தில் மனித நேய கோட்டைகள் விழுந்துவிடாமல் தாங்கிப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று  எண்ணத்தோன்றியது. 

ஏனென்றால், அய்யம்பேட்டையில் வசித்த ஒரு சாதாரண மருத்துவருக்கு அவரின் இறுதிச்சடங்கில் மரியாதை செய்ய பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடி அதுவும் இஸ்லாமியர்கள் மட்டுமே தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமாக கூடி  தங்கள் இரங்கலை தெரிவித்து அழுதார்கள்  என்றால் மேலும் இஸ்லாமிய ஆண்கள் கூட்டமே அவரது பூத உடலை சூழ்ந்து ஆர்பரித்து அவர்களே மயானம் வரை பெருங்கூட்டதுடன் சுமந்து சென்று 
சோகம் சூழ பிரியாவிடை தந்தார்கள் என்றால் இது ஆச்சர்யத்திலும் ஆச்சயர்மாகத் தான் இருக்கிறது. இதற்கெல்லாம் ஆதார சுருதி இஸ்லாம் குறிப்பிடும் எல்லோரிடமு அன்பு, அறம், நேசம், உதவி என்ற நற்பண்புகளை அவர் பேணி மக்கள் பால் காட்டிய கருணை.. மக்களுக்கு அவர் காட்டிய அன்பு.. மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்காக சேவையாகவே செய்து பல உயிர்களை காத்து நின்றது தான். இத்தனை மக்கள் திரள் ஒன்று கூடி தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது என்றால் இதில் மருத்துவர் ஐயா அவர்கள் மக்களின் மீது காட்டிய மெய்யன்பும், மக்கள் அனைவரும் மருத்துவர் ஐயா அவர்களிடம் காட்டிய பேரன்பு மட்டுமே காரணம். ஒரு அரசியல் வாதிக்கோ.. ஒரு நடிகருக்கோ கூடிடும் கூட்டத்தில் சூது இருக்கும், ஏமாற்று இருக்கும், வஞ்சகம் இருக்கும் ஆனால் இங்கு கூடிய கூட்டத்திற்கோ அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அன்பும்.. ஆற்றாமையும், மனிதநேயரை பிரிந்துவிட்டோம் என்ற பிரிவுத்துயரும் தான் காரணமாக திகழ்ந்தது.

தினமும் காலை மருத்துவ மனைக்கு வந்து நோயாளிகளை பார்க்க உட்கார்ந்தால் மதியம் மூன்று மணி வரை பார்ப்பார்.. இடையில் உணவு கூட இல்லை எல்லாம் பிறகு தான். பிறகு சாப்பிட்டு வந்து மீண்டும் மாலை மருத்துவமனை வந்தால் ஓய்வின்றி இரவு பதினொன்று முப்பது வரை பார்ப்பார் சில நேரம் பன்னிரெண்டும் ஆகும். இதற்கிடையே எத்தனை எத்தனையோ அர்ஜென்ட் கேஸ்கள் வேறு.. மருத்துவமனைக்கு வருவதையும் பார்ப்பார்.. பல சமயம் அவர்களின் வீட்டிற்கே ஓடிப்போய் பார்த்துவருவார். எந்த ஊர் எந்த இடம் என்றெல்லாம் பார்க்கமாட்டார்.. துடிதுடித்து வரும் மக்களின் நாடித்துடிப்பறிந்து ஏதோ தனக்கோ தங்கள் குடும்பத்திற்கோ நேர்ந்த துன்பம் போல எண்ணி ஓடி வருவார். அது மட்டுமல்ல இரவு மருத்தவ மனையிலிருந்து சென்று உணவருந்தி விட்டு பன்னிரெண்டு மணிக்கு மேல் அப்போது தான் படுக்க சென்றிருப்பார் அதற்குள் ஐயா.. அவசரம்.. உடனே வாருங்கள் டாக்டர்.. என்று கதவு தட்டும் குரலுக்கு முன் தான் சட்டையை மாட்டிக்கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடி வருவார். 



துபாய் வரும் முன் நானே கூட ஒரு முறை தெருவில் ஒருவர் வீட்டில் திடீர் உடல் நலக்குறைவு என இரவு இரண்டு மணிக்கு போய் அழைத்து வந்திருக்கிறேன். எத்தனையோ முறை எனக்கும்.. என் தாய் தந்தையருக்குமாக அவசர காலத்தில் உதவியிருக்கிறார். அந்த சேவையை எல்லாம் நான் என் மனக்கண் அழுக இன்று நான் அழுது நினைத்துப்பார்க்கிறேன். அய்யம்பேட்டையில் எத்தனையோ மருத்துவர்கள் இருந்தாலும் ஐயா.கோட்டைசாமி போல் ஒரு கருணை வடிவத்தை பார்ப்பது அரிது. அதிலும் அதிகமாக காசு வாங்காது.. அதிக பணத்திற்கு ஏதேதோ எழுதி கொடுத்து இம்சை செய்யாது மனிதாபிமானத்தோடு ஏழை எளிய மக்களின் உடல் நலனில் அக்கரை கொண்டு இப்படி ஒரு ஓய்வறியத… உறக்கம் பார்க்காத மக்களுக்காவே பணி செய்த சிறப்பான மருத்துவர் மறைந்து விட்டாரே என்று தான் மனம் புலம்புகிறது. 


இனி  அய்யம்பேட்டைக்கு மட்டுமல்ல எங்கள் வழுத்தூர், பசுபதிகோவில், மாங்குடி, இன்னும் ஆற்றைக்கடந்த அக்கரை ஊர்கள் என எத்தனை எத்தனையோ ஊர்மக்களான நாங்கள் அவசர உதவிக்கு இனி யாரை அழைப்போம்.. இருக்கும் மருத்துவர்கள் எல்லாம் காசு பறிப்பவர்களாகவும்… வார்த்தைகளால் இன்னும் மனதை ரணப்படுதுகிறவர்களாகவுமே இருக்க எங்களை இப்படி தவிக்க விட்டுச் சென்றுவிட்டீர்களே ஐயா! மருத்துவம் படித்தவர்கள் எப்படி எல்லாம் வாழவேண்டும்.. எப்படி சேவையாற்றவேண்டும் என்பதற்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டிய மனிதநேயர் அல்லவோ நீங்கள் ஐயா!

அன்பும் மனிதநேயமும் பொய்த்துப்போய்விட்ட இவ்வுலகில் அதை பறைசாற்ற ஆங்காங்கே ஒரிரு ஜீவன்கள் தெய்வாதீதமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அதன் காரணத்தாலேயோ என்னவோ இன்னும் இப்பூவுலகில் மழை பொழிகிறது.. நல்லவைகள் நடக்கிறது. அந்த வகையில் மறைந்த மருத்துவ சீலர் ஐயா.கோட்டைச்சாமி அவர்களின் சேவை என்றும் நினைத்து நன்றி பாராட்டதக்கவை. ஐயா நாங்கள் இருக்கும் வரை உங்களை பார்த்த சிறு பிள்ளைகள் அவர்கள் வாழும் வரை உங்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.. இன்னும் அடுத்த தலைமுறைக்கும் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி எத்திவைப்பார்கள். அம்மாதிரியான அபூர்வமானவர் அல்லவோ நீங்கள்.

மருத்துவர் கோட்டைசாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதாக! நித்திய ஜீவன் எய்திடுமாக! அன்னாரின் நீடுபுகழ் என்றும் நிலைபெறுமாக!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: