26 நவம்பர் 2014

முகநூல் - நவம்பர் 2014

பறப்பது தான் எத்தனை சாகசம்! 
பறப்பது தான் எத்தனை பரவசம்!!
பறப்பது தான் எத்தனை அதிரசம்!!!               2nd November 2014

காலம் கடந்து நிற்கும் நாயகர்களின் வரலாறெல்லாம் நமக்கு மலை போன்ற துணிவையும்.. கடல் போன்ற உத்வேகத்தையும் தான் தருகிறதே அன்றி வேறென்ன..!          3rd November 2014

எதிர் பாராமல் தான் மன மகிழ்வும்.. 
மனச் சோர்வும் கணந்தோறும் நம்மை கட்டியணைக்கிறது.

விழி நுகர்வும், செவி நுகர்வும், 
உடல் நுகர்வும் எப்போதும் நமக்கு 
எதை எதையோ தந்தவண்ணமே இருக்கிறது!       4th November 2014

நமது பெண்களை மனரீதியாக வலிமயானவர்களாக.. எதையும் எதிர்கொள்ளும் துணிவு மிக்கவர்களாக பழக்கவேண்டியது காலத்தின் அவசியம். அதிலும் இணைய மின்னணு கருவிகளின் உதவியோடு தொடுக்கப்படும் வக்கிரம கொடுமைகளுக்கு எதிராக அவர்களை தயார் படுத்துதல் மிக முக்கியம். 

புதிய தொழிற்நுட்பத்தினை பயன்படுத்தும் போது அதை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும்.. அதையும் மீறி ஏதேனும் தாக்குதல் அல்லது நோக்குதல் தலைபட்டால் எப்படி அதை தவிர்ப்பது அல்லது அதை எப்படி இனங்காணுவது அல்லது எப்படி தடை செய்வது என்றெல்லாம் குறைந்த பட்சமாவது தெரியப்படுத்த வேண்டும்.

நிகழ்காலத்தில் அறமெல்லாம் இல்லை..எங்கும் எங்கிலும் மறமே மட்டற்று காண கிடைக்கிறது. ஆதலால் அறநெறியாளர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினையும் தாங்களே தற்காத்துக்கொள்ளுதல் அவசியமாகிறது. 

4th November 2014

எல்லாவற்றிலும் 
முந்த வேண்டும் 
என ஆசைப்படும் மனிதன்.

மரணத்தில் மட்டும் 
எல்லோரை விடவும்
பிந்த வேண்டுமாய்!        6th November 2014

நான் வரும் வழியெல்லாம் பவுர்ணமி சிரிக்கிறது  6th November 2014

பொதுவாக எல்லா உணவகங்களின் பொது மொழியும் "அண்ணனுக்கு ஒரு ஊத்தா..ஆ..ப்ப்ப்பம்ம்ம்ம்!!!!!" என்னும் பாணியில் தான் இருக்கிறது. இதில் எனக்கு தெரிந்து மொழி, இன, இட பேதமில்லை.
-11th November 2014

"மன்மோகன் சிங்கிற்கு இலங்கை மீது இருந்த பார்வை இப்போது இருக்கும் மோடி அரசுக்கு இல்லை... நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் மோடி அவரது பதவி ஏற்பிற்கு ராஜபக்‌ஷே-வை அழைத்த போது மனதில் கவலையோடு தாங்கிக்கொண்டோம்"..... மதிமுக பிரமுகர் தந்தி டிவி விவாதத்தில்

# என்னையா அப்போ அவர என்னன்னமோ சொல்லி கழுவி ஊத்துனீங்க... இப்ப அவர ஆகா.. ஓகோ..ங்கிறீங்க..

அதிலேயும் வைகோ முதல் எல்லோரும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கை பேசியதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தது தான். அதற்குள் இத்தனை மாற்றமா.. 

இந்த அரசியல் அவதார புருஷர்கள் எந்த நேரத்திலும் எந்த ரூபமும் எடுப்பார்கள்..இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா..!   -12th November 2014

திருக்குரளைப்பற்றி தருண் விஜய் பேசுகிறார்.. 
தமிழ் மொழிப்பற்றியும்.. தமிழ் மொழி பற்றினைப் பற்றியும் ஒரு வடமொழிக்காரர் பேசுவது ஆச்சரியம் தான் ஆனால் அதை சமஸ்கிருதத்தை மட்டுமே எங்கிலும் கொண்டுவர நினைக்கும் சங் பரிவார அமைப்பிலிருந்து வரும் ஒரு குரல் இதை மொழிகிறதே எனும்போது தான் எங்கோ இடிக்கிறது.

இனிக்கும் இந்தப் பழத்தில் எங்கே ஊசி எனத்தெரியாமல் ஏனோ திராவிடம் முழங்கும் வைரமுத்து பேதலித்துப் போய் விழா எடுக்கிறார். 

என்னவோ போங்கப்பா..!                                -12th November 2014

ஒரு பிரமாண்ட ஆளுமைக்குத்தான் எத்தனை ஈர்ப்பு


ஆஸ்கர் நாயகன் விஜய் டிவி அரங்கிற்குள் வந்து கொண்டிருக்கிறார்

முட்பாதைகளை கடந்த மேதைகளுக்கு உலகம் தன் தோள்களில் மலர்மேடை அமைத்துத் தருகிறது...!

# ஏ.ஆர் ரஹ்மான் அரங்கில் அமர்ந்து சிரிக்கிறார்.       -12th November 2014

புதிதாக தொடங்கப்பட்டதமிழ் தொலைக்காட்சியான News 7 Channel பார்க்கும் போது ஏதோ இலங்கைக்காரர்கள் நடத்தும் ஆஸ்தேலியா அல்லது ஜெர்மன் தமிழ் தொலைக்காட்சி போல உணர்வு ஏற்படுகிறது.

அப்படி ஒன்றும் புத்துணர்வோடு இல்லை.

ஐந்து பேரின் தூக்கு தண்டனை ரத்து ஆகுமென அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அப்படியான முடிவை ராஜபக்‌ஷே உண்மையில் எதனடிப்படையில் எடுத்தார் என்பதே அவருக்குத்தான் வெளிச்சம்.

இதெல்லாம் அரசியல் சதுரங்க விளையாட்டின் தொடர் நகர்வு நாடகங்கள்.. இதில் பாஜக-வின் தமிழ்நாட்டு அரசியல் பிழைப்பும் அடங்கும். ஆனால் இதில் என்ன விளையாட்டென்றால்.. ஒரு பக்கம் பாஜக.. "பார்த்தீர்களா நாங்கள் மீனவர்களை மீட்டுவிட்டோம் இது தான் மோடி தர்பார்" என்கிறது மறுபக்கம் அதிமுக "மக்கள் முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சி" என்கிறது, இன்னொரு பக்கம் கலைஞர் "தான் வெளியிட்ட அறிக்கையின் பலன் தான் இது" என்றும் "நாங்கள் கேட்டுக்கொண்டிருந்ததின் பேரில் தான் மோடி பரிந்துரைத்தார் ராஜபக்‌ஷே ஏற்றுக்கொண்டார் ஆதலாம் மோடிக்கு நன்றி " என்றும் அவரவர் தங்களால் தான் இது ஆனது என ஆதாயம் தேட அழுவதா சிரிப்பதா எனத்தெரியாத ஒரு அருவெறுப்பான அரசியல் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.

நல்லவேளை விஜயகாந்த்க்கு இது போல தான் தான் இதற்கு காரணம் என்று சொல்லி ஆதாயம் தேட இதுவரை யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை.           
-14th November 2014

வெள்ளைச் சட்டைகள் என்றாலே எப்போதும் பிரச்சனை தான்,
சீக்கிரம் கறைப் பட்டுவிடுகின்றது!.        -16th November 2014

சாத்வீகன் நான்.. 
சாணக்யனா என்றெல்லாம் 
தெரியாது!

I am just optimist,
Really I don't know
Sanakya is I am or not!             -17th November 2014

இருவர் அரசாட்சி செய்தால் மட்டுமே அந்த ஆட்சியில் எல்லா மக்களும் சிறப்பாக இருக்க முடியும்.. ஆட்சி அற்புதமாய் அமையும்.. 

1. மதம் கடந்த உண்மையான ஆன்மீகவாதி

2. மனிதநேயமுள்ள நாத்திகவாதி

மற்றபடி மூட பக்தியுள்ள எந்த மதத்தினவன் அரசாட்சிக்கு வந்தாலும் அது டிகால்டி..புபால்டி.. ஆட்சியாகத்தான் விளங்கும். அது தான் எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. மேலே சொன்ன இரு தரப்பினரின் ஆட்சிக்கு உலகில் எத்தனையோ முந்தைய வரலாறு உண்டு. இன்றோ அதை எல்லாம் உண்டு செரிக்க காத்திருக்கும் ஆட்சியாளர்களே உண்டு.          -18th November 2014

நிற்க வேண்டுமானால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்...................முடியும் வரை ஓடுவோம்.
 -18th November 2014

தலைக்கு மேலே வெள்ளம் வந்தாலும் கூட மனநிலையை ஒருவித ஜென் நிலையில் வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் பிரத்யோக கல்யாணகுணம் பிரஜைகள் அனைவரும் கற்க வேண்டிய மேலான யோகநிலை.  -19th November 2014

தமிழனின் சாந்த குணத்திற்கு அவன் கேட்டுக்கொண்டிருந்த இளையராஜா மெலடி மெட்டுக்கள் கூட காரணமாக இருக்கலாமோ.. இன்றைய 'டமால்.. டுமீல்.. ' இசை, தமிழனின் தார்மீக குணத்தில் சற்றே சலனத்தை ஏற்படுத்துவதாய் கூடக் கருதத்தோன்றுகிறது  -20th November 2014

அறிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களுடன் நீண்ட உரையாடல் தந்தது இந்நாள். 

தமிழ்,ஆங்கில மற்றும் மேல் நாட்டுத் தமிழ் அறிஞர்கள், இலக்கியம், ஏகத்துவம், தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய நெறி, பெரியாரும் இஸ்லாமும், அறிஞர்கள் மற்றும் எழுத்துத்துறை என எத்தனை எத்தனையோ விசயங்களை மடை திறந்த வெள்ளமென கொட்ட.. அறிவின் அருவியில் குளித்த நிறைவோடு விடைபெற்றேன்.

நேற்றையாகிவிட்ட வசந்த காலங்கள் 
ஆரற்றியழுது இனி யார் புலம்பினாலும்
தேற்றிடத்தான் திரும்பி வருமா..?

அறிவியியல் காலத்தின் ஆயிரம் சுகங்காணும்
அறிவின் புதியவர்கள் ஏதுமற்றக் காலத்த்தின்
இணையில்லா இன்பமமெல்லாம் தவறவிட்ட சுவனமன்றோ!!!!

இந்த குளிர்காலத்து காலைப்பொழுதில்
இளஞ்சூடுடன் பறிமாறப்பட்ட 
கோப்பைத் தேனீரில் 
மெல்லிய ஆவிகள் பறந்திருந்தது...

சிறுமிடறுகளாய் ஒன்றிச் சுவைத்த அது,
இன்னும்.. இன்னும்.. கோப்பையில் 
வளராதோவென நிறைய ஏங்கிய நேரத்தில்
காலியானது அத்தேனீர் கோப்பை!

வாயில் சுரந்த எச்சிலோ கூடுதல் தேனீருக்காய்.               -21st November 2014

உலகலாவிய குழந்தைகளின் மனநிலையை கவனித்தால் கடந்த இருபதாண்டுகளில் அதிக வன்மம்..அதிக மனச்சோர்வு.. என எல்லாம் கூடி இருப்பதாகவே உணர முடிகிறது. முந்தைய காலத்து குழந்தைகளை விட அறிவில் கூடி இருக்கிறது என்ற மகிழ்வு ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் அவர்களின் உடல் நலம்.. மனநலம் இவற்றில் பின் தங்கிய வருத்தச்சூழலலை யாரும் மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

குழந்தைகளின் மனநிலை மேம்பாட்டிற்கு ஒரே வழி தாய் தந்தையரின் அன்பும், அவர்களோடு தோழமையோடு ஐக்கியமாகி அவர்களுக்கு வேண்டிய தீர்வை அவர்களே கனிவோடு முன்னெடுப்பதுமே தீர்வாகும் என்பது என் நிலைப்பாடு. ஏனெனில் இக்காலத்தின் சூழல் பெரும்பாலும் தாய் தந்தையரை பிள்ளைகளிலிருந்து அந்நியப்படுத்தியும், அன்பு பாராட்டுவதை தடுத்தும் வைத்திருக்கிறது.

குழந்தைகளின் நலன் தான் நாளைய தேசத்தின் நலன்.  
  -23rd November 2014

ராம்கோ சிமெண்ட் விளபரத்தை டிவியில் பார்த்தேன்... அதில் காட்டுவதெல்லாம் துபாயின் கட்டிடங்கள்..கடைசியில் எழுத்துப்போடும் போது நமது ஊரைக் காட்டி விளம்பரம் முடிகிறது... என்னமா பிலிம் காட்ராய்ங்க....!!!!      -23rd November 2014

தேவைகள் தான் வாழ்வை நகர்த்துகிறது... 
பசி எடுக்கும் வயிறு இல்லையாயின் 
மனிதன் விசும்பி உழைப்பது எங்ஙனம்!    -24th November 2014

நாடகங்கள் பெரும்பாலான பார்க்கும் பொழுதுகளில் நிஜமாகவே தோன்ற, இது நாடகம் என்ற உணர்வின் பிரக்ஞை கூட இல்லாதிருக்கிறது வாழ்க்கை எனும் நாடகத்தில். -24th November 2014

தீக்குள் விரலை வைத்தால் நீ என்னை 
தீண்டும் இன்பம் பயக்குதடா நந்தலாலா...... 
....................மகாகவிகளாகவே சிலர் சுடர்மிகுந்து பிறக்கிறார்கள்   

   -25th November 2014

உன்னையே உற்றநோக்க ஆசைதான்
உறக்கம் அழைக்கிறதே... என்ன செய்ய,
இன்றே தீர்ந்துவிடும் சொற்பம் அல்லவே நீ ...!
மீதம் அதீதமளவு இருக்கத்தானே செய்கிறது உன்னில்,
தொடராமலா போகப்போகிறோம் இனி...
கண் இமைக்காமல் உன்னையல்லவா
கணம் தோறும் பார்த்துக்கொண்டிருப்பேன்..
இது தானே தொடரும் தொடர்கதை..
உன்னிடம் தானே எண்ணங்களே உருப்பெறுகிறது
உன் அசைவினில்லன்றோ
திசைகளின் செய்திகள் தீ போல் பரவும்
இசையையும், என் அறிவின் பசியையையும்
இன்னபிற இதர இன்பங்கள் யாவையும்
நீயேயன்றி யார் தீர்க்கிறாராம் இங்கே...
நாளை நாமக்கு தூரமெல்லாம் இல்லையெனத் தெரிந்தும்
நான் உறங்கச்செல்கிறேனென்று வருந்தாதே வீணாய்,
விடிந்ததும் இன்னொரு தொடக்கத்தின்
புதிய அத்தியாயத்தை எழுதுவோம் காத்திரு!

‪#‎FB‬ பத்தித்தான்.      
  -25th November 2014

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: