21 மார்ச் 2016

சமாதானம்

'வா..வா.. ட்ரஸ் போட்டுக்கோ'
எல்லோரும் வெளியே போகிறோமென
வீட்டில் விளையாட்டில்
திளைத்திருந்த குழந்தையை
கூட்டிச்சென்றார்கள்.
சென்ற சூப்பர் மார்கெட்டில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
அழகான சாக்லெட்கள்
குழந்தையை அகலாதிருக்க செய்து
கனைகள் வீச..
‘அந்த சாக்லெட்ட வாங்கித்தா…..’
விரல் நீட்டி அதைக் காட்டி
கேட்டு…. கேட்டு.. அழுகிறது
அந்தச் சுட்டிக்குழந்தை.
ஒருவரோடொருவர்
முகம் பார்த்துக்கொள்கின்றனர்
தாயும் தந்தையும்…,
எடுக்க நெருங்கிய தகப்பனிடம்
வாங்கிக்கொடுக்கவேண்டாம் என்கிறாள் தாய்
கண்ணால் சமிக்கை செய்து.
அழும் குழந்தையிடம் அக்கரையாக
“வேண்டாண்டா… என் செல்லம்ல…
வ்வே… அது.. நல்லாவே இல்லியாம்..
நம்ம பக்கத்தூட்டு அக்கா சொன்னா..
அம்மா சொன்னா கேட்டுக்கனும் என்ன…
இது பாப்பாவோட உடம்புக்கும் நல்லதில்லையாங்..
அடுத்த தடவ வேற கடையில
நல்ல சாக்லேட்டா பாத்து
அம்மாவே வாங்கித்தருவேணாம்... ஓகே…,
என் செல்லம்ல.., உம்ம்ம்மா!!!”
என சொல்லின் ஈற்றில்
ஒரு முத்தம் தைக்கிறாள்,
ஆசைப்பட்ட குழந்தை
அழைத்துவரப்படுகிறது
நிறைவேறாத ஏக்கத்தோடும்
அழுது வடிந்த கண்ணங்களோடும்…!
சற்றுநேர கொஞ்சல்கள் சில்வற்றில்
சகஜமாகிறது குழந்தை.
வாழ்வின் நிறைய எதிர்பார்ப்புகளோடு
பல நேரங்களில் நாம் சமாதானம் ஆவதைப்போல.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

வேகநரி சொன்னது…

அருமையா எழுதியிருக்கீங்க.
நானும் தான் இப்போ சாக்லேட் வாங்கி அதிகம் சாப்பிடுகிறேன்.இப்போ பிரச்சனையில்லை.
ஆனா இன்னும் வருடங்கள் போக போக சாக்லேட் சாப்பிடுவதே நோயை காரணம் காட்டி நிறைவேறாத ஏக்கமாகிவிடுமோ?