23 பிப்ரவரி 2015

என் தாய்மொழி அருந்தமிழ்!!!





தாயவள் மட்டுமே
நம்மை நினைத்துக்கொண்டிருப்பாள்
தன் உயிரிருக்கும் வரை!

தாய் மொழியால் மட்டுமே
நம்மால் நினைக்க முடியும்
எதையும் நம் உயிரிக்கும் வரை!
அவசாரத்தில் அழைக்கும்போது
அந்நியமொழி கைகொடுக்காது,
அன்னை மொழிதான்
அநிச்சையாய் வரும்!

நமக்குள் நாமே பேசிக்கொள்ள
ஊருக்காய் கற்றிருக்கும்
உறுகாய் மொழிகள்
ஒத்தே வராது!

“மம்மீ” என்று அழைப்பதற்கும்
“அம்மா” என்று அழைப்பதற்கும்
என்ன வேறுபாடென்று
உங்கள் ஆன்மாவிடம் கேட்டுப்பாருங்கள்!
உயிரற்ற அழைப்பாய் தான்
அம்மாவிற்கு முன்
உங்கள் மம்மீகள் என்று
ஆன்மாவே சொல்லும்!

மனநிறைவு வேண்டுமானால்
ஒருமுறை மம்மீ விட்டு
அம்மாவிடம் தாவிச்சென்று பாருங்கள்
திருத்தமாய் ஒருமுறை
தமிழால் தாயை அழைத்துப்பாருங்கள்
மனசெல்லாம் மகிழ்வீசும்!

ஆங்கிலத்தில் அழுது புலம்பினால்
மனசின் சோகம் இறங்காது
வடமொழியில் “ஹர ஹர ஓம்” போட்டாலும்
பக்தி முக்தி பெறவே பெறாது
மைக்கேல் ஜாக்சன் பாட்டுக்கு
என்னதான் டான்ஸ் ஆடினாலும்
நம்ம ஊர் தமிழ்ப் பாட்டில்
மனம்சொக்கும் மயக்கம் வரவேவராது!

அந்நிய மொழி
வாழ்க்கையின் பாதையில்
பாதியில் ஒட்டிக்கொள்ளும்
பணம் புகழ் அலங்கார ஆடைகள் மாதிரி,
பணம், புகழ், அலங்காரங்கள்
எது பிரிந்தாலும்…..
பிணமாகும் வரை
பிரியாதது உள்ளத்தின் தாய் மொழி!
ஏனென்றால் தனிமையின்
தோழன் தாய்மொழி தான்!

தாய்மொழி
பிறப்போடு பிணைந்து கொள்வது!
இறப்பாலும் இறக்காதது
மொழிந்து விட்ட தாய்மொழி!

பொதுவான தாய்மொழிக்கே
மேற்கண்ட பெருமையெனில்
எல்லாவற்றிலும் மேலான
என் தாய்மொழி,
உலகமொழியின் தாய்மொழி எனும்போது
என்னை விட பேறுபெற்றவன் யார்?

வாழிய வாழியவே!
என் தாய்மொழி
அருந்தமிழ்!!!

இன்று "உலக தாய்மொழி தினம்" என தம்பி அசோக் குமார் என்னை கவிதை எழுதச் சொல்லியிருந்தார். அவசரத்தில் இதை எழுதினேன் இன்னும் சரிசெய்ய நிறைய உள்ளது.
— with அசோக் குமார்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 பிப்ரவரி 2015

வேண்டிய மட்டும் இழந்து...!


எல்லைகளற்ற வானம் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்திய 
கணத்தை நினைத்துப்பார்!
ஏதுமற்ற ஒன்றினை எண்ணத்தால் நிர்ணயிக்க 
எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியை கண்டனவே..!
அந்த பரந்து விரிந்த தாத்பரியத்தின் விசாலத்தில் 
வா!.. நாமும் கலக்கலாம் என்றேன்,
ஆனால் நீயோ கூடாரத்தின் கூரை அளவு போதுமென்கிறாய்
நான் வெட்டவெளிக்கு சொந்தக்காரன் என்னை விட்டுவிடு!



பேராழி நமக்கு ஏற்கனவே காட்டப்பட்டிருக்கிறது
பேராழி குறித்து நாம் நிறைய விவாதித்திருக்கிறோம்
ஆனாலும் ஏதோ ஒரு பயத்தால் நீங்கள்
அந்த குளத்திற்கு போவதையே விரும்புகிறீர்கள்.
என்ன செய்ய! உங்களோடு நான் வரப்போவதில்லை,
பேராழியில் வேண்டிய மட்டும் இழந்து லயிப்பேன்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 பிப்ரவரி 2015

ஒரு பத்திரிக்கைகாக


இன்பம் பொங்கும் இனிய மாலைப்பொழுதில்
இனியத் தமிழ் தென்றல் வெளியீட்டுவிழா
இதயமெல்லாம் உற்சாக வெள்ளத்தில்...
உதயமாகும் இப்பொழுதை நினைத்து,

ஆம்..!

துபாய்க்கு அய்யா வந்தார்,
உணர்வுகளுக்கு வடிகால் வேண்டும்
உருப்படியாய் ஒர் தமிழிதல் வேண்டும் என்றார்
பொதுவாய் கூறிய அவரின் வார்த்தை
புகுந்தது உன் நெஞ்சில் மட்டும் தான் - அவர்
ஆதங்கப்பட்டு சொன்ன போதே-நீ
பற்றிக் கொண்டாய்
சிக்கி முக்கியாய் இருந்ததனால்!-ஆனால்
ஒன்று மட்டும் சொல்வேன்
அய்யா வந்ததனாலெல்லாம்
நீ ஆசிரியராக வில்லை
இந்த எண்ணம் ஆழ்மனதில்
தோன்றிய போதே
ஆசிரியராகிவிட்டய்.

தமிழ்த்தென்றல் இதழ் விரிய -அது
மொட்டானதிலிருந்து
நீ செய்த குதிரைச்சவரியில்
எத்தனை குலுக்கல்கள்..
நீ சோர்ந்து வரும் சில நேரத்தில்
உற்சாக வார்த்தை ஒன்று உதித்தால்
ஊதிவிடுவாய் பட்டதையெல்லாம்.

நீ....!
கெஞ்சுபவர்களிடம் கெஞ்சுவாய்
கொஞ்சுபவர்களிடம் கொஞ்சுவாய்
அலுவலகப் பணியும் இருக்கும்-இடையே
அலையவேண்டியப் பணியும் இருக்கும்.

நீ....!
ஐந்து நிமிடத்தில் ஆயிரம் யோசிப்பாய்
காதலன் கூட தோற்றுப்போவான்-நீ
பைத்தியம் பிடித்தவன் போல்
பத்திரிக்கை..பத்திரிக்கை என்றே
மஜ்னூன் ஆனாய்.

நீ....!
பேனாவும் கையுமாவே திரிந்தாய்!
பேசப்படவேண்டும் என்றே
யோசித்து யோசித்து எழுதினாய்!

நீ....!
உன்னோடு எப்போதும்
கையில் பணம் வைத்திருப்பாயோ என்னவோ!
எப்போதும் பை வைத்திருப்பாய்-அதில்
பத்திரிக் கை வைத்திருப்பாய்.


இத்தனை நாட்கள் எத்தனை சஞ்சிகை-உன்
கட்டிலோடு  குடும்பம் நடத்தியது
அவைகளெல்லாம் வெள்ளோட்டம் தான்.
இன்றே நீ சாந்தி முகூர்த்தம் கண்டிருக்கிறாய்.


நீ....!
அயர்ந்து வருவாய்
ஐந்து நிமிட ஆசுவாசம்
அது போதுமென
உடன் எழுவாய் உலகில் கலப்பாய்.


உன்னை விட ஒருவர்
பெண்ணை வர்ணித்து விட முடியுமா!
அடேயப்பா..!
நான் சொல்லுவது- இங்கே
பத்திரிக்கைப் பெண்ணை
எப்படி யெல்லாம் சிங்காரித்து
கர்பனையில் வர்ணம் பூசி வர்ணிப்பாய்


உனக்கு தூக்கமே இல்லை - ஆனால்
அதிகம் கனவு கண்டாய்
உனக்கேற்பட்ட தாகம் தான்
உன்னை தடாகமாக மாற்றியிருக்கிறது.

இதில் நீ..!
பிரசவ வேதனையை விட
அதிகம் பட்டாயோ வென
எண்ணத் தோன்றுகிறது!


இவை யாவும் உனக்கான
புகழ் மாலை யல்ல!
ஓர் தாய்ப்பறவை தன்
எண்ண முட்டைகளை
வண்ணக் குஞ்சுகளாக
பொறிக்கப் பட்ட பாடு- இதற்காக
நீ அடித்த கரணங்களையே
எழுத்தாக்கி யிருக்கிறேன்.


நீ....!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
இது பழமொழி! - இங்கே
தளகர்த்தரே உன் தம்பி தானே!
இளைஞர் மலரிலிருந்து-துபாயின்
இங்கிலீஷ் பேப்பர் வரை
அவர் புகழ்!

அங்கே ஓர் அய்யா,
இங்கே ஓர் அன்வர்,
வலது இடதாக இனியவன், இஸ்மத்
கவுரவ வேடத்தில் பாரத்-இன்னும்
எங்கள் பீர் முதல் பிரபலங்கள் வரை
இருக்கும் போது
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்!

நீ....! கூட
புயலாகத்தான் இருந்தாய்
பத்திரிக்கைக்கு பெயரை வைத்து விட்டு
நீயே மாறி விட்டாய்
தென்றலாக!

அதனால்-இது
படிப்பவரையும் தாலாட்டும்
கருத்தில் தாய்ப் பாலூட்டும்
நீங்களும் தென்றலாக வேண்டுமா?
உங்கள் கையிலும் தென்றல் இருக்கட்டும்.-இது
வாழப்பிறந்த உங்களுக்கு துணையாகட்டும்
தமிழ்த் தென்றல் வாழ்க! வெல்க!!

மனம் நிறைந்த வாழ்த்துடன்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

(மனிதர்களின் தரம் பார்த்தப் பிறகு ஏன் எழுதினோம் என நொந்த கவிதை..)
2006 என நினைக்கிறேன்.

கனியார் நூர் முஹம்மத்

இரங்கற்பா: 
அழகாய்ச் சிரித்த வதனமது
நிலையாய் நின்றதெம் நெஞ்சினிலே

பழகும் விதத்தில் அவர்போலே
பண்பாளர் இங் கேதம்மா...

சூரியன் எழும்முன் தாமெழுந்து
தினமும் சுப்ஹை  தொழுதிடுவார்

முறையாய் விருப்பொடு மறைவிரித்து
மணமே கமழ ஓதிடுவார்

பறவை சிறகை தாம்விரித்து
பற்பல விடங்கள் பறந்திடுவார்

ஆர்வத் தோடு அலுவலகம்
சென்றே பணிகளில் தமைமறப்பார்

எறும்புகள் கூட சுறுசுறுப்பை
இவரிடம் கற்றால் நலமாகும்

இத்தனை வயதிலும் இளங்கன்றாய்
எதிலும் துணிந்தே நின்றாரே

நல்வைர மொன்றை மருமகராய்
நல்லவன் அளித்த அருளதனை

நலமே பேசிநா ளெல்லாம்
உளமே என்றும் குளிர்ந்தாரே

அருள் நேசர்அவ்ன் நாதரை
ஆத்மீக குருவாய் ஏற்றாரே

அழகிய பாதையில்தாம் சென்று
அமைதி அகமதில் பெற்றாரே

சோபனம் இங்கே நிறையப்பெற்று
இறைவன் அழைப்பிற்கு தயாரானார்

கண்ணியமாக வாழ்ந்தி ருந்த
கனியார் நூரு  முஹம்மதவர்

கண்ணிமை மூடி அமைதியுடன்
காவலன் அடிதனில் சேர்ந்தாரே

இறையவனே யாம் இறைஞ்சுகிறோம்
இனிய சுவர்க்கப் பதவிக்காய்

சுகமாய் அவர்தமக் கருள்வாயே
சுந்தரர் நபிகளின் பொருட்டாலே

அன்னாரின் ஆத்ம சாந்தியை ஏக இறையிடம் இறைஞ்சி அப்போது எழுதியது.

இறந்த வருடத்தை கேட்டு பதிக்க வேண்டும்.. 2006 என நினைக்கிறேன்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

உலவிய வெண்புறா




இரங்கற்பா: 
வஹாப் பாப்பே!
ஸய்யித் நீங்கள்
வம்சப் பாரம்பரியத்தில்,
ஸய்யிதாகவே இருந்தீர்
ஊருக்கெல்லாம் நீங்கள்!
வெண்புறா மாதிரி உலாவிய
உங்களின் இதயம் நின்ற செய்தியால்
எங்களின் இதயமும் அதிர்ந்து நின்றது

ஓவ்வொரு *மிஃராஜிலும்
நினைக்க வைத்துவிட்டீர்களே
பதினாலாம் பிறையில்
ராத்திப்கிதாபின் ஒவ்வொரு எழுத்தும்
உங்களைத்தேடுமே..
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

மென்மையான ஆளுமை
தண்மையான சுபாவம்
எல்லோரையும் சிறை செய்த அன்பு
உயர்ந்த குணங்களால்..
உயர்ந்த மனிதர் நீங்கள்
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

தெளிந்த அறிவினோர்
சிறந்த சிந்தனையாளர்
கீர்த்திமிக்க செயல்வீரர்
நேர்த்திமிக்க அழகினர்
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,


எங்களோடு இணைந்து
சுக துக்கங்களை
சுவீகரம் செய்து கொள்வீர்களே!
எங்கள் நெஞ்சம் தேடும் முன்பே
கண்களுக்கெதிரில் காட்சிதருவீர்களே

இன்னும்..
உங்களின் அனுபவ பழங்களை
சுவைக்க இருந்தோமே
தவிக்கவிட்டுவிட்டீர்களே!
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

சூஃபியாய் சுன்னத் ஜமாஅத்தில்,
மூத்ததலைவராய் முஸ்லிம்லீக்கில்,
முத்தான முத்தவல்லியாய்
முஹ்யுத்தீன் ஆண்டகையின்
பள்ளிவாசலில்..
சில தருணங்களில் தந்தையாய்
சில தருணங்களில் விந்தையாய்
சில தருணங்களில் அன்பராய்
சில தருணங்களில் நண்பராய்
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

குருநாதராய் அவ்ன் நாதரை
திருவுளத்தோடு ஏற்று
சபைதனில் தலைவராய்
அவைநிறை அழகு சேர்த்தீர்
சபைக்காய்..,
பேழைக்காய்..,
மதுரஸாவிற்காய்..,
ஆற்றிய சேவைக்களுக்கெல்லாம்
நிறை சாந்தியோடு
நித்திய ஜீவிதம் அருளி
ஏற்றி வைத்திடும் உங்களை
ஏகம் என்னாளும்.




*வஹாப் பாப்பவர்கள் சென்ற மிஃராஜ் இரவு இறையெய்தினார்கள் 2008, ஆகஸ்ட் மாதம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தூங்கக்கூடாத இரவு


அறிவைப் பெறுவதில் தூங்காது விழிப்பாயிரு..!
ஆண்டவனை அடைவதில் தூங்காது விழிப்பாயிரு!!
முக்திநிலை பெறுவதில் தூங்காது விழிப்பாயிரு!!!

இரவென்பது இருள் போர்த்தியது!
இருளென்றால் ஒளியில்லாத நிலை!
ஒளியில்லாத நிலையினில் தெளிவிருக்காது!

தெளிவென்பது வேண்டுமெனில் ஆங்கே
அறிவொளி ஏற்ற இருள் தானே விலகும்
ஒளியிருந்தால் எதற்குமே வழியறியலாம்!

ஆனதினால் தானே முன்னவர்
இரெவெல்லாம் விழிக்கப்பணித்தனர்
சிவராத்திரியென்று!

எல்லாமே ஆன்மீக பயிற்சி தான்.
எல்லாமே சொல்லாமல் சொல்வது தான்.

ஈங்கே இரவெல்லாம் என்பதில்
பகலும் அடங்கும்!
உள்ளத்தின் இருள் விலகிவிட்டால்
இரவினிலும் பகல் நிலைக்கும்.

(நேற்றைய சிவராத்திரிக்காக முகநூலில் பதிந்தது)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எல்லா 
"வேறு"களுக்கும் 
"வேரு" ஒன்று தான்.
வேறு வேரென ஏது 
எல்லாம் ஒன்றினில் என்றான பின்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

13 பிப்ரவரி 2015

கொஞ்சம் *தசவ்வுஃப்!


தியானங்கள் சொல்லவருவது என்ன ?
தியானங்களின் பயிற்சிகள் எதற்கு ?
தியானங்களில் மூழ்குதலின் முடிவு எது ?

அது...
திண்ணமாய் நீ இல்லை,
நீ என்பது எங்கும் இல்லை
நீ என்பது எதிலும் இல்லை
நீ என்பது எப்போதும் இல்லை

இல்லாத நின்னை இழ!
நீயாய் இருக்கும் அனைத்தில் நின்னை இழ!
நீயே அதில் இல்லாமல் போ!
கரை.. கல.. இல்லாமல் போ

நீயே எல்லாமென நில்!
நீயே நித்தியம்!
நீயே சத்தியம்!
நீயின்றி வேறில்லை!
நீயின்றி வேறில்லை!
நீயின்றி வேறில்லை!

இருப்பதெல்லாம்.... தனித்த
நீயே.!.
நீயே.!!.
நீயே..!!!

என்பது தானே..
மூலமந்திரத்தின் மறைபொருள்!
இதில் நிலைக்க செய்வதும்
இதில் லயிக்க செய்வதும்
இதுவாகவே உணரச்செய்வதும்
இதுவாகவே ஆகச்செய்வதும் தானே
தியானம்!

-ஜா. முஹையத்தீன் பாட்ஷா

*தசவ்வுஃப் - மெய்ஞானம்
தியானம் - இறைவனை நினைவு கூர்தல் (திக்ரு செய்தல்)
மூலமந்திரம் - கலிமா (அரபியில்)

06 பிப்ரவரி 2015

பொழுதுகளில் சில!


சிலபொழுதுகள் நம்மை அறியாமலே
இன்பம் சூழ்ந்துகொள்கிறது
அந்தப் பொழுதுகளில் அடுத்தடுத்த
இன்பங்களால் நாம் திக்குமுக்காடுகிறோம்
எல்லோரிடமும் இன்முகம் காட்டுகிறோம்
எல்லோரிடமும் இன்சொல் கூட்டுகிறோம்
உடலெல்லாம் எல்லா அணுக்களிலும்
கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படுவதை
ஏதோ ஒரு சிலிர்ப்பு நமக்கு உணத்தாமல் இல்லை
பூரிப்பின் பூபாலத்தால் முகமெல்லாம்
ஜொலி ஜொலிப்பதை குழந்தையைப்போல
மகிழும் நாம் கண்டுணரலாம்
அப்பொழுது பல பட்டாம்பூச்சிகள்
முகத்திலும், முதுகிலும், தோல்பட்டைகளிலும்
ஏன் கழுத்தினில் கூட இடைவெளியின்றி வந்தமர்ந்து
மென்பட்டால் மெய்மறக்கச் செய்கிறது
மனதினில் ஒரு நறுமண பூ மலர்கிறது
குளிர்கால அந்திப்பொழுதின் மென்காற்று வீசுகிறது.
அதைப்போலத்தான் நம்மை அறியாமலே
துன்பமும் சூழ்ந்து "கொல்"கிறது சில பொழுதுகளில்.
அந்த கணங்கள் பல ரணங்களை
கண்ணாடியாக காட்டி
இன்னும் இன்னும் நம்மை துயருறச் செய்கிறது
யாரிடமும் பேசத்தோணாத அந்தச்சூழலில்
யாரிடமிருந்தாவது ஓர் அழைப்பு வந்தால்
கொடூரத்தை தவிர நம்மால் எதையும் தரமுடிவதில்லை
நம் முகத்தையே கூட கண்ணாடியில்
பார்ப்பதற்கு பிடிப்பதில்லை
அந்த சனத்தில்
ஓர் கவிதை புத்தகம்
பார்த்து சிரித்திடும் மழலை
சில்லென்ற புல்வெளியில் ஒரு நடை
கடற்கரையில் அலை விளையாட்டு
பொத்தென்று தண்ணீல் தலையில் விழும் அருவிக்குளியல்
பவுர்ணமியோடு நட்சத்திரங்கள் நிறைந்திருக்கும் வானம்
இவற்றில் ஏதாவதொன்று தேவை - நம்மை
பனிக்கட்டியாய் உருகவைக்க!
மீண்டும் நம்மை மீட்டெடுக்க!!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

03 பிப்ரவரி 2015

சாலையை கடக்கும் பூனை!



அந்தப் பூனை எதையோ
கண்டு மிரண்டு ஓட்டம் பிடித்தது

அந்த நேரத்தில் ஓட வேண்டுமா..
அப்படி ஓடுவது அங்கே மிகத்தேவையா
என்பதெல்லாம் அதற்கு சிந்தனைக்கே எட்டாத ஒன்று.

ஏதோ எலியை வேட்டையாடும் தருணத்தை யொத்த
அத்தனை ஆயத்தங்களையும் மேற்கொண்டு எத்தனித்தது
ஆனால் ஒரே சனப்பொழுதில்!

அதற்கு முன்னங்கால்கள் முதலிலா
பின்னங்கால்கள் முதலிலா என்ற சிறிய சந்தேகம்
ஊடுருவியே இருந்ததை
அந்தப் பூனை காட்டிக்கொள்ளவில்லை.

சரி, ஓட்டம் எடுக்கும் அந்தப் பூனை
ஆயத்தமாகும் முன்பு
அதன் உயிர் கேள்விக்குறியாக்கபடும் அளவுக்கு
அத்தனைக்கும் அது முட்டாளாய் இருப்பதால்
சாலையை இருமறுங்கும் பார்க்கவில்லை

விரண்டு வரும் வாகனத்தை
மிரண்ட பூனை பார்த்திருந்தும்
வாகனத்தின் வலிமை அறியாத அது
இருந்தும் ஓட்டம் பிடித்தது!

வாகனத்தின் சக்கரமும் பூனையின் கால்களும்
ஒரு புள்ளியில் சந்தித்தால் சிந்தப்போவது எது
அதன் உயிரா.. அதன் குருதியா
எது முதலில் என பார்க்கும்
யாரோவின் நெஞ்சு
படபடத்து அதிர்ந்தது..
பூனையின் மீது வைத்தக் கண் வாங்கவில்லை!

இதே புள்ளியில் இப்படி சந்தித்து தான்
இதே பூனையில் சந்ததியில் வந்த பல பூனைகள்
சின்னாபின்னப்பட்டு உயிர் பறந்திருக்கிறது!
அப்படித்தான் நாமுமா என்று கணம் அது
சிந்தித்ததா என சாலையோரத்தில் நின்ற
அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சக்கரமும் பூனையின் கால்களும்
ஒரே புள்ளியில் சந்தித்த போது
சாவின் கயிற்றை வீசி எமன்
பூனையின் முன்னே எருமையில் நின்றான்

இந்தப்பூனை ஏதோ ஒரு அருள் பெற்றிருக்கிறது
புலியின் வாரிசுகள் தான் பூனையும் என்பதை
அதன் சாவின் நுனிச்சனம் உந்தி அழுத்தி யாபகப் படுத்த
நொடிக்கும் குறைவான பொழுதில்
குபீரென பாய்ந்து சாவின் புள்ளியை
சாவில் தள்ளப் பார்த்தது.

ஆயினும் லட்சத்தின் ஒரு பகுதியில்
அந்தப்புள்ளியில் பாய்தல் சற்று தாமதப்பட
அகப்பட்டுக்கொண்ட வாலின் மிக நுணி
சக்கரத்தில் மாட்ட
உயிர் மீண்டும் கடைசி நேர சர்ச்சைக்குள்ளானது.

வாலறுந்தாலும் பரவாயில்லை நான் வாழனும் என
பூனை நினைத்தச் சனம் சக்கரத்திலிருந்து விடுபட்டது
பூனையின் உயிர்..

ஆபத்து நிறைந்த சாலையை மிகப் பயந்து பார்த்து
மீண்ட பூனை எங்கோ பதுங்கியது
மீண்டும் சாலையை கடக்கவேண்டும் என்ற கவலையில்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா