23 பிப்ரவரி 2015

என் தாய்மொழி அருந்தமிழ்!!!





தாயவள் மட்டுமே
நம்மை நினைத்துக்கொண்டிருப்பாள்
தன் உயிரிருக்கும் வரை!

தாய் மொழியால் மட்டுமே
நம்மால் நினைக்க முடியும்
எதையும் நம் உயிரிக்கும் வரை!
அவசாரத்தில் அழைக்கும்போது
அந்நியமொழி கைகொடுக்காது,
அன்னை மொழிதான்
அநிச்சையாய் வரும்!

நமக்குள் நாமே பேசிக்கொள்ள
ஊருக்காய் கற்றிருக்கும்
உறுகாய் மொழிகள்
ஒத்தே வராது!

“மம்மீ” என்று அழைப்பதற்கும்
“அம்மா” என்று அழைப்பதற்கும்
என்ன வேறுபாடென்று
உங்கள் ஆன்மாவிடம் கேட்டுப்பாருங்கள்!
உயிரற்ற அழைப்பாய் தான்
அம்மாவிற்கு முன்
உங்கள் மம்மீகள் என்று
ஆன்மாவே சொல்லும்!

மனநிறைவு வேண்டுமானால்
ஒருமுறை மம்மீ விட்டு
அம்மாவிடம் தாவிச்சென்று பாருங்கள்
திருத்தமாய் ஒருமுறை
தமிழால் தாயை அழைத்துப்பாருங்கள்
மனசெல்லாம் மகிழ்வீசும்!

ஆங்கிலத்தில் அழுது புலம்பினால்
மனசின் சோகம் இறங்காது
வடமொழியில் “ஹர ஹர ஓம்” போட்டாலும்
பக்தி முக்தி பெறவே பெறாது
மைக்கேல் ஜாக்சன் பாட்டுக்கு
என்னதான் டான்ஸ் ஆடினாலும்
நம்ம ஊர் தமிழ்ப் பாட்டில்
மனம்சொக்கும் மயக்கம் வரவேவராது!

அந்நிய மொழி
வாழ்க்கையின் பாதையில்
பாதியில் ஒட்டிக்கொள்ளும்
பணம் புகழ் அலங்கார ஆடைகள் மாதிரி,
பணம், புகழ், அலங்காரங்கள்
எது பிரிந்தாலும்…..
பிணமாகும் வரை
பிரியாதது உள்ளத்தின் தாய் மொழி!
ஏனென்றால் தனிமையின்
தோழன் தாய்மொழி தான்!

தாய்மொழி
பிறப்போடு பிணைந்து கொள்வது!
இறப்பாலும் இறக்காதது
மொழிந்து விட்ட தாய்மொழி!

பொதுவான தாய்மொழிக்கே
மேற்கண்ட பெருமையெனில்
எல்லாவற்றிலும் மேலான
என் தாய்மொழி,
உலகமொழியின் தாய்மொழி எனும்போது
என்னை விட பேறுபெற்றவன் யார்?

வாழிய வாழியவே!
என் தாய்மொழி
அருந்தமிழ்!!!

இன்று "உலக தாய்மொழி தினம்" என தம்பி அசோக் குமார் என்னை கவிதை எழுதச் சொல்லியிருந்தார். அவசரத்தில் இதை எழுதினேன் இன்னும் சரிசெய்ய நிறைய உள்ளது.
— with அசோக் குமார்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்