04 அக்டோபர் 2013

தலைவர் சிராஜுல் மில்லத்-ன் 88ஆம் ஆண்டு பிறந்த நாள்

அறிஞர் அண்ணா மற்றும் கலைஞருடன் தலைவர் சிராஜுல் மில்லத் அ.கா.அ. அப்துல் ஸமது அவர்கள் 


சந்தனத் தமிழ் வித்தகர், மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று "நல்லப்பேச்சுக்கு அழகு நாற்பது நிமிடங்கள்" என்று அலுத்துப் போகாத மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்த மேடைப்பேச்சு சிற்பி, எவ்வளவு பெரிய எதிர்ப்புக் கணைகளையும் கூட தனது சாந்தக் குரலால் எதிர் தரப்பு தன் குற்றம் உணருமாறு உரைத்திடும் வல்லமை பெற்றவர். கேட்டுக்கொண்டே இருக்கலாம் இவரது பொது மேடைப்பேச்சுக்களை ஆனால் அவர் இன்று இல்லை. ஆம் மேற்கண்ட வாசனை வாசக‌ங்கள் சுட்டிடுவதெல்லாம் மறைந்த மாமேதை முன்னால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒப்பற்ற தலைவர் "சிராஜுல் மில்லத்" அல்ஹாஜ் அ.கா.அ. அப்துல் சமது அவர்களைத்தான்.  அம்மாமேதையின்  88 வது பிறந்த நாள் இன்று.

தலைவர் பெருந்தகை அவர்கள் பேச்சில் மட்டுமல்ல..  அவரது தலைமைத்துவ பண்பு,  சிறுபான்மையினர் நலனை பேணுவதிலும் அவர்களது உரிமைகளை மீட்டெடுப்பதில் அவர் கையாண்ட மென்மை மற்றும் ஆரசியல் சாதுர்யம், சமூக நல்லிணக்கத்தை பேணுவது, இந்திய அரசியல் அமைப்பிற்கும்,  அதன் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு நேராத வகையில் அதன் மாண்பை போற்றும் வகையில் இந்திய இஸ்லாமிய மக்களை வழி நடத்தியது இவைகளெல்லாம் இவரின் சிறப்பம்சங்கள்.

இவர் அன்றைய தேசிய தலைவர்களான இந்திரா அம்மையார், ராஜிவ் உட்பட எல்லா தலைவர்களுடனான  இவரின் தோழமை இந்திய இஸ்லாமிய மக்களுக்கு பல சாதனைகளை செய்ய ஏதுவாக அமைந்தது. இஸ்லாமியர்களுக்கும் பொது சிவில் சட்டம் தான் பின்பற்றப்பட வேண்டும் என்ற வாதங்களெல்லாம் வைக்கப்பட்ட அந்நாளில் தலைவர் அவர்கள் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்திக்கு இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களுக்கு சரிஆத் சட்டத்தின் முக்கியத்துவத்தையும் சன்மார்க்க அறிஞர்களான உலமாக்கள் மூலம் விளக்கி ஷரிஆத் சட்டத்திற்கு பாதுகாப்பு வாங்கி தந்தது முதல்  இவரின் வாழ்வியல் வென்றெடுத்த பல சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக இவர் செய்த பணிகள் பாராட்டிற்குரியவை. தமிழ்க தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களோடும் அவர்களே தவிர்க்க இயலாத தோழமையாக இருந்து சமூகத்திற்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தார். அப்பேற்பட்ட ஆளுமைகள் நிறைந்த தலைசிறந்த தலைவரின் பிறந்த நாளில் அவரது மிதவாதத்தை, சமய நல்லிணக்கத்தை, அடக்கத்தை, அறிவின் நுணுக்கத்தை நாமும் பின் பற்றி சமூக மேம்பாட்டிற்காக உழைப்போம் என உறுதி மேற்கொள்வோம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: