18 பிப்ரவரி 2015

கனியார் நூர் முஹம்மத்

இரங்கற்பா: 
அழகாய்ச் சிரித்த வதனமது
நிலையாய் நின்றதெம் நெஞ்சினிலே

பழகும் விதத்தில் அவர்போலே
பண்பாளர் இங் கேதம்மா...

சூரியன் எழும்முன் தாமெழுந்து
தினமும் சுப்ஹை  தொழுதிடுவார்

முறையாய் விருப்பொடு மறைவிரித்து
மணமே கமழ ஓதிடுவார்

பறவை சிறகை தாம்விரித்து
பற்பல விடங்கள் பறந்திடுவார்

ஆர்வத் தோடு அலுவலகம்
சென்றே பணிகளில் தமைமறப்பார்

எறும்புகள் கூட சுறுசுறுப்பை
இவரிடம் கற்றால் நலமாகும்

இத்தனை வயதிலும் இளங்கன்றாய்
எதிலும் துணிந்தே நின்றாரே

நல்வைர மொன்றை மருமகராய்
நல்லவன் அளித்த அருளதனை

நலமே பேசிநா ளெல்லாம்
உளமே என்றும் குளிர்ந்தாரே

அருள் நேசர்அவ்ன் நாதரை
ஆத்மீக குருவாய் ஏற்றாரே

அழகிய பாதையில்தாம் சென்று
அமைதி அகமதில் பெற்றாரே

சோபனம் இங்கே நிறையப்பெற்று
இறைவன் அழைப்பிற்கு தயாரானார்

கண்ணியமாக வாழ்ந்தி ருந்த
கனியார் நூரு  முஹம்மதவர்

கண்ணிமை மூடி அமைதியுடன்
காவலன் அடிதனில் சேர்ந்தாரே

இறையவனே யாம் இறைஞ்சுகிறோம்
இனிய சுவர்க்கப் பதவிக்காய்

சுகமாய் அவர்தமக் கருள்வாயே
சுந்தரர் நபிகளின் பொருட்டாலே

அன்னாரின் ஆத்ம சாந்தியை ஏக இறையிடம் இறைஞ்சி அப்போது எழுதியது.

இறந்த வருடத்தை கேட்டு பதிக்க வேண்டும்.. 2006 என நினைக்கிறேன்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: