18 பிப்ரவரி 2015

உலவிய வெண்புறா




இரங்கற்பா: 
வஹாப் பாப்பே!
ஸய்யித் நீங்கள்
வம்சப் பாரம்பரியத்தில்,
ஸய்யிதாகவே இருந்தீர்
ஊருக்கெல்லாம் நீங்கள்!
வெண்புறா மாதிரி உலாவிய
உங்களின் இதயம் நின்ற செய்தியால்
எங்களின் இதயமும் அதிர்ந்து நின்றது

ஓவ்வொரு *மிஃராஜிலும்
நினைக்க வைத்துவிட்டீர்களே
பதினாலாம் பிறையில்
ராத்திப்கிதாபின் ஒவ்வொரு எழுத்தும்
உங்களைத்தேடுமே..
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

மென்மையான ஆளுமை
தண்மையான சுபாவம்
எல்லோரையும் சிறை செய்த அன்பு
உயர்ந்த குணங்களால்..
உயர்ந்த மனிதர் நீங்கள்
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

தெளிந்த அறிவினோர்
சிறந்த சிந்தனையாளர்
கீர்த்திமிக்க செயல்வீரர்
நேர்த்திமிக்க அழகினர்
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,


எங்களோடு இணைந்து
சுக துக்கங்களை
சுவீகரம் செய்து கொள்வீர்களே!
எங்கள் நெஞ்சம் தேடும் முன்பே
கண்களுக்கெதிரில் காட்சிதருவீர்களே

இன்னும்..
உங்களின் அனுபவ பழங்களை
சுவைக்க இருந்தோமே
தவிக்கவிட்டுவிட்டீர்களே!
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

சூஃபியாய் சுன்னத் ஜமாஅத்தில்,
மூத்ததலைவராய் முஸ்லிம்லீக்கில்,
முத்தான முத்தவல்லியாய்
முஹ்யுத்தீன் ஆண்டகையின்
பள்ளிவாசலில்..
சில தருணங்களில் தந்தையாய்
சில தருணங்களில் விந்தையாய்
சில தருணங்களில் அன்பராய்
சில தருணங்களில் நண்பராய்
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

குருநாதராய் அவ்ன் நாதரை
திருவுளத்தோடு ஏற்று
சபைதனில் தலைவராய்
அவைநிறை அழகு சேர்த்தீர்
சபைக்காய்..,
பேழைக்காய்..,
மதுரஸாவிற்காய்..,
ஆற்றிய சேவைக்களுக்கெல்லாம்
நிறை சாந்தியோடு
நித்திய ஜீவிதம் அருளி
ஏற்றி வைத்திடும் உங்களை
ஏகம் என்னாளும்.




*வஹாப் பாப்பவர்கள் சென்ற மிஃராஜ் இரவு இறையெய்தினார்கள் 2008, ஆகஸ்ட் மாதம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: