11 ஆகஸ்ட் 2011

அன்னையர் திலகம் கதிஜா நாயகியார் நினைவு நாள்



இஸ்லாமிய உலகின் முழுமுதற் நன்றிக்குரியவர்.. அவர் கி.பி 555 ல் அரேபியாவின் குரைஷி குலத்தில் பனு ஆசாத் என்ற கிளையில் உதித்தவர், அவரை நீங்கிய நபிகள் நாயகத்தின் வாழ்வை யாராலும் நினைத்துக்கூட பார்க்க இயலாது, இவ்வுலகில் அவருக்கு முன்பும் சரி அவருக்கு பின்பும் சரி அவரது இடத்தை யாராலும் எந்த சூழலாலும் நிறப்ப முடியாது என்பதே பிரபஞ்ச பேருண்மையாகிப் போனது, இறைவனே தனது மிக உவப்பிற்குரிய நபிகள் நாயகத்திற்காக தியாகமே வடியாய் அன்பே உருவாய் அவர்களை தயார் படுத்தி வைத்திருந்தான்.. நபிகள் நாயகத்திற்காக அவரது இஸ்லாமிய கொள்கை கோட்பாட்டிற்காக அவர் தன்னையே தியாகம் செய்து தியாகத்தின் உச்சத்தில் போய் சரித்திரமாகிப்போனார் அவர் இல்லாத இஸ்லாமிய பிரச்சாரம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது பகிரங்கமான கேள்விக்குறியே! உண்மையில் இஸ்லாம் தோன்றி 1432 ஆண்டுகள் தொடும் இத்தருணத்தில் அதன் அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் இஸ்லாம் கிட்டி இருக்கிறது என்றால் உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்களின் நன்றியை அல்லாஹுக்கும், நபிகளாருக்கும் அடுத்த படியாக செலுத்த வேண்டிய நபர் அவரே!

ஆம்! மேற்சொன்ன அத்தனை வாசகங்களுக்கும் ஒரே விடை நம் அன்னையர் திலகம் செய்யிதா கத்தீஜா நாச்சியார் என்ற கத்தீஜா பிந்த் குவைலித் அவர்கள் தான். தங்களின் வாழ்வில் இரண்டு கணவன்மார்களுக்கு வாழ்க்கைப்பட்டு அந்த இரு திருமணமும் விரைவில் பட்டுப்போய்விடவே அவர்களின் வாழ்வே வசந்தமில்லாத நிலையில் இருந்தது, அந்நிலையில் தன்னை வாழ்வில் மூன்றாவதாக திருமணம் செய்ய எத்தனை எத்தனையோ அரபக சீமான்கள், குலத்தலைவர்கள், பெருவணிகள் என்று பல பேர் அவர்களை போட்டிப் போட்டுக்கொண்டு மணக்க எத்தனித்தாலும் ஏனோ யாவரையும் திருமணம் செய்யாது வாழ்ந்தே வந்தார்கள் அது அவர்களது வாழ்வில் அஸ்ஸாதிக் (வாய்மையாளர்) மற்றும் அல் அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்று அன்றைய அரபிகளால் போற்றப்பட்ட முஹம்மத் என்ற சிறப்பான மனிதப்புனிதரை சந்திக்கும் வரை நீடித்தது.

எப்போது சந்தித்தார்கள் ? ஆம்! மிகப் பெரிய வணிக‌ சாம்ராஜ்யத்தின் சீமாட்டியான கத்தீஜா நாயகியார் தனது வியாபாரப்பொருட்களை சிரியா நாட்டிற்கு அனுப்பி வியாபாரம் செய்ய முனைந்த போது தான். வியாபார நுணுக்கங்கள் அறிந்தவர் என்ற முறையில் அன்றைய காலத்தில் கத்தீஜா நாயகியார் நபிகளாரின் சிறிய தந்தையார் அபூ தாலிபை நாட அபூ தாலிபோ நபிகள் நாயகத்தை அனுப்பியது தான் நபிகள் நாயகத்தின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பம். இது தான் பின்னாளில் எல்லாவற்றிற்குமான அடித்தளமாகிப்போனது.

கத்தீஜா நாயகியாருக்காக வியாபாரம் செய்ய நபிகள் நாயகம் அவர்கள் மைஸரா என்ற உதவியாளரோடு சிரியா செல்ல அங்கே நபிகள் நாயகம் அவர்கள் மிகத்திறமையோடும் நீதத்தோடும் வியாபாரம் செய்தது, சென்ற அனைவர்களைக் காட்டிலும் அதிக லாபம் ஈட்டித் திரும்பியது, செல்லும் பயணத்தில் மைஸரா கண்ட நபிகள் நாயகத்தின் குணநலன்கள், நிகழ்ந்த அற்புதங்கள் இப்படி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் ஒப்புவிக்க இருபத்து ஐந்தே வயதான இளைஞர் நபிகள் நாயகத்தின் மீது கத்தீஜா நாயகி அவர்களுக்கு திருமண ஆசை வர அதை தோழியர் மூலம் நபிகள் நாயகத்தின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களிடம் தெரிவிக்க ஒருவாராக நபிகள் நாயகமும் சம்மதிக்க திருமணம் நடந்தேறி நல்வாழ்வை துவக்கினார்கள். அப்போது கத்தீஜா நாயகியார் அவர்களுக்கு வயது நாற்பது.

வயது வேறுபாடு அதிகமாயினும் மனங்கள் வேறுபாடு காணாததால் மணவாழ்வு சிறக்க வாழ்ந்து அதன் பயனாக காஸிம், அப்துல்லாஹ் என்ற ஆண்மக்களையும் ஸைனப், உம்மு குல்ஸூம், பாத்திமா, ருகையா என்ற பெண்மக்களையும் பெற்று இல்லறம் நடத்தினர். அதில் ஆண்மக்கள் இருவரும் பால பருவத்திலேயே இறையடி எய்தினர்.

கதீஜா நாயகியார் அவர்கள் பெண்களுக்கே உரிய சிறப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து மிகத்தூய்மையான பெருவாழ்வுக்கு உரியவராக திகழ்ந்ததனால் அன்றைய காலத்தில் அவரை எல்லாம் ‘தாஹிரா’ தூய்மையானவர் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தனர். அன்னை அவர்கள் மற்ற பெண்களைப்போல் இல்லாது மிகப் பரந்துபட்ட சிந்தனையும் அறிவு நுணுக்கங்களும் கொண்டவராக திகழ்ந்தார் இது அவர்களை மணந்த நபிகள் நாயகத்தின் சிந்தனைக்கும், செயல்பாடுகளுக்கும் மிகவும் துணைபுரிவதாய் அமைந்தது.

தற்போது நாயகியாருக்கோ வயது ஐம்பத்து ஐந்து அன்றைய அரபகத்தின் அத்துமீறிய ஒழுக்கங்கெட்ட வாழ்வு, நீதிநெறி தவறிய நிலை, அறியாமையின் ஆதிக்கம் இவைகளெல்லாம் நபிகள் நாயகத்தை மிக வாட்ட மக்களின் சஞ்சாரமற்ற மக்காவிலிருந்து இரண்டு மைல் தூரம் இருந்த ஹீரா மலையின் உச்சியில் உள்ள குகைக்கு தனிமை நாடி தவம் சென்ற போது சற்றும் தயக்கம் காட்டாது அதை ஆர்வப்படுத்தி அதோடு மட்டுமல்லாது அந்த ஐம்பத்து ஐந்து வயது முதிர்விலும், தன் மனம் நிறைந்த கணவருக்கு சில பல தினங்களுக்கு ஒரு முறையாய் உணவு தயாரித்து அதை தானே அத்தனை சமனற்ற கற்களுக்கும், பள்ளங்களுக்கும், மேடுகளுக்கும் மத்தியில் பயணம் செய்து மலையேறி சுமந்து சென்று கொடுத்து ஆதரவளித்தார்கள் இது உலகில் எந்த கணவருக்கும் கிடைக்காத பேராதரவு ஆகும். ஏனெனில் இது போன்ற நடைமுறையை கணவர் தான் தவம் செய்ய போகிறேன் அல்லது தனிமையில் சிந்தித்து அமைதி தேடப்போகிறேன் என்று சொல்லும் போது எந்த மனைவியிடமும் இருந்து பெற முடியாத அபூர்வ ஆதரவும் ஒத்துழைப்பும் இவர்களிடம் இருந்து மட்டுமே பெறப்பட்டது என்றால் அங்கேயே அவர்களின் அறிவு முதிர்வும், அன்பின் இலக்கணமும் தன் கணவரின் மேல் அவர்கள் கொண்டிருந்த உயர் நம்பிக்கையும் புலப்படும். இத்தகைய குணங்களால் இங்கே இவருக்கு நிகர் இவரே என நிரூபித்து இருக்கிறார்.

ஹீராவில் தவம் செய்த நேரத்தில் இறைவனின் புறத்திலிருந்து ஜிப்ரயீல் என்ற வானவர் வந்து தொன்றி ஓதுவீராக! என்று கூற மிகப்புதிய ஒன்றை சந்தித்த பெருமானார் பயத்துடன் நான் ஓதி அறியேன் என்று கூற அவ்வானவர் நபிகள் நாயகத்தை இறுக கட்டித் தழுவி மீண்டும் ஓதுவீராக! என்றார்கள் மீண்டும் நபிகளார் முன்பு போலவே பதிலுரைக்க மூன்று முறைகள் அது போலவே கட்டி அணைத்து 96 ஆம் அத்தியாயமாகிய அல்-அலக்கின் ( اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِى خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ ) இக்ரஃ எனத்துவங்கும் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். அவற்றை நபி அவர்களும் அப்படியே ஓதினார்கள். பின்பு ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று விட்டார்கள். இந்நிகழ்வால் பேரதிர்ச்சி அடைந்த நபிகள் நாயகம் அவர்கள் மிகவும் உடலெல்லாம் வியர்க்க நடுங்கிய நிலையில் வீட்டிற்கு வந்து கதீஜா.. கதீஜா.. என்னை போர்த்துங்கள்.. என்னை போர்த்துங்கள்.. என்று வந்த நேரத்தில் கணவரின் நிலை கண்டு கனிவோடு அணைத்து பெருமானாரை போர்வையால் போர்த்த பெருமானார் எல்லா விபரத்தையும் எடுத்து சொல்லி தனக்கு ஏதும் நிகழ்ந்து விடுமோ என தான் பயப்படுவதை சொன்ன நேரத்தில் ஒரு மனைவியாக கதீஜா நாயகி அவர்கள் அவர்களுக்கு அன்பு பொங்க சொன்ன வார்த்தைகள் பெருமானாருக்கு மிக தெம்பூட்டியவை. அது....


فَقَالَتْ خَدِيجَةُ ” كَلاَّ وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا ، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ ، وَتَحْمِلُ الْكَلَّ ، وَتَكْسِبُ الْمَعْدُومَ ، وَتَقْرِى الضَّيْفَ ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ

நாயகமே நீங்கள் அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்என்று கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள். அந்த நேரத்து இந்த வார்த்தைகளுக்கு நிகர் எது. அத்தோடு நில்லாது மறுநாள் தன் அன்புக்கணவரை தமக்கு உறவினரான வேத நூல்களை கற்று தேர்ந்தவரான கிருத்துவ பாதிரியார் வரகா இப்னு நெளபலிடம் அழைத்து எல்லாவற்றையும் கூறி ஆலோசனை பெற்றார்கள். அப்போது வரகா அவர்கள் நாயகத்தை முன் வேதங்களில் கூறப்பட்ட நபி இவர்கள் தான் என்பதை உறுதிப்படுத்த தன் கணவரின் நிலை குறித்து பேருவகை எய்தி நாயகத்திற்கு தெம்பூட்டி மட்டுமல்லாது உலகிலேயே முதலாவதாக நபிகள் நாயகத்தை நபியாக நான் உங்களை ஏற்கிறேன் நீங்களே அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் என்று ஏற்றனர். ஆஹா அன்னையவர்களின் செயல்பாடுகள் எல்லா புகழ்களுக்கும் அப்பால் சென்று விட்டன!

அதுமட்டுமல்ல.. நபியவர்களை இஸ்லாமிய பரப்புரை செய்யச்சொல்லி ஊக்க்மளித்ததோடு இல்லாமல் மக்காவிலிருந்து வணிகத்திற்காக ஒட்டகங்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்கிறதென்றால் மொத்த ஒட்டங்களில் பாதிக்கும் அதிகமானவைகளுக்கு சொந்தக்காரராக இருந்து அரபகமே புகழும்படி சம்பாதித்த பொருட்களை எல்லாம் அன்னையவர்கள் தன் கணவனாரின் காலடியில் கொட்டி என் எல்லா பொருட்களையும் தங்களின் கொள்கைப் பிரச்சாரமான அமைதி மார்க்கமாம் இஸ்லாத்தினை பரப்புவதற்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்களே இவர் போன்றவரை சரித்திரம் இதுவரை கண்டிருக்கிறதா..?

இல்லை, தன் கணவரின் பிரச்சாரம் தீவிரம் அடைந்த நேரத்தில் குரைஷியர்களால் ஊர் தள்ளி வைத்த நிலையில் மக்காவிற்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கில் இரண்டு வருடத்திற்கு மேல் இருக்க நேர்கையில் மிகவுயர்ந்த வாழ்வு வாழ்ந்த அன்னார் தன் கணவரை நம்பி வந்தவர்களுக்கு தன் சொத்தை முழுவதுமாக உணவுக்காகவும் பிறவற்றிற்காகவும் கொடுத்து..கொடுத்து.. பிறகு தன் முதிர்ந்த நிலையில் சாப்பிடவும் ஏதுமில்லாது பசி, பட்டினியால் வாடியும், தொற்று நோயால் பீடித்தும் வறுமை எல்லை கடக்க துணிகளையும் தோல் பொருளை ஊறவைத்தும் வயிற்றுக்கு பசி போக்க முயன்ற நிலையும் பிறகு நிலைமை மிக மோசமாக அதிலேயே கி.பி 619ல் இன்றைய இரமலான் பிறை 10ல் தான் அவர்கள் தங்களின் இறப்பை ஏற்றுக்கொண்ட நிகழ்வும் சரித்திரமே அழும் மிகத்துயர நிகழ்வுகள் ஆகும். இவைகள் அத்தனையும் தன் கணவர் நபிகள் நாயகத்திற்காக அவர்களின் சத்திய நெறியை நிலைநாட்டுவதற்காக அவர்களின் மனைவியாக இருந்து அவர்கள் செய்த தியாகம் ஆகும்.

இத்தகைய தன்னிகரில்லா செயல்பாடுகளால் நபிகள் நாயகத்தை அன்னைவர்கள் போலே அவர்தம் வாழ்நாளில் பாதித்தவர் யாரும் இல்லை என்றே கூறலாம். அன்னையவர்களை நினைத்து அண்ணலார் பல முறை அவர்களின் தாடி நனைய அழுததாக சரித்திரம் கூறுகிறது. பதுருப் போரில் சிறை கைதியாக பிடிபட்ட கதிஜா நாயகியாரின் மகளாரின் கணவரை மீட்க அம்மகளார் அவர் வந்த போது கொண்டுவந்த நாயகியாரின் நெக்லஸை பார்த்து மிக உருகிப்போனார்கள் நாயகம் அவர்கள். மேலும் தங்கள் தோழர்களிடம் இது தங்களுடைய அருமை மனைவியார் அவர்கள் அணிந்திருந்த ஆபரணம் என்றும், அதை மகளாரிடமே மீட்பாக ஏற்காது திருப்பி கொடுத்துவிடும்படியும் கணவரையும் ஏதும் இன்றி அனுப்பிவிடவும் பணித்தார்கள். வீட்டில் ஆட்டின் இறைச்சி உணவு செய்யும் போதெல்லாம் அதன் முன் தொடையை தன் அன்பிற்குகந்த மனைவியாரின் நினைவாக அவரின் தோழியருக்கு கொடுத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். தன் மற்ற மனைவியரிடத்தில் அவர்களே பொறாமைபட்டும் சில சொற்கள் சொல்லும் அளவிற்கு அன்னை அவர்களோடு தாங்கள் வாழ்ந்த வாழ்வியல் சம்பவங்களை மீண்டும்.. மீண்டும் வாழ்நாள் முழுவதிலும் சொல்லிக்கொண்டே இருக்கும் பழக்கத்தை நாயகம் அவர்கள் கொண்டிருந்தார்கள்.

அன்னையவர்களின் தியாகங்களை, சிறப்புக்களை, மேன்மைகளை சரித்திர பின்னனியோடும், குர் ஆன் ஹதீஸின் புகழாரங்களோடும் சொல்லிக்கோண்டே செல்லலாம் அதற்கோர் முடிவில்லாது நீளும் மகிமைமிக்க தியாக சரித்திரம் அது. ஏனெனில் அவர்களின் ஈடில்லா இந்த சரித்திரம் இல்லா நபிகள் நாயகத்தின் வாழ்வே நினைத்துப் பார்க்க முடியாதது. அவர்களின் பங்களிப்பில்லா இஸ்லாமும் நினைத்துப்பர்க்க முடியாது. ஆகவே அல்லாஹுவை இறைவனாகவும் அவனது திருத்தூதராக நபிகள் நாயகத்தையும் ஏற்ற ஒவ்வொரு இஸ்லாமிய நெஞ்சமும் அன்னையவர்களுக்கு தீர்க்க முடியாத பெரும் நன்றிக்கடன் பட்டவர்கள்! அந்த வகையில் அவர்களின் நினைவு தினமான இரலான் பிறை 10த்தில் அவ்வுயர் பெருமாட்டியின் சரித்திரத்தை பகிர்ந்து கொள்வதை பாக்கியமாக கொள்கிறேன். வல்ல‌ பேரிறையும், பெருமானார் நபிகள் நாயகமும் நம்மை என்றும் அவர்களுக்கு நன்றிக்குரியவர் -களாக ஆக்கியருள்வார்களாக! ஆமீன்.

கட்டூரை ஆக்கம்; ஜே.எம்.பாட்ஷா

7 கருத்துகள்:

HBA சொன்னது…

அன்னையின் தியாகத்தை உணர்ந்தேன்.வாழ்த்துக்கள்

HBA.

mjmiqbal சொன்னது…

Excllent one and remembered in a very apporoprite time!Such great divine persoanlities are to be remembered and revered every day,every hour and moment! Lady of greatest Honor and humbleness!What a divine match ,.....no words to express.
well written my Dera RMMB1
You can send to Mnichudar for publication.
My sincere prayers and best wishes to RMMB to write more and more on such subjcets.
May blessings of such divine personalities be on you and May Allah Bless you !

MJMIqbal

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

@ mjmiqbal uncle, தங்களின் வாழ்த்துதல் எனக்கு உற்சாகம் தருகிறது, தங்களின் கருத்துரையில் கதிஜா நாயகியாரைப்பற்றி அழகாக பொற்றியுள்ளீர்கள். உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு வியக்கும் சரித்திரம் அன்னையவர்களினுடையது என்றால் அது மிகையில்லை, இது போன்ற நம் தியாக சீலர்களை எல்லா தரப்பு இளைஞர்களும் அறிந்து பயனடைந்தால் உலகில் சாந்தி தழைக்கும் என்பது உறுதி.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

வாழ்த்திய அன்பர் எச்.பி.ஏ அவர்களுக்கு நன்றி

Abu Aasima சொன்னது…

AATHAARATHTHUDAN EZHUTHIYULLEERKAL, BAYANULLATHKA IRUNTHTHATHU, UNGKAL EZHUTHTHUBBANI THODARA EN BIRAARTHTHANAIKAL.........​..

A Mohammed IQbal IQbal சொன்னது…

thanks.1000 thanks,

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

அன்பர் அபூ ஆஸிமா அவர்களுக்கும், அன்பர் அ.முஹம்மது இக்பால் அவர்களுக்கும் என் இதய நன்றிகள்