21 ஆகஸ்ட் 2010

விசிட் விசா




பெருமூச்சே – எங்களின்

சாதாரண சுவாச

சப்தங்களானது,


வாக்குறுதி கொடுத்து

நம்பிக்கையூட்டும்

ஒவ்வொருவரையும் நம்பியே

நம்பிக்கை இழக்கிறோம் நாங்கள்!


ஊரில்…

வெளியே சென்றுவிட்டு வந்தாலோ

"இப்படியே பொலப்பில்லாம

ஊர் சுத்துறியே" என்ற குரல்கள் தடித்தது,


துபையில்…

வேலைத்தேடி அலைந்து விட்டு

வெறுத்துப் படுத்தாலும்

"யார் வேலைத் தருவா போய்

பார்க்கும் கட்டிடங்களி லெல்லாம்

ஏறி இறங்கு" என்ற உரல்கள் இடிக்கிறது.


நண்பர்களைப் பார்த்தால்

புலம்பி தீர்ப்பதைத் தவிர

வேறு என்ன வடிகால்..

அதிகமாக உஷ்ணப்படும் போதெல்லாம்..

ஊதித்தள்ளுவது கொண்டு தான்

சற்று தப்பிக்கிறோம் சூழலை விட்டு.


எத்தனையோ கனவுகளைச் சுமந்து

பறந்து வந்த நாங்கள்,

இரவுகளின் தனிமையில்

கண்ணீர் காதலியைத் தான்

கட்டித் தழுவுகிறோம்.


வரும் வரண்களில் – எந்த

முதலாளி மாப்பிள்ளையாவது

எங்களை மணந்து கொண்டு

வேலை கொடுத்தால் – இந்த

கண்ணிகள் மகிழ்வாய்

சொந்தம் சேர்ந்து கரை சேருவோம்.


கண்ணாடி சிரிக்க

தினம்..தினம்.. டிரஸ் செய்து,

காலையில் மணப்பெண்ணாய் புறப்பட்டு,

மாலையில் சீரழிந்தவளாய் கசங்கி வருகிறோம்.


பயோடேட்டாவை மட்டும்

சிரித்துக் கொண்டே வாங்கும் சிலர்

வேலைக் கேட்டாலோ

சிந்தித்து நிதானமாய்

பதிலைத் தேடுகிறார்கள்

அவர்களின் ஈரமொழிகளை நம்பி

தொலைபேசி தொடர்பு கொள்கையில்

செவிடு அவர்களின் செவிகளை

தொற்றிக் கொள்கிறது,

அடித்துக் கொண்டேயிருந்து

இறுதியில் நிற்கும் செல்போன் மணி.


முகம் தெரியாதவர்கள் எல்லாம்

துக்கம் விசாரிப்பது போல்

விசாரிக்க தவறுவதில்லை,

முகம் தெரிந்தவர்கள்

முன்னால் வந்தாலோ

முகம் ஏன் இவர்களுக்கெல்லாம்

என்றே எண்ணத் தோன்றுகிறது.


இந்த

கொடும் வெயில் தேசத்தில்

நெடுந்தூரம் அலைகையில்,

நடுவான் சூரியன் சுடுகையில்

வழித்து விடும்போது

பூமி தொடுவது

வியர்வை மட்டுமல்ல

கண்ணீரும் கலந்து தான்.


இங்கே

சூரியன் மட்டும் எரிக்கவில்லை

சிலரின் சிரிப்பும்

குடும்பச் சூழல் நெருப்பும்

சேர்ந்து எரிக்கிறது எங்களை,


வீட்டில் செல்லப்பிள்ளையாக

வளர்ந்தவர்கள் தான்

வீட்டை நினைத்துத்தான்

சொல்கிறோம் "நல்லா பாப்பேங்க

எந்த வேலையானாலும்" என்று

வாசல்த்தேடி நிற்கிறோம் என்பதற்காக

வயிற்றில் அடிக்கிறார்கள் – எங்களை

குறைந்த சம்பளக் கற்களால்…


தண்ணீர் தாகம்,

பசி மயக்கம் – இதற்கிடையில்

என் இனிய தாய் தந்தை

மனைவி மக்களின் முகங்கள்

நெஞ்சில் தோன்றினாலோ

மேலும் பல்கீனம்

நெஞ்சு பதைக்கிறது

பஞ்சு பற்றி எரிகிறது


இந்த

ஐஸ்கீரீம் விசாவோடு

எங்கள் வயிற்றில்

எப்போதும் நெருப்புத்தான்

கரைந்து விட்டால்

யார் தருவார்

‘ஐந்நூற்று ஐம்பது’

ரினிவல் செய்ய.


எங்களின் கனவெல்லாம்

ஒரு "எம்ப்ளாய்மென்ட் விசா"

எங்களின் மீது இரக்கமுள்ளவர்களே

ஏதாவது வேலையிருந்தால்

கொஞ்சம் சொல்லுங்களேன்..!


யார் யாருக்கோ

வேலை கொடுக்கும் துபாயே!

வேலைகிடைக்காமல் ஊர் சென்றால்

என் மக்களே - ஒரு

மண்புழுவிற்கு கொடுக்கும்

மரியாதையைக் கூட

கொடுக்காமல் போவார்களே

அதற்காகவாவது - ஓர்

வேலைக் கொடு..!

(ஷார்ஜா சீமான் அமைப்பின் 10வது ஆண்டு மலரில் பக்கம் 212-ல் வெளியிடப்பட்டக்கவிதை, 2008) - ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: