
எத்தனைப் பேர் இந்த
அரபு நாட்டு அழகியை
கைப்பிடிக்கக் கனவு காண்கிறார்கள்.
யார் கேட்கிறார்கள்..?
இவள் மூர்க்கத்தனமானவள்
அடைய ஆசைப்படாதீர்கள்,
உங்களுக்கு முன்னே
உறவு கொண்டவன்
நான் என்றால்…
யார் கேட்கிறார்கள்..?
அவளின்…
ஒய்யாரத்திலும்..,
அலங்காரத்திலும்..,
எல்லொரும் எச்சில் வடிய
பிச்சைக் கேட்டு பின் செல்கிறார்கள்!
ஆ..மீசை மிக்க ஆண்களே..!
ஆசையை அடக்கிக் கொள்ளுங்கள்,
ஓசையின்றி வேறு திசை ஓடிவிடுங்கள்,
மாசில்லா உள்ளூர் அழகியோடு
வாழ்க்கை தொடங்குங்கள்,
இல்லையெனில்…
பாஷை தெரியாமல்
விழிக்க வேண்டிவரும் இவளோடு, – பின்
கொஞ்சி..கொஞ்சி.. குலாவலாமென
நினைத்த நீங்கள்,
கெஞ்சி..கெஞ்சி..கேட்டாலும் தரமாட்டாள்,
விவாகரத்து..!
உங்கள் வாலிபத்தை உறிஞ்சி..
தோல் சுருங்கும் வரை அனுபவித்து..
மேல் ஏதும் ஆகாதெனத் தெரிந்தால்
கால் கொண்டு உதைத்தெறிவாள்!
புரிந்து கொள்ளுங்கள்
அனுபவம் சொன்னேன்..
அமுதம் விட்டு
விசம் வேண்டி வரவேண்டாம்.
நீ…
பருவம் அடைந்தது
தெரிந்து விட்டால்..
பாதம் கழுவவாவது அவளைப்
பற்றிக்கொள் பாக்கியமடா அது,
என்கிறார்கள் பெற்றோர்கள்.
நீ...வேண்டுமானால்
அவளின் வாடகை கணவன் என்று
பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!
ஊரில் உனக்காக..
காதல் கண்ணிகைகள் காத்திருக்க,
பெண்ணியம் போல் காட்டிக்கொள்ளும்
பேய் இவளையா ஆசைப்படுகிறாய்..?
கேள்! – இவள்
உன் அத்தனைத் திறமைகளையும்
திருடிக்கொள்வாள், - நீ
கடைசிவரை முயன்றாலும்
திருப்திப் படுத்தமுடியாது இவளை!
ஆனாலும்..
நீ போனால்,
ஆயிரம் பேர் இவளுக்கு!
2008 ஆம் ஆண்டு அறை நண்பர்களின் வெளிநாடு பற்றிய விவாதம் சில என்னை இப்படி எழுத வைத்தது. ஜே.எம்.பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக