08 செப்டம்பர் 2010

பிரிந்தால் சரியாச்சொல்..?


எத்தனை எத்தனை மாண்புதனை

நித்தமும் நிதமும் சுமந்துவந்தாய்

பக்தனை பக்குவப் படுத்திடவே

பாரினில் நீதான் பிறந்துவந்தாய்


சாந்தியும் தூய்மையும் நீயேஏந்தி வந்தாய்

சரித்திர பத்ரையும் நீயேபெற்றுக் கொண்டாய்

ஆண்டுகள் யாவும்நீயே ஆகியிருக்கக் கூடாதோ

அகிலத்தை அருளில்நீயே அமிழ்த்திநிற்கக் கூடாதோ


இறையவன் நினைவினில் இகத்தவர் ஆழ்கிறாய்

இராப்பகல் எங்கிலும் இபாதத்து செய்கிறார்

பெரியவன் தூதராம் பெருமான் நபிகளை

நிறைம னமாகவே நேரமும் புகழ்கின்றார்


பள்ளிகள்யாவும் நிறைந்திருக்கும் காட்சிகள் தருவாய்

நல்லஉள்ளத் தோடேதர்மமீயும் மாட்சிகள் சொறிவாய்

மீட்சிப்பெறவே தெளபாவேற்று மலர்ச்சி அருள்வாய்

மகிழ்ச்சிசூழ் சொர்க்கப்பூங்கா வாங்கியுந் தருவாய்


விலங்குதனை சைத்தானுக்கு உன்னில் இட்டாய்

விலங்குகுணம் மனிதனிலே அகற்றி விட்டாய்

அமரகுணம் மனிதன் தன்னில் மிளிரவைத்தாய்

அமரத்துவம் எய்திடவே அழைத்தும் நின்றாய்


வானினில் வதிந்திடும் பிறையிற் கெல்லாம்

உன்னைப் போல்மவுசுக் கிடைத்தது மில்லை

வாழ்வினில் வந்திடும் மாதங்க ளெல்லாம்

உன்னைப் போல்மகத்துவம் தந்தது மில்லை


நேற்றுவந்து நேசம்கொண்டு இன்று பிரிந்தால் சரியாச்சொல்..?

நேயன்மனதை நெகிழச்செய்து விலகிப் போவதும் முறையாச்சொல்..?

மீண்டும்மீண்டும் வாழ்வினிலே வந்தே பூத்திடு ரமலானே..!

வேண்டும்நலன் கள்யாவையுமே நீதான் சேர்த்திடு ரமலானே..!


ஒவ்வொரு வருடமும் ரமலான் பிரிகையில் மனது மிகவும் கவலையில் ஆழ்ந்து வருந்துவது எல்லோருக்கும் இருக்கக்கூடியது தான் ஏனெனில் அதை சுவைத்தவர்கள் அதை அவ்வளவாக பிரிய தயாராவதில்லை - ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: