22 ஆகஸ்ட் 2014

முகநூல் இடுகை ஆகஸ்ட் 2014 நடுவாரங்கள்

சமூகத்தின் பார்வையில் தப்பானவர்கள் எல்லாம் தப்பானவர்கள் அல்ல.. அவ்வாறு ஒதுக்கப்பட்டவர்களிடமிருந்து எத்தனையோ நல்ல விடயங்களும்.. கற்கவேண்டிய அறிவின் விழுமியங்களும் கிடைக்கத்தான் செய்கிறது. 

அது நமது சிந்தனையின் நீள அகலத்தையும் பொறுத்தது.. 
அது நமது பார்வையின் ஆழத்தைப் பொறுத்தது..
அது நமது அணுகுமுறையின் இயல்பினைப் பொறுத்தது
அது நமது தேடலின் வேட்கையைப் பொறுத்தது
******************************************

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் 
நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம் 
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் 
இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை".

மேற்கண்ட வாசகங்கள் திருநாவுக்கரசருடையது. ஆழ்ந்த ஆன்மீக பேரதிர்வு உள்ள அவ்வாசகங்கள்.. மனிதத்தின் அசாத்திய ஆற்றலை... அவனின் சூக்கும உலகின் வலிமையை.. வெளிப்படுத்தும் ஏகபோக வார்த்தைகள். இதை எத்தனையோ பேர் தனது மேடைப்பேச்சுக்களிலும்.. கட்டூரைகளிலும் மேற்கோள்களாக காட்டியிருக்கிறார்கள் ஆனால் முதன் முதலாக இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் இதை சாரு நிவேதிதா சொல்லக்கேட்டு அவ்வரிகளின் வீரியத்தில் பேரதிர்வில் ஆழ்ந்தேன்.

வாழ்வின் நிகழ்வுகளோ அல்லது பிற ஆதிக்கமோ மனச்சோர்வாய் நம்மை வீழ்த்த வரும் வேளை இவ்வரிகளை நினைத்தால் ஒரு தட்டு தட்டி விட்டு எழலாம்.

******************************************
பொறுமை மிகவும் தேவைப்படுகிறது...அதுவும் நம்மை பட்டென உசுப்பேற்றும் நமக்கு தொடர்பில்லாத துடுக்குச்சொற்கள் அல்லது வசைச்சொற்களுக்கு மத்தியில்..!

துடுக்குச்சொற்கள்.. ஆத்திரமூட்டும் சொற்கள் பூனையைக்கூட போர்க் கோலம் பூண வைக்கும் கோமாளியைக்கூட போற்களம் புகவைக்கும்..!

செவிடாய் இருப்பதற்கு பயிற்சி எடுத்தல் அவ்வளவு எளிதன்று..! மனதை சாந்தப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவம் இது போன்ற தருணங்களில் விளங்கும்.

குடும்பமோ... பொதுத்தளமோ.. எவ்வளவு பொறுமையாய் இருந்தாலும் எதிர்தரப்பு நம்மை எளிதில் ஆட்கொள்ள அனுமதி தந்தால் கதை கந்தல் தான். பொறுமை அவ்வளவு எளிதல்ல..
அதனால் தான் "பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான்" என்றது திருக்குர்ஆன். "பொறுத்தார் பூமி ஆள்வார்" என்றது முதுமொழி

தற்போது சுதந்திர தினம்.. சுதந்திர தினம்.. என்றே முகநூல் எங்கிலும் தென்படுகிறது.

ஒரு தகவலுக்காக..

சுதந்திரம், தினம் என்ற இரண்டும் சமஸ்கிருதம் தான், முந்தைய காலத்தில் செய்தித்தாள்.. செய்தி எல்லாவற்றிலும் மிக அதிகமாக சமஸ்கிருத எழுத்துக்கள் அதிக பயன்பாட்டில் இருந்தது, இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனாலும் நாம் தவிர்க்க முடியாமல் அது கலந்துவிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருத மொழிக்கு நாம் ஒரு போதும் எதிரிகள் அல்ல.. ஆனால் பிற மொழி நம் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அதுவும் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பெரும்பாலான சொற்றொடரில் அல்லது ஒரு சொல்லில் இடையிடையே வந்து அதற்குரிய தமிழ் பெயரையே மறைப்பதை அல்லது அது போன்ற தமிழ் பெயர் இருப்பதையே தமிழர்களிடமிருந்து மறக்கடித்து அழிப்பதை தான் வேண்டாமே என்கிறோம் ஆதலால் நாம் சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக விடுதலை நாள் என்று சொன்னால் ஒன்றும் குறைந்து போகாதே.

முன்பெல்லாம் கிரஹப்பிரவேசம் என்பார்கள் இப்போது புதுமனை புகுவிழா என்கிறோம். கல்யாணம் என்பார்கள் முற்றிலுமே இப்போது அது திருமணம் என்று பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கிறது, ஜனனம், மரணம், தோஸ்த்,புஸ்தகம், கருணை,நிதி,பந்தோபஸ்து, முஸ்தீபு, கர்மம், குரு, சிஷ்யன், போஜனம், சாலை, ராத்திரி, பத்திரிக்கை, சுவாசம், சமீபம், ஜாஸ்தி, கம்மி......................................................................... என சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இப்போது அந்நிலை சற்றே மாற்றம் கண்டுள்ளது. ஆயினும் சில நேரங்களில் நாம் தவிர்க முடியாததாகிறது. ஒரு சில சந்தர்பங்களில் (சந்தர்ப்பம் -சமஸ்கிருதம்) அதாவது சில வேளைகளில் ஒரு பொருளுக்கு எந்த வழக்கில் அது சொல்லப்படுகிறதோ அந்த சொல்லை சொன்னால் தான் அச்சொல்லுக்குரிய அச்சொல் சொல்லப்பட்ட விளைவை, நோக்கை, இலக்கை அது குறிக்கும் அப்படி உள்ள நிலைகளில் பல சொற்களின் வழக்குச்சொல்லாகவே இருக்கும் பிற மொழி சொற்களை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் (சமஸ்கிருதம்) உள்ளோம், ஆதாவது சூழலில் உந்தப்பட்டு உள்ளோம். ஆயினும் தம் தாய்மொழிப்பயன்பாட்டை அதிகரித்து நெஞ்சம் மகிழ முயல்வோம்.

நம் மொழியை நாம் நேசிக்காமல் யார் நேசிப்பது. (இது வெறியல்ல.. மொழியன்பு.

வாழ்க எம் மொழி.. வாழ்க தமிழ்..

(அறிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் மட்டும் தான் தனது பகிர்வில் எல்லாம் விடுதலை நாள் என குறிப்பிட்டுக்கொண்டே வருகிறார்கள். பார்க்கவே மிக மகிழ்ச்சியாக இருக்கும்.)



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: