08 மே 2012

கொடியின் குமுறல்!



சுதந்திரநாள் விழா
கோலாகலக் கொண்டாட்டம்,
கொடியேற்றத்தில்
பள்ளிச்சிறார்களுக்கெல்லாம்
இலவச இனிப்புகள்..!,
இதை வாயில் அதக்கிக்கொள்!
ஊறும் எச்சிலை விழுங்கிக்கொள்!
உறுதி மொழிகளையெல்லாம்
உறுதியாக மறந்து விட வேண்டும்
பள்ளிக்கூட்டம் களைவதோடு!,
கண்ணால் கண்டுவிட்டு
கம்மென்று செல் எதையுமே!,
காதாலும் கேட்கலாம்
தப்பொன்றும் இல்லை! – ஆனால்
ஏன் இந்தக் கொடுமை…சிறுமை…
எனக் கேள்விகளை
வாயால் மட்டும் கேட்டுவிடாதே!,
வழக்குகள் ஏதும் தொடர்ந்துவிடாதே!
என்பதற்காகத்தான்
குழந்தைபருவம் முதலே
வாய்மூட வைத்து
வழக்கப்படுத்துகிறார்கள்.

தலைவர்கள் கொடியேற்றிவிட்டு - தாம்
தங்கத்தை ஒத்தவரென்று பேசுகின்றனர்,
அவர்களின் தரமென்னவென
அவர் ஏற்றிய கொடிக்கும் கூட தெரியும்.

ஐயோ! உன் அழுக்குக்கை
பட்டுவிட்டதே என்ற ஆதங்கத்திலும்
நீ தொட்டதில் ஒட்டிக்கொண்டது
நான் பறப்பதினாலாவது நீங்கட்டும்
என்னை கட்டிப்போடாதே
விட்டுவிடு சுதந்திரமாக
என்பதாகத்தான் அதுவும் பறக்கிறது.

நான் மரணித்த மனிதனுக்காகவாவது
மாலையாயிருந்தால் நலமாயிருக்குமே,
மக்களை ஏமாற்ற
மணிக்கொடிக்குள் என்னை வைத்து
துரோகத்திற்கு துணைபோகவைத்து விட்டனரே!
கொடிக்குள் இருந்த மலர்கள் கூட
இப்படித்தான் அரற்றி அழுகிறது!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


குறிப்பு: இது 1997-ல் எழுதியது சுதந்திர நாள் பொன்விழா கொண்டாட்டத்தினை கண்ட பின் மனதில் தோன்றியது.

கருத்துகள் இல்லை: