03 ஏப்ரல் 2012

நனியுயர் நன்னியம்மா..! - (பாகம் -4)

இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு




பாகம் -4

தனிச்சிறப்பான பண்பு நலன்கள்:
ஈகை
ஏதேனும் தேவை உடையவராய் யார் நாடி வந்து கேட்டாலும் இல்லை என்று என்றும் அச்சொல்லாடலை பயன்படுத்த அறியாதவர் என் நன்னியம்மா! வருபவர்களுக்கு பிறருக்கு தெரிந்தும், தெரியாமலும், மறைத்தும், மறைக்காமலும் பணமாகவோ, விளைந்து வந்த நெல், அரிசி, உலுந்து, பயறு, எள்ளு, தேங்காய், எண்ணைவகைகள் என போன்ற உணவுப் பொருட்களாகவோ, துணிமணி வகைராக்களாகவோ அல்லது எந்த ரூபமாகவோ அது இருக்கும் அம்மாவின் மனநிலை எல்லாம் வந்தவர் மனம் நிறைந்து செல்லவேண்டும் என்றே. ஆதலால் எப்படியாவது உதவி செய்தே தீருவது என்ற கோட்பாட்டில் கோணாது உதவிகள் செய்து வந்தவரை மகிழவைத்திடுவார்.. பெரும்பாலும் மூன்று வேளைகளிலும் ஏழை எளியவருக்கும், வயோதிகர்களுக்கும் உண்ண உணவு ஈயாதிருந்ததே இல்லை.. சோறு சில வேளை அவர்களின் வீட்டுக்கே செல்லும் இல்லை அவர்களை நான் போய் அழைக்க எங்களோடு சாப்பிடுவார்கள் நெருக்கமான சிலர் தினமும் எங்களோடு எப்போதும் சாப்பிட்டு போகும் வழக்கமும் உண்டு. சனிக்கிழமை வரும் மிஸ்கீன்களுக்கு தெரியும் என் அம்மாவின் வழக்கம் அன்றைய காலைகளில் எங்கள் வீட்டு வாசலில் பந்தியே நடக்கும் யார் யாருக்கு எந்த விதத்தில் சோறு, தோசை அல்லது இட்லி  என அவரவருக்கு அம்மா கொடுக்க மிக மனமகிழ்வோடு வாழ்த்திக்கொண்டே எல்லோருமாக சாப்பிட்டு செல்வது வழக்கம். வாழ்வில் பிறரை கடிந்து பேசும் வழக்கமோ அல்லது மனம் வருந்த இவர் பேசினார் என்பதே இதுவரை இல்லை. மிக அன்போடும்.. பரிவோடும்.. இவர் பேசிடும் விதத்தினால் எல்லோரும் பேரன்பு கொண்டு வெள்ளம்ஜி வீட்டிலிருந்து வந்தாலும் சினா தானா வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டு வந்ததால் 'சீனா தானா வீட்டு புவ்வா' என்று மிக நெகிழ்ந்து பேசி அவர்களும் அன்புபாராட்டினர்.


சுற்றம் பேணல்
அவரது குடல்வால் ஜனங்களை அம்மா கவனித்தது போலெல்லாம் யாரும் கவனிக்க முடியாது.. பீரத்தா வீட்டார் மீது காட்டிய கனிவு.. பீர்கனி வீட்டார் மீது காட்டிய பாசம்.. மற்ற அவரது பெருமா, ஹாலா  (பெரியம்மா சின்னம்மா) மக்கள் மீது காட்டிய கழிவிரக்கம் எல்லாம் சொல்லில் அடங்கக்கூடியவை அல்ல.


கீழத்தெருவில் உள்ள எல்லா அண்டை அயலர்களான ஒத்தவயது அம்மாக்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் மிக அலாதியான தோஸ்த்கள்... பிரியாத பிரியமானவர்கள், தங்களின் ஒவ்வொருவருக்குமான குடும்ப பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசி பகிர்ந்து கொள்வதிலிருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வது வரை உள்ள விசய்ங்களில் எங்கள் அம்மா மிக முக்கியஸ்தர். அந்தி வேளைகளில் கொள்ளைகளில் அல்லது வீடுகளில் கூடும் வட்டார நண்பர்கள் எல்லோரும் ஆன்மீகத்தையும் தாங்கள் படித்த இஸ்லாமிய வரலாற்று கிதாபின் குறிப்புக்களையும் பரிமாறி அர்த்தமுள்ள புரிதல்களின் பொழுதாக கூடி பேசி களிப்பர். நட்பு பேணுவதில் உடல் நலத்தை விசாரிப்பதில் அவர்களின் கூட்டாளிமார்களுக்கு ஏதேனுமென்றால் எங்கே இருந்தாலும் போய் பார்த்து ஆருதலாக இருந்து வருவதில் மிக முனைப்பானவர்கள்.



கீழத்தெருவில் அம்மா அவர்கள் அக்கம் பக்கத்து வீடுகளுடன் பேணிய உறவுகள் எல்லாம் அத்தனை சுமூகமானவை.. அழகானவை. பக்கத்து தெருவீட்டு தாஜம்மா புவ்வா, கொள்ளைவீட்டு பொண்ணு, எதிர்வீட்டு செ.ப. வீட்டார் என எல்லாம் ஆசையாசையாய் அன்பைப்பறிமாறிய காலங்கள் எல்லாம் அன்றைய காலத்தின் பசுமைகள்.. ஏன் தெருவில் உள்ள எல்லா தரப்பு பிள்ளைகளும், பசங்களும் கூட அம்மா.. அம்மாவெனத்தான் மிகுந்த பாசங்கொண்டாடுவர்.

எங்களின் வீட்டில் மீரான் புவ்வாவும், ரமீஜா ஹாலாபும், பின்னக்குளம் பாத்துமாபியும் இன்னும்..இன்னும் பலரும் மிக நெருக்கமானவர்கள். அத்தா இறந்ததற்கு பிறகு 1995லிருந்தே பின்னக்குளம் பாத்துமாபி துணைக்காக வந்து உதவ ஆரம்பித்து பின்னாளில் அம்மா சாலை வீடு, பாப்பந்தெருவென இருந்த நாட்களில் அத்தனை அற்புதமாக எங்களின் வீட்டை பாதுகாத்து வந்த்திலும் அம்மாவிடம் பேரன்பாக இருந்ததிலும் பாத்துமாபி தனிசிறப்பான இடத்தை பெற்றிருந்தார் அவரின் எதிர்பாராத திடீர்மறைவு அம்மாவை மிகுந்த கவலையில் தான் ஆழ்த்தியது.

மேலும் மேன்மைகள்
வருடத்தில் தனது தாயார், தந்தையார், மாமனார், மாமியாய், நாத்துனாள்மார்கள், கணவர் என யார் யார் மறைந்த மாதம் வருகிறது அவர்களுக்காக அயராது அருள்மறையாம் திருக்குர் ஆன் ஓதி அவர்களுக்காக ஹத்தம் செய்து நினைவை பகிர்ந்து பாத்திஹா ஓதி அந்த ஆன்மாக்களுக்கு எத்தி வைப்பார்கள். ரபிய்யுல் அவ்வல், ரபிய்யுல் ஆஹிர் மாதங்களில் அதற்குரிய சிறப்பாக மவ்லித்களை மகள்களான அம்மாஜான், என் புவ்வா, ஹாலாஜான் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு ஓதி கண்ணியப்படுத்திடும் நாட்களின் மணம் என் நெஞ்சத்தில் இன்றும் இருக்கிறது.

தெருபயான் தொடராக நடக்கும் அந்த காலங்களில் ஹதீஸ்களை கேட்க பெரும் ஆவல் கொண்டு திண்ணைகளில் தெருவிளக்கு அமர்த்திவிட்டு தாங்களும் மற்ற தோழிமார்களையும் அழைத்து பயான் முடியும் நடுநிசி தாண்டிய நெடுநேரம் வரை மிககவனமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள் பிறகு நானும் என் அத்தாவும் வந்த பிறகு தான் வீடு தாழிடுவார்கள்.

மாலை நேரம் ஆனால் வீட்டின் தெருக்கதவு முதல் எல்லா கதவுகளையும் திறந்து வைப்பார்கள் மலக்குகள் வரும் நேரம் எனச்சொல்லி.. பிறகு தான் தெரிந்தது இந்த நடைமுறைகளில் எல்லாம் அறிவியலும், இயற்கை மருத்துவமும் இருப்பது. வெள்ளிக்கிழமை இரவை யாஸீனைக்கொண்டும், மற்ற திக்ரு பிக்ருகளை கொண்டும், மறைந்தவர்களையும், மகான்களையும் நினைத்து துஆக்கள் ஓதுவதைக்கொண்டும் உயிராக்கி வைப்பார்கள்.

வீட்டு வேலைகாரர்களிடம் மென்மையும், இரக்கமும் கொண்டு அவர்கள் நடந்த விதமும், நடத்திய விதமும் வீட்டு வேலை செய்த ரஜியாவுக்கு தன் பிள்ளை போல அவர் திருமணம் செய்து வைத்து அனுப்பிய பின்னும் பெற்ற தாய் போல சதா நினைவுகளிலெல்லாம் அவளை நினைத்திருந்து பேசியதும் நான் பார்த்தவை. பண்ணையில் வேலை செய்த வேலையாட்களுக்கெல்லாம் வீட்டுவேலை செய்யும் போது உணவு வேலை வந்தால் அல்லது தேனீர் நேரம் வந்தால் நெஞ்சம் நிறைந்து கொடுத்து உபசரிப்பதினாலும், பரிவான பழகுமுறைகளாலும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருப்பர்.

சுபாவங்கள்
கொசுக்கள் கடித்தால் அம்மாவிற்கு உடனே தடித்துவிடும் அதனால் கொசுவலை இல்லாது அன்றைய காலங்களில் அம்மா உறங்கியதே கிடையாது. ஒரு சில நாட்கள் நான் கூட கட்டிவைப்பேன். அப்படி கட்டிவைத்தால் வாழ்த்து மழையே பொழியும், இரவில் நான் எத்தனை மணிக்கு வந்து மணி அடித்தாலும் கடிந்து ஏதும் பேசாது பிள்ளைத்தனமாகவே கதவு திறந்துவிடுவார்கள் என் அம்மா.

ஒழுங்காக சாப்பிடவே மாட்டார்கள் எவ்வளவு வறுவல் பொறியல் இருந்தாலும் எல்லாவற்றையும் எங்களிடம் வைத்து விட்டு நாங்கள் எவ்வளவு வைதாலும் கேட்காது ஒதுங்கியதையும், கழிந்தததையும் மட்டுமே சாப்பிடுவார்கள்.

                                                                                                                                                               மேலும் பாகம் -5-ல்  







-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: