03 ஏப்ரல் 2012

நனியுயர் நன்னியம்மா..! - (பாகம் -5)

இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு



பாகம் -5


அடர்ந்திருந்த எண்ணம்
போதும் பூவுலகில் பூத உடலுடன் கூடிய வாழ்வென்று திருப்தி அடைந்த ஆன்மாவாய் எப்போதுமே நிறைவையே அதாவது உடல் துறப்பதையே விரும்பிய ஆன்மா அம்மா! இறப்பின் சிந்தனை மிக அதிகம் அவர்களுக்கு மறைந்த ஒவ்வொருவராக குறிப்பிட்டு அல்லாஹ் என்னையும் ‘கீழ கெடக்காம மேல கெடக்காம மேன்மையாக்கிடனும்’ என்றே தான் எப்போதும் சொல்வார்கள்.. கசிந்துருகுவார்கள்…இறைஞ்சுவார்கள்.

திடீர் நலக்குறைவும் தொடர்ந்தவைகளும்..
அன்று ஹஜ்ஜுப் பெருநாள் நவம்பர் 7ஆம் தேதி அம்மாவின் உடல்நிலை திடீரென மிகவும் பாதிக்கப்பட்டு கோமாவிற்கு சென்று விட்டார்கள்… எல்லோரும் அதிர்ந்தனர்.. ஏதும் செய்யமுடியாதோவென பதைத்தனர் பார்த்தவர்களும்.. சுற்றதினரெல்லாமும் கூட அம்மா இனி பிழைப்பதரிது எனத்தான் மனதில் மட்டுமல்ல சிலர் வெளிபடையாகக்கூட சோல்லிவிட்டனராம். இருந்தாலும் அதிதீவிரமாக உடனடியாக முடிவெடுத்து வாஞ்சலிங்கம் டாக்டரிடம் கொண்டு செல்ல தெய்வாதீதமாக பிழைத்துக்கொண்டார்கள். உடலில் சோடியம் உப்பின் அளவு தான் குறைந்திருக்கிறது அது ஏற்றிக்கொண்டிருப்பதனால் எல்லாம் சரியாகும் என்றனர். அதன்பிரகாரமே இறையருளால் அம்மா உடல் நலம் தேறி நலமடைந்தார்கள், ஐந்தாறு நாட்களில் வீடும் வந்து சேர்ந்தார்கள். 

பிறகு நன்றாக இருந்தவர்கள் தான் நவம்பர் 17ஆம் தேதி மீண்டும் திடீரென மிகபலகீனமும் இம்முறை உடல் நடுக்கமும் அதிகமாக ஒன்று கூடி வதைக்க  எல்லோருக்கும் மிக வருத்தமாகி மீண்டும் வாஞ்சலிங்கம் மருத்துவமனைக்கு ஏகினர். உடல் நடுக்கம் அம்மாவை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியது..அந்த நேரத்தில் என் நாட்குறிப்பில் இவ்வாறக எழுதினேன் ….
 


 திங்கட்கிழமை, நவம்பர் 21ஆம் நாள் 2011

என் பாசத்திற்குறிய அம்மா.. என் தாயின் தாய்.. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் இருக்கிறார்கள்.இம்முறை இரண்டாவதாக மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள், இப்பவும் 4 நாட்கள் ஆகிவிட்டது உடலில் நடுக்கமும், பலகீனமும் தான் அவர்களுக்கு எழுந்து உட்கார்ந்தாலே நடுக்கம் வந்து விடுகிறது, படுத்திருந்தால் பரவாயில்லையாம், கைத்தாங்களாக சாய்த்துக்கொண்டு தான் மற்றொருவர் உணவு ஊட்டுகிறார்கள் இன்று கூட புவ்வா பிடித்துக்கொள்ள அம்மாஜான் ஊட்டி விட்டது. சஃபிக்கா நிறைமாதமாக இருந்தாலும் சஃபிக்காவை சேக்பரீத் ஹாலாபு வீட்டில் விட்டுவிட்டு ஹாலாஜானும் புவ்வாவும் தான் மருத்துவமனையில் இருக்கிறார்கள். எனது மனைவியும் சில நாட்களில் இன்ஷா அல்லாஹ் பிரசவம் ஆகிவிடும் நிலையில் இருப்பதால் புவ்வா அங்கு இருப்பதையும், அம்மாவிற்கு உள்ள உடல் நலக்குறைவு குறித்தும் வருத்தமுறுகிறாள். அம்மாவிற்கு உடலில் எதுவும் இல்லை எல்லாம் நலம் தான் ஆனாலும் சத்துக்குறைவும் பலகீனமும் தான் அவர்களை வாட்டுகிறது. தற்போது டாக்டர். வாஞ்சலிங்கம் தான் பார்க்கிறார்.

அம்மா சிறப்பானவர்கள்.. அவர்கள் ஓர் அதிசயப்பிறவி என்ன செய்வது என்றே தெரியவில்லை தங்கத்தை ஒத்த குணம் கொண்ட பெரும் பிறவி அவர்கள். என்னை அவர்கள் சீராட்டி வளர்த்த அருமையெல்லாம் சொல்ல முடியாது. என்மேல் அவர்களுக்கு இருந்த கனிவும் அக்கரையும் அப்ப்பப்பா..! அல்லாஹ் தான் அவனது கருணைமிக்க நபிகள் நாயகத்தின் பொருட்டாலும் அவர்களின் கண்ணியமிக்க உயர் திருக்குடும்பத்தினரின் பொருட்டாலும் பழைய ஆரோக்கியத்தை மீண்டும் அருளி கிருபை செய்ய வேண்டும். காலித்தும் இஸ்மாயில் பாயும் மிகவும் உதவியாக இருக்கின்றனர். அம்மா நலமாக வேண்டும் என்பதே மனதின் பிரதான பிரார்த்தனையாக இருக்கிறது! இறைவா நியே அருள் செய்ய வேண்டும். அவர்களது இரத்த நாளங்களை சீராக்கி நரம்பு மண்டலங்களுக்கு பலத்தை அருள்வாயாக! ஆமீன்! இன்ஷா அல்லாஹ்.என்று எழுதி வைத்திருக்கிறேன்.

பிறகு நவம்பர் 23, 2011 ஆம் நாள் எழுதியதில்….

(நேற்று இரவு தூங்காமல் கொஞ்சம் மூச்சுப் பிரச்சனையால் கஷ்டப்பட்டார்களாம் மதியத்திலிருந்து மிகவும் கஷ்டப்படுவதாக புவ்வா கூறியது, நஜீர் பாப்பு இது குறித்து வாஞ்சலிங்கத்திடம் பேசினார் எனக் கூறி அவரிடம் புவ்வா போன் கொடுக்க சற்று நிறையவே அவரிடம் பேசினேன், வயது காரணமாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரியாகும் என்றார், மற்ற யாரிடமாவது காட்டலாமா எனக்கேட்டக அது பற்றி அவருக்கு தெரிந்த மற்றொரு டாக்டரிடம் ஆலோசித்ததாகவும் வாஞ். டாக். நடுக்கத்தினை நிறுத்துவதற்காகவே அனைத்து மருந்தும் கொடுத்திருக்கிறார் ஆனால் இதுவரை எதனால் இந்த நடுக்கம் என யாரும் கண்டுபிடிக்கவில்லை கொஞ்சம், கொஞ்சமாக சரியாகும் இங்கே நீங்கள் அழைத்து வந்தாலும் நாங்களும் முதலிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் அதனால் அங்கே பார்ப்பதே நல்லது என்றும் வாஞ். நரம்பியலில் நல்ல டாக்டர் என்றும் கூறிதயாக கூறினார். தஞ்சையை விடுத்து வேறும் எங்கும் அழைத்து போகும் நிலையில் இல்லை ஏனெனில் படுத்து மட்டுமே கிடக்கிறார்கள் நாம் தூக்கினால் தான் எழுகிறார்கள் நாக்கு முதல் உடல் எல்லாம் நடுக்கம் உள்ளது எனச் சொன்னார், எனக்கு மிகவும் கஷ்டமாகிப் போனது, அந்த நேரங்களில் நஜீர் பாப்பின் ஒத்தாசை மிக பலமாக இருந்தது)

பிறகு மீண்டும் போன் செய்து புவ்வாவிடம் பேசினேன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களைப் பற்றி விசாரிக்க உடன் அவர்களிடம் நான் எதிர்பாட்க்காமலே பட்டென கொடுத்து விட்டது. அம்மா மிகவும் தழுததழுத்த குரலில் ஆனால் அழுத்தமாக நான் நன்றாக இருக்கிறேன் என்றார்கள் அப்போதும் சுயநினைவோடு எனக்கு கவலை தரக்கூடாது என்று 'கவலைப்படாதேம்மா' என்றார்கள் எனக்கு அப்படியே மிகவும் மனது வேதனையாகிவிட்டது என்னை ஆரம்பம் முதலே அருகில் வைத்து வளர்த்த என் அன்னையான என் அம்மாவை இந்த நேரத்தில் பக்கத்தில் இருந்து பார்த்து தூக்கி வேண்டுவன செய்து நெஞ்சோடு அணைத்துக் கொள்ள முடியவில்லையே என கசிந்துறுகினேன், 'அம்மா.. நீங்கள் நன்றாக இருப்பீர்கள் அல்லாஹ் உங்களுக்கு நல்ல படியாக கிருபை செய்வான் அம்மா.. நலலபடியா சந்தோசமா இருங்க' என்றேன் அதற்கு 'நல்லா இருக்கே..ம்ம்மா சந்தோசமா இருக்கேன்' என்றும் 'உன் பிள்ளை குட்டிகள் எல்லாம் எப்படி இருக்கு' என்றும் கேட்டார்கள் அதை கேட்டவுடன் எனக்கு அழுகைவந்து விட்டது, பின்பு அங்குள்ள என் புவ்வா, ஹாலாஜானிடம் 'ராஜா முஹம்மது ஓட்ஸ் அனுப்பி இருக்கான் அதை சேட் பாயிடம் கொடுத்து விடுங்கள்' என்ற சொல்லிக்கொண்டிருப்பது கேட்டு என் புவ்வாவிடம் உறுதி செய்தேன்.

இறைவா என் அம்மாவிற்கு நல்ல சுகம் அருள், அவர்கள் உடல் நலத்தோடு போராடி கஷ்டப்படக்கூடாது அவர்களை எல்லா வகையிலும் சிறப்பு செய்! உன் ஹபீப் நாயகத்தின் (ஸல்) பொருட்டால் கருணை கொண்டு பார்! ஆமீன்.. அமீன் யாரப்பல் ஆலமீன்!!!

இப்படியாக மிகுந்த சிரமத்திற்கு பிறகு அம்மாவின் உடல் நலம் நவம்பர் 29ஆம் தேதியளவில் சீரடைந்தது.. அந்த நிலையிலும் புண்ணியத்தாயின் உள்ளத்திலும் உதட்டின் அசைவிலும் கலிமாவும் ஸலவாத்தும் இடையறாது ஓடிக்கொண்டே இருந்ததாம். இந்நாட்களில் புவ்வாவும், ஹாலஜானும் மிகுந்த சிரங்களை ஏற்று தம் தாயாருக்கு பணிசெய்தனர். அம்மாஜானும் அதனளவுக்கு அவ்வப்போது வந்து உதவிகள் செய்தது. இஸ்மாயில் பாய் மற்றும் காலித்தின் ஒத்துழைப்பு நிரம்பி இருந்தது. எனது பாப்பு, பெரியபாப்பு, முஜீப் அண்ணன் எல்லாம் அந்நாட்களில் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று நிலைமைக்கு தக்கவாறு முடிவெடுத்து ஆதரவாய் இருந்தார்கள். அம்மாவிற்கு யாரும் எந்த அளவிலும் உதவிகளில் ஒத்தாசைகளில் குறைவைக்கவில்லை.

இதற்கிடையில் எனது மனைவிக்கு இறையருளால் பிள்ளை பிறக்க, அம்மா ‘என்னை பிள்ளையை பார்க்க அழைத்துச்செல்லுங்கள்’  என பிள்ளைத்தனமாக சொல்லிக் கொண்டிருந்ததும் மற்ற எத்தனையோ வஸீயத்துக்களை சொன்னதையெல்லாம் என் தாயார் நினைவு கூர்ந்திருக்கிறார். டிசம்பர் 6 தேதி தான் மாலை முவாபிகாவையும் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு வீடு வர அன்று தான் அம்மாவையும் ஆஸ்பத்திரியிலிருந்து நற்சுகத்துடன் அழைத்து வந்தனர். டிசம்பர் 6 தேதியிலிருந்து டிசம்பர் 30ஆம் தேதி வரை நன்றாக இருந்ததும்.. சுவரைப்பிடித்து நடந்து வீட்டில் நடந்ததும்.. அவர்களின் வேலையை அவர்களே செய்து கொண்டிருந்ததும் மகிழ்வை கொடுத்துக்கொண்டிருந்த வேளையில் தான் நான் துபாயிலிருந்து வந்தேன்.. அது "தானே புயல்" வந்த டிசம்பர் 30ஆம் நாள்.

நான் ஊர் சென்றதும் கண்டதும்
மாலை வந்த நான் பாப்பாந்தெரு சென்று அம்மாவை பார்த்தேன் நடுவீட்டு கட்டிலில் சம்மனம் போட்டு உட்கார்ந்திருந்தார்கள்.. நான் அவர்களின் பார்வையில் பட என்னை பூரிப்புடன் ஆவலாக பார்த்து உணர்வு ததும்ப ஆனந்த கண்ணீர் விட்டார்கள்.. இங்கே உட்கார் என தனக்கு அருகே என்னை அமர்த்திக் கொண்டார்கள்.. கட்டியணைத்து, உச்சி முகர்ந்து எப்போதும் போல் வாழ்த்தி துஆ செய்தார்கள் பிறகு என்னிடம்… ‘ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..’ என்றும் நான் மகள்களா பெத்துட்டேனே என்று வருத்தப்பட்டேன் ஆனா இப்ப என் மகள்கள் தான் என்ன அப்படி பாத்துகிட்டாங்க.. ஏ மகள்கள பாத்து பூரிப்பு அடஞ்சுட்டேன். மனசு குளுந்து போச்சு..எல்லாரும் என்ன அப்படித்தா ரொம்ப கவனிச்சுக்கிட்டாங்க..’ ன்னு அவங்களுக்காக துஆ செய்து வாழ்த்திக்கொண்டிருந்த அம்மா ‘நீ தான் எனக்கு எல்லாம் செய்யனும் நல்லது கெட்டதுன்னு நடந்தா ஓன்ட்ட சொல்லிப்புட்டே ஆம்மா..’ என எனது கையை பிடித்து சொன்னார்கள் அம்மா. அதப்பத்தியெல்லாம் கவல படாதம்மா.. என நானும் அணைத்துக்கொண்டு சொன்னேன்.

                                                                                                                                                             - மேலும் பாகம் -6-ல் 





-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: