24 ஏப்ரல் 2012

உண்மை மீளும்!




அற்பத்தில் மூழ்காதே
அநியாயம் போகாதே
ஆத்மாவின் ரகசியம்
அகிலத்தில் நிலையாகும்!

தேனூறும் உலகியல்கள்..
தேவையில்லா சிந்தனைகள்..
சிறைசெய்யும் சிற்றின்பசீர்கேடு..
சிதைத்துவிடும் உன் உயர்வை!

நிலையான பரமதிலே
நிலைகொண்டு நீ இருக்க
வலையான மாயையிலே
நுழையாமல் நிலைத்திடுவாய்!

எண்ணத்தில் நீ உயர...
நித்தியமாய் நீ மிளிர...
சத்தியமாய் இவையெலாம்
சாதகர்க்கு பகையாகும்!

முக்திபேறு வேண்டுமானால்
முக்தர்களின் நாமமோதி
முழுநிலைஅடைந்த தூயோர்
முன்சென்ற வழியில் செல்!

உள்ளதெது உணர்ந்து விட்டால்
உண்மை யெல்லாம் தெரிந்துவிடும்
உண்மை மட்டும் மனம் நாடும்
உண்மை மட்டும் உன்னில் மீளும்!


2004-ல் எழுதியதாக இருக்கலாம், அப்போதைய மனவோட்டம்.

கருத்து : ஒருவன் மெய்ப்பொருளை அறியாமல் இருக்கக்கூடாது, உலகியல் சங்கதிகள் யாவும் அதனை தேடல் கொண்டு சிந்திப்பதிலிருந்து தடுத்து விடக்கூடாது ஆகையால் அதை மெய்நிலை கண்டமுன்னோர் வழியில் சென்று அறிந்து கொண்டால் சத்தியம் எதுவென்று அதாவது மெய்ப்பொருள் எதுவென்று அறிந்து விடும் அப்படி விளங்கினால் அதை தவிர ஒன்றையும் மனம் நாடாது. எதிலும் அதன் மூலமும், உள்ளமையுமான இறை உண்மையே தெரியும் அவ்வாறான தெளிவு நிலையில் அந்த மெய்ப்பொருளே அவனின் மூலமுமாய் இருப்பதனால் அவனும் அதனுள் ஐக்கியப்பட்டு நித்திய ஜீவனெய்துவான்!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

சசிகலா சொன்னது…

அர்த்தமுள்ள பதிவு வரிகளும் விளக்கிய விதமும் மிகவும் அருமை .