ஓசோனை ஓட்டை போட்டுவிட்டு
குத்துதே குடையுதே என்கிறோம்.. அவரவர் தங்களின் நலன் மட்டுமே பார்க்கிறார்கள்..
தான் சுகமாய் சொகுசாய் இருந்தால் போதுமெனத்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.. இப்பேர்பட்டவர்களைப் பார்த்தாலே ஏனோ எனக்கு பாபமாய் தான் இருக்கிறது. உண்மையில்
அவர்கள் நினைப்பதோ தனக்கும், தன்
பிள்ளைகளுக்கும் தான் ஒரு சொகுசை செய்து விட்டதாகவும், கட்டிய வீட்டில், வைத்திருக்கும் ஏசியில், அழித்திருக்கும் தோப்பில், சிதைத்திருக்கும் வயலில்.. நாளை நல்ல விதமாக இருக்கப்போகிறார்கள் என்பது தான்
அவர்களது அறியாமை. இவர்கள்
செய்வதெல்லாம் நாளைய இவர்களின் சந்ததிக்கு சதி தான். இந்த சதி அவர்களின் விதியை
எப்படி கொடூரமாக எழுதப்போகிறதோ என்று தான் மிக பயங்கரமாக கவலை கொள்ள வேண்டி
இருக்கிறது.
அக்கரையில்லாத அரசு, பொதுநலமில்லாத
தனிமனிதர்கள் என இருக்கும் போது பூமி ஏன் வெப்பமடையாது.. புவி வெப்பமடைதலை பற்றி
வாய்கிழிய பேசும் நம்மவர்களில் எத்தனை பேர் மரம் வெட்ட தடையாய் இருந்துள்ளோம், வயல்களில் வீடுகட்டுவதை
தவிர்த்துள்ளோம், பிளாஸ்டிக்
உபயோகத்தை குறைத்து அதை வீட்டிற்கு கொள்ளை புறத்திலும், தெருக்களிலும் நமெக்கென்ன
என போடாமல் இருந்துள்ளோம் இப்படித்தானே அரசியலில் இருப்போரும் அதிகாரத்தை
பயன்படுத்தி காட்டை அழிப்பதும், மணல் கொள்ளை
செய்வதும், இயற்கை வளங்களை
அழிப்பதும், மலைகளை
அகற்றுவதும், சுரங்கங்களை
தோண்டிக்கொண்டே இருப்பதும், தொழிற்சாலை
கழிவுகளை, புகைகளை
யோசிக்காமல் வெளிவிடுவதும் என எத்தனை எத்தனையோ அட்டகாசங்களை நிகழ்த்தி நமது மண்ணை, விண்ணை பாழாக்குகிறார்கள் அப்படி
இருக்கையில் இன்று அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலுக்கு நாம் ஒவ்வொருமே
பொறுப்பேற்க வேண்டியவர்கள் தான்.
இன்றெல்லாம்
பார்த்தீர்களென்றால் என்றோ சீதோச நிலை மாறிவிட்டது குறிப்பாக 2004 சுனாமி இயற்கையின் சுழற்சியையே வேறு
திசைக்கு சுழற்றிவிட்டிருக்கிறது. அநத வகையில் இன்னும் நாம் விழிப்புணர்வு பெறாமல்
நம் ஒவ்வொருவரின் கடமையை உணராமல் நமது பாரம்பரியமும் எதற்கும் கேடு
விழைவிக்காததுமான சணலை விட்டு பிளாஸ்டிக் பொருளுக்கு தாவுவதும், சுற்றுச்சூழலை கவனத்தில்
கொள்ளாது நமது வாகனப்புகைகளை கட்டுப்பாடின்றி புகை கக்க ஓட்டிச்செல்வதுவும், அழிந்து கொண்டிருக்கும்
மரங்களைப் பற்றி சிந்தனையே செய்யாது ஒரு மரமோ சில செடிகளோ கூட தன் வாழ்வில் வைக்க முன்வராமல் நமக்கொன்றும் இல்லை என இப்படி எந்த்
ஒரு செயலிலும் அக்கரை காட்டாது ஏதோ பசிக்கு சாப்பிடுகிறேன், நான் குளிர்ந்த அறையில்
தூங்குகிறேன் காரும், வீடும்
இருக்கிறது என் பிள்ளைகள் இன்று நன்றாக இருக்கிறார்கள் என சென்றீர்கள் என்றால்
நீங்கள் சொந்த செலவில் உங்களுக்கே சூனியம் வைத்துக் கொள்கின்றீர்கள் என்பது
மட்டுமே உண்மை.
கல்கத்தாவில் இன்று
மட்டும் கடும் வெயிலால் 67 பேர் சுருண்டு
செத்ததாக செய்தியைப் பார்த்து நான் வெந்தேன். இன்றைய அந்த செய்திதான் இந்த கட்டூரைக்கும் எனது கவலைக்கும் காரணமும் கூட அங்கு வெயில் 54.9 டிகிரி செல்சியசை எட்டி
இருக்கிறதாம். இப்படி ஒரு நிலைமை நமது இந்தியாவிலா என்று நினைத்துக் கூட பார்க்க
முடியவில்லை, நமது தமிழகத்தில்
குறிப்பிட்ட சில ஆண்டுகளில் வெயிலின் அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
எக்கேடாவது போகட்டும் என பணம் உள்ளவர்கள் பங்களாவில் பதுங்கி கொள்கிறீர்கள் பாமர
ஏழை என்ன செய்வான் இப்படி செத்து தான் மடிவான், அவன் செத்தால் என்ன நான் நன்றாக இருக்கிறேனே என நீங்கள்
நினைத்தால் உங்களை விட ஒரு முட்டாள் இல்லை. பங்களாவும் பாழடையும் உனக்கும் ஆப்பு மிக அருகில் என்பதை
உணர்ந்து கொள். ஓடம் ஒருநாள் தரையில் ஏறினால் வண்டியும் ஒருநாள் ஓடத்தில்
ஏறித்தான் ஆகவேண்டும்.
மரம் அழிகிறது, காடு காணாமல் போகிறது
கடல் மட்டம் உயர்கிறது, ஆர்டிக்
அண்டார்டிக் பனிப்பிரதேச உறைந்த பனிபாறைகள் கரைகிறது, காற்றில் மாசு
அதிகரித்துவிட்டது நவீனங்களும், நாசமாய்
போனவைகளும் அதிகரித்ததால் எல்லா விலங்குகளும், பறவைகளும் அழிய தொடங்கி அழிந்து வருகிறது… குறிப்பிட்ட ஆண்டுகளில்
எல்லா வகையான விலங்குகளும், பறவைகளும்
அழிந்து வருவதை கண்கூடாக பார்த்துத்தான் வருகிறோம்.. காடுகள் அழிந்து வருவதாலும், அங்கு நீர்நிலைகளில் நீர்
வற்றி விட்டதாலும் உணவுகிடைக்காமலும், நீர் கிடைக்காமலும் தானே நீலகிரி மாவட்டத்திலும் மற்ற நமது
மலைவாழ் மாவட்டங்களிலும் யானைக் கூட்டங்கள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம்
செய்கிறது, அவைகளை நாம்
மனசாட்சி இன்றி துப்பாக்கி குண்டுகள் முழங்க பயமுறுத்தி மீண்டும் அந்த வரண்ட
வனாந்திரங்களுக்கே அனுப்பி வைக்கிறோம் ஆனாலும் காடு காடாக இல்லாத போது எப்படி அங்கு
அவை வாழும்… என்றாவது நாம் இதற்கு
பதில் தேடி இருக்கிறோமா.. அவைகளின் மீது என்ன குற்றம் இத்தனை நாள் வராத கூட்டம்
இந்நாட்களில் மட்டும் எல்லை தாண்ட வேண்டிய அவசியம் தான் என்ன… ?
இப்படி ஒவ்வொரு இனமும்
இந்த மட மனிதனால் தான் வேதனைகளை சந்தித்து வருகிறது. பூமி என்ற புண்ணிய கிரகத்தை இவன்
அழித்துதது போதாதென இன்னும் இன்னும் அழித்துக் கொண்டு இவனும், இவனின் சந்ததிகள் மட்டும்
வாழ்வோமென்று பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறான். மரமும், பறவைகளும், விலங்குகளும், கடல் உயிரினங்களும்
அழிந்த ஓர் கிரகத்தில் மனிதன் ஒரு நாளும் வாழ முடியாது இவைகளெல்லாம் இல்லாது
போனால் பூமி உயிர்வாழவே அருகதையற்ற ஒர் கிரகமாக பரிணமிக்கும், சில நூற்றாண்டுகளாக
புத்தங்களிலும், பிறர் சொல்லியும் லேசாக அறிந்திருந்த சூனாமிகளும்,
பூகம்பங்களும், புயல்காற்றுகளும்,
வெயில் கொடுமைகளும், அதீத மழையும்
இன்று நம் கண்முன்னே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் உணர்ந்தே வருகிறோம்.
அப்படிப் பட்ட சூழலில் நாம் நினைப்பது போல நமது சந்ததி சிறப்பாய் வாழ முடியாது..
இயற்கை இடரோ அல்லது புதுப்புது உயிர்க்கொல்லி நோயோ தான் நமது உயிரான சந்ததிகளை இனி
சாய்க்கும் எமனாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. ஆகையால் இதனை நாம் ஆழமாக உணர்ந்து ஆவண செய்திடல் வேண்டும். இனியேனும் நாம்
இயற்க்கைக்கு நண்பனாய் இருக்க பழகுவோம். வாழ்க்கை தந்த இயற்கைக்கு துரோகம்
செய்யாது செயற்கைகளை புறந்தள்ளுவோம். ஒரு சிறு இடம் கிடைத்தாலும் மரம் வளர்ப்போம், தோட்டம்
அமைப்போம், பிளாட்டிக்
குப்பைகளை ரீ-சைக்கிளிங் செய்யும் வகையில் தனியே பிரித்து சேர்த்தும், அதன் பயன்பாட்டை முடிந்த
அளவு குறைத்தும் வரப்பழகுவோம், இன்னும் எத்தனை
எத்தனை இயற்கை வழிமுறைகள் இருக்கிறதோ அதை நாம் பின்பற்றுவதோடு பிறரையும் பின்பற்ற
தூண்டுவோம். விளை நிலங்களை விலைக்காகாமல் விளைச்சலுக்காய் காப்போம்.
காடு.. மலை வளங்களை யார் சுரண்டினாலும் ஓர் அமைப்பின் மூலமோ அல்லது வழக்கு
தொடுத்தோ அவர்களின் தோல் உறிப்போம். இனி அரசை நாம் இவைகளுக்கெல்லாம் ஆவண செய்ய
தூண்டிக்கொண்டே இருப்போம். பூமியின் இருக்கும் கொஞ்ச உயிரையாவது காப்போம், நம் வருங்கால வாரிசுகளை மீட்போம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
1 கருத்து:
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தம்பி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்...
உங்கள் கட்டுரையைப் படித்தேன்.உங்களுடைய சமூகப் பொறுப்புணர்வும்,கவலையும்,எதார்த்த நிலைமை பற்றிய ஆழ்ந்த சிந்தனையும்,துடிப்பும் என் மனதில் ஒரு தனித் தாக்கத்தை ஏற்படுத்தின.என்றாலும் என்ன செய்ய என்ற ஏக்கமே மிஞ்சியது.ஆயினும் உங்கள் பதிவு பயனுள்ளது,பாராட்டத் தக்கது.எதிர்கால நன்மைக்கு இடப்பட்ட எச்சரிக்கையோடு கூடிய வித்து இது.
”இருக்கும் நிலை மாற்றும் ஒரு புரட்சிமனப் பான்மை
ஏற்படுத்தல் பிறர்க்குழைத்தல் எழுத்தாளர் கடனாம்”
என்ற பாவேந்தர் பாரதிதாசன் கூற்றுக்கு ஏற்ற உங்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றுங்கள்.
வல்ல அல்லாஹ் அறியாமையிலும் இயலாமையிலும் இருக்கும் நமக்கும் நம் மக்களுக்கும் மேலும் மேலும் அருள்செய்து வரப் போதுமானவன்.
வஸ்ஸலாம்.
அன்புள்ள
அண்ணன்,
ஏம்பல் தஜம்முல் முஹம்மது
கருத்துரையிடுக