19 ஜூன் 2012

மார்க்கம் பேசும் ஆட்கள்



நானும் எனது சினேகிதனும் நேற்றைய விடுமுறை நாளில் சற்றே வெளியே கிளம்பி வருவோம் என காரில் தயாரானபோது இரண்டு நபர்கள் சலாம் கூறி தாஙக்ளும் எங்களுடன் குறிப்பிட்ட தொலைவு வருவதாக சொல்லி காரில் ஏறிக்கொண்டனர், அவகள் என் சினேகிதனின் சினேகிதர்களாம். இருவரும் போட்டிக்கு தாடிப்பயிர் வளர்த்திருந்தனர், கார் கிளம்பியது… 


புதிதாக இரண்டு நபர்கள் வந்த காரணத்தினால் நாங்கள் சகஜமாக பேச முடியவில்லை, என் சினேகிதனாகப்பட்டவன் சற்றே மெளனம் கலையட்டுமே என அமீரகத்தின் ரேடியோ ஹலோ எஃப்.எம் 89.5 ஐ ஆன் செய்தார், இனிய பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது… பாட்டு காதில் விழுந்தது தான் தாமதம் பின்னால் இருந்த இருவரில் ஒருவர் ஏதோ எங்களது வாகனத்திற்கு எதிரே திடீரென மற்றொரு வாகனம் வந்து மோதப்போவது போல் சற்றும் எதிர்பார்க்காது அல்லாஹு அக்பர்..!!!! அஸ்தஃபிருல்லாஹ்..!!! என்றார் திடுக்கிட்டோம் பிறகு தான் சொன்னார்… ‘’பாய் இசையெல்லாம் ஹராம் பாய்.. அல்லாஹ் இதை விரும்பவே மாட்டான்..’’ என ஆயிரம் மடங்கிற்கு அற்புதமாக அமலுன் சாலிஹாக பீலீம் காட்டினார்.. அத்தோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.. மார்க்கத்தை பற்றியும் அதை அக்மார் தரத்திற்கு பின்பற்றுவது பற்றியும் சமூகத்தில் உள்ள சீர்கேடுகள்.. ஹலால், ஹராம் என என்னென்னவோ பேச ஆரம்பித்தார்.. எனது சினேகிதரும் விடவில்லை வாதத்திற்கு எதிர்வாதம் வைத்து அவரை சீண்டிக்கொண்டே வந்தார், நான் மெளனமாக பேசாது கவனித்துக் கொண்டே வந்தேன்.

அவரது பேச்சு சூடுபிடித்தது அப்படி.. இப்படி என பேசிய அவர் அந்த தானாதானாவில் சேர்ந்த பிறகு தான் விழிப்புணர்வு பெற்றதாகவும்.. தாம் இன்று தூய இஸ்லாமிய வாழ்வை வாழ்வதாகவும் சொன்ன அவர்.. எங்களை பார்த்து ‘’பாய் நீங்க இன்னும் மார்க்கத்த நிறைய புரிஞ்சுக்க வேண்டி இருக்கு சிந்திச்சு பாருங்க அப்புறம் எங்க தானாதானாவ புருஞ்சுக்குவீங்க’’ …ன்னு பத்து நிமிடத்தில் பதினோறு கிலோமீட்டர் அளவுக்கு பேசினார்…!

சிறிது நேர இடைவெளியில் ஏதும் பேச்சு இல்லை.. டிராபிக் வேறு அந்த நேரம் பார்த்து அந்த தூய இஸ்லாமிய வாதிக்கு அதாங்க தானாதானாவில் இருப்பவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது நாங்களெல்லாம் அதிர்ந்தோம் அதில் …
‘’கங்கணகணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க ஒரு சுயம்வரம் நடக்கிறதே.. இது சுகம் தரும் சுயம் வரமே…’’ என்ற எஜமான் திரைப்படப்பாடல் அழைப்பு ஓசையாய் ஒலித்து ஓய்ந்தது.. எனது நண்பருக்கும் அவருக்கும் இடையேயான விவாதமும் வாய்மொழியின்றி ஓய்ந்தது. அவரின் முகத்தை நாங்கள் மீண்டும் பார்க்க விரும்பவில்லை அவரும் இறங்கும் வரை ஏதும் பேசவில்லை!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

ஜெய்லானி சொன்னது…

கடைசி வரிகள் படிச்சி வாய் விட்டு சிரித்து விட்டேன் . உண்மையில் பலப்பேர் இதே டைப்தான் ஹா..ஹா... :-)))