24 ஜனவரி 2013

சத்தியத்தின் ஜனனம்



பல்லவி:

சத்தியத்தின் ஜனனம்-பொய்
சித்திரங்கள் மரணம்-இருள்
பக்தியெங்கும் தகனம்-மருள்
மிக்கவர்கள் சலனம்-அருள்
பொங்கிவந்த தருணம்-திரள்
மகிழ்ச்சியிலே நடனம்-மன
மகிழ்ச்சியிலே நடனம்.. நடனம்.. நடனம்.. - சத்தியத்தின்...
                            
சரணம்:

பிறப்பில்லாத பேருண்மை
பிறவி எடுத்ததே
இளமை மூப்பு இவைகளெலாம்
வழமை ஆனதே
புலன் கடந்த பூர்வீகம்
உடல் எடுத்ததே
பார்வைப்பட உடலெடுத்து
பாதம் தந்ததே... பாதம் தந்ததே... சத்தியத்தின்...


பாதம் தந்த சாதகமே
போதம் தந்ததே
போதமான ரகசியங்கள்
தூது வானதே
தூதுவான அரும்பொருளே
வேத மானதே
வேதமதின் விளக்கமிங்கு
பேதமற்றதே...பேதமற்றதே... சத்தியத்தின்...

பேதமில்லா மாதவமே
கீத மானதே
கீதமான அழகுக்குரல்
மோகம் கொடுத்ததே
மோகமான மணித்துளிகள்
தாகம் தீர்த்ததே
தாகம் தீர்த்த முக்திநிலை
பேரின்பமானதே..பேரின்பமானதே.. சத்தியத்தின்...

சித்தியான முக்திநிலை
சொர்க்கம் ஆனதே
சொர்க்கமதைத் தந்தவரும்
தாங்க ளல்லவா
தாங்கள் எங்கள் அன்புமிகு
நாத ரல்லவா
நாநிலங்கள் போற்றுகின்ற
நதரல்லவா.. நபிநதரல்லவா..! நபிநதரல்லவா..!! சத்தியத்தின்...


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


பி.கு :
2000  லிருந்து 2002க்குள்  எழுதி இருப்பேன். சரியாக நினைவில்லை

கருத்துகள் இல்லை: