05 டிசம்பர் 2013

சரித்திரம் இன்னும் இருக்கிறது



ஜனாஸா தொழுகை நடத்தி
புதைக்கப்பட்டது,
பெருமை வாய்ந்த
இந்தியத் திருநாட்டின்
வானளாவிய பெருமைகள்!.

அரசியல் இலாபத்திற்காய்
வாழும் பேரினத்தின்
தொழுகைத் தளம்
இடிக்கப்பட்ட் தருணம்.

****

மெய்ஞ்ஞானம் வளர்த்த
பாரதத் தாயின்
பொன்மேனி சிதைக்கப்பட்டது

பொய்ஞ் ஞானத்தால்
வெறியூட்டப்பட்ட
வேட்டை நாய்கள்
பாய்ந்து குதறியதால்!

*****

"ஈஸ்வர்" என்பதும் "அல்லாஹ்" என்பதும்
இறைவனை குறிக்கும் இருபெயர்கள்
என்று போதிக்கப்ட்ட திருநாட்டில்,
ஈட்டியும், உடைப்பாறையும், செங்கல்லும்
எடுத்துவர பணிக்கப்பட்டனர்
அறிவு மங்கிய மந்தைக் கூட்டத்தினர்!

அண்ணன் தம்பியாய்
வாழ வகையிருந்தும்
அத்துவானிய சூழ்ச்சிகளால்
ஆடும் ஓணானுமாய் ஆகி நின்று
பலர் ஆவி பறித்த சோகம் - இது
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசம்!

****

பல்லாயிரம் பிரிவிருந்தும்
பரிவுகாட்டி பாசம்காட்டி
பகிர்ந்துண்டு பாமரரும் வாழ்ந்த நாடிது.
வேற்று'மை' கொண்டு பிரித்துக் காட்டி
ஓட்டுக்காக ஒழுகிய இரத்தத்தில்
காட்டுக்கு சென்று வனவாசம் பூண்ட தனக்கு
இரத்த அபிசேகம் செய்யச்சொன்னானா இராமன்???


ஆயிரத்திற்கும் மேலான
ஆண்டுகள் அண்ட
சமூகத்தின் சரித்திர புதையல் சிதைக்கப்பட்டது
அறுபது ஆண்டுகால ஆட்சிபீடத்தில்!

ஆயினும் சக்கரம் சுழல்கிறது
சரித்திரம் இன்னும் இருக்கிறது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: